சென்னை, டிச.15 பெரியார் பன்னாட்டு அமைப்பு (அமெரிக்கா) சார்பில் 1996 முதல் ஆண்டுதோறும் சமூகநீதிக்கான வீரமணி விருது வழங்கப்படுகிறது.
மேனாள் பிரதமர் சமூகநீதி காவலர் வி.பி. சிங், மேனாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர், உ.பி. மேனாள் முதல் அமைச்சர் மாயாவதி, தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினருக்கான அமைப்பின் தேசிய தலைவர் சந்திரஜித் யாதவ் (மேனாள் மத்திய அமைச்சர்), மேனாள் மத்திய அமைச்சரும், அ.இ. காங்கிரஸ் தலைவருமான சீதாராம், கேசரி ஜஸ்டிஸ் திரு. பி.எஸ்.ஏ. சாமி (ஆந்திரா) உள் ளிட்ட 20 பேர்களுக்கு இவ்விருது இதுவரை வழங்கப்பட்டுள்ளது. 2019 செப்டம்பரில் அமெரிக்கா வாசிங்டனில் நடைபெற்ற பெரியார் மனிதநேய சுயமரியாதைப் பன்னாட்டு மாநாட்டில் (Inter national Conference on Periyar Humanism and Self Respect) ஜெர்மனி - கொலோன் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் உல்ரிக் நிக்கல்ஸ் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.
அந்த வரிசையில் 2020ஆம் ஆண்டுக்கான 'சமூகநீதிக்கான டாக்டர் கி. வீரமணி விருது' விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் டாக்டர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி பெரியார் பன்னாட்டு அமைப்பின் (Periyar International USA) சார்பில் பெரியார் நினைவு நாளான வரும் டிசம்பர் 24 அன்று காலை 10 மணிக்கு பெரியார் திடலில் நடைபெற உள்ளது.
பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் சோம. இளங்கோவன் (USA) காணொலி மூலம் வரவேற்புரையாற்றிட டாக்டர் இலக்குவன் தமிழ் காணொலி மூலம் விருதினை எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு வழங்கிட, பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நேரில் வாழ்த்துரை வழங்கிட விருதினைப் பெற்றுக் கொள்ளும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் டாக்டர் தொல். திருமாவளவன் அவர்கள் நேரில் ஏற்புரை ஆற்றிட பேராசிரியர் டாக்டர் ரவிசங்கர் கண்ணபிரான் காணொலி மூலம் நன்றி கூற நிகழ்ச்சி 11 மணிக்கு நிறைவு பெறும்.
No comments:
Post a Comment