அறிவுத் தந்தையின் தனயன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 5, 2020

அறிவுத் தந்தையின் தனயன்


சு.அறிவுக்கரசு


செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்


1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 இல் இந்தியாவுக்கு விடுதலை என்றார்கள். தந்தை பெரியார் மட்டுமே இது விடுதலை நாள் அல்ல, ஆட்சி மாற்ற நாள் என்றார். ஆங்கிலேயரிடம் இருந்த ஆட்சி அதிகாரம் பார்ப்பன - பனியாக்களிடம் ஒப்படைக்கப்படும் நாள் என்றார். ஆங்கி லேயர்களே கூட இந்தியாவுக்கு அளித்தது  குடியேற்ற நாடு எனப் பொருள்படும் டொமினியன் ஸ்டேடஸ் என்றே குறிப்பிட் டனர். என்றாலும், மெய்ம்மை நிலையை ஏற்கச் சிலர் மறுத்தனர். நம் கழகத்திலேயும் சிலர் ஏற்கத் தயங்கினர்.


அந்நிலையில் பெரியார் திராவிட நாடு பிரிவினை மாநில மாநாடு கடலூரில் நடை பெறும் என அறிவித்தார். 14.9.1947 ஆம் நாளில் நடக்கும் என்றார்.  குடிஅரசு செய் தியின்படி 10 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாநாடு. பிரதிநிதிகள் கட்டணம் செலுத்திக் கலந்து கொண்டோர் நான்காயிரம் பேர். வெளியூரிலிருந்து வருவோரின் உடைமை களைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கவனித் தவர் இன்றைய நம் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள்.


விளையும் பயிர் முளையிலேயே தெரிந்தது, இன்று, கழகத்தை, கழக அறக் கட்டளையை, அதன் நிறுவனங்களை, சொத்துகளை, அனைத்திற்கும் மேலாகக் கொள்கைகளைக் காப்பாற்றுவதோடு, பன்மடங்கு வளர்த்து பன்னாடுகளிலும்  பரப்பிச் சிறப்பிக்கச் செய்து வருகிறார். எளிய குடும்பத்தின் இளைய பிள்ளை. யாருக்கும் இளைத்தவர் அல்ல என்பதை எண்பித்து வருகிறார்.


பத்து வயது நிரம்பும் முன்னேயே மேடைப் பேச்சாளர். அக்காலத்தில் கழகக் கூட்டங்கள் பெட்ரோமாக்ஸ் விளக்கின் வெளிச்சத்தில் நடைபெறும். கூட்டத்தின்  தொடக்கத்தில், இன்று போல, இசைத் தட்டுகள் ஒலிபரப்பப்பட்டதில்லை. மாறாக தோழர்கள், கொள்கை விளக்கப் பாடல் களைப் பாடுவார்கள். கழகத் தலைவர் கி.வீரமணி, மற்றொரு சக்ரபாணி ஆகி யோரே எங்கள் ஊரின் நிலைய வித்வான் கள், பாடகர்கள். (விளையாட்டா கச் சொன் னால்) சாரங்கபாணியும், சக்கர பாணியும் பாடுவார்கள்.  என் நினைவுகளின் படி, புரட்சிக் கவிஞரின் பாடல் பாடப்படும்.


தமிழனே, இது கேளாய் - உன்பால்


சாற்ற நினைத்தேன் பல நாளாய்


கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு


நமையெல்லாம் வடமொழி தூக்கிடும் தாம்பு


நம் உரிமைதனைக் கடித்தது அப்பாம்பு                       


தமிழனே இது கேளாய்


தனித்தியங்கும் தன்மை தமிழினுக்குண்டு


தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு


கனிச்சாறு போற்பல நூலெலாம் கண்டு


காத்ததும் அளித்ததும் தமிழ் செய்த தொண்டு                          


தமிழனே இதுகேளாய்


வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார்


வாழ்வினில் உயர்ந்த பின் தமிழையே பழித்தார்.


நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்                          


தமிழனே இதுகேளாய்


இது இன்னொரு பாடல் -


நாயினுங் கேடாய் நந்தமிழ் நாட்டார்


நலிவதை நான் கண்டேன்.....


நாயினும் கீழாய்


செந்தமிழ் நாட்டார்


நலிவதை நான்கண்டும்


ஓயுதல் இன்றி,


அவர் நலம் எண்ணி,


உழைத்திட நான் தவறேன்"


இளம் பருவத்தில், அவரைச் செதுக்கியோர் இரண்டு சுப்ரமணியன்கள். ஒருவர் திராவிடமணி எனப் பெயர் மாற்றம் கண்டவர். மற்றவர் என் தந்தை.  அவர் ஆற்றலைக் கண்டு, அதனை  வளரச் செய்து, உருவாக்கியவர் ஆசிரியர் திராவிட மணி இன்றைய நிலைக்கு அடித்தளம் அமைத்தவர்.  மேல்கட்டுமானம் முழுக்க முழுக்க அவரின் ஆற்றல், உழைப்பு, கொள்கைப் பற்று போன்ற  நற்குணங்களால் விளைந்தவை.  வீண் செயல் எதிலும் வீழாத அவரின் பண்பு நலன் இன்றைய உயர் இடத்தைப் பெற்றுத் தந்தது. 1949இல் கழகம் ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றி வளர்ந்திருந்த காலம். தழைத் திருந்த சிலர் அய்யாவுடன் பிணங்கிப் பிரிந்து சென்றனர். இவரின் வயது 16. தெளி வான, தீர்க்கமான, கொள்கை உறுதியுடன் முடிவெடுத்தார். தன் அண்ணன் பிரிந்து சென்ற போதிலும் இவர் பெரியாரின் பின் நின்றார் உறுதியுடன். சில ஆலமரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன. அருகம் புல்லான  இவரோ அய்யா செய்தது சரி என்றே நின்றார்.


"பெரியார் துணை ஒன்றே பெரிது எனக் கருதிய" இவரின் கருத்து "வீண் செயல் எதிலும் இவரை வீழ்த்தவில்லை", இவ்வாறு புகழ் மாலை சூட்டியவரே கூடச் சற்றுத் தடுமாறிய நிலையையும் நாடு கண்டது.


அந்த நிலையில் மாணவர்களை வேலை நிறுத்தம் செய்யச் சொன்னார், பெரியார். ஆம், படிப்பு நிறுத்தம் செய்யச் சொன்னார். 14.8.1950 ஆம் நாள் பள்ளிக்குப் போக வேண்டாம் என்றார். ஏன்? தென் இந்தியர் நல உரிமைச் சங்கம் தொடங்கப் பட்டது சமூக நீதிக்காக. 1917இல் பெரியார் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததும் சமூக நீதிக் காக. 1925 இல் காங்கிரசை விட்டு வெளி யேறிதும் சமூக நீதிக்காகவே. நீதிக்கட்சியின் மகத்தான சாதனையே சமூகநீதிக்கான இடஒதுக்கீடு அளித்ததே. அப்படிப்பட்ட சமூகநீதிக்கான அரசின் ஆணை இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று வழக்கு மன்றம் தீர்ப்பு அளித்துப் பறித்து விட்டன. மாணாக்கரின் படிப்பு, வேலை வாய்ப்பு எல்லாம் பறிபோயிற்று. அதுவரை மாணவர்களைக் கிளர்ச்சிகளில் ஈடுபடுத்தாத தலைவரான பெரியார் கொதித்து எழுந்து கிளர்ச்சிக்கு அழைப்பு விடுத்தார். எஸ்.எஸ்.எல்.சி படித்துக் கொண் டிருந்த நிலையிலும் மாணவர்களைத் திரட்டி, கிளர்ச்சியில் ஈடுபடுத்தினார் தலை வர் வீரமணி. மக்களும் கழகத் தோழர்களும் கலந்து கொண்ட மிகப்பெரும் பேரணி. ஆறாம் வகுப்பு மாணவனான நானும் பங்கேற்றேன்.


இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முறையாகத் திருத்தப்பட்டது. இடஒதுக்கீடு மீண்டும் அளிக்கப்பட்டது. இதில் குறிப் பிடத்தக்க செய்தி ஒன்று உண்டு. முதன் முதலில் பிற்படுத்தப்பட்டோர் என்ற தலைப்பில் பார்ப்பனர் அல்லாதார்க்குத் தனிப்பங்கீடு அளிக்கப்பட்டு வரலாற்றில் பதிந்துள்ளது.


சமூக நீதிக்கான - இடஒதுக்கீட்டுக்கான கிளர்ச்சியில் நேரடியாகப் பங்கு பெற்று நம்மிடையே வாழ்ந்து வரும் ஒரே தலைவர் நம் தலைவர் வீரமணி அவர்கள் மட்டுமே.


அவரது கல்லூரி வாழ்க்கை தொடக்கம். எளிய குடும்பங்களுக்கு எட்டாக்கனியாக இன்றைக்கு மருத்துவப் படிப்பு இருப்பதைப் போல, 1950களில் பொறியியல் படிப்பு. அப் போதைய இன்டர்மீடியட் படிப்பில் ஏபிரிவு சேர்வதற்கு வசதி குறைந்தோர் தயக்கம்  காட்டுவர். அறிவியல் படிப்புக்கான பி பிரிவு இயல்பாகவே இவருக்கு கிடைத்தது.


இவர் விரும்பவில்லை. சி பிரிவுக்கு மாற்றிக் கொண்டார். விருப்பமான பொரு ளியல், அரசியல், வரலாறு படித்தார். கடலூ ரிலிருந்து 50 கி.மீ. தொலைவிலுள்ள அண் ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு தொடர் வண்டியில் சென்று படித்தார். காலை 6.00 மணி வண்டியில் ஏறி இரவு 9.00 மணிய ளவில் வீடு திரும்பி, உண்டு, உறங்கிப் படித் தார். பல்கலைக்கழக முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கம் பெற்றார். பின்னர் சட்டம் படித்தார். வழக்கறிஞரானார்.


சட்ட அறிவைக் கொண்டு தனிநபர் களின் பிரச்சனைக்காக வாதாடியவரைத் தமிழ்ச் சமூகத்திற்காக வாதாடும் பணியை ஏற்கச் செய்தார் தந்தை பெரியார். முழுக்க முழுக்க அவரைப் பயன்படுத்திக் கொள் ளும் பெரு வாய்ப்பைத் திராவிடர்க்குக் கொடையாகத் தந்தார். நாம் பலன் பெற்று வருகிறோம்.


அப்பொழுதெல்லாம், மஞ்சள் பெட்டி யில் காங்கிரசுக் கட்சிக்கு ஓட்டுப் போடு வார்கள். பச்சைப் பெட்டியில் எதிர்க் கட்சிகளுக்கு ஓட்டு. 1952 இல் முதல் பொதுத் தேர்தலில் 21 வயது நிரம்பிய அனைவர்க்கும் வாக்குரிமை. அந்தத் தேர்தலில் நுகத் தடியில் பூட்டிய இரு காளை மாடு சின்னம், காங்கிரசுக்கு. கடலூரில் காங்கிரசை எதிர்த்து எஸ்.எஸ். ராமசாமி படையாட்சி உழைப் பாளர் கட்சியில் நின்றார். அவருக்கு சேவல், கோழி சின்னம்.  "மங்களகரமான மஞ்சள் பெட்டிதான் மாட்டுப் பெட்டி" என்று காங்கிரசார் பிரச்சாரம். "மஞ்சள் பெட்டி தான் மாட்டுப் பெட்டியாக மாறி யுள்ளது. மக்களே எச்சரிக்கை" என்பதுதான் இவரின் (ஆசிரியரின்) தேர்தல் பரப்புரை வாசகம். சேவல் சின்னம் வென்றது. இவரின்  (ஆசிரியரின்) பிரச்சாரம் தான் காரணம். தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன் காங்கிரஸ் ஒழிப்பு மாநாடு கடலூரில் முத்தய்யா திரை அரங்கில், பெரியார் கலந்து கொண்டு கனல் தெறிக்கப் பேசினார். கல்லூரி மாணவராக ஆசிரியரும் பேசி னார். ஆச்சாரியார் முதலமைச்சர் ஆனார். குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்தார். தந்தை பெரியாரின் பெட்ரோல், தீப்பந்தம், கத்தி வைத்துக் கொள்ளும் மிரட்டலுக்குப் பயந்து முதலமைச்சர் பதவி விலகினார். காமராசர் வந்தார். 'குலக்கல்வித் திட்டம் ஒழிந்தது'.  ஆச்சாரியார் ஆட்சியின் கொடு மைகள் என்ற நூலை ஆசிரியர் தொகுத் தார். அது போலவே  "காமராசர் ஆட்சியின் சாதனைகள்"  என்னும் நூலையும் தொகுத் துத் தந்தார். அதன் பிறகுதான் சாதனைகள் பற்றிய விவரங்கள் காங்கிரசுக்காரர்க ளுக்கே தெரிய வந்தன.


1976 இல் இந்திரா காந்தியின் இருண்ட கால ஆட்சியில் மிசா கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டார். கொடுமைகளைத் தாங்கி இன்னல் அடைந்தார். பல மாதங்கள் கடந்த நிலையில் சிறையில் சந்திக்க அனுமதி ரத்து உறவுச் சொந்தங்களுக்கு வழங்கப்பட்டது. என்னால் சந்திக்க முடிய வில்லை. என்னைச் செதுக்கிய வழிகாட்டி, இதற்கும் வழி கண்டுபிடித்தார். ஏ.வி.பி. ஆசைத்தம்பி, காட்டூர் கோபால் சிறைத் தாக்குதலுக்கு ஆளாகி சென்னைப் பொது மருத்துவமனையில் உள்நோயாளிகள். அவர்களுடன் ஆசிரியரும். மூவரும் ஓர் அறையில். அங்கு வந்து சந்திக்குமாறு எனக்குச் சேதி அனுப்பினார், தன் மூத்த அண்ணன் மூலமாக.   நானும் போனேன். அறைக்கு வெளியே அவர் கண்ணில் தெரியுமாறு மறைவில் இருந்து ஒரு மணி நேரம் கழித்து, காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் என் பெயரை விசாரித்தார். நான் சொன்னேன். என்னை அறைக்குள் அழைத்தார். போனேன்; பார்த்தேன்; பேச இயலவில்லை. அழுதேன். ஆறுதல் பெற்றுத் திரும்பினேன்.



சில மாதங்கள் கழித்து, பரோலில் வந்தார். பஸ்சிலிருந்து இறங்கிய அவரின் பைகளை என்னிடம் நடத்துநர் தந்தார். என்னைப் பார்த்ததும் கேட்ட கேள்வியே, என்னய்யா? நான் உள்ளே இருந்தேன். வெளியே இருக்கும் உனக்கு நரை தட்டி விட்டதே! என்பதுதான். இயல்பான நகைச் சுவையுடன் கூடிய நலம் விசாரிப்பு. சிலருக்குத் தொலைப்பேசியில் தகவல் தரச் சொன்னார். கமுக்கமாக, மறை பொருளாக எப்படிப் பேசுவது என்றும் சொல்லித் தந்தார். வருவாய்த்துறை அல்லாத வேறு துறையிலிருந்து அய்.ஏ.எஸ். ஆனவரின் சகோதரரை வரவழைத்துத் தைரியம் சொன்னார். அதற்கு இவர் பரிந்துரை செய்த தடயம் இல்லாமல் செய்யப்பட்டு விட்டது என்பதைக் கூறினார். அவரும் அய்.ஏ.எஸ். ஆகி, ஓய்வுக்குப் பின் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவராகவும் பணி புரிந்தார். இவரால் வாழ்வு பெற்றவர்கள் பலர் உண்டு. மிசாக் கொடுமையிலும் உதவினார் என்பதற்காக இது. தமிழன் குன்றென நிமிர்தல் வேண்டும் என்று நிகழ்த்தும் பெரியார் ஆணை ஒன்றே பெரிதெனக் கொண்டவரன்றோ!


பெரியார் 1931 இல் அய்ரோப்பாவில் பயணம் செய்தார். லண்டலில் உள்ள பகுத்தறிவு நூல் வெளியீட்டகம் சென்று நூல்களை வாங்கினார். தாம் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் பற்றிக் கலந்து ரையாடினார். அவர்கள், ஆசியாவின் தென்மூலையில் சென்னையில் பகுத்தறிவு ஒளி எழுந்து பரவத் தொடங்கியுள்ளது. விரையில் அப்பகுதி மீட்சி பெறும் என்று அன்றே கணித்து எழுதினர். 1944 இல் வட இந்தியப் பயணம் செய்த பெரியாரை கான்பூரில் அகில இந்திய பிற்படுத்தப்பட் டோர்  (பார்ப்பனர் அல்லாதார்) அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். 1917 இல் காங்கிரசில் இருந்த போது எழுப்பிய பார்ப்பனரல்லாதார் இந்திய அளவில் வளர்ந்தது பெரியாரின் வெற்றி.


1959 இல் கான்பூரில் பெரியார் வலுவான வரவேற்பைப் பெற்றார். சிவப்புச் சீருடை யில் இந்தியக் குடியரசுக் கட்சியினர் அணி வகுத்து இருபுறமும் நின்று வரவேற்றனர். உருவிய வாள்களை உயர்த்திப் பிடித்து, "பெரியார் ராமசாமி ஜிந்தாபாத்" என முழக்கமிட்டு வரவேற்றனர். பிராமின் கி பாரத் சோடுதோ (பார்ப்பானே வெளியேறு) பெரியாரே எங்களின் தலைவர் என்று வீரமுழக்கமிட்டனர். டாக்டர் அம்பேத் கரின் இயக்கம், அவருக்குப் பின் பெரியா ரைத் தலைவராக வரித்துக் கொண்டது. அகில இந்தியாவிலும் பார்ப்பனரல்லா தாரின் தலைவராகப் பெரியார் உயர்ந்தார்.


1970களில் பெரியாரின் மறைவுக்குப் பின்... உலகப் பகுத்தறிவு இயக்கத்தின் தலைமையிடமாகச் சென்னை - பெரியார் திடல் - விளங்குகிறது - போற்றப்படுகிறது - என்றால் அதற்கு முழுக்காரணம் ஆசிரியர் அவர்களே! தமிழர்கள் வாழும் இடங்களில் மட்டுமின்றி, பகுத்தறிவாளர்கள் இருக்கும் பகுதிகளில் எல்லாம் பெரியார் கொண்டாடப்படுகிறார் என்பதற்கு ஆசிரி யரின் முயற்சிகளும் நேரடி உழைப்புமே காரணி. பெரியாரின் நூல்கள் தென் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து இந்தி, மராத்தி போன்ற மொழிகளிலும் மாற்றம் செய்யப் பட்டுப் பரப்பப்படுகின்றன. உலகப் பொது மொழியாம் இங்கிலீஷில் முக்கிய நூல் களும் தெரிந்தெடுத்த கருத்துகளும் பெயர்க்கப்பட்டுப் பரப்பியதால் உலகப் பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துகின்றனர். கருத்தடை பற்றிய பெரியாரின் நூல் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே ஃபிரெஞ்ச் மொழியில் பெயர்க்கப்பட்டது. தொடர்ந்து "பெண் ஏன் அடிமையானாள்?" நூலும் அம்மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளது.


அடுக்கிக் கொண்டே போகலாம், நம் அறிவு ஆசான் தந்தை பெரியாருக்கு ஆசிரியர் ஆற்றியுள்ள கடமைகளை, கைம்மாறுகளை! விழி திறந்த பெரியாரின் பெருமைகளை நாள்தோறும் பேசிப் பரப் பிடும் ஆசிரியர் பிறந்த நாள் டிசம்பர் 2.


முன்னாளில் இருந்த மூடக்கருத்துகள் இந்நாள் ஒழிய இயங்கிடும் - அறிவுத் தந்தையின் தனயன் எனத் தகும் தளபதி - கழகத் தலைவர் தமிழர் தலைவர் - வழி நடாந்திட வாழியவே!


 


No comments:

Post a Comment