நாக்பூர், டிச.6 - மகாராட்டிர மாநில சட்டமேலவைத் தேர்தலில், ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியாமல் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.
இங்கு அவுரங்காபாத், புனே மற்றும் நாக்பூர் பட்டதாரி தொகுதிகளுக்கும், புனே, அமராவதி ஆசிரியர்கள் தொகுதி களுக்குமாக மொத்தம் 5 சட்டமேலவை உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த டிசம்பர் 1 அன்று தேர்தல் நடைபெற்றது. இதில் தேசியவாத காங்கிரஸ் 2 இடங்கள், காங்கிரஸ் 2 இடங்கள், சுயேச்சை உறுப்பினர் ஒருவர் என வெற்றி பெற்றுள்ளனர்.
அவுரங்காபாத் மற்றும் புனே பட்டதாரி தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், புனே ஆசிரியர் தொகுதி, நாக்பூர் பட்டதாரி தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இதில், நாக்பூர் பட்டதாரி தொகுதி வெற்றி, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகம் அமைந்திருக்கும் நாக்பூரில், கடந்த 58 ஆண்டுகளில் ஒருமுறை கூட காங்கிரஸ் வெற்றிபெற்றதில்லை. பாஜக முன்னாள் முதல்வரான தேவேந்திர பட்னாவிஸின் சொந்த ஊரான இங்கு, தற்போதைய மத்திய அமைச்சர் நிதின்கட்காரியும், பலமுறை எம்எல்சி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.ஆனால், தற்போது பாஜக வேட்பாளர் சந்தீப் ஜோஷி (42 ஆயிரத்து791 வாக்குகள்), காங்கிரஸ் வேட்பாளர் அபிஜித்வன்ஜாரியிடம் (61 ஆயிரத்து 701 வாக்குகள்)சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தோற்றுப் போயிருக்கிறார். இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இவ்வளவுக்கும் சந்தீப்ஜோஷி மாநகர மேயர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றாலும், ஆர்எஸ்எஸ் தலைமையகமான நாக்பூரில் கிடைத்த இந்த தோல்வி பாஜகவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. மகா விகாஸ் அகாதி கூட்டணியின் வலிமையை உணரத் தவறிவிட்டோம் என்று முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் புலம்பியுள்ளார்.
No comments:
Post a Comment