தமிழகத்தில் கழக ஆட்சிகளே இல்லாமல் செய்திடுவோம் என்று கர்ஜித்தீர்களே? - உங்களால் முடிந்ததா?
மீண்டும் காலிலே விழுந்து கழகங்களிடம்தானே இடம் வாங்க வேண்டியிருக்கிறது!
காவிகள் தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்!
சிறப்புக் கூட்டத்தில் காணொலிமூலம் தமிழர் தலைவர்
சென்னை, டிச. 7- தமிழகத்தில் கழக ஆட்சிகளே இல்லாமல் நாங்கள் செய்துவிடுவோம் என்று கர்ஜித் தீர்களே? உங்களால் முடிந்ததா? மீண்டும் காலிலே விழுந்து கழகங்களிடம்தானே இடம் வாங்க வேண்டியிருக்கிறது? 'எங்களுக்கு இவ்வளவு இடம் கொடுங் கள்' என்று கேட்கக்கூடிய அளவிற்கு வரும்பொழுதே, முதலில் காவிகள் ஒரு தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்
என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலும்- கூட்டணி வியூகங்களும்''
கடந்த 24.11.2020 அன்று மாலை ‘‘2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலும் - கூட்டணி வியூகங் களும்'' என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட் டத்தில் காணொலி வாயிலாக திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய கழகத்தி னுடைய துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, இயக்கத்தினுடைய முக்கிய பொறுப்பாளர்களே, அறிவார்ந்த அவையினராக இங்கே இருக்கக்கூடிய மானமிகு கொள்கை யாளர்களே, அதற்கப்பாற்பட்டு, இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையைக் கேட்கக்கூடிய வாய்ப்புப் பெற்ற சான்றோர் பெருமக்களே, தோழர்களே, நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
'நிவர்' புயல் கடுமையாகிக் கொண்டிருக்கிறது என்ற அறிவிப்பு ஒரு பக்கத்தில் இருந்தாலும், நம்முடைய அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் குறளிலிருந்து அடிக்கடி சொல்வதைப்போல, ''குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து மானம் கருதக்கெடும்'' என்ற அளவில், நம்மைப் பொறுத்த வரையில், கொட்டும் மழையா? கொளுத்தும் வெயிலா? அல்லது சீறி அடிக்கும் புயலா என்பது முக்கியமல்ல. நம்முடைய லட்சியப் பாதையில், மக் களை எப்போதும் விழிப்புணர்வுக்கு ஆளாக்க வேண்டும். அந்தக் கடமையை, உயிர்க் கடமையாக செய்யவேண்டும் என்கிற உந்துதல்தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கு மிக முக்கியமான காரணமாகும்.
அண்மையில் நடந்த சில நிகழ்வுகள் - சிலர் ஆசைப்படுவதைப்போல, எப்படியாவது தமிழ் நாட்டை காவி மயமாக்கிவிடவேண்டும். அதற்கு நல்ல அடிமைகள் கிடைத்தார்கள்; நல்ல ஏவுகணை களாக அவர்கள் நமக்குப் பயன்படுவார்கள் என்று நினைத்து, வடக்கில் உள்ள சில மாநிலங்களில் செய்த சூழ்ச்சிகள், தந்திரங்கள், அங்கே வகுத்த வியூகங்களை யெல்லாம் இங்கே வேறு விதமாகக் கொண்டு வந்து நடத்தலாம்; ஒரு கை பார்க்கலாம் என்று நினைத்து, இங்கே தூண்டிலைத் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறார் - அதற்கு முக்கியமான ஒரு கேந்திரியக் கர்த்தாவாக இருக்கக் கூடிய ஒருவர்.
அரசு விழாவை - அரசியல் விழாவாக ஆக்கிக் கொண்ட ஒரு கொடுமை
கடந்த 21 ஆம் தேதி சென்னையில் அரசு விழா என்ற பெயராலே, அரசியல் விழா நடைபெற்றது. இதுவரையில் இல்லாத வகையில் மக்கள் அனை வரும் கொடுக்கக்கூடிய வரிப் பணத்தில் நடந்த அரசு விழாவை - அரசியல் விழாவாக ஆக்கிக் கொண்ட ஒரு கொடுமை நடைபெற்றது.
இது ஓர் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் - அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது. அவர்கள் கூட்டணி வைப்பதிலோ - பிரகடனப்படுத் துவதிலோ நமக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் கிடையாது - தடையும் கிடையாது - அது அவரவர் உரிமை.
மரபுகளை அவர்கள் மதிப்பதற்குத் தயாராக இல்லை; ஜனநாயக உரிமைகளைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை
ஆனால், அதேநேரத்தில், ஓர் அரசு விழா என்பது - மக்கள் வரிப்பணத்தில் நடைபெறுகின்ற - ஒரு பொதுத் திட்டத்தை அறிவிக்கின்ற நிகழ்ச்சி என்று சொல்லுகின்றபொழுது - அந்த விழாவில், எதிர்க்கட் களை தாறுமாறாக விமர்சிப்பதும், அங்கே வெளிப் படையாக அரசியல் பேசுகிறேன் என்று மத்திய உள் துறை அமைச்சர் சொல்கிறார் என்றால், எந்தவிதமான அரசியல் நாகரிகத்தைப் பற்றியும் அவர்கள் கவலைப் படத் தயாராக இல்லை. மரபுகளை அவர்கள் மதிப்ப தற்குத் தயாராக இல்லை. ஜனநாயக உரிமைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. ''கண்டதே காட்சி, கொண்டதே கோலம்'' என்பதைப்போல நடந்துகொண்டார்கள் என்பதை, இன்றைக்குச் சிலர்தான் சொல்லியிருக்கிறார்களே தவிர, பலரும் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டிய இடத்தில் இருந் தாலும்கூட, பல ஊடகங்கள், மற்றவைகள் இதனைச் சுட்டிக்காட்டவில்லை. இதுதான் வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.
மரபுகள் மாற்றப்படலாம்; மரபுகளை நாங்கள் பின்பற்றமாட்டோம் என்று அவர்கள் வந்திருக் கிறார்கள் என்பதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால், ஜனநாயக விழுமியங்கள் காக்கப்பட வேண் டும். அதனைச் சுட்டிக்காட்டவேண்டும் என்பதற்கா கத்தான் சொன்னேன்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு வரவிருக்கக்கூடிய தமிழக சட்டப்பேரவை தேர்தலில், திராவிட முன்னேற் றக் கழகத்தின் தலைமையில் இருக்கின்ற கூட்ட ணியை வீழ்த்தி விடவேண்டும்; அந்த இடத்திற்குத் தாங்கள் வரவேண்டும் என்று நினைத்து, மற்ற மாநிலங்களில் எல்லாம் எங்களுடைய வித்தைகளைக் காட்டினோம்; அங்கெல்லாம் சிலம்பம் எடுத்து ஆடி னோம்; அங்கே ஆடிய சிலம்ப விளையாட்டுப் போல, இங்கேயும் நடத்திக் காட்டலாம் என்று நினைத்து, சில வித்தைகளை, மத்திய உள்துறை அமைச்சராக ஆவதற்குமுன், ஏற்கெனவே அவர் பா.ஜ.க. தலைவராக இருந்தபொழுது, தமிழ்நாட்டில் கூட நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக செய்து பார்த்தார்; அவருக்கு அது கைகொடுக்கவில்லை.
இங்கே இருக்கின்ற சில கட்சிக்காரர்களை யெல்லாம், சில ஜாதிக்காரர்களையெல்லாம் ஒன்று திரட்டி, அதன்மூலமாக ஒரு பெரிய ஆதரவை 'மிஸ்டு கால்' கட்சிக்கு ஏற்படுத்தலாம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டு, பிரதமரைச் சந்திக்க வைத்து, ஒளிப்படம் எடுத்து, அதனைப் பத்திரிகைகளில் வெளியிட்டு, சில வித்தைகளைச் செய்தார்கள்; ஆனால், எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைக்கவில்லை என்று சொல்லக்கூடிய நிலை ஏற்பட்டது.
அரசாங்கத்தை, அரசியலைத் தவறாகப் பயன்படுத்துவது கைவந்த கலை அவர்களுக்கு!
அடுத்தபடியாக, அவர்களுடைய வியூகத்திலே மிக முக்கியமான ஒன்றாக இங்கே இருக்கிற அரசியல் புரோக்கர்களைப் பயன்படுத்தி, அ.தி.மு.க. இரண் டாகப் பிளவுபட்ட நிலையில், அதனை ஒன்றாக்கி விட்டால், தங்களுக்குச் சாதகமாக அமையும் என்று அரசியல் ரீதியாக அதனையும் பயன்படுத்தினார்கள்.
அரசாங்கத்தை, அரசியலைத் தவறாகப் பயன் படுத்துவது என்பது அவர்களுக்குக் கை வந்த கலை.
ஏற்கெனவே தமிழகத்தில் ஆளுநராக இருந்த ஒருவர், பிரிந்து போனவர்களை, கைகளைச் சேர்த்து வைத்து ஒன்றாக ஆக்கினார் என்ற அந்தக் காட்சி எல்லா தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது.
இப்படி மரபுகளைப்பற்றி கவலைப்படாமல், அரசி யலைப்பற்றி கவலைப்படாமல் எல்லாம் செய்த பிறகும்கூட, அவர்கள் நினைத்தது, எதிர்பார்த்தது நடக்கவில்லை; அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
ஆகையால், வேறு ஒரு பாதையைத் தேர்ந் தெடுத்தார்கள். இங்கே கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, "கழகங் களே இல்லாத தமிழ்நாடு - கழக ஆட்சியே இல்லாத தமிழ்நாட்டை நாங்கள் உருவாக்குவோம்'' என்றுதான் முதலில் ஆரம்பித்தார்கள் காவிகள். அதில் தோற்றார்கள்.
அ.தி.மு.க.வை அவர்கள் நிர்ப்பந்தப்படுத்தி, 'நல்ல அடிமைகளாகக் கிடைத்திருக்கிறார்கள்; தங்கள் கொள்கைகளைப்பற்றி கவலைப்படாமல், மாநில உரிமைகளைப்பற்றி கவலைப்படாமல், அடிமைச் சாசனம் எழுதித் தருவதற்குத் தயாராக இருக்கிறார்கள்' என்று நினைத்தாலும்கூட, இன்றைக்கும், அவர் களிடத்தில்தான் தேர்தலில் இடம் வாங்க வேண்டிய அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், இது பெரியார் மண் - திராவிட மண் என்பதை யாரும் மறுக்க முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
காவிகள் ஒரு தோல்வியை
ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்
அவர்களிடத்தில் இவர்கள், பிச்சைப் பாத்திரத் தைக் நீட்டுவதைப் போல, மறைமுகமாக அதிகாரத் தைப் பயன்படுத்தி மிரட்டினாலும், 'மடியில் கனம் - எனவே வழியில் பயம்' என்று அவர்கள் நிலை வந்தாலும் 'எங்களுக்கு இவ்வளவு இடம் கொடுங்கள்' என்று கேட்கக்கூடிய அளவிற்கு வரும்பொழுதே, முதலில் காவிகள் ஒரு தோல்வியை ஒப்புக் கொண்டி ருக்கிறார்கள்.
தமிழகத்தில் கழக ஆட்சிகளே இல்லாமல் நாங்கள் செய்துவிடுவோம் என்று கர்ஜித்தீர்களே? உங்களால் முடிந்ததா? மீண்டும் காலிலே விழுந்து கழகங்களிடம் தானே இடம் வாங்க வேண்டியிருக்கிறது?
மாய்ந்து மாய்ந்து அவர்களுக்காக எழுதக்கூடிய பூணூல் கர்த்தர்கள், பூணூல் பேனாவைப் பிடிக்கக் கூடியவர்களுக்கு நான் கேட்கிறேன், முதலில் இதற்கு என்ன உங்கள் பதில்?
''சுவற்றில் உள்ள கீரையை
கொஞ்சம் வழித்துப் போடடி''
நம்முடைய நாட்டிலே, ''சுவத்துக் கீரையை கொஞ்சம் வழித்துப் போடடி'' என்று கிராமத்தில் சொல்வதைப்போல! "இதுதான் கீரையா?" என்று ஓங்கி சுவற்றில் விசிறி அடித்து, கோபித்துக் கொண்டு போன கணவன் பட்டினியாகவே கிடந்து, பசி தாங்க முடியாமல் கடைசியாக வேறு வழி இல்லாமல் - மனைவியை மெதுவாக எழுப்பி, ''சுவற்றில் உள்ள கீரையை கொஞ்சம் வழித்துப் போடடி'' என்று சொன்னானாம். அதுபோல, "சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி" என்று அரசியல் நடத்தக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்.
முதலில் அந்த இயக்கத்தை - அந்த இயக்கத்தில் உள்ளவர்களை மிரட்டியோ அல்லது தன்வயப் படுத்தியோ, அவர்களது குடுமிகளைத் கைகளில் பிடித்துக்கொண்டோ, அங்கே இருக்கக்கூடிய பல் வேறு அரசியல் சாதனங்களை, அமைப்புகளை வைத்துக் கொண்டு செய்ய முயற்சிக்கிறார்கள் என்ப தெல்லாம் பிறகு!
முதலில், ''கழகங்களே இல்லாத ஆட்சியை உருவாக்குவோம்'' என்று தமிழ்நாட்டு சுவற்றிலே எழுதிப் போட்டார்களே, அதில் அவர்கள் வெல்ல முடிந்ததா?
முதலில் அவர்கள் தங்களுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும். தங்களுடைய பாத்தி ரத்தை ஏந்திக் கொண்டு, '40 இடங்கள் கொடுங்கள், 50 இடங்கள் கொடுங்கள்; 60 இடங்கள் கொடுங்கள்' என்று கேட்கின்ற இடத்தில் - வாங்குகின்ற இடத்தில் நீங்கள் இருக்கின்றீர்கள் - கொடுக்கின்ற இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள் (அதிமுக). திராவிடம் என்ற பெயரை வைத்துக் கொண்டிருக்கின்ற காரணத் தினால், அந்தப் பெயரால் ஆட்சி அமைந்திருக்கின்றது என்கிற காரணத்தினால்தான், அந்தச் சூழல் ஏற் பட்டது.
இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில் கூட, இவர்களால் உருவாக்கப்பட்டதல்ல; லேடியா? மோடியா? என்று அந்த அம்மையார் கேட்டு, மோடி யல்ல - லேடிதான் என்று அந்த அம்மையார் சொன்ன தினால் ஏற்பட்ட ஆட்சிதான் இது.
அவர்களுடைய வியூகத்தினுடைய
முதல் தோல்வி
இதிலிருந்து நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது - ஆரம்பத்திலிருந்து போட்ட கணக்கில் நீங்கள் தோற்று இருக்கிறீர்கள். மாய்ந்து மாய்ந்து எழு தக் கூடியவர்கள் இதனை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இது அவர்களுடைய வியூகத்தினுடைய முதல் தோல்வி. அதனை மறைமுகமாக மறைக்கின்றன ஏடுகள்.
என்னதான், பார்ப்பன ஏடுகள் - தினமலராக இருந் தாலும், வார ஏடாக இருந்தாலும், அரசியல் புரோக் கர்கள் மாய்ந்து மாய்ந்து எழுதினாலும், நாராயண அய்யங்கார் எழுதினாலும், அவர்கள் ஒன்றைத் தெளிவாகத் தெரிந்தகொள்ளவேண்டும்.
இங்கே திராவிட இயக்கங்களை வீழ்த்திவிடலாம்; அல்லது காவி ஆட்சியை, வடபுலத்தில் ஏற்படுத் தியதுபோல, இங்கே ஏற்படுத்தலாம் என்று நினைக்க முடியாது. வடநாடு வேறு; அந்த மண் வேறு. இந்த மண் வேறு. இந்த மண் வேறு. இந்த மண் பெரியார் மண்; இந்த மண் சமூகநீதி மண்.
நாம் தேர்தலைப்பற்றி கவலைப்படுவதைவிட - அடுத்தத் தலைமுறையைப்பற்றி கவலைப்படுகின்ற காரணத்தினால்தான், இதில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டு, கவனத்தோடு மற்றவர்கள் இதனைப் பின்பற்றவேண்டும் என்கிற அக்கறையினால் இதனைச் சொல்கிறோம்.
சில நாள்களுக்கு முன்புவரையில் அவர்கள் என்ன சொன்னார்கள்? பிறகு இப்போது ஏன் கூட் டணியை உறுதிப்படுத்தவேண்டும் என்று அவசர அவசரமாக நினைக்கிறார்கள் தெரியுமா?
அவர்கள் பறப்பதைப் பிடிக்கவேண்டும் என்று நினைத்தார்கள்; - பழைய குதிரைகள் கைகொடுக்க வில்லையானாலும், ஒரு புதிய குதிரையைக் கொண்டு வந்து ரேஸ் குதிரையாக அறிவிக்கலாம் என்று நினைத்தார்கள்.
அவர்களுக்குத் தைரியமிருந்தால்....
ஆனால், அந்த குதிரை பறப்பதற்குத் தயாராக இல்லை என்று தெரிந்தவுடன், (அழுத்தம், மிரட்டல் தந்து வழிக்குகொண்டு வருவதற்கு முன்பாக) அதற் கான புரோக்கரை அழைத்து, இப்படி ஆகிவிட்டதே என்று கேட்கக்கூடிய கட்டத்திற்கு வந்த நிலையில், 'பறப் பதை நாம் எண்ணிக்கொண்டு, இருப்பதை நாம் விட்டுவிட்டோமேயானால், என்னாகும் நம்முடைய நிலைமை? பழைய நிலைக்கு வந்துவிட வேண்டி யதுதான்' என்ற அளவிற்கு அவர்கள் வந்திருக்கிறார் கள்.
அவர்களுக்குத் தைரியமிருந்தால், தனியே நின்று, எத்தனை இடங்களில் வெற்றி பெறுகிறார்கள் என்று காட்டட்டும்? எங்களுக்கு 50 இடங்களில், 60 இடங் களில் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார்களே, அவர்கள் தனியே நின்று துணிந்து இந்த சவாலை ஏற்றுக்கொள்ளட்டும் பார்க்கலாம்.
கூட்டணிக்கு அவசரமாக அவர்கள் ஏன் நிர்ப் பந்தத்திருக்கிறார்கள் என்றால், பறப்பது தங்களுக்கு உறுதியில்லாமல் ஆகிவிட்டது; எனவேதான், இருப்பதை மிரட்டியாவது பணிய வைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
"அவர்களுடைய குடுமிகளை எங்கள் கைகளில் வைத்திருக்கிறோம்; வேறு சில பலகீனங்களை வைத் திருக்கிறோம்; என்னென்ன ஆயுதங்கள் எங்கள் கைகளில் இருக்கிறது என்று பாருங்கள்" என்றெல்லாம் மத்தியிலே இருப்பவர்கள் சொல்கிறார்கள்.
"மடியில் கனம் இருக்கின்ற காரணத்தினால், வழியில் பயம் இருக்கிறது" என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இங்கே ஆளக்கூடியவர்கள் இருக் கிறார்கள்.
எனவே, இந்த சூழலில் என்ன செய்ய முடியும்?
- தொடரும்
No comments:
Post a Comment