'மனுவுக்கு ஏன் இந்த எதிர் மனு?' எனும் தலைப்பில் இனமணியான 'தினமணி'யில் நடராஜன் என்ற பூணூல் மேனி ஒரு கட்டுரையை யாத்துள்ளார்.
அவர் கட்டுரையிலிருந்து அய்ந்து விடயங்களை எடுத்துக் கொண்டு பதிலடி கொடுத்தாலே சரியாகப் போய்விடும்.
(1) மனுநீதியில் குறைபாடுகள், தவறுகள், பார பட்சங்கள் இருக்கின்றனவா, இல்லையா என்பது வேறு விஷயமாம்.
தொடக்கமே தில்லுமுல்லுத்தனமாக இருக்கிறதா இல்லையா? குறைபாடுகள், தவறுகள் பாரபட்சங்கள் எப்படி வேறுவிஷயமாகப் போய்விடும்.
பிரச்சினையே இந்த வேறுபாடுகளும், குறைகளும் பாரபட்சங்கள்தானே! பிரச்சினையை எப்படி திசை திருப்புகிறார்கள் பார்த்தீர்களா திரிநூலார்கள்?
இன்று அது நடைமுறையில் இல்லை. பின் ஏன் அரசியல்வாதிகள் அதை எதிர்த்துக் கூப்பாடு போட வேண்டும்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
நடைமுறையில் இல்லாத ஒன்றுபற்றி 'துக்ளக்' சோ ராமசாமி விழுந்து விழுந்து ஏன் எழுத வேண்டும்? நாகசாமிகளும், சங்கராச்சாரிகளும் ஏன் வக்காலத்து வாங்க வேண்டும்?
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சொன்ன வள்ளுவன் எங்கே? பிர்மா தன் முகம், தோள், தொடை, பாதங்களில் முறையே பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரனைப் படைத்தார். இம்மைக்கும், மறுமைக்கும் உபயோகமான கருமங்களை தனித்தனியாகப் பகுத்தான் (மனுதர்மம் அத்தியாகம் 1 - சுலோகம் 87) என்று பிறப்பிலேயே பேதத்தை உருவாக்கிய மனுதர்மம் எங்கே?
இந்த நிலையில் திருக்குறளை உரை எழுதிய பரிமேலழகர் என்ற பார்ப்பான்.
"திருக்குறளில் அறமாவது - மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும் ஆம் என்று கூறவில்லையா?
'லோக மான்யர்' என்று கிடுகிடுக்கும் வகையில் கீர்த்தி பாடுகிறார்களே - அவர் என்ன காகபட்டர் காலத்தில் வாழ்ந்தவரா? 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் தானே!
அவர் என்ன சொன்னார்?
Our law is manusmriti and pointed out that the law (Manusmiriti) orders king to administer with the help of Brahmins (மகாராட்டிர அரசின் கல்வித்துறை 1994இல் வெளியிட்ட Chatrapathi Sahu, the Pillar of Social Democracy - Page 363-364).
"நமது சட்டம் மனுஸ்மிருதிதான்" என்று கூறிய திலகர் கற்றறிந்தவர்கள் மற்றும் பார்ப்பனர்களின் உதவியுடன் அரசன் ஆட்சி நடத்த வேண்டும் என்று மனுஸ்மிருதி சட்டம் இருப்பதை திலகர் சுட்டிக் காட்டவில்லையா?
"இன்றைய நடப்புக்கு மனுதர்ம சாஸ்திரம் ஒவ்வாதது. ஆனாலும், நாகரிகத்துக்கு முரண்பட்டது என்றாலும் அதுHowever Absolute and Out of date may be இறுதியானது - நீதி தீர்ப்புகளைக் கட்டுப் படுத்தக் கூடியதாகும்" - என்பதுதானே லண்டன் பிரிவி கவுன்சிலின் தீர்ப்பு.
இவ்வளவு நடைமுறைகள் கண்ணுக்கு எதிரே தாண்டவமாடும் போது - எந்த காலத்திலோ எழுதப்பட்டது இப்பொழுது பேசலாமா என்று முற் போக்குவாதிகள் போல முன் குடுமியைத் தட்டிவிட்டு எழுதுவது எத்தகைய மோசடியான சாமர்த்தியம்.
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் மனுதர்மத்தை எரித்தார். அவருக்கு முன்னதாகவே திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் எரித்ததுண்டு. பிரபல நடிகர் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கும் "நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்" என்ற நிகழ்ச்சியில் (கோன்பனேகா குரோர்பதி) 'அம்பேத்கரும், அவரின் ஆதரவாளர்களும் எந்தப் புனித நூலின் பிரதிகளைத் தீயிலிட்டு எரித்தார்கள்?' என்பது கேள்வி. வரலாற்று ரீதியான அந்தக் கேள்வியைக் கேட்டதற்காக அவர் மீது வழக்காம்! 'மனுவாத அரசுதான் நடக்கிறது' என்று புரியவில்லையா?
கருத்தால் குரல் வளையை நாம் நெருக்கும்போது, அந்த நேரத்தில் தப்பித்துக் கொள்ள மட்டும் - அய்யயோ அது எப்பொழுதோ எழுதப்பட்டது - ஆளை விடுங்கள் என்பதும் - மற்றபடி இன்று வரை மனுதர்மத்தைத் தூக்கிப் பிடிப்பதும் அவர்களுக்கே உரித்தான இரட்டைப் புத்தியும் - இரட்டை அணுகு முறையும்தானே!
(2) இரண்டாவது கேள்வியை முன் வைக்கிறார் திருவாளர் நடராஜ அய்யர்வாள்.
ஒன்றுமே இல்லாத பாரபட்ச நூலையா அயல்நாட்டு அறிஞர்கள் மொழி பெயர்த்திருப்பார்கள்? என்று கேள்வி எழுப்புகிறார்.
இது 'அய்யோ பாவம்' கூக்குரல்! வெளிநாட்டுக் காரர்கள் மொழிபெயர்த்த காரணத்தாலேயே அதனை ஏற்க வேண்டுமா?
8.11.1992 நாளிட்ட 'இந்து' ஆங்கில நாளேட்டில் பி.இராதாகிருஷ்ணன் என்பவர் பிரடெரிக் நியட்சே, வெண்டி, ஸ்மித் முதலியோர் மனுதர்மம் என்பது பார்ப்பனர்களின் சுயநலத்திற்காகவே எழுதப்பட்டது என்று குறிப்பிட்டு இருப்பதை எடுத்துக்காட்டியுள்ளாரே அதற்கு என்ன பதில்?
திருவாளர் நடராஜ அய்யரால் எடுத்துக் காட்டப் பட்டவர்கள் தான் வெளிநாட்டுக்காரர்கள், இந்து 'ஏடு' எடுத்துக்காட்டியவர்கள் எல்லாம் வெளிநாட்டுக் காரர்கள் இல்லை என்று சொல்லப் போகிறார்களா?
(3) "மூன்றாவதாக பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் தடை செய்யப்பட வேண்டுமென்றால் அதே காரணத்துக்காக திருக்குறளும் தடை செய்யப் பட வேண்டியதே!" என்கிறதே தினமணி கட்டுரை.
பெண்களை எந்த இடத்தில் திருக்குறள் இழிவு படுத்துகிறது?
மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக வேண்டி அவர்களைப் புணருகிறார்கள். (மனுதர்மம் அத்தியாயம் 9 - சுலோகம் 14).
படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் (மனு அத்தியாயம் 9 - சுலோகம் 17).
மாதர்கள் பெரும்பாலும் விபசார தோஷ முள்ளவர்கள் என்று அனேக ஸ்ருதிகளிலும் சாஸ் திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன (மனு அத்தியாயம் 9 - சுலோகம் 19).
மனுதர்மம் பெண்களை அசிங்கப்படுத்தி கீழ்மைப் படுத்தி, ஆபாசப்படுத்தி இவ்வாறு கூறியிருப்பதுபோல ஒரே ஒரு குறளை 'தினமணி' 'தினமலர்' 'துக்ளக்' வகையறாக்கள் எடுத்துக்காட்டட்டுமே பார்க்கலாம்.
மலரும் மலமும் ஒன்று என்று கூறும் மனுவாதிகள் இன்றைக்கும் இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
அவாளின் மனுதர்மத்தை நாம் குறிப்பிடும்போது உடனே அவர்களுக்கு ஆத்திரம் அலைமோதி திருக்குறள்மீது பாயும் இந்தத் தன்மைக்கும், புத்திக்கும் பெயர்தான் பார்ப்பனர்கள் என்பது.
ஆரியம் என்றால் மனுதர்மம்
திராவிடம் என்றால் திராவிடம்!
என்பது இப்பொழுது புரிகிறதா?
திருக்குறளை ஆங்கிலத்தில் The Kural or the Maxims of Thiruvalluvar (1916) மொழிபெயர்த்த 'சேரன்மாதேவி புகழ்' திருவாளர் வ.வே.சு.அய்யர், அந்நூலின் முன்னுரையில் என்ன எழுதியுள்ளார்?
'திருவள்ளுவரின் தந்தையார் பகவன் என்ற பார்ப்பனராவார். இவர் தாயார் ஆதி என்ற பறைச்சி என்று எழுதுகிறார். இதோடு நிறுத்தவில்லை. திருவள்ளுவர் நான் காவதான வீட்டுப் பேற்றைப் பற்றி தனியாக ஏதும் கூறவில்லை. மனித குலத்திற்கு ஆன்மீக உண்மைகளைப் பிராமணர்களைத் தவிர வேறு எவரும் போதிக்கக் கூடாது என்ற பழங்கால வைதீக விதிகளுக்கு திருவள்ளுவர் தம்மை கட்டுப் படுத்திக் கொண்டார் என்று இந்துக்கள் கூறுகிறார்கள்!' என்று எழுதுகிறார் என்றால் இந்தப் பார்ப்பனக் கொழுப்பை, அகந்தையை - நம் இனத்தின்மீதான வெறுப்பை எளிதில் தெரிந்து கொள்ளலாமே!
(4) தமிழ்நாட்டில் மனு மீது காரணமில்லாத வெறுப்பு உமிழப்படுகிறது - இது 'தினமணி'யின் குற்றப் பத்திரிகை. காரண காரியத்தோடுதான் வெறுப்பு உமிழப்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் மேலே எடுத்துக்காட்டப்பட்டு விட்டனவே.
குற்றம் மட்டுமல்ல - கோபத்தீ கொந்தளிக்கிறது என்பதையும் சேர்த்துக் கொள்ளட்டும்!
பிர்மாவின் பாதங்களில் பிறந்தவன் சூத்திரன் என்று சொன்னதோடு நிறுத்தாமல் சூத்திரன் என்றால் விபசாரி மகன் (மனு - அத்தியாயம் 8 - சுலோகம் 415) என்று சொன்ன பிறகும் விட்டு வைத்துள்ளோமே, அதற்காக ஆரியம் சந்தோஷப்பட வேண்டும். இந்தச் சகிப்புத்தன்மையை ஒருக்கால் கோழைத்தனம் என்று கருதுகிறார்களோ என்னவோ!
(5) நல்ல மனம், நல்ல சொல், நல்ல நடத்தை என்று மனுநீதி குறிப்பிடுவனவற்றை ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு? இதுவும் 'தினமணி' கட்டுரையாளரின் கேள்வி.
எதையும் ஆதாரத்தோடு - அத்தியாயம், சுலோக எண்ணோடு எடுத்துச் சொன்னால் கவனிக்கலாம்தான்.
அதே நேரத்தில் மலத்தில் அரிசி பொறுக்க முடியாது என்பது நினைவில் இருக்கட்டும்.
"சாம்பாரில் மனிதன் சாணி கலந்து விட்டது. தெளிவாக விடு!" (விடுதலை 12.7.1955) என்பவனைக் குறித்து தந்தை பெரியார் கூறியதுதான் நினைவிற்கு வந்து தொலைகிறது!
மானமா? சோறா? என்பது முக்கியமான கேள்வியல்லவா?
இன்றைக்கும்கூட பார்ப்பனர்கள் மனுதர்மத்தைத் தூக்கி நிறுத்துவது புரிகிறது.
விதவைப் பெண்கள் தரிசு நிலத்துக்கு ஒப் பானவர்கள் என்று சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறவில்லையா? அதனைக் கண்டித்து திராவிடர் கழக மகளிரணியினர் காஞ்சி மடம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியதுண்டே! (9.3.1998). வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கக் குறைவான வர்கள் என்று சொன்னவரும் இவரே!
70 சதவீத பெண்கள் பெண்மையற்றவர்கள் என்று 'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி அய்யர்வாள் பேச வில்லையா? (25.8.2019)
கேள்வி: பெண்களைப் பற்றி உங்களின் உண்மை யான அபிப்ராயம் என்ன?
பதில்: உயர்ந்தவர்கள் - அப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்கள் ('துக்ளக்' 18.3.2009).
குருமூர்த்தியின் குருநாதரான திருவாளர் சோ. ராமசாமி அய்யர்வாள் எழுதினாரே!
மனுதர்ம வழி சிந்திப்பவர்கள், நடப்பவர்கள் இவர்கள் என்பது விளங்கவில்லையா? இந்த நிலையில் மனுதர்மத்தை இந்த 2021லும் வாரி அணைத்து ஆரியம் ஆலிங்கனம் செய்வது புரிந்து கொள்ளத்தக்கதே!
சூத்திரன் வேசி மகன்? என்று இழிவுபடுத்தும் மனுதர்மம் குறித்து பாதிக்கப்பட்ட நாம் குமுறுகிறோம் - அதற்குக் காரணமானவர்கள் இன்றும் அதை நியாயப்படுத்துகிறார்கள் என்பது கவனம்! கவனம்!! கவனம்!!!
'சூத்திரன் என்றால் ஆத்திரங் கொண்டடி!' என்பது சுயமரியாதை இயக்கத்தின் குரல்!
No comments:
Post a Comment