சுயமரியாதை உள்ளவர்கள்?
விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
அப்படியானால் இதுவரை நடத்தியதெல்லாம் பேச்சுவார்த்தை இல்லையா? அந்நிய நாட்டுச் சதி - நக்சலைட்டுகள் ஊடுருவல் என்று ஒரு பக்கத்தில் பேசிக் கொண்டே, இன்னொரு பக்கத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் சுயமரியாதை உள்ளவர்கள் அதை ஏற்பார்களா?
சபரிமலையில்...
சபரிமலையில் 18 போலீசாருக்குக் கரோனா தொற்று.
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று அய்யப்பப் பக்தர்கள் பாடிச் செல்லுவார்கள். அந்த அளவுக்கு அய்யப்பன் சக்திமீது அபார நம்பிக்கை. கோவிட் - 19 - அய்யப்பன் ‘சக்தி'யைவிட பெரியது என்பதை இப்போதாவது ஒப்புக்கொண்டால் சரி!
‘பாரத் மாதா கீ, ஜெய்!'
குடும்பம் குடும்பமாக தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.
எதிலாவது நாடு ‘வளர்ச்சி அடைகிறது' என்ற புள்ளி விவரம் அரசுக்குத் தேவைதானே!
ராமனுக்குக் கோவில் கட்டுகிறார்கள் அல்லவா! அது போதும், மக்களுக்கு வறுமை வந்தால் என்ன? கரோனா தொற்றினால் என்ன?
‘பாரத் மாதா கீ, ஜெய்!'
மகிழ்ச்சிக் கடலில் மக்கள் மிதப்பார்களே!
ரூ.24,500 கோடி முதலீட்டில் 24 தொழில் திட்டங்கள் தமிழக முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்து.
ஜெயலலிதா காலத்தில் கூட இதுபோன்ற கையெழுத்துகள் அல்ல - கையொப்பங்கள் போடப்பட்டதுண்டு. அவற்றுள் எத்தனைத் திட்டங்கள் செயற்பாட்டுக்கு வந்தன என்று தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டால் மக்கள் மகிழ்ச்சிக் கடலில் மிதப்பார்கள் அல்லவா!
பா.ஜ.க.வுக்கு சொந்த புத்தி கிடையாது!
நல்லாட்சி தரும் கட்சியாக இந்தியாவில் பா.ஜ.க. மட்டும் இருப்பது எதைக் காட்டுகிறது?
அதற்குப் பின்னணியில் பா.ஜ.க. தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கு பண்பு பயிற்சி அளித்து கட்டுப்பாட்டை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
- ‘துக்ளக்', 23.12.2020
ஆக, பா.ஜ.க.வுக்கு சொந்த புத்தி கிடையாது அப்படித்தானே!
சரி, ஆர்.எஸ்.எஸின் பண்பு, நலனில் வன்முறைகள் விதிவிலக்கா? செத்த பசு மாட்டுத் தோலை உரித்த தாழ்த்தப்பட்டவர்களை அடித்துக் கொல்லுவதில் எல்லாம் பண்பு நலன்களை எதிர்பார்க்கக் கூடாது அப்படித்தானே!
டில்லியில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடமே அநாகரிகமாக நடந்துகொண்டதுகூட அந்தப் பட்டியலில் வருமா?
எந்த விதியை
மதிப்பது?
சாலை விபத்துகளில் முதலிடம் தமிழ்நாடுதான்!
விதியை நம்புகிற மக்கள்தான் இங்கு அதிகமே தவிர, சாலை விதிகளை நம்புவோர் குறைவே!
No comments:
Post a Comment