பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்தியாவே சுருதிபேதம் இல்லாமல் ஒற்றைக் குரலில் எழுந்து நிற்கிறது.
பிஜேபி அரசு ஒரே நாடு, என்ற ஒன்றை முன் வைத்து வருகிறது அல்லவா! அவர்கள் கூறும் அந்த ஒன்றே என்பது எப்படியாக இருந்தாலும் இந்தியா முழுமையும் உள்ள விவசாயிகள் இப்பிரச்சினையில் ஒரேகுரலில் எழுந்து நிற்கின்றனர்.
மோடி தலைமையிலான மத்திய அரசு இதுவரை கண்டிராத அளவுக்குக் கடும் எதிர்ப்புச் சுழல் பேரலையில் சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கிறது.
பிஜேபி கூட்டணியில் உள்ள கட்சிகளே இந்த பிரச் சினையால் விலகிச் செல்லும் நிலை ஏற்பட்டு விட்டது. மத்திய அமைச்சர் ஒருவரே பதவி விலகிடவில்லையா!
எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன என்று திசை திருப்பும் வேலை எல்லாம் எடுபடாது; எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் வேறு என்ன செய்ய வேண்டுமாம்?
விவசாயத்துக்கும் கார்ப்பரேட்களுக்கும் என்ன சம்பந்தம்? உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம் என்றால் தொழிலுக்கு வந்தனம் செய்வதும், உழவுக்கு நிந்தனை செய்வதும் என்ற நிலைதானே!
கார்ப்பரேட்டுகளின் கைக்கு விவசாயம் சென்றால், அவர்கள் இலாபம் ஈட்டுவதில் தானே கவனம் செலுத்துவார்கள்.
அரசிடம் இருந்தால் மக்கள் பிரச்சினைமீது கவனம் செலுத்த வேண்டிய, பொறுப்பு ஏற்க வேண்டிய கட்டா யம் ஏற்படும். மக்கள் தானே வாக்கு வங்கி? நாளைக்கு அவர்களிடம் வாக்குக் கேட்க வர வேண்டாமா?
அரசை எதிர்த்துப் போராடவும் முடியும். கார்ப்ப ரேட்டுகளின் கைக்கு விவசாயம் என்றால் உற்பத்திப் பொருள்களின் விலையை நிர்ணயம் செய்வது யார்? அவர்கள் வைத்ததுதானே சட்டம்?
உணவுப் பொருள்களைப் பதுக்கி வைத்து ஒரு கிராக்கியை ஏற்படுத்தி, அதன் மூலம் கொள்ளை இலாபம் அடிக்க மாட்டார்களா?
இந்த சட்டம் நிறைவேற்றிய முறையில்கூட மோசடி நடத்துள்ளதே! மக்களவையில் பெரும்பான்மை இருக் கிறது என்ற அடிப்படையில் சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டனர்.
மாநிலங்களவையில் என்ன நடந்தது? ஏன் வாக்கெடுப்பு நடத்தவில்லை? குரல் ஒட்டு மூலம் மசோதா நிறைவேறியது என்பது மோசடியல்லவா?
பெரும்பான்மை தங்களிடம் இருக்கிறது என்ற ஆண வத்தால் எதையும் செய்யலாம் என்ற நினைப்புக்கான ஆயுள் நீண்ட காலம் அல்ல; ஒரு முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டு திணறும் என்பதற்கு அடையாளம்தான் மத்திய பிஜேபி அரசுக்கு இப்பொழுது ஏற்பட்டுள்ள மிகப் பெரிய நெருக்கடி - கழுத்துச் சுருக்கு!
நேற்றைய வேலை நிறுத்தம் குமரி முதல் காஷ்மீர் வரை கம்பீரமாக நடந்திருக்கிறது.
நாணயமான ஜனநாயக அரசாக இருந்தால் மக்களின் இந்த உணர்வை மதிக்க வேண்டும். வீண் பிடிவாதம் - வறட்டுக் கவுரவம் பார்க்கத் தேவையில்லை.
விவசாயிகளின் பேச்சு வார்த்தையில்கூட பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்பது எதைக் காட்டுகிறது?
விவசாயிகள் சுண்டைக்காய் என்ற அலட்சியமா?
சரிவு ஆரம்பமாகிவிட்டது என்பதற்கு அடையாளம் தான் இந்த விவசாயப் போராட்டம்!
ராமன் கோயிலைக் காட்டி எல்லாவற்றையும் சமாளித்து விடலாம் என்று நினைக்க வேண்டாம்.
இந்தியாவிலேயே ஒரே ஒரு முதல் அமைச்சர்தான் மத்திய வேளாண் சட்டத்தை ஆதரித்துள்ளார் - அந்த முதல் அமைச்சரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரே! கெட்டுப் போவது என்று முடிவு செய்து விட்டால் நாம் என்னதான் செய்ய முடியும்?
No comments:
Post a Comment