கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுபோல மீண்டும் சரித்திரம் திரும்ப இருக்கிறது!
சிறப்புக் கூட்டத்தில் காணொலிமூலம் தமிழர் தலைவர்
சென்னை, டிச.8 இப்பொழுது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.விற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அவ்வளவும் தி.மு.க. கூட்டணிக்குக் கிடைக்கின்ற இடங்கள்தான். ஏனென்றால், தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவு ஒன்றையே ஆதார மாக எடுத்துக் கொள்ளலாம். நாடாளுமன்றத் தேர்த லில் மக்கள் எவ்வளவு தெளிவாக இருந்தார்கள் என் பதை நினைத்துப் பாருங்கள். 40-39 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. இந்தியாவே திரும் பிப் பார்க்கக் கூடிய அளவிற்கு, நாடாளுமன்றமே அதிரக்கூடிய அளவிற்கு அந்த நிலைமை ஏற்பட்ட தைப்போல, மீண்டும் இப்போது அந்த சரித்திரம் திரும்ப இருக்கிறது என்றார் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலும்- கூட்டணி வியூகங்களும்''
கடந்த 24.11.2020 அன்று மாலை ‘‘2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலும்- கூட்டணி வியூகங் களும்'' என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் காணொலி வாயிலாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
இராமன் - கிருஷ்ணன்; இப்பொழுது வேல்!
அதற்கு ஒரு வியாக்கியானம் சொல்கிறார்கள்; அரசியலில் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் சேரலாம். கொள்கையை வைத்துத்தான் கூட்டணி என்பது அவசியமில்லை என்று.
ஒரு காலத்தில் இராமனைக் காட்டினார்கள்; அடுத் ததாக கிருஷ்ணனைக் காட்டினார்கள்; இப்பொழுது 'வேலை'க் காட்டுகிறார்கள்.
வேடிக்கையாகச் சொல்லவேண்டுமானால், முதன் முதலாக, 'சப்கா சாத் - சப்கா விகாஸ்' என்று முழங் கினார்கள், ஆண்டொன்றுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்று மோடி சொன்னார்.
'வேலை கொடுப்பார்கள்' என்று இளைஞர்கள் எதிர்பார்த்தார்கள்; ஆனால், இப்பொழுது 'வேலை' அவர்கள் முருகன் கையிலே கொடுத்துவிட்டார்கள்.
இளைஞர்கள் வேலை கேட்டார்கள்; ஆனால், இவர்கள் வேலைக் கையிலே கொடுத்திருக்கிறார்கள்.
இதனால் மேலே வந்துவிடுவோம் என்று நினைத் தால், இதைவிட கேலிக்கூத்து வேறு ஒன்றுமே இருக்க முடியாது.
அவர்களின் வித்தைகள்
தமிழ்நாட்டில் எடுபடாது!
"வித்தைகளிலேயே" வித்தகராக இருந்த ஒருவரே, "இந்த வித்தைகள் தமிழ்நாட்டில் எடுபடாது; ஆகவே, வேறு வகையில் யோசியுங்கள்" என்று சொன்னார் என்று பத்திரிகைகளில், ஊடகங்களில் வெளிவந்தது.
காரணம் என்ன? இது சமூகநீதி மண் - இதைத் தெளிவாக உணர்ந்தவர்கள் தமிழக வாக்காளப் பெருமக்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, பக்தி, மதவெறி சாயம் பூசலாம் என்று நினைத்து, அதை வைத்து தேர்தலைச் சந்திக்கலாம் என்று நினைத்தால், அவர்க ளுக்கு மிஞ்சுவது ஏமாற்றமாக இருக்குமே தவிர, அவர்களுக்குக் கிடைப்பது தோல்வியாக இருக்குமே தவிர, நிச்சயமாக அவர்கள் வேறு எதைப்பற்றியும் நினைக்க முடியாது.
காரணம் என்ன?
நூறாண்டு கால வரலாறு. வெறும் விளையாட்டல்ல. இதில் எத்தனை பேர் ரத்தம் சொரிந்திருக்கின்றார்கள்.
"சித்திரச் சோலைகளே!
உமை நன்கு திருத்த இப்பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!
உங்கள் வேரினிலே"
என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பூங்காவைப் பார்த்து, பூக்களைப் பார்த்து, சித்திரைச் சோலைகளைப் பார்த்து கேட்டதைப்போல,
'அல்லாடி'களுடைய கில்லாடித்தனத்தையெல்லாம் தந்தை பெரியார் தாண்டி வென்றார்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், ஆண் டாண்டு காலமாக மனுதர்மம் ஆண்ட ஒரு மண் ணிலே, அதனை முற்றிலும் மாற்றிக் காட்டி, அனைவ ருக்கும் அனைத்தும், மறுக்கப்பட்ட கல்வி, தடுக்கப் பட்ட உத்தியோக உரிமைகள் இவையெல்லாம் கொடுக்கப்படவேண்டும். அனைவருக்கும் அனைத் தும் கிடைக்கவேண்டும் என்று ஓர் இயக்கத்தைத் தொடங்கி, அதற்கு வந்த எத்தனையோ எதிர்ப்புகளை யெல்லாம் தாண்டி - அரசமைப்புச் சட்டத்தை வைத்தே சமூகநீதியை அழித்துவிடலாம் என்று திட்டம் போட்டு வந்த 'அல்லாடி'களுடைய கில்லாடித் தனத்தையெல்லாம் தந்தை பெரியார் அவர்கள் தாண்டி, தன்னந்தனியராக நின்று அரசமைப்புச் சட்டத் திருத்தத்தையே கொண்டு வந்தார்கள்.
இந்தியாவிலேயே, ஒரு எம்.பி.,யைக்கூட தங்கள் இயக்கத்தில் வைத்துக் கொள்ளாத ஒரு காலகட்டத்தில், எப்படி அந்த உணர்வை உருவாக்கினார்கள்? மக்கள் மன்றத்தால்தான்.
எனவே, தேர்தலில் மற்ற செய்திகளைப் பார்ப் பதைவிட, நாம் மக்களோடு பழகக்கூடியவர்கள். இன் றைக்கு வேண்டுமானால், கரோனா காலகட்டத்தில் தள்ளி இருக்கலாம்; இது ஒரு தற்காலிகமான நிலை. ஆனால், அன்றாடம் மக்களோடு பழகக்கூடியவர்கள் நாம்.
அகில இந்தியக் கட்சிகள் - திராவிடக் கட்சிகளின் தயவால்தான் வெற்றி பெற்றிருக்கின்றன!
சட்டமன்றத்தைத் தாண்டி, நீதிமன்றங்களைத் தாண்டி - மக்கள் மன்றம்தான் மிக முக்கியமானது - அடிப்படையானது என்ற அளவில், தெளிவாக இருக்கக் கூடிய சூழலை நாம் பார்க்கிறோம்.
எனவே, அந்த மக்கள் மன்றத்தினுடைய தீர்ப்பு - தெளிவான தீர்ப்பு என்பதை 1971 ஆம் ஆண்டு பார்த்தோம்.
50 ஆண்டுகளில் திராவிடக் கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சி செய்திருக்கின்றன; அகில இந்தியக் கட்சிகள் என்று சொல்லக்கூடியவை கூட திராவிடக் கட்சிகளின் தயவால்தான் வெற்றி பெற்றிருக்கின்றன என்றுதான் இதுவரையில் வரலாறு இருக்கின்றது.
இது ஏதோ ஒரு விசித்திரம் அல்ல. ஆழமான ஒரு இலட்சியப் பயணம். அதனால்தான் அந்த அளவிற்கு சமூகநீதி மண்ணாக இருக்கிறது.
அந்த சமூகநீதியை குழிதோண்டி புதைக்க முயலுகின்ற இவர்கள் யாரோடு சேர்ந்திருந்தாலும், யாருடைய தோள்மீது ஏறி நின்றாலும், இருவருக்கும் சேர்ந்த தோல்வியைத்தான் மக்கள் தருவார்கள்.
இதில் நல்ல திருப்பம் - தெளிவான திருப்பம் என்னவென்றால், முன்னாலேயே தெளிவாக்கி விட்டார்கள்.
இரண்டு கூட்டணிகளைத் தனித்தனியே பார்க்க வேண்டிய அவசியம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் கூட்டணி ஒரு இலட்சியக் கூட்டணியாகும்.
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி - கொள்கைக் கூட்டணியல்ல.
"பா.ஜ.க.விற்கு எத்தனை இடங்கள் அ.தி.மு.க. கொடுக்கும்?" என்று இங்கே கூட கேட்டார்கள்;
நேற்றுகூட விடுதலை அறிக்கையில் நான் எழுதி யிருக்கிறேன். பா.ஜ.க.விற்கு எவ்வளவு இடங்கள் கொடுக்கிறார்கள் என்பதைப்பற்றி நாம் கவலைப் படவேண்டிய அவசியமில்லை.
பா.ஜ.க.விற்கு எவ்வளவு இடம் கொடுத்தாலும், அது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற் றிக்கு உறுதி செய்யப்பட்ட அறுதிப் பெரும்பான்மை போன்று, அது உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும்.
ஏனென்றால், தி.மு.க. கூட்டணியைப் பொருத்த வரையில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.விற்கு அவர்கள் அளிக்கிறார்களோ, அத்தனை இடங்க ளுக்கு மேலே கூட்டல் கணக்கை ஆரம்பிக்க வேண்டும்.
தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ள இடங்கள் எவ்வளவு என்று சொன்னால், அ.தி.மு.க. கூட்டணியில், எவ்வளவு பா.ஜ.க.விற்கு ஒதுக்கப்பட்ட இடமோ - அதற்குமேலே பிளஸ் அவ்வளவுதான். இதுதான் வரப்போகின்ற வியூகத்தில் மிக முக்கியமான அடிப்படையாகும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்
மக்கள் தெளிவாக வாக்களித்தனர்
பா.ஜ.க.விற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அவ்வள வும் தி.மு.க. கூட்டணிக்குக் கிடைக்கின்ற இடங்கள் தான். ஏனென்றால், தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவு ஒன் றையே ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.
நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் எவ்வளவு தெளிவாக இருந்தார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். 40-39 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது.
இந்தியாவே திரும்பிப் பார்க்கக் கூடிய அளவிற்கு, நாடாளுமன்றமே அதிரக்கூடிய அளவிற்கு அந்த நிலைமை ஏற்பட்டதைப்போல, மீண்டும் இப்போது அந்த சரித்திரம் திரும்ப இருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகமும் - திராவிடர் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருக் கிறார்கள் - இவர்கள் ஆதரிக்கிறார்கள் என்று, வெறும் ஆசையினாலே அல்லது வெறும் விருப்பத்தினாலோ நாம் இதனை சொல்லவில்லை. மாறாக, அறிவியல்பூர்வமா ஒரு பிரச்சினையை அணுகவேண்டும்; அறிவியல் சிந்தனை - காரணம் - காரியம் அதுதான் அறிவியல் பூர்வமானது. அந்தக் காரணம் - காரியம் என்று வருகின்ற நேரத்தில் நண்பர்களே, ஒரே ஒரு கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லட்டும்; அவர்களு டைய ஆதரவாளர்களாக இருக்கின்றவர்கள், அவர் கள் சார்பாக இருக்கக் கூடியவர்கள் யாராக இருந் தாலும், இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லட்டும்.
நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க.வும் - பா.ஜ.க.வும் கூட்டணி சேர்ந்தார்கள்; இவர்களோடு இன்னும் சில கட்சிகளும் சேர்ந்தார்கள். இவர்களோடு சேர்ந்ததினால், அவர்களும் சேர்ந்து தீர்ந்தார்கள்; வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் இல்லை.
அறவே அவர்கள் தமிழகத்தில் கணக்கைத் திறக்க முடியவில்லை; ஒரே ஒருவரைத் தவிர என்கிற கட்டம் வந்ததல்லவா - அதனை நீங்கள் நினைத்துப் பாருங்கள்; அதன்மூலமாக ஏற்பட்ட விளைவுகள் என்ன? அவர்கள் வெற்றி பெற முடியவில்லை என்பதற்குக் காரணம் என்னவென்றால், அவர்களுக் குள்ளேயே பிரச்சினை வந்தது; பா.ஜ.க.வோடு நாம் சேர்ந்ததினால்தான் இவ்வளவு பெரிய தோல்வியைப் பெற்றோம் என்று கூட்டணிக் கட்சிகளுக்குள் பிரச் சினை ஏற்பட்டதா? இல்லையா?
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வந்தவுடன், தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதா? அல்லது மாறக்கூடிய அளவிற்கு அவர்கள் நடந்துகொண்டிருக்கிறார்களா?
நீட் தேர்வில் இரட்டை வேடம்;
இரட்டை நாடகம்; இரட்டைக் குரல்
மத்திய அரசின் மீதான அச்சத்தினால், இங்கே இவர்கள் செய்கிறார்களே தவிர, அவர்கள் சொன்ன கொள்கைகளைக் கூட இவர்கள் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. நீட் தேர்வில் இரட்டை வேடம்; இரட்டை நாடகம்; இரட்டைக் குரல்.
இவர்கள் துணிச்சலாக, நாங்கள் இதைத்தான் செய் வோம் என்று சொல்லக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா? என்பதைத் தயவு செய்து நடு நிலையில் இருந்து சிந்திக்கவேண்டும்.
நாங்கள், ஏதோ ஒரு கட்சிக்காக, இயக்கத்துக்காக வாதாடவில்லை. ஓர் இனத்திற்காக, தமிழகத்தினுடைய நலனுக்காக, தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக, தமிழக இளைஞர்களுடைய எதிர்காலத்திற்காக பேசக் கூடிய அந்த நிலையில் தெளிவாக இருக்கிறோம்.
'வேலை'க் காட்டினால் உங்கள் பக்கம்
மக்கள் திரும்பமாட்டார்கள்
நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து, சட்டமன்ற தேர்தல் நடக்கக்கூடிய 2021 வரையில், இந்தக் காலகட் டத்தில், பல மாநில மக்களை நீங்கள் வென்றிருக் கிறீர்கள்; தமிழ்நாட்டு மக்களை வென்றிருக்கிறீர்களா? தமிழ்நாட்டு மக்கள் உங்கள் பக்கம் திரும்பியிருக் கிறார்களா? 'வேலை'க் காட்டினால் உங்கள் பக்கம் மக்கள் திரும்பமாட்டார்கள்; வேலை கொடுத்தால் ஒருவேளை இளைஞர்கள் உங்களைப் பற்றிச் சிந் திப்பார்கள். ஆனால், வெறும் 'வேலை'க் காட்டினால் நிச்சயமாக நீங்கள் எதிர்பார்க்கின்ற சூழல் ஏற்படாது.
இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, கலாச்சார ஆய்வுக் குழு என்ற பெயராலே, பார்ப்பன சங்கத்த வர்களுடைய கமிட்டி - அதற்கு எதிர்ப்பு - ஆய்வு மருத்துவ கலந்துரையாடலில் சித்த வைத்தியத்திற் குக்கூட இடம் கிடையாது என்கிற நிலை.
செம்மொழி நிறுவனத்தினுடைய
இன்றைய நிலை என்ன?
தமிழகத்தில் இருக்கக் கூடிய நாடாளுமன்ற உறுப் பினர் கடிதம் எழுதுகிறார். மத்திய அரசில் இருக்கின்ற அமைச்சர் அந்தக் கடிதத்திற்கு இந்தியில் எழுதுகிறார்.
ஆனால் 'தமிழ் வாழ்க' என்று இங்கே சொல்லு கிறார்கள்; 'தமிழ் மொழி சிறந்த மொழி' என்று இங்கே நாடகம் ஆடுகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்து விடுவார்களா?
கலைஞர் அவர்கள் போராடி தமிழ் மொழிக்கு செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்தார்கள். அந்த செம்மொழி நிறுவனத்தினுடைய இன்றைய நிலை என்ன?
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை நீங்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறீர்களா? தமிழ்நாட்டில் இருக்கின்ற சர்வீஸ் கமிசன் உள்பட தங்களுடைய இடத்தில் கொண்டு போய்விடலாம்; வடநாட்டிற்குக் கொண்டு போய்விடலாம்; எல்லோருக்கும் கதவு திறந்துவிடுவோம் என்று சொன்னால், தமிழக இளைஞர்கள் எரிமலை போல கொதித்துக் கொண் டிருக்கிறார்களே, இந்த உணர்வுகள் எல்லாம் வாக்குச் சாவடிக்கு முன் போகும்போது, மறந்துவிடுமா? என்பதைத் தயவு செய்து எண்ணிப் பார்க்கவேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் பலம் என்பது லட்சிய பலம் - போராட்ட பலம் - வரலாற்றுப் பின்னணி பலம் - இவையெல்லாம் சாதாரணமான தல்ல.
வித்தைகள்மூலமாக தி.மு.க. வெற்றி பெறவில்லை. மாறாக, கொள்கை ரீதியான ஒரு லட்சியப் பயணத்தின் அடிப்படையில் அமைந்த கூட்டணி தி.மு.க. கூட்டணியாகும்.
தமிழகம், சமூகநீதிக்காக,
இந்தியாவிற்கு வழிகாட்டிய மாநிலம்!
இன்றைக்குக்கூட நம்முடைய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர், நாம் நீண்ட காலத்திற்கு முன் கேட்ட ஒரு கேள்விக்குப் பதிலை, இன்றைக்குப் பளிச்சென்று அவருடைய டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
என்னவென்றால், சமூகநீதி என்ற வார்த்தையை, இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, தாழ்த்தப் பட்டவர்களுக்கு, பழங்குடியினருக்கு, மற்றவர்களுக்கு என்று ஒரு வார்த்தைகூட, புதிய தேசிய கல்வி கொள் கையில் இல்லையே! திட்டவட்டமாக சொல்லுங்கள், இட ஒதுக்கீட்டை நீங்கள் ஏற்கிறீர்களா? இல்லையா? என்று சொல்லுங்கள் என்று அவர்கள் கேட்கக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்றால், இதற்கு என்ன பதில்?
இந்த மண் ஏமாந்து விடுமா?
நீங்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் அழைத்து வாருங்கள்; எத்தனை அவதாரங்களை வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள்; எத்தனை அரிதாரங்களை வேண்டுமானாலும் பூசிக் கொண்டு வாருங்கள்.
- தொடரும்
No comments:
Post a Comment