அறிவை விரிவு செய்து அகண்டமாக்க - இதோ ஓர் அரிய தமிழ் நூல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 11, 2020

அறிவை விரிவு செய்து அகண்டமாக்க - இதோ ஓர் அரிய தமிழ் நூல்!

கடந்த 10 ஆண்டு கால கட்டத்தில் உலக அளவில் பிரபலம் அடைந்த வரலாற்று எழுத் தாளர் - சீரிய பல் கருத்துகளை உலகமெங்கும் தனது நூல்கள் மூலம் அளித்து வருபவர் யுவல் நோவா ஹராரி என்ற யூத வரலாற்றுப் பேராசிரியர். இவர் 2002 இல் ஆக்ஸ்ஃபோர்டில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

தற்போது ஜெருசேலம், ஹீப்ரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்!

சேப்பியன்ஸ்': மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு.

ஹோமோடியஸ்': வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு.

ஆகிய இவரது இரண்டு நூல்களும் உலகம் முழுவதும் சிந்தனைத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியனவாகும்.

அவர் 2018 இல் எழுதி வெளிவந்த நூல் "21ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்" என்ற இந்த நூல்!

21ஆம் நூற்றாண்டு பற்றிய ஒரு புதிய வெளிச்சத்தை இந்த நூலாசிரியர் சிறப்பாக இந்த படைப்பு மூலம் வாசக நேயர்களுக்குத் தந்து, இதற்கு முன் அறிந்திராத அறிவை அவர் களுக்குத் தந்துள்ளார்.

ஆங்கிலத்தில் "21 21 Lessons for the 21st Century" என்ற  தலைப்பில் வெளிவந்த இந் நூல், தமிழில் மொழியாக்கம் செய்து வெளிவந் தால் அது தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை, மும்பையில் உள்ள சிறந்த தமிழ் நூல் - மொழி பெயர்ப் பாளரான திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர் களிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்தேன் - ஒருமுறை அவருடனும், அவருக்கு எப்போதும் எல்லாவற்றிலும் வாழ்க்கை இணையராக, வழி காட்டி உதவுபவராக உள்ள அவரது வாழ் விணையரிடமும் உரையாடியபோது!

அவர் அதை சிறப்பாக செய்து முடித்துள்ளார். ஆங்கில நூலின் சுவை குறையாத அளவுக்கு மிகவும் கவனத்துடன், அவருக்கே உரிய ஆற்றல், அறிவு, அனுபவம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, தமிழ் இலக்கிய உலகுக்கு ஒரு சிறந்த நூலை கருவூலம் கண்டு வந்து தரு வதைப்போல் தந்துள்ளார்!

மஞ்சுள் பப்ளிஷிங் அவுஸ்' இதனை நேர்த்தி யாக அச்சிட்டு, ஆங்கில நூலுக்கு இணையாகத் தந்துள்ளனர்!

சிறந்த ஆங்கில நூல்களை நாம் போதிய ஆங்கில அறிவு வாய்ப்பு இல்லாததால் படிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தைப் போக்கும் வண்ணம், தமிழுக்குப் பெருந்தொண்டாற்றி யுள்ளார் திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்கள்.

இவர் தனித்தன்மையானவர்; மணமான பின்பும், தன் பெயருக்குப் பின்னால் உள்ள தன் தந்தையின் பெயரை மாற்றாதவர்!

அதை ஊக்குவிக்கும் அளவுக்கு ஒருமன தானவர் அவருடைய வாழ்விணையரான துணைவரும்! இனிய இலக்கிய தோழர்கள் இணை பிரியா இருவரும்!

இந்த நூலில்,

முதல் பகுதியில் ‘‘தொழில்நுட்ப சவால்'' என்ற  தலைப்பின்கீழ் -

1. ஏமாற்றம் 2. வேலை 3. சுதந்திரம் 4. சமத்துவம்

இரண்டாவது பகுதி,

‘‘அரசியல் சவால்''

5. சமூகம் 6. நாகரிகம் 7. தேசியவாதம் 8. மதம் 9. குடிவரவு இப்படி 5 பகுதிகள் - 416 பக்கங்கள்.

உலகின் பல்வேறு தகவல்களை எதிர் காலத்தை நாம் அணுக நம்மை நாமே ஆயத் தப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்கு பல தொழில்நுட்பங்களை அலசி ஆராய்ந்து கூறு கிறார்!

வாழ்வின் பாடப் புத்தகங்களாக உள்ள பெருமை சில நூல்களுக்கே உண்டு.

அதில் இந்நூல் தனிச் சிறப்பிடத்தைப் பெற்று, அனைவரது நூலகங்களிலும் - இல்லங்களிலும் இருக்கவேண்டிய சிறப்பிற்குரியதாகும்.

சிந்திக்க வேண்டிய தூண்டல், செயல்பட வேண்டிய தேவை என நம்மைப் பக்குவப்படுத் தத் தவறாத கையேடு இந்நூல்!

வாங்கிப் படியுங்கள்!

சுவைபட மொழியாக்கம் செய்த திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!

No comments:

Post a Comment