திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று - மத்திய பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள் பற்றியதாகும்.
20 நாட்களாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலை நகரமான டில்லியில் குவிந்து அறப்போர் நடத்தி வருகின் றனர். ஆயிரக்கணக்கில் கூடியும் எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பது அவர்களின் அறப்பாங்கினை காட்டுகிறது.
இந்தப் பிரச்சினை இந்தியாவையும் கடந்து பன்னாட் டுப் பிரச்சினையாகப் பேருரு எடுத்து விட்டது. பிரிட்டன் எம்.பி.க்கள், கனடா பிரதமரைத் தொடர்ந்து அய்.நா. பொதுச் செயலாளர் அன்டோனியா குட்ரஸ் வரை கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை, வெளிநாடுகள் தலையிடக் கூடாது என்று இந்திய தரப்பில் கூறப்படுவது ஏற்கத்தக்கதல்ல.
"மூடரும் முதலையும் கொண்டது விடா" என்ற நிலையிலிருந்து மத்திய அரசு மாற வேண்டும். துக்ளக் போன்ற ஊடகங்கள் வக்காலத்து வாங்கி எழுதுவது சரியானதல்ல - உண்மையும் அல்ல.
பிரச்சினை 1 : இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் உணவு தானியங்கள் தொடர்பாக வெவ்வேறு சட்டங்கள், நடைமுறைகள் இருந்தன. அதனால் உணவு தானியங்களை கொள்முதல் செய்வதில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வழிமுறைகளை அவர்கள் கையாள வேண்டியிருந்தது.
மோடியின் தீர்வு: மாநிலங்களிடமிருந்து இந்த உரிமை களை கையகப்படுத்தி ஒரே நாடு ஒரே சட்டம் என்று நிறை வேற்றினார், கார்ப்பரேட்டுகளுக்கு இந்திய முதலாளிகளுக்கு பெரு மகிழ்ச்சி
பிரச்சினை 2 : கார்ப்பரேட்டுகள் இந்த உணவுத் தானியங் களை கொள்முதல் செய்து பெரிய பெரிய கிட்டங்கிகளில் (பதுக்கி) வைப்பார்கள். இந்த நீண்ட கால பதுக்கல், சந்தையில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி ஒரு செயற்கையான பற்றாக்குறையை சந்தையில் ஏற்படுத்தும், விலை உயர்வுக்கு வழிவகுக்கும். இப்படி நெடுங்காலம் பதுக்கி வைப்பது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் படி குற்றம்.
மோடி தீர்வு : இனி உணவு தானியங்கள் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் வராது, அதனால் இனி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் அவர்கள் உணவு தானியங்களை பதுக்கலாம். கார்ப்பரேட்டுகள், முதலாளி களுக்கு மகிழ்ச்சி
பிரச்சனை 3: விவசாயிகளுக்கு எந்த மாதிரியான பயிர்களை எந்த காலத்தில் வளர்ப்பது என்கிற தேர்வில் சில குழப்பங்கள் இருந்தன.
மோடியின் தீர்வு: ஒப்பந்த அடிப்படையிலான விவசாயம். இனி கார்ப்பரேட்டுகள் எந்த பருவத்தில் எந்த பயிர் வளர்க்க வேண்டும் என்று கூறுவார்கள், அவர்களின் சொல்படி விவசாயி நடக்க வேண்டும். கார்ப்பரேட்டுகள், பெரு முதலாளிகளுக்கு பெரு மகிழ்ச்சி.
பிரச்சினை 4 : இந்த ஒப்பந்தங்களில் ஏதாவது தவறுகள் நிகழ்ந்தால், விவசாயிகள் நீதிமன்றத்திற்கு சென்றால் இதனை பெரு முதலாளிகள் எவ்வாறு கையாள்வது ? இது பெரும் பிரச்சினை தானே.
மோடியின் தீர்வு : கார்ப்பரேட்டுகள் செய்து கொள்ளும் இந்த ஒப்பந்தங்களுக்கு எதிராக விவசாயிகள் உயர்/உச்ச நீதிமன்றத்தை அணுக முடியாது அவர்கள் கீழமை நீதிமன்றம் (Sub-Divisional Magistrate) அல்லது (District Court) மாவட்ட நீதிமன்றங்கள் அளவில் மட்டுமே செல்ல இயலும் அதற்கும் மேல் செல்ல இயலாது.
மோடி விவசாயிகளை மட்டும் இதில் குறிவைக்கவில்லை. மாறாக இனி மூன்று வேளை உணவு உண்ணும் ஒவ்வொரு வரின் வயிற்றையும்கூட குறி வைக்கின்றனர். பன்னாட்டு நிறுவனங்களுக்கு தங்களின் சந்தையை நிறுவ உலகின் பிற நாடுகள் காலனிகளாக தேவைப்பட்டன, தங்களின் கொள்ளை லாபத்திற்காக பிற நாடுகளை அடிமைப்படுத்தினார்கள், ஆனால் இந்திய முதலாளிகளுக்கு இந்தியாவிற்குள்ளேயே பல காலனிகள் இருக்கின்றன, அவர்கள் இந்த தேசத்தின் மக்களையே அடிமைகளாகத்தான் பார்க்கிறார்கள். இந்தியா வில் உள்ள சராசரி மனிதனின் ஒட்டு மொத்த சிறுசேமிப்பு களையும் பணமதிப்பிழப்பின் மூலம் சிதைத்தார்கள். அதன் மூலம் இங்கே குறுந்தொழில் சிறுதொழில் செய்து கொண் டிருந்தவர்களை எல்லாம் நடுத்தெருவிற்குக் கொண்டு வந்தார்கள், இன்று இந்தியாவின் விவசாயிகளின் எதிர் காலத்தை முற்றாக சிதைத்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment