உத்தரப்பிரதேசத்தில் இரண்டு வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு நிபந்தனைகளை விதிக்கும் மதமாற்ற தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்து 9 நாட்கள் ஆன நிலையில் இதுவரையில் 56 வழக்குகள் பதிவாகியுள்ளன. 24 மணி நேரத்தில் பதிவான இரண்டு வழக்குகள் மதவெறியில் ஊறிப்போன அரசின் நடவடிக்கையைக் காண்பிப்பதாக உள்ளன.
பரேலியில் தன்னுடைய மகள் மதமாற்றம் செய்து கொண்டு இந்து ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்று அப் பெண்ணின் இஸ்லாமியத் தந்தை அளித்த புகாரை காவல்துறை ஏற்க மறுத்துவிட்டது. மேலும் இந்த சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு செப்டம்பர் மாதமே அப்பெண்ணுக்கு திருமணம் நடைபெற்று விட்டது என்ற பெண்ணின் சாட்சியத்தின் அடிப்படையில் இந்த வழக்கு எடுக்கப்படவில்லை என்று காவல் துறையினர் கூறியுள் ளனர். காரணம் இங்கு மணமகன் இந்து - மணமகள் முஸ்லிம்.
ஆனால், மொரதாபாத்தில் காவல்துறையினர் முஸ்லீம் நபர் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவருடைய மனைவி தங்களுக்கு ஜூலை மாதத்திலேயே திருமணம் நடை பெற்றுவிட்டது என்று கூறியும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அந்த நபரின் சகோதரனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இங்கு மணமகன் முஸ்லிம் - மணமகள் இந்து.
மொரதாபாத் காவல்துறை அந்த இந்துப் பெண்ணை அரசு பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பிவைத்துள்ளது. இதற் கிடையே 22 வயதான ஆலிஷாவின் தந்தை ஷாஹித் மியான், பரேலியில் உள்ள பிரேம் நகர் காவல் நிலையத்தில் தனது மகள் அவர் பணிபுரிந்து வந்த ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட மூன்று நபர்களால் கடத்தப்பட்டதாக புகார் அளித்தார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி அவனீஷ் குமார், "வழக்குப் பதிவு செய்யப்பட்டவுடன், விசாரணைக்காக மணப்பெண் ஆலிஷா வரவழைக்கப்பட்டார். அப்போது அவர் தான் ஒரு மேஜர் என்றும், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் புகார் பொய் என்றும் கூறினார். அவர் சொந்த விருப்பத்தின்படியே அமனுடன் சென்றதா கவும், அமனை ஆர்ய சமாஜ் கோவிலில் செப்டம்பர் 29ஆம் தேதி அன்றே திருமணம் செய்து கொண்டதாகவும், அதனை வீட்டில் இருந்து கொண்டே மறைத்ததாகவும் தெரிவித்தார். மேலும் அந்தப் பெண் தன்னுடைய திருமண ஆவணங்களை கையில் கொண்டு வந்தார்" என்று கூறினார்.
காவல்துறையினர் ஆலிஷாவின் ஆவணங்களைப் பரி சோதனை செய்தனர். மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவரிடம் இருந்து ஒரு அறிக்கையைப் பெற்றனர். காவல்துறையிடம் கூறியதையே அவர் அங்கு மீண்டும் உறுதி செய்தார். “மகள் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தந்தை அவருடைய புகாரில் தெரிவிக்காத காரணத்தால் மதமாற்ற தடை சட்டத்தை நாங்கள் செயல்படுத்தவில்லை” என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
ஆனால் 'இந்தியன் எக்ஸ்பிரசி'டம் இது குறித்துக் கூறிய ஆலிஷாவின் தந்தை ஷாஹித் மியான், "திருமணம் மதமாற்றம் செய்யாமல் நடைபெற முடியாது. புதிய சட்டத்தை செயல்படுத்துங்கள் என்று நான் காவல்துறையிடம் கேட்டேன்.
அதற்கு காவல்துறை அதிகாரி திலீப் சிங், 'இந்த திருமணம் செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது இந்த சட்டங் கள் நடைமுறையில் இல்லை' என்றார். பரேலி ஏ.எஸ்.பியிடம் பேசிய போதும், இதையே கூறினார்" என்று அதிருப்தி தெரிவித்தார்.
இதே போன்று கந்த் பகுதியில் பிங்கி என்ற பெண்ணுடன் தன்னுடைய திருமணத்தைப் பதிவு செய்ய சென்ற ரஷீத் அலி (22), அவருடன் சென்ற அண்ணன் சலீம் அலியும் (25) கைது செய்யப்பட்டனர்.
பிஜ்னூரில் காவல்நிலையத்தில் புகார் அளித்த பிங்கியின் குடும்பத்தார், ரஷீத் அலி, திருமணம் மூலம் தன்னுடைய மகளை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்தார் என்று புகார் கூறியுள்ளனர். "நான் ரஷீதை ஜூலை 24ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டேன். அப்போது இருந்தே மொரதாபாத்தில் உள்ள கந்த் பகுதியில் தான் வசித்து வருகிறேன். என்னுடைய விருப்பப்படியே நான் அவரை திருமணம் செய்து கொண்டேன்" என்று பிங்கி (இந்து) கூறியுள்ளார்.
காவல்துறை அதிகாரி பல்ராம் இது குறித்துக் குறிப்பிடும் போது, "பிங்கியின் தாயார், ரஷீத் தன் மகளை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டார் என்றும், மதமாற்றம் செய்துள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். அவருடைய புகாரில், தன்னுடைய மகளை திருமணம் செய்து கொள்வதற்காக ரஷீத்அலி பிங்கியை கந்திற்கு அழைத்து வந்துள்ளார் என்றும், அவர் ஒரு இஸ்லாமியர் என்ற அவருடைய அடையாளத்தை மறைத்துவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பெண்ணுக்கும், ரஷீத்துக்கும் ஜூலையிலேயே திருமணம் நடைபெற்றதா என்பது விசாரணையின் போது தான் இது தெரியவரும். இதுவரையில் அந்தப் பெண் திருமணம் தொடர்பாக எந்தவிதமான ஆவணங்களையும் சமர்பிக்கவில்லை" என்று கூறினார்.
ரஷீத் மற்றும் சலீம் ஆகியோர் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நவம்பர் 28ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த Prohibition of Unlawful Conversion of Religion Ordinance - 2020 சட்டம், சட்ட விரோத வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக என்று கூறப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்பவர்களுக்கு விருப்பம் இருந்தாலும் கூட திருமணத்திற்காக மதம் மாறுவதை இச்சட்டம் தடுக்கிறது. இதன் மூலம் ஒருவர் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற வாய்ப்புகள் உண்டு.
மணமகன் இந்துவாக இருந்து முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படுவதில்லை. ஆனால் மணமகன் முஸ்லிமாக இருந்து மணமகள் இந்துவாக இருந்தால் கைது நடவடிக்கை, நாடு எங்கே செல்லுகிறது? உ.பி.யில் இந்து ராஜ்ஜியம் வந்தே விட்டதா?
No comments:
Post a Comment