மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சை செய்ய ஆயுர்வேதத்திற்கு இடம்கொடுப்பது வருணாசிரமப் பார்வையே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 9, 2020

மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சை செய்ய ஆயுர்வேதத்திற்கு இடம்கொடுப்பது வருணாசிரமப் பார்வையே!

அலோபதி அறுவை சிகிச்சை முறையில் ஏராளமான புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள நிலையில் பின்னோக்கிப் பயணிப்பதை கைவிடவேண்டும்!

டாக்டர்கள் எதிர்ப்புப் போராட்டம் நியாயமானதே!

அலோபதி மருத்துவத்தில் புதிய புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்துவரும் நிலையில், பழங்கால ஆயுர்வேதம் என்ற சமஸ்கிருத முறையை அறுவை சிகிச்சையில் திணிப்பது - மக்களின் உயிரோடு விளையாடுவது ஆகும்; மத்திய அரசின் இந்தப் பிற்போக்கு வருணாசிரம சிந்தனையைக் கைவிடவேண்டும் என்றும், ஆயுர்வேத முறையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு அளிக்கப்படும் அனுமதியை மத்திய அரசு கைவிடவேண்டும் என்றும்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய அரசின் நல்வாழ்வுத் துறை, ‘நீட்' தேர்வைப் பிடிவாதமாகத் திணிப்பதற்குச் சொல்லப்படும் ஒரு காரணம் தரமான மருத்துவர்களை உருவாக்கவேண்டும்; நோயாளிகளின் உயிரோடு விளையாடக் கூடாது என்பது மிகமிக முக்கியம் என்று ஒருபுறம் கூறிக் கொண்டே, மறுபுறத்தில்...!

கண்டனத்துக்குரிய கேலிக் கூத்து!

ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சைக் கான தகுதியுண்டு என்று ஒரு மருத்துவ விதிகளை மாற்றி, மிக்சியோபதி (Mixopathy) என்று பெயர் கொடுத்திருப்பதைவிட கண்டனத்திற்குரிய கேலிக்கூத்து வேறு இல்லை!

ஆயுர்வேதத்தின்மீது - மற்ற பிரிவுகளை (சித்த வைத்தியம், யுனானி போன்றவற்றின்மீது காட்டாத தீவிர ஆர்வம்)விட அதிகமான அதீத அக்கறை காட்டுவதற்கு மூலகாரணம், அது சமஸ்கிருத கலாச்சாரத்திலிருந்து உருவான ஒன்று என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கை அஜெண்டாதான் என்பது உலகறிந்த ரகசியம்!

மத்திய அரசு சித்த வைத்தியத்திற்கு ஒதுக்கிடும் தொகைக்கும், ஆயுர்வேதத்திற்கு ஒதுக்கும் நிதியும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. அதற்குக் காரணம், இது தமிழ்ப் பண்பாடு - கலாச்சாரம் அடிப்படையைக் கொண்டது என்பதுதான்!

மருத்துவத்திலும் வருணாசிரமப் பார்வையா?

மருத்துவத்தில்கூட இப்படி ஒரு வருணாசிரம சிந்தனை ஓட்டம் வேடிக்கையானது.

அலோபதி என்ற ஆங்கில முறை வைத்தியத்தில்கூடPhysician என்ற மருந்துமூலம் குணப்படுத்தும் முறை மருத்துவப் படிப்பினைப் படித்தவர்களுக்கு அறுவை சிகிச்சை நடைமுறை கிடையாதே! அதனால்தானே, Physician's Cure, Surgeon's Cure - மருந்துமூலம் குணப்படுத்தும் மருத்துவம், அறுவை சிகிச்சைமூலம் நோயைக் குணப்படுத்தும் சிகிச்சை என்று இரண்டு முறைகள் காலங்காலமாக செயற்பாட்டில் உள்ளது!

அப்படி அதிலேயே இருக்கிறபொழுது, மருத்துவப் பட்டப் படிப்பும், அதற்கேற்ப M.D., - M.S., என்று பிரித்து சொல்லிக் கொடுக்கப்படுகிற நிலை உள்ளது!

அறுவை சிகிச்சை செய்வதில் முக்கிய பங்கு  - மயக்க மருந்து  (Anaesthesia) கொடுப்பதாகும். அதன் அளவு, நோயாளியின் தன்மைக்கேற்ப அளவீடு பார்த்து கவனமாகக் கொடுத்து, வலி உபாதையிலிருந்து நோயாளிக்கு இதமான முறையில் அறுவை சிகிச்சைமூலம் குணப்படுத்த அதற்கென்றே தனிப்படிப்பு படித்து தகுதி பெறுகிறார்கள் ஆங்கில மருத்துவ முறையில் மருத்துவர்கள்.

நாட்டில் ஜனத்தொகையைக் குறைக்க ஏற்பாடா?

ஆயுர்வேத டாக்டர்கள் இதனை எப்படிக் கையாளு வார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி. மேலும் பல சிக்கலான உடற்கூறு நுணுக்கங்களை அறிந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில், இப்போது ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்தால், மிகப்பெரிய உயிர்க்கொல்லி ஆகி, நாட்டில் ஜனத்தொகையைக் குறைக்கத்தான் உதவுமே தவிர, மற்றபடி பயன்படாது! விபரீதமான மத்திய அரசின் இந்தத் திட்டத்தை எதிர்த்து டாக்டர்கள் எதிர்ப்பு காட்டுவது, மக்கள் நலன் கருதியே தவிர, அவர்களுக்காக அல்ல!

மத்திய அரசு இந்த விபரீத யோசனை - திட்டத்தைக் கைவிடவேண்டும்!

மருத்துவத்தில் - மருந்து கொடுத்து குணப்படுத்தும் ஆயுர்வேதத்தைப் பயன்படுத்தட்டும்; அதுபோல, மற்ற முறைகளிடத்தும் பாரபட்சம் காட்டாமல் - மாற்றாந்தாய் மனப்பான்மையோடு சித்த வைத்தியம், யுனானி போன்றவற்றில் நியாயமாக நடந்துகொள்ள வேண்டியது மிகமுக்கியம்!

முன்னோக்கிச் செல்லவேண்டும்பின்னோக்கி அல்ல!

21 ஆம் நூற்றாண்டில் அறிவியல் மருத்துவவியலின் வளர்ச்சி, முன்னோக்கி செல்லவேண்டுமே தவிர,  பின்னோக்கி, ஆதிகாலத்தின் அறுவை சிகிச்சைக் காலத்தை நோக்கிப் போவது வளர்ச்சி அல்ல; விபரீத விளையாட்டு - அதுவும் மக்களின் - நோயாளிகளின் உயிருடன் என்பது விரும்பத்தகாத விபரீத நிலை!

டாக்டர்களின் எதிர்ப்பு நியாயமானதே!

எனவே, மத்திய அரசு இந்தத் திட்டத்தை கைவிடுவதே சாலச் சிறந்தது - மற்ற வழிகளில் ஆயுர்வேதத்தை ஊக்கப்படுத்தட்டும்; இப்படி ஓர் அபாயகரமான முயற்சியில் ஈடுபடக் கூடாது. மறுபரிசீலனை செய்வது அவசியம், அவசரம்!

டாக்டர்களின் எதிர்ப்பு நியாயமானது - தேவையானதும்கூட!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

9.12.2020

No comments:

Post a Comment