தங்கம் தென்னரசு கடும் கண்டனம்
சென்னை,டிச.9, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு நேற்று (8.12.2020) வெளியிட்ட அறிக்கை:
கலைஞர் முதல்வராக இருந்த போது 1972ஆம் ஆண்டில் பொது நூலகத்துறை இயக்குநரகம் உருவாக் கப்பட்டு, அதன் கட்டுப்பாட்டில் உள்ள கன்னிமாரா நூலகம் இன்று 125ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. மேலும், கலைஞரின் மகத்தான சாதனைத் திட்டமாகவும், ஆசியாவின் பெரும் நூலகங்களில் ஒன்றாகவும் உலகப்புகழ் பெற்று மிளிரும் அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட 4,500க்கும் மேற்பட்ட நூலகங்கள் தமிழகம் முழுவதும் இயங்கி வருகின்றன.
பொது நூலகத்துறையின் மூலம் அண்மைக்காலமாக வாங்கப்பட்ட நூல்களில் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்கள் கூட இடம்பெறவில்லை. நூலக நடவடிக்கைகளின் மீது அக்கறை கொண்ட சில சமூக ஆர்வலர்களும், எழுத்தாளரும், குறிப்பிட்ட ஓர் ஆண்டில் வாங்கப்பட்ட புத்தகம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய வினாக்களுக்கு பொது நூலகத்துறை உரிய தகவல் அளிக்க முன்வராமல் இத்தகு தகவல் கோர வாய்ப்பில்லை என்று பதில் அளித்திருக்கிறது. ஏன்; பொது நூலகத்துறையே கடந்த பத்தாண்டுகளாக முழு நேர இயக்குநர் நியமனம் இன்றிக் கூடுதல் பொறுப்பாக கவனிப்பாரின்றி தடுமாறிக்கொண்டிருக்கிறது.
இந்த அவல நிலை மாற இன்னும் அதிக நாட்கள் இல்லை; திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினின் நல் லாட்சியில் பொது நூலகத்துறை, புதுப்பொலிவு காண்பது உறுதி எனினும், நூலகத்துறை தன் மீது படர்ந்திருக்கும் களங்கத்தைக் கழுவிக்கொள்ளும் பொருட்டாவது, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்து, நூலகத்துறை சார்பில் அண்மைக்காலமாக வாங்கப்பட்ட அனைத்து நூல்கள், அவற்றின் எண்ணிக்கை, பதிப்பாளர்கள், தொகை குறித்த முழு விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதோடு, தரமான படைப் புகளை பொது நூலகங்களுக்கான பயன்பாட்டிற்காக வாங்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய எதிர்ப்பு
தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்
சென்னை,டிச.9, ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்யலாம் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
அலோபதி மருத்துவர்கள் செய்து வந்த அறுவைச் சிகிச்சைகளை இனி ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம் என்ற அறிவிப்பை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டது. இதற்கு அலோபதி மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பொது சுகாதாரத்தையும், மக்களுக்கான ஆரோக்கியத்தையும் கேள்விக்குறியாக்கி, நோயாளிகளுக்கு அதிக பிரச்சினைகளையும், குழப்பங் களையும் தரக்கூடிய இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இதனை வலியுறுத்தி நேற்று (8.12.2020) தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மேலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் கரோனா சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சைகள் தவிர மற்ற எந்த சிகிச்சைகளையும் செய்யாமல் எதிர்ப்பை பதிவு செய்தனர். அதேபோல, இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைமை நிலைய மேலாளர் சந்திரசேகர், மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் போராட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment