என்று வடியும் இந்தத் துயர வெள்ளம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 11, 2020

என்று வடியும் இந்தத் துயர வெள்ளம்?

சென்னை சத்தியவாணிமுத்துநகரில் குடியிருக்கும் 2200 குடும்பங்களைப் பெரும்பாக்கத்தில் குடியமர்த்த அரசு ஏற்பாடு. செய்வதை எதிர்த்து கூவம் ஆற்றில் இறங்கி குடியிருப்புவாசிகள் போராட்டம் நடத்துகின்றனர்.

போராட்டக்காரர்கள் கூறும் காரணம் நியாயமானது. யோசிக்க வேண்டியதும்கூட. இவர்கள் அனைவரும் அன்றாடம் கூலி வேலை, வீட்டு வேலை (பெண்கள்), ரிக்ஷா, ஆட்டோ ஓட்டும் பணிகளிலும் ஈடுபட்டு வாழ்க்கையை நகர்த்தக் கூடியவர்கள். இவர்களை பெரும்பாக்கத்தில் குடி அமர்த்தினால் அவர்களின் அன்றாட வாழ்வின் நிலைப்பாடு என்ன?

அன்றாட வேலைக்காக எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும்? அதனால் அவர்கள் அன்றாடம் பேருந்துக் கட்டணத்துக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும்?

தோட்டத்தில் பாதி கிணறு என்பதுபோல அன்றாடம் சம்பாதிக்கும் பணத்தில் பாதி அளவு பேருந்து கட்டணத்திற்காகவே செலவழிக்க நேரும்.

ரிக்ஷா ஓட்டுபவர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், நகருக்குள் வந்து பணிகளைத் தொடர எவ்வளவு தூரம் கடந்து வர வேண்டும்?

வீட்டு வேலை செய்யும் பெண்கள் எத்தனை மணிக்குக் கிளம்பி வந்து, எத்தனை மணிக்கு வீடு திரும்புவது?

வேறு வேலைக்குச் செல்லலாம் என்றால் குடியேற்றப்படும் பெரும்பாக்கம் பகுதியில் அதற்கான வாய்ப்பு வசதிகள் உண்டா? பிள்ளைகள் படிப்பதற்கு அருகாமையில் கல்விக் கூடங்கள், இரயில் போக்குவரத்து வசதிகள் உண்டா? அரசு மருத்துவமனை உண்டா? என்ற ஏகப்பட்ட கேள்விகள் எழுந்து  நிற்கின்றன.

ஒரு திட்டத்தை அரசு மேற்கொள்ளும்போது, அதன் பார தூர விளைவுகள் பற்றி ஆழ்ந்து யோசிக்க வேண்டாமா?

இப்பொழுது இருக்கும் இடத்திலேயே குடி அமர்த்த வேண்டும் என்று கூட அவர்கள் அடம் பிடிக்கவில்லை.

புளியந்தோப்பு, மூல கொத்தளம், காசிமேடு போன்ற பகுதிகளில் குடியேற்றுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தப் பிரச்சினையை மனிதாபிமானக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டியது ஒரு மக்கள் நல அரசின் அடிப்படைக் கடமையாகும்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் ஓடியும் இன்னும் நடைபாதைக் குடிசைவாசிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியில் குடிசை மாற்று வாரியம் என்னும் திட்டத்தின் செயல்பாடு ஒரு புரட்சிகரமான மாறுதலை ஏற்படுத்திய ஒன்றாகும். அந்தத் திட்டம் மட்டும் நிறைவேற்றப்படவில்லையென்றால் சென்னைப் பெரு நகரமே குடிசைகளின் மாநகரமாகவே காட்சி அளித்திருக்கும்.

ரிக்ஷா ஓட்டுதல், ஆட்டோ ஓட்டுதல், பெண்களின் சமையல் வேலைகள், மூட்டைத் தூக்குதல், வணிக நிறுவனங்களில் பணியாற்றுதல் மேலும் அன்றாடக் கூலி வேலைகள் என்பது போன்றவைதான் இந்த மக்களின் அன்றாட வாழ்க்கையின்வருமானத்திற்கு வழி தேடிக் கொடுக்கின்றன.

இம்மக்களின் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்ற உணர்வு இப்பொழுதுதான் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளிகள்தான் இவர்களுக்கான கல்விக் கண்களைத் திறக்கும் அரும்பணிகளைச் செய்து கொண்டுள்ளன.

மற்ற மக்களுக்கு இருப்பது போன்ற அடிப்படை வசதிகள் பெற்ற குடிமக்களாக இவர்கள் வாழ்வது எப்பொழுது? அதற்கான திட்டங்கள் அரசிடம் உண்டா? என்பது எல்லாம் அடிப்படைக் கேள்விகள்.

மழை வெள்ளம் வந்தால் குடியிருக்கும் குடிசைகளும், அன்றாடம் தேவைக்குப் பயன்படும் பொருள்களும் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துபோகும் நிலை. அந்தக் கால கட்டத்தில் அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்கள், குழந்தைகள், நிறைமாத கர்ப்பிணிகள் படும் துயரம் - வார்த்தைகளால் விவரித்துக் கூறப்பட முடியாதவை.

மழை வெள்ளத்தைத் தாண்டியது இம்மக்களின் துயர வெள்ளம்! இயற்கைத் தொல்லைகள் வரும்போது, அந்தக் கால கட்டத்தில் மட்டும் பேசப்படும் பொருளாக இவை இருக்கின்றனவே தவிர, மற்றபடி நிரந்தரப் பரிகாரம் தேடப்படுவதில்லை. திட்டமிடப்படுவதும் இல்லை.

ஏதோ குடிசைவாசிகளின் பிரச்சினைகள் மட்டுமே இவை என்று கருதிவிடாமல் சமூகத்தில்  ஒரு முக்கியமான அங்கமான மக்களின் பிரச்சினை என்பதை மற்றவர்களும் கருத வேண்டும். தேவை ஒரு விழிப்புணர்வு - என்று வி()டியும் இந்தத் துயர வெள்ளம்?

No comments:

Post a Comment