* மின்சாரம்
நேற்றைய (14.12.2020) 'தினமலர்' "மயக்க பிஸ்கெட்" தலைப்பில் "தி.க. புத்தகம் ஹிந்து மதத்தைச் சீண்டுவதால் தி.மு.க அதிர்ச்சி" என்று ஒரு 'உல்டாப்பைச்' செய்துள்ளது.
ஏற்கெனவே இலை மறைவு காய்மறைவாக இருந்த 'தினமலர்' ஏடு இப்பொழுதெல்லாம் பச்சையாக பா.ஜ.க.வின் ஆர்.எஸ்.எஸின் 'அதிகாரப்பூர்வ' ஏடாகவே முகத் திரையைக் கிழித்துக் கொண்டு வெளியில் வந்து விட்டது.
நடுநிலை ஏடு என்று காசு கொடுத்து வாங்கும் தமிழர்கள்தான் சிந்திக்க வேண்டும்.
'மயக்க பிஸ்கெட்' எனும் தலைப்பில் திராவிடர்கழகம் வெளியிட்டது உண்மைதான்; வீதி வீதியாகக் கொண்டு போய் மக்களிடம் சேர்ப்பதும் உண்மைதான்.
ஏன் இந்த வெளியீடு?' இதற்கான பதிலை 'தினமலரே' எழுதியுள்ளது.
திருச்சியை சேர்ந்த தெய்வீக தமிழக சங்கத்தின் சார்பில் வீடு வீடாக துண்டுப் பிரசுரம் வழங்கி, பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஹிந்து அமைப்பினர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தத் துண்டுப் பிரச்சாரத்திற்கு எதிராக திராவிடர் கழகம் சார்பில் "தமிழ் மக்களே, காவிகளைப் புரிந்துகொள்ளுங்கள், சிந்திக்க சில கேள்விகள்" என்ற தலைப்பில் 31 பக்கத்தில் புத்தகம் ஒன்றை தயாரித்துள்ளனர்.
இந்தப் புத்தகத்தை ஹிந்து அமைப்பினருக்கு போட்டி யாக திராவிடர் கழகத்தினர் வழங்கி உள்ளனர் என்று 'தினமலரே' திராவிடர் கழக வெளியீட்டுக்கான காரணத்தை விளக்கி விட்டது.
ஹிந்து அமைப்பினரின் வெளியீட்டையும், திராவிடர் கழகத்தின் வெளியீட்டையும் ஒரு சேரப் படிக்கும் எவருக் கும் ஹிந்து அமைப்பினர் என்று சொல்லிக் கொள்பவர்களின் வெளியீட்டின் அபாண்டமான பொய் மூட்டைகளையும், திராவிடர் கழகத்தின் அறிவுப் பூர்வமான நேர்மையான பதிலையும் தயக்கமின்றித் தெரிந்துகொள்ள முடியும்.
ஹிந்து அமைப்பினரின் வெளியீட்டில் இடம் பெற்றுள்ள ஒன்றிரண்டை மட்டும் எடுத்துக் கூறி, அதே நேரத்தில் திராவிடர் கழகத்தின் வெளியீட்டில் இடம் பெற்று இருப்பது என்ன என்பதைப்பற்றி உண்மையாக எடுத்துக் காட்டாமல், "ஹிந்து மதத் தர்மங்களை விமர்சித்து 31 பக்கத்தில் புத்தகம் ஒன்றைத் தயாரித்துள்ளனர்.
இந்தப் புத்தகத்தை ஹிந்து மக்களிடம் கொடுத்து பா.ஜ.க.வுக்கு எதிராக பிரச்சாரம் செய்தால், அது திமுக கூட்டணியின் வெற்றியைப் பாதிக்கும், ஹிந்து மக்களின் ஓட்டுகள் சிதறும் வாய்ப்பு உள்ளது.
எனவே இந்த புத்தகத்தை வீடு வீடாக வழங்க அனுமதிக்கக் கூடாது என திமுக மேலிடத்திற்கு 'அய்பேக்' சார்பில் அறிவுரை தரப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் கடவுள் மறுப்பு கொள்கை மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஈடுபடுத்திக் கொள்ள திமுக விரும்பாது.
ஆனால் திமுகவின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திராவிடர் கழகத்தின் ஹிந்துமத விமர்சன செயல்பாட்டினால் திமுக மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது" என்று எழுதுகிறது தினமலர்.
திராவிடர் கழக வெளியீட்டினால் திமுகவுக்கு உண்மையிலேயே பாதிப்பு ஏற்படும் என்றால் 'தினமலர்' இப்படி எழுதுமா என்பது முதல் கேள்வி.
திராவிடர் கழகம் இந்த வேலையை நன்றாகவே தீவிர மாகவே செய்யட்டும்! செய்யட்டும்!! அதனால் திமுவுக்குக் கிடைக்க வேண்டிய ஓட்டுகள் சிதறட்டும் சிதறட்டும் என்று தானே 'தினமலர்' கருதும்.
அவ்வாறு செய்யாமல் திகவுக்கும், திமுகவுக்கும் சிண்டு முடியும் வேலையில் இந்த 'தினமலர்' சிண்டு ஏடு ஈடுபடு வதன் சூட்சுமம் நமக்குப் புரியாதா?
பா.ஜ.க.வை ஆதரித்து அவர்களால் வெளியிடப்பட்டுள்ள வெளியீட்டையும், திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள வெளியீட்டையும் படிப்பவர்கள் கண்டிப்பாக திமுகவுக்குத் தான் வாக்களிப்பார்கள். பா.ஜ.க. - அதனோடு கூட்டு சேரும் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை நுட்பமாகப் புரிந்து கொண்டதால்தான் 'லபோ லபோ' என்று கதறுகிறது 'தினமலர்' என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
1971 சட்டப் பேரவைத் தேர்தலில் ராமனையும் 2019 மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணனையும் மய்யப்படுத்தி, ஏதோ ராமனும், கிருஷ்ணனுமே வேட்பாளர்கள் போல பிரச்சாரம் செய்து மூக்கறுபட்ட கூட்டம் - பட்டும் புத்தி வராத ஜென்மங்கள் - இவை என்பதை இதன் மூலம் அறிய முடியும்.
அப்படி பார்க்கப் போனாலும் திராவிடர் கழகத்தின் வெளியீட்டால் கடவுள் பிரச்சினைக்கு வேலையில்லை. பிஜேபிக்கு ஆதரவாகவும், திராவிட இயக்கக் கொள்கை களுக்கு விரோதமாகவும், பொய்யாகவும் புனையப்பட்டுள்ள வைகளுக்கு அளிக்கப்பட்ட பதிலே அதில் இடம் பெற்று இருக்கிறது.
எடுத்துக்காட்டுக்காக இதோ சில:
அவர்கள் வெளியீட்டில்:
1) தமிழ் சிவபெருமானால் உருவாக்கப்பட்டது.
நமது வெளியீட்டில் பதில்:
அப்படியானால் அந்த சிவபெருமான் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்யப்படாதது ஏன்? தி.மு.க. ஆட்சி யில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற அறிவிப்பை எதிர்த்து ஹிந்துக் கோயில் பாதுகாப்பு கமிட்டியின் சார்பில் உச்சநீதிமன்றம் சென்றது ஏன்?
திருவாசகத்தை மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல நடராஜப் பெருமான் தானே, கைப்பட எழுதினார் என்றும், கடைசியில் திருச்சிற்றம்பலம் என்று நடராஜப் பெருமானே கையொப்பமிட்டார் என்றும் சொல்லப்படுகின்ற திருவாச கத்தை அதே நடராஜப் பெருமாள் கோயிலில் முதியவர் ஆறுமுகசாமி அவர்கள் ஓதியபோது, கோயில் தீட்சதர் பார்ப்பனர்கள் அந்த முதியவரை அடித்து உதைத்து அவரது கையை முறிக்கவில்லையா? என்று திராவிடர் கழக வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது. இது தவறா? குற்றமா?
2) அவர்களின் வெளியீட்டில்:
தமிழை வைத்துப் பிழைப்பு நடத்தப்படுகிறது. தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் ஈ.வெ.ரா.
நமது வெளியீட்டில்:
காலத்தால் மூத்தமொழியான தமிழ் அறிவியல் மொழியாக வளர வேண்டும். காட்டுமிராண்டித்தனக் கருத்து களை புராணங்கள் என்ற பெயரால் மூடநம்பிக்கைகளையும், ஆபாசங்களையும் பரப்பக் கூடாது என்று சொன்னவர் பெரியார். தமிழுக்கு எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தவர் பெரியார். அது அரசாங்க ஆணையாக மாறி உலகெங்கும் தமிழ் கற்பிக்கப்படும் இடங்களில் எல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தமிழை 'நீஷ மொழி' என்பவர் சங்கராச்சாரியார் என்று பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது நமது வெளியீட்டில். இது குற்றமா?
3) அவர்களின் வெளியீட்டில்:
மதமாற்றம் பற்றி சில குற்றச்சாட்டுகள்
நமது வெளியீட்டில்:
சமணர்களை சைவர்களாக மதமாற்றம் செய்தது யார்? எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றியது யார்? என்று வினா விடுக்கப்பட்டுள்ளது.
மதமாற்றத்திற்குக் காரணம் ஜாதி தீண்டாமைதான். முஸ்லிம்களால் மதமாற்றம் நடந்ததாக சொல்லுவது பயித்தியக்காரத்தனத்தின் உச்சம் என்று அவர்கள் மதிக்கும், போற்றும் விவேகானந்தராலேயே கூறப்பட்டுள்ளது. ஆதாரத்துடன் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதனை மறுக்க முடியுமா?
4) அவர்கள் வெளியீட்டில்:
மத மாற்றம் காரணமாகத்தான் பிரிவினைவாதம், தேச விரோத செயல்பாடுகள் தலை தூக்குகின்றன.
நமது வெளியீட்டில்:
இன்னொரு மதத்தைப்பற்றி பேசும் ஹிந்துத்துவவாதிகள் ஹிந்து மதத்திற்குள் தாண்டவமாடும் பிரிவினைவாதம் பிளவுகள், தீண்டாமைக் கொடுமைகள் இவற்றிற்குப் பதில் என்ன?
பிறப்பிலேயே பிராமணன் என்பதும், சூத்திரன் என்பதும், சூத்திரன் என்றால் விபசாரி மகன் என்பதும், எந்த வகையில் நியாயமானது? ஹிந்து மதத்தில் வைணவர்களுக் குள்ளேயே வடகலை, தென்கலை பிளவுகள் ஏன்?
கோவில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென் கலை நாமம் போடுவதா என்று சண்டை நடக்கவில்லையா? லண்டன் பிரிவி கவுன்சில் வரை வழக்கு நடக்கவில்லையா?
தாழ்த்தப்பட்டவர்களைப் பஞ்சமர்கள் என்றும், நான்கு வருணத்துக்குள்ளும் வரத் தகுதியற்றவர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் ஆக்கப்பட்டதை ஏற்க முடியுமா? காஞ்சி சங்கராச்சாரியார் தீண்டாமை ஷேமகர மானது என்று சொல்லவில்லையா?
குடியரசுத் தலைவராக இருந்தும், தாழ்த்தப்பட்டவர் என்ற ஒரே காரணத்தால் மாண்பமை ராம்நாத் கோவிந்த் இந்துக் கோயிலான பூரி ஜெகந்நாதன் கோவிலிலும் (18.3.2018) ராஜஸ்தான் அஜ்மீர் பிரம்மா கோயிலிலும் (15.5.2018) தடுக்கப்பட்டது ஏன்? தள்ளப்பட்டது ஏன்? என்ற கேள்வியை நமது'வெளியீட்டில் எழுப்பியுள்ளோம். நம் நாட்டில் மற்றவர்கள் சண்டைகளைக் காட்டிலும் பக்தர்களின் சண்டைதான் அதிகம். என் தெய்வம் பெரிதா? உன் தெய்வம் பெரிதா? என்ற சண்டைதான் அதிகம் என்று ராஜாஜி கூறிய (15.4.1953) கருத்தும் நம் வெளியீட்டில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதற்கு என்ன பதில்?
(5) அவர்கள் வெளியீட்டில்
சுயநல நாத்திகவாதிகள் அறங்காவலர்களாகவும், ஹிந்து அல்லாதவர்கள் அறநிலையத்துறை அதிகாரிகளாகவும் இருப்பதால் கோவில் சொத்துக்கள் கொள்ளைப் போகின்றன. சாமி சிலைகள் வெளிநாடுகளுக்குக் கடத்தப் படுகின்றன. கோயிலில் கொலைகளும் நடக்கின்றன.
நமது வெளியீட்டில்:
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி 'குமுதம்' இதழுக்கு (12.9.1996) அளித்த பேட்டியே போதுமானது. கோயில்களில் கொலை, கொள்ளை செய்யத் துணிகிறவர்கள் அனேகம் பேர் பக்தர்களாகவே இருந்து ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை செய்துகொண்டு தப்பித்துக் கொள்வதற்கு வழி தேடுகிறார்கள். நாத்திகத்திற்கும் இப்படி எடுத்துப் போவதற்கும் சம்பந்தம் இருப்பதாக நாம் நினைக்கவில்லை. பொதுவாக பேராசை ஜாஸ்தியாகி விட்டது. பணத் தேவை அதிகரித்து விட்டது என்று சங்கராச்சாரியார் உண்மையை ஒப்புக் கொண்டு இப்படி கூறியிருக்க வீணாக நாத்திகர் களைக் குறை கூறுவது ஏன்?
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர்கள் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அக்கோயிலின் ஆண்டு வருமானம் ரூ.37,199 (நீதிமன்றத்தில் தீட்சதர்கள் சொன்னது) அரசின் நிர்வாகத்துக்கு வந்தபோது ஆண்டு வருமானம் ரூ.63 லட்சம் (தினமணி 27.10.2014).
கோயிலில் கொள்ளை அடித்தவர்கள் தீட்சதர்களா? நாத்திகர்களாக இருந்த அறங்காவலர்களும், அதிகாரி களுமா? பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.
(6) அவர்கள் வெளியீட்டில்
ஹிந்துக்களுக்கும் தேசத்திற்கும் ஆபத்து ஏற்படும்போது நாம் ஒவ்வொருவரும் குரல் கொடுத்து தீர்வு காணுவோம்.
நமது வெளியீட்டில்
ஜாதி காரணமாக பிறவியிலேயே பேதப்பட்டவர்கள் எப்படி ஒன்று சேர்ந்து குரல் கொடுப்பார்கள்? ஆபத்து வரும்போதுதான் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப் பட்டவர்களும் தேவையா?
தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் இந்துக்கள். ஆனால், அவர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்ப்பானேன்? இடஒதுக்கீட்டுக்கு எதிராக மத்திய பிஜேபி அரசு நடந்து கொள்வானேன்? பதில் உண்டா?
எடுத்துக்காட்டுக்காக சிலவற்றை இங்கு குறிப்பிட் டுள்ளோம்.
மேலும் தெளிவாக, விரிவாகத் தெரிந்து கொள்ள திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள,
தமிழ் மக்களே, காவிகளைப் புரிந்து கொள்ளுங்கள், சிந்திக்க சில கேள்விகள்.
"தேசியம் காக்க - தமிழினம் காக்க" -
புறப்படுவோரே, பதில் கூறுங்கள்.
"மயக்க பிஸ்கெட்டுகள் ஓர் எச்சரிக்கை!" எனும் திராவிடர் கழக வெளியீட்டைப் படியுங்கள் - படித்து மற்றவர்களுக்கும் பரப்புங்கள்.
அவர்கள் வெளியீடு என்பது ஆரியம் - நமதுவெளியீடு என்பது திராவிடம்
வெல்லப் போவது திராவிடமே!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
No comments:
Post a Comment