“திராவிடம் வெல்லும்“ என்பதே நம் முழக்கம்! தி.மு.க. ஆட்சியை மலரச்செய்வதே நம் இலக்கு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 16, 2020

“திராவிடம் வெல்லும்“ என்பதே நம் முழக்கம்! தி.மு.க. ஆட்சியை மலரச்செய்வதே நம் இலக்கு!

உலகையே அச்சத்தில் ஆழ்த்திவரும் கரோனா தொற்று கடந்த மார்ச் திங்கள் தொடங்கி இன்று வரை மக்களின் செயல்களை முடக்கிப் போட்டது. சமூக இடைவெளி, தனி மனித இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்ற அவசியத்தால் இயக்க செயல்பாடு கள், பிரச்சார கருத்துகள், நேரிடை மக்களிடையே பரப்புரை எதுவும் செய்திட முடியாத சூழல் ஆயினும் ஆர்ப்பாட்டங்கள் பல இயக்கத்தின் சார்பில் மக்கள் உரிமைக்காக நிகழ்ந்திடப் பெற்றன. மக்கள் சந்திப்பு என்பது காணொலி காட்சி வழியே தொடர்ந்த வண்ணம் இருந்தது. முதன் முதலாக தமிழ்நாட்டில் காணொலி காட்சி வழியே மக்களுடன் பரப்புரை மூலம் தொடர்பு கொண்டு அச்சத்தைப் போக்கியவர் தமிழர் தலைவரே. நூற்றுக்கும் மேலான நிகழ்வுகளில்  அவர் பல்வேறு தலைப்புகளில் பேசினார். ஒவ்வொரு நிகழ்ச்சியையும் காணொலி வழியாகவும், யு டியூப், முகநூல் வழியாகவும் பல்லாயிரம் பேர் கேட்டும் பார்த்தும் பயன் பெற்றனர். எந்த தடைகளும் பெரியார் தொண்டர்களின் செயல்பாடுகளை முடக்கி விட முடியாது என்பது நிரூபிக்கப்பட்டது. நாடு முழுவதும் இயக்கத் தோழர்களும், நிர்வாகிகளும், மாவட்டங்களிலும், வட்டாரங்களிலும் காணொலி காட்சியை நடத்தினர். பல லட்சம் பேரை இயக்கப் பிரச்சாரங்கள் சென்றடைந்திருக்கும் என்பதே உண்மை.

பிரச்சார உத்திகள் - கரோனா அச்சத்தைப் போக்கின

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, விடுதலை வளர்ச்சி நிதி, விடுதலை சந்தா சேர்க்கை, ஆசிரியர் பிறந்த நாள் நூல்கள் வெளியீடு, சுவரெழுத்து மூலம் பரப்புரை.. இப்படியாய் பிரச்சார உத்திகள் கரோனா அச்சத்தைப் போக்கின. ஆனால் தமிழர் தலைவரோ இயல்பாக விடுதலை அலுவலகம் (பெரியார் திடல்) வந்து சிறப்பாக என்னென்ன கடமைகளை நிறை வேற்றுவாரோ அதில் குறையில்லாமல் தமது பணி களை வீட்டிலிருந்தபடியே செய்து வந்தார். அன்றா டம் விடுதலை அறிக்கைகள், ஆசிரிய உரைகள், எதிரிகளுக்குப் பதிலடி எனவும், வற்றாது வாழ்வியல் சிந்தனைகளையும் எழுதிக் கொண்டே இருந்தார். நாடு முழுவதும் தொண்டர்கள் நலம் நாடினார். கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களை காப்பாற்றித் தேவையான முயற்சிகள், எச்சரிக்கை ஆலோசனை கள் கைபேசி வழியே நலம் நாடல்கள் எனதாயினும் சாலப்பரிந்து தொண்டறம் செய்தார் தமிழர் தலைவர்.

ஆற்றுப் படுத்தினார்

தலைமைக் கழக நிர்வாகிகளுடன் அடிக்கடி பேசி கழகப் பணிகள் குறித்து ஆற்றுப்படுத்தினார் ஆசிரியர். மண்டல, மாவட்ட நிர்வாகிகளுடன் உசாவல்கள் இன்னொரு பக்கம்.

தலைமைச் செயற்குழு, பொதுக்குழு, மண்டல - மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல், சொற்பொழி வாளர் கூட்டம், கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி, வழக்குரைஞரணி மற்றும் பகுத்தறிவாளர்  கழக, பகுத்தறிவு ஆசிரிய ரணியினருடன் காணொலி வழியே கலந்துறவாடல் நிகழ்ச்சிகள் நடத்தி தமிழர் தலைவர் வழிகாட்டுதல் உரையும், ஊக்க உரையும் வழங்கினார். தோழர்களை உற்சாகப்படுத்தியதால், கரோனா தொற்று ஏற்படுத்தி யிருந்த அச்சத்திலிருந்து விடுபட்டனர் தோழர்கள் என்றே சொல்லலாம்.

மயக்க பிஸ்கெட்டுகள்

பாரதீய ஜனதா கட்சியின் அங்கமான தெய்வீக தமிழ்ச் சங்கம் சார்பில் மக்களிடையே விநியோகிக்கப் பட்ட துண்டு வெளியீடு என்பது மக்களை மயக்கும் மயக்க பிஸ்கட்டுகளே என்பதை அம்பலப்படுத்திடும் வகையில் கழகம் சார்பில்தேசியம் காக்க - தமிழினம் காக்க புறப்படுவோரே பதில் கூறுங்கள் - மயக்க பிஸ்கட்டுகள் ஓர் எச்சரிக்கைஎனும் குறுவெளியீடு ரூபாய் இரண்டு விலையில் வெளியிடப் பெற்று - நாடெங்கும், தமிழர் வீடெங்கும் மக்களிடையே கொண்டு போய் சேர்க்கும் பணியை முடுக்கி விட்டுள்ளார் தமிழர் தலைவர். திண்ணைப் பிரச் சாரமும் இணைந்தே மேற்கொள்கின்றனர் தோழர் கள். வீதி தோறும், வீடு தோறும் களம் இறங்கி வீரியத்துடன் வினையாற்றும் தோழர்களுக்குதிராவிடம் வெல்லும்என்பதே மூச்சாக, பேச்சாக இருக்க வேண்டும் என்று தலைமைச் செயற்குழு மூலம் விரைவுபடுத்தி உள்ளார் ஆசிரியர்

தலைமைச் செயற்குழு

12.12.2020 அன்று கழகத் தலைவர் தமிழர் தலைவர் தலைமையில்  சென்னை பெரியார் திடலில் கழகத்தின் தலைமைச் செயற்குழு கூட்டம் நடை பெற்றது. கழக நிர்வாகிகளை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் ஆசிரியருக்கு, தலைவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு (கடந்த 10 மாதத்தில் நேரில் சந்திக்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடன்) கிடைத்ததே என்ற ஆர்வத்துடன் மிகவும் எழுச்சி யுடன் தலைமைச் செயற்குழு நடந்தது. இப்போதும் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் கவனம் காட்டப் பெற்றது.

உறவாடினார்

தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர்களுடன் கழகத் தலைவர் உறவாடினார். தொண்டர்நாதனின் பாசமிக்க உரை நெகிழ வைத்தது என்றே சொல்ல வேண்டும். கூட் டத்தில் பங்கேற்க முடியாத சிலர் காணொலி வழியே கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர். கரோனா காலத்திலும் கழக செயல்பாடுகளை விளக்கிய கழகத் துணைத் தலைவர் கவிஞரின் உரையும் ஆழமானது. தலைமைக் கழக நிர்வாகிகளின் செயல்பாட்டு உரையும் சிறப்பானது.

உணர்ச்சிப் பெருக்கு

வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு..வை ஆட்சிக் கட்டிலில் அமரச் செய்வதொன்றே தற் போது நம்முன் உள்ள ஒரே வேலைத்திட்டம்திராவிடம் வெல்லும்என்பதே நமது முழக்கம். இந்த முழக்கமே மூச்சாக பேச்சாக இருக்க வேண்டும் என்றார் தமிழர் தலைவர். தோழர்களிடையே ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கிற்கு அளவே இல்லை. தி.மு.. அரியணை ஏற வேண்டும் என்று தி.மு.. தோழர்கள் உழைக்கத் தீவிரப்படுவதைக் காட்டிலும் கழகத் தோழர்கள் கூடுதல் தீவிரம் காட்ட வேண்டும் என்றார். அன்னை மணியம்மையாரின் நினைவு நாளிலிருந்து (மார்ச் 16) தொடங்கி, தீவிர பரப்புரை பயணம் மேற்கொள்ளவிருப்பதாகக் கூறினார். தன் உடல் நலனைக் காட்டிலும் நாட்டின் நலன் முக்கிய மெனக் கருதிடும் தமிழர் தலைவரின் எண்ண ஓட்டத்தை என்னவென்று சொல்வது?

இனம் காக்கும் எழுச்சித் தீர்மானங்கள்

தலைமைச் செயற்குழு கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நீங்கலாக 16 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இன்றைய சூழலில் நமது இனம் காக்கும் எழுச்சித் தீர்மானங்கள் அவை:

* மருத்துவக் கல்லூரி இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு நீக்கப்பட வேண்டும்.

* நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வை நிரந்தரமாக நீக்குக.

* தாழ்த்தப்பட்டவர்களுக்கு உயர்கல்விக்கு வழங் கப்பட்டுவந்த கல்வி உதவித் தொகையை ரத்து செய்வதற்குக் கண்டனம்.

* 2021 மக்கட்தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் தேவை.

* தேசிய கல்விக் கொள்கையைக் கைவிடுக.

* சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு.

* மாநிலத்திலுள்ள மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் குரூப் பி மற்றும் சி பதவிகளுக்கு அந்தந்த மாநில மக்களுக்கு முழு உரிமை.

*தனியார் துறைகளிலும் தேவை இடஒதுக்கீடு

* நீதித்துறையில் சமூக நீதிதேவை

* உயர்ஜாதியினரில் பொருளாதார அடிப்படையில் நலிந்தோர்க்கு 10 சதவீத இடஒதுக்கீடு எனும் சட்டத்தை இரத்து செய்க!

* அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு தருக!

* கீழ்மன்றங்களிலும் மற்றும் சட்டமன்றம், நாடாளு மன்றத்திலும் பெண்களுக்கான உள்ஒதுக்கீட் டோடு இடஒதுக்கீடு சட்டத்திருத்தம் நிறைவேற்றுக!

*  மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைக் கைவிடுக!

அரசு பொதிகைத் தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்திஒளிபரப்பை    நிறுத்திடுக!

* செம்மொழி தமிழை சிறுமைப்படுத்துவதா?

* ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்களுக்கு, இந்தியில் பதில் அளிப்பதா?

*  ஏழுபேர் விடுதலையும், ஆளுநரின் அலட்சி யமும்!

*  தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலும், நமது கடமையும்!

நாளை வெல்லும்

நாட்டின் உரிமைகளுக்கான, அதனை தட்டிக் கேட்பதற்கான, உரிமை கீதங்களே மேற்கண்ட தீர்மானங்கள், திராவிடர் கழகத்தின் எத்தனையோ தீர்மானங்கள் இந்தியா முழுவதும் கடந்த காலங்களில் அரசின் சட்டங்களாய், திட்டங்களாய் பரிணாமம் அடைந்துள்ளன. இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களும் நிச்சயம் நாளை வெல்லும். தீர் மானங்களை விளக்கி செய்தியாளர்களிடம் கருத்தறிவித்தார் தலைவர். அவர்கள் எழுப்பிய கேள்வி களுக்கும் விடையிறுத்தார்.

இயக்கத்துக்கு கிடைத்த விருது

மராட்டிய அறக்கட்டளை சார்பில்மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி நரேந்திர தபோல்கர் நினைவு விருதுகழகத் தலைவர் - தமிழர் தலைவருக்கு வழங்குவதான தகவலை அடுத்து - தனக்கான அங்கீகாரமல்ல; நம் இயக்கமான கழகத்துக்கே கிடைத்த அங்கீகாரமாக அவ்விருதினை கருதுவதாக தலைவர் சொன்னபோது தோழர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் கைதட்டி ஆரவாரித்தனர். மொத்தத்தில் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்களின் செயல் பாட்டை வேகப்படுத்தியதாக தலைவரின் சந்திப்பும் தலைமைச் செயற்குழுவும் அமைந்தது.

No comments:

Post a Comment