அறிவுப்பூர்வமானது திராவிடப் பண்பாடு பெல் ஆறுமுகம் இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 11, 2020

அறிவுப்பூர்வமானது திராவிடப் பண்பாடு பெல் ஆறுமுகம் இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா

தமிழர் தலைவர் ஆசிரியர் காணொலி காட்சி மூலம் நடத்தி வைத்தார்

திருச்சி, டிச. 11- திருச்சி பெல் ஆறுமுகம், மாலதி இவர்களின் மகள் மதுமதி, திண்டுக்கல் மாவட்டம், என்.பஞ்சம்பட்டி மு.பொன்னுசாமி (ஓய்வு, பெல்) வீரம்மாள் இவர்களின் மகன் ஆனந்த்பாபு ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழா திருச்சி காட்டூர் கைலாசுநகர், சந்தோஷ் மகாலில் 29.11.2020 அன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது.

.ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார். மாவட்ட கழகத் தலைவர் ஞா-.ஆரோக்கியராஜ், மாவட்ட செயலா ளர் இரா.மோகன்தாஸ், திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் .மாரியப்பன், ஒன்றிய செயலாளர் இரா.தமிழ்ச்சுடர்.  மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற வாழ்க்கை இணையேற்பு விழாவினை காணொலி காட்சி மூலம் நடத்தி வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த் துரை வழங்கினார். அவரது உரை வருமாறு:

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்குரிய அன்புச் செல்வர் கள் நம்முடைய முதுபெரும் பெரியார் தொண்டர்களில் ஒருவரும் நம்முடைய திராவிடர் தொழிலாளரணியின் முன்னோடிகளில் ஒருவருமான பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆறுமுகம், மாலதி ஆகியோரின் மகள் செல்வி மதுமதிக்கும், பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பொன்னுசாமி - வீரம்மாள் ஆகியோரின் மகன் செல்வன் ஆனந்த் பாபுவுக்கும் நடைபெறும் வாழ்க்கை இணையேற்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதில் கலந்து கொள்ளும் மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் மோகன் தாஸ், ஒன்றியத் தலைவர் மாரியப்பன், மாநில தொழிலா ளரணி செயலாளர் சேகர்,  மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கு வணக்கம்.

அறிவியல் நமக்கு நல்ல வாய்ப்பு

சாதாரண காலமாக இருந்தால் திருச்சிக்கு நேரில் வந்து வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்தி வைக்கக் கூடிய வாய்ப்பினை பெற்றிருப்பேன். அறிவியல் நமக்கு நல்ல வாய்ப்பினை தந்துள்ளது. பொதுவாக இந்த மண விழாவானது அறிவுப்பூர்வமான ஆக்கப்பூர்வமான சிறப் பான மணவிழாவாகும்.

நம்மிடையே ஊடுருவிய பண்பாட்டுப் படை யெடுப்பை முறியடித்த திராவிடப் பண்பாடு என்பது அறிவுப்பூர்வமான ஆக்கப்பூர்வமான மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட சுயமரியாதைத் திருமண மாகும். அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களால் 90 ஆண்டுகளுக்கு முன்பு இது அறிமுகப்படுத்தப்பட்ட போது மிகப்பெரிய அளவுக்கு எதிர்ப்பு இருந்தது. அப் போது நடந்த மணவிழாக்களில் மணமக்களை கடத்தி வந்து நடத்த வேண்டிய அளவுக்கு எதிர்ப்பு இருந்தது. மணவீட்டாரிடையே ஒரு வீட்டாரிடம் எதிர்ப்பு இருக்கும் சில நேரங்களில் இரு வீட்டிலும் எதிர்ப்பு இருக்கும். அதையெல்லாம் மீறி இந்த சுயமரியாதைத் திருமணங்கள் ஏராளம் நடந்தன. இந்த சுயமரியாதைத் திருமணம் மக்களிடையே நல்ல செல்வாக்கைப் பெற்ற உடனே ஆரியம் என்ன செய்தது என்றால் தங்கள் கைவசம் உள்ள நீதிமன்றங்களைப் பயன்படுத்தி சென்னை உயர்நீதி மன்றத்திலே செல்லாது என்று தீர்ப்பு சொல்ல வைத்தார்கள். மணமக்கள் நெருப்பைச் சுற்றி வந்து சப்தபதி என்கிற ஏழு அடி எடுத்த வைக்க வேண்டும். அது இல்லாததால் இந்த சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று சொல்லி விட்டார்கள். அதற்கும் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்?

பெரியாருக்கு காணிக்கை

அதையெல்லாம் முறியடித்து அறிஞர் அண்ணா அவர்கள் அவருடைய ஆட்சியையே பெரியாருக்கு காணிக்கை என்று சொல்லி பழைய திருமணத்தில் ஏழு அடி எடுத்து வைக்கிற சப்தபதி என்ற சடங்கு இருந்தால் தான் செல்லும் என்று இருந்த நிலையை மாற்றி சுயமரி யாதைத் திருமணம் செல்லும் என்று சட்ட அங்கீகாரம் கொடுத்தார்கள்.

எந்த உயர்நீதிமன்றம் சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று தீர்ப்பு அளித்ததோ அண்ணா அவர்கள் அதற்கு சட்டவடிவம் கொடுத்த பிறகு அதை எதிர்த்து வழக்கு மன்றம் சென்றபோது ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சுயமரியாதைத் திருமணம் செல்லும் என்று தீர்ப்புக் கொடுத்து ஆணி அடித்து விட்டது. எனவே இந்த மணவிழாவானது சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது மட்டுமல்ல. சட்டத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. அப்படிப்பட்ட அருமையான திருமண முறையினை மணமக்கள் செய்து கொள்ள இருக்கிறார்கள். இதில் எங்களை அழைத்து நடத்திக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. மணமக்கள் விரும்பினால் இரண்டு சாட்சியங்களோடு மாலைகளை வைத்து ஒரு வருக்கொருவர் மாற்றிக் கொண்டால் போதும். அது போல பெரியார் திடலிலே ஏராளமான சுயமரியாதைத் திருமணங் கள் நடந்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் எளிமையாக நடத்திக் கொள்ளலாம்.

நமது கல்வி நிறுவன மாணவி

மணமகள் மதுமதி நம்முடைய கல்வி நிறுவனத்தின் அறிவார்ந்த சிறந்த மாணவி. அதுபோல மணமகன் ஆனந்த்பாபு எம்.. படித்து எம்..எம். கல்லூரியிலே உதவிப் பேராசிரியராக பணியாற்றுகின்றார். ஒரு காலத்தில் நம் பிள்ளைகளுக்கு படிப்பு வராது. நீ படிக்க போகாதே, மாடு மேய்க்கப்போ, சிரைக்கப்போ, துணிவெளுக்கப்போ, மலம் எடுக்கப் போ என்று குலத்தொழிலை வலியுறுத்திய நிலை இருந்தது. அது எப்படி மாறியது. யார் காரணம்? தந்தை பெரியார், கல்வி வள்ளல் காமராசர், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோர் தான் காரணம்.

திராவிடர் இயக்கம் செய்த மகத்தான சாதனை!

நம்முடைய பெல் ஆறுமுகமும், மணமகனின் தந்தை பொன்னுசாமியும் கல்லூரிக்குச் சென்று படித்தவர்கள் இல்லை. ஆனால் தந்தை பெரியார் கல்லூரியில் பெரியார் தத்துவங்களை படித்திருக்கிறார்கள். கல்லூரிக்கு செல்லும் வாய்ப்புக் கிட்டவில்லை. ஆனால் மணமக்கள் இருவரும் பொறியியல் படிப்பு படித்திருப்பதோடு உயர்கல்வியும் படித்திருக்கிறார்கள். இது தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் செய்த மகத்தான சாதனை ஆகும்.

அறிவார்ந்த மணமக்கள்

மணமகள் மதுமதி பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தில் படித்ததோடு நம்முடைய பாலிடெக்னிக்கிலே பணியாற்றியவர்.  எனவே நம்முடைய கழகக் குடும்பத் தைச் சேர்ந்தவர் மட்டுமல்ல. நமது கல்விக் குடும்பத்தையும் சேர்ந்தவர். அவரது மணவிழாவினை நடத்தி வைப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. நம்முடைய மாண வர்கள் மதுமதியைப் போன்றவர்கள் படித்துப்பட்டம் பெற்று உலகம் தழுவிய அளவில் பணியில் இருக்கிறார்கள். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்,  நம்முடைய பாலிடெக்னிக், மருந்தியல் கல்லூரியில், பெரியார் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் பல்வேறு நாடுகளில் பல்வேறு நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருக்கிறார்கள்.

தோழர் ஆறுமுகம் சிறந்த கொள்கையாளர். சிறந்த கொள்கைக் குடும்பம், நல்ல குடும்பம் கொள்கைப் பல் கலைக்கழகம். சுயமரியாதைப் பல்கலைக்கழகம். ஆறு முகம் கொள்கையில் துடிப்பானவர். பல நூல்களை எழு தக்கூடியவர். எழுதி இருக்கிறார். பெரியாருடைய கொள் கைகளை உள்வாங்கித் தன்னை செதுக்கிக் கொண்டவர். தன்னுடைய பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து இதுபோன்ற வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது என்பது சிறப்பானது.  பெரியாரைப் பின்பற்றுகிறவர்கள் யாரும் வீழ்ந்துவிட மாட்டார்கள். தாழ்ந்துவிட மாட்டார்கள். ஒரு போதும் கீழே போய்விட மாட்டார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் என்பதற்கு மதுமதி, ஆனந்த் பாபு ஆகியோருடைய வாழ்க்கை இணையேற்பு நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டான நிகழ்ச்சியாகும்.

பெரியாரின் வாழ்வு நெறி உன்னதமானது

மணமக்களுக்கு அறிவுரைச் சொல்லவில்லை. வேண்டுகோள் மட்டும் வைக்கின்றேன். நீங்கள் எவ்வளவு உயர்ந்தாலும், கண்டிப்பாக உயர்வீர்கள். கைநிறையப் பணம் சம்பாதிப்பீர்கள். பெரிய பொறுப்புகளுக்கு செல்வீர் கள். வாழ்த்துகள். உங்கள் பெற்றோருக்கு நன்றி செலுத்த மறக்காதீர்கள். பாசம் காட்ட மறக்காதீர்கள். தந்தை பெரியார் கூறியதைப் போல எளிமையாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள். அறிஞர் அண்ணா சொன்னதைப் போல விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை என்று சொன் னதைப்போல விட்டுக் கொடுத்து வாழுங்கள். வரவுக்கு ஏற்ப செலவு செய்யுங்கள். கடன் வாங்கி செலவு செய்யா தீர்கள். பெரியாரின் வாழ்வு நெறி உன்னதமானது. பெரியாரை கடவுள்மறுப்பாளர். பார்ப்பன எதிர்ப்பாளர்கள் என்ற இருசிமிழுக்குள் அடைக்கிறார்கள். ஆனால் அவருடய வாழ்க்கை நெறி தத்துவங்கள் வாழ்க்கையை வெற்றி பெறச் செய்யும். எனவே பிள்ளைகளை நன்கு படிக்க வையுங்கள். படித்த பிள்ளைகளை வேலைக்கு அனுப்புங்கள். அவர்களுக்கு நல்ல சுதந்திரம் கொடுங்கள். வேலைக்குப் போய் சம்பாதித்து சேமிக்கப் பழகுங்கள். ஊதாரித்தனமாக செலவளிக்க அனுமதியாதீர்கள். இப்படி நடைமுறை வாழ்க்கையில் வெற்றி பெற சொல்லிக் கொடுத்தவர் தந்தை பெரியார்.

மணமக்களே நீங்கள் சிறப்பாக வாழுங்கள். மற்றவர் களுக்கு எடுத்துக்காட்டாக வாழுங்கள். ஒருமனதாயினர் தோழி. மணமக்கள் நன்கு வாழி என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சொன்னதைப்போல நீங்கள் சிறப்பாக வாழ்ந் தால் உங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல இந்தக் கொள் கைக்கும் சிறப்பு என்று கூறி இந்த மணவிழாவை நடத்தி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க மணமக்கள் வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு என்று கூறினார்.

சுப.வீரபாண்டியன் வாழ்த்து

திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் வாழ்த்து வழங்கினார்.

நிறைவாக மணமகள் மதுமதி, என்னுடைய திருமணம் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் தான் நடைபெற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அதன்படி அவர் தலைமையில் நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சிக் குரியது. கலந்து கொண்ட ஆசிரியருக்கும், மற்ற பொறுப் பாளர்களுக்கும் நன்றி என்று கூறினர்.

விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் திருமணம் என்ற நூலும் தடைசெய்யப்படவேண்டிய புத்தகம் மனு ஸ்மிருதி நூலும், தமிழ்ப்பெயரைப் பிள்ளைகளுக்குச் சூட்டுங்கள் என்ற நூலும் வழங்கப்பட்டன. மேலும் ஆறு முகம், மூத்த மருமகன் மருத்துவர் இளவரசன் முயற்சியால் புதூர்நாடு மலைக்கிராமப் பகுதி பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் விஜயகுமார் முயற்சியால் உருவாக் கப்பட்ட வேதுபிடிக்கும் கருவியினை அமைத்து மண விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் கரோனா விழிப் புணர்வு நிகழ்ச்சியாக வேதுபிடிக்க வைக்கப்பட்டது.

வாழ்க்கை இணையேற்பு நிகழ்ச்சிகளை கழக பேச்சாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி ஒருங்கிணைத்து வழங்கினார்.

No comments:

Post a Comment