மாணவர்களே, பெற்றோர்களே, அய்.அய்.டி.,களில் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை ஒழிக்க சதி - புரிந்துகொள்ளுங்கள்! ஆராய்ச்சிக்கு முன்னுரிமை என்ற முடிவெடுக்கப்பட்டு பரிந்துரையாம்!அய்.அய்.டி.களில் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை - ஆராய்ச்சிக்கு முன்னுரிமை என்ற பெயரால் ஒழிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களே, களம் காண வாரீர்; தேர்தலில் பாடம் புகட்டுவீர் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. மத்திய ஆட்சியின் வேலைத் திட்டங்களில் முதன்மையானது சமூகநீதி - இட ஒதுக்கீட்டை - ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் படித்து வேலைக்குப் போய் தங்களது வாழ்வை உயர்த்திக் கொள்வதைத் தடுத்து, பழைய வர்ணாசிரம, மனுதர்ம யுகத்திற்கே நாட்டைக் கொண்டு செலுத்துவதேயாகும்!
அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையில் உறுதி செய்யப்பட்டு, பல்வேறு அரசமைப்புச் சட்டத் திருத்தங்களால் அமுலில் உள்ள கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு தருவதை ஒழிப்பதிலேயே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மத்திய காவிகள் ஆட்சியின் செயல்கள் பகிரங்கமாக கூச்சநாச்சமின்றி நடைபெற்று வருகின்றது!
புதுப்புது ஏற்பாடுகளும், அறிவிப்புகளும்
மத்திய அரசின்மூலம் வந்துகொண்டே உள்ளன!
ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆணை வெளிப்படையாக முன்பு வந்தது; இப்போது புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் இட ஒதுக்கீட்டில் கைவைத்து, குழிதோண்ட நாளும் புதுப்புது ஏற்பாடுகளும், அறிவிப்புகளும் மத்திய அரசின்மூலம் வந்துகொண்டே உள்ளன!
மக்கள் வரிப் பணத்தில் நடைபெறும் அய்.அய்.டி. (IIT) என்ற மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. - தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எனப் போராடி பெற்ற இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்கு, ‘ஆடுகளை அம்மனுக்கு பலி கொடுப்பதைப்போல அதற்குமுன் அதற்கு மாலை போட்டு' நடத்துவதற்கொப்ப, ராம்கோபால ராவ் என்பவரைத் தலைவராகக் கொண்ட ஒரு கமிட்டி, அய்.அய்.டி.,களை உயர்தர கல்வி அமைப்பாக Centre of Excellence என்று அறிவித்து ஆராய்ச்சிக்கு முன்னுரிமை என்ற முகமூடி போட்டு, அந்த சாக்கில் இட ஒதுக்கீட்டை இந்த நிறுவனங்கள் கடைப்பிடிக்கவேண்டியதில்லை - அந்த முறை இந்த கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது; ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று முதற்கட்டமாகத் துவங்கி - பின்னர் மாணவர் சேர்க்கையிலும் இதனை ஒழித்து, முழுக்க முழுக்க இதனை உயர்ஜாதி முன்னேறிய பார்ப் பனருக்கே பகற்கொள்ளையாக்கி விடும் திட்டத்தோடுதான் அக்கமிட்டி பரிந்துரைத்துள்ளது - தகவல் அறியும் சட்டத்தினால் இது இப்போது வெளியாகி உள்ளது!
தொடர் போராட்டத்தினால்
முதலில் கல்வியில் இட ஒதுக்கீடு
அய்.அய்.டி. (IIT) நிறுவனங்களில் இட ஒதுக்கீடு பல்லாண்டு காலமாய் மறுக்கப்பட்டு, தொடர் போராட்டத்தினால் முதலில் கல்வியில் இட ஒதுக்கீடு கதவு லேசாகத் திறந்தது!
அதுவும் அடிக்கடி மூடிக்கொள்ளும் - தட்டிக் கொண்டே இருப்பதன்மூலம் திறந்து திறந்து மூடும்! மண்டல் பரிந்துரையினால் கிடைத்த ஒரு சிறு வாய்ப்பு இது!
பிறகு, அய்.அய்.டி. ஆசிரியர் நியமனங் களிலும் இட ஒதுக்கீடு தரவேண்டும் என்பதற்காகப் போராடி, மத்தியில் காங் கிரஸ் - தி.மு.க. ஆட்சியில் 2005 இல் 93 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலமாக செயல்படுத்த வைத்து, 15 ஆண்டுகள்தான் ஆகின்றன.
அங்கு சேர்க்கப்படும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மாணவர்கள், ஆராய்ச்சியாளர் களுக்கு எப்போதும் மன உளைச்சலைத் தந்து, மன அழுத்தத்தினால் அவர்கள் தற்கொலை வரைகூட சென்ற வரலாறு மறுக்க முடியாத ஒன்று.
கல்விக் கண்ணைக் குத்துகின்ற கொடுமையைக் கண்டு வேடிக்கை பார்க்கக் கூடாது!
இந்நிலையில், இப்போது வெளிப் படையாக ஒரு குழுவின் பரிந்துரை என்ற சாக்கில், அரசமைப்புச் சட்டத் திருத்தம்மூலம் பெற்ற உரிமைகளைக்கூட மத்திய பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். ஆட்சி பறிக்க ஆயத்தமாகியுள்ளது.
மாணவர்களே, பெற்றோர்களே, ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் கல்விக் கண்ணைக் குத்துகின்ற இந்தக் கொடுமையைக் கண்டு நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா?
மருத்துவக் கல்வியில் ‘நீட்' தேர்வு, என்ற கொடுவாள் மூலம், ஒடுக்கப்பட்டோர் - கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டு சின்னா பின்னமாக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இப்போது பொறியியல் துறையிலும் இப்படி தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு வாய்ப்பு இல்லாததாக்கத் திட்டமிடுகின்றனர், கவனமாக இருங்கள்!
நீதிக்கட்சி என்ற திராவிடர் ஆட்சிதான் சரியாக ஒரு நூற்றாண்டுக்குமுன் ஆட்சி பீடமேறி - தனக்குப் பிரிட்டிஷ் அரசு தந்த குறைந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, முதன்முதலில் வகுப்புரிமை - சமூகநீதிக் கொடியை ஏற்றியது.
திராவிடர் கழகத்தின் இடையறாத உழைப்பினால்
69 சதவிகித இட ஒதுக்கீடு
தந்தை பெரியார், அவர்தம் இடையறாத போராட்டம் - இதனைப் பரவலாக்கியது!
அதைத் தொடர்ந்து காமராசர் ஆட்சி, அண்ணா ஆட்சி, கலைஞர் ஆட்சி இதனை விரிவாக்கியது!
இடையில் எம்.ஜி.ஆர். ஆட்சியில் பொருளாதார ‘கரடி' புகுந்ததை விரட்டிய பின், அது மேலும் விரிவாகி, ஜெயலலிதா ஆட்சியில் 69 சதவிகிதம் சட்டம் காலத்தின் கட்டாயமாகி, திராவிடர் கழகத்தின் இடையறாத உழைப்பு, வியூகத்தினால் 9 ஆவது அட்டவணை பாதுகாப்போடு 69 சதவிகிதம், தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளாக அமலில் உள்ளது!
தமிழ்நாடு பெரியார் மண், சமூகநீதி மண், திராவிடம் வென்றதன் விளைவாக ஏற்பட்ட விளைச்சல் இது!
இதனை ஒழித்திட, காவி, மதவெறி ஆட்சி சமூகநீதியை சாய்க்க நாளும் முயன்று வருகிறது.
ஒடுக்கப்பட்டோரை ஒன்று திரட்டி, போராட்டக் களம் காணுவோம் - வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பாடம் புகட்டத் தவறாதீர்! தவறாதீர்!! தவறாதீர்!!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
16.12.2020
No comments:
Post a Comment