காங்கிரஸ் ஆட்சியைவிட பா.ஜ.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு அதிக பலன்கள் என்பது உண்மையல்ல - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 11, 2020

காங்கிரஸ் ஆட்சியைவிட பா.ஜ.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு அதிக பலன்கள் என்பது உண்மையல்ல

இதோ ஆதாரங்கள் பேசுகின்றன

புதுடில்லி, டிச. 11 தலைநகர் டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவரும் அக்கரை இல்லாமல் வெறும் விருந்துக்கு அழைப்பவர் களைப் போல் அழைத்து பொய் தகவலைக் கூறி விவசாயிகளை ஏமாற்றி வருகிறது மத்திய அரசு.

 இதைப் புரிந்து கொண்ட விவசாயிகளும் "நீங்கள் கொடுக்கும் ரொட்டித் துண்டிற்கு நாங்கள் வரவில்லை" என்பதைக் குறிக்கும் வகையில் பல கட்ட பேச்சு வார்த்தையின் போதும் குருத்து வாராவில் இருந்து வந்த எளிய உணவையே சாப்பிட்டனர்.

 எதிரே அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உயர் ரக பருப்புகள் மற்றும் அய்ந்து நட்சத்திர விடுதியில் இருந்து வந்த வெளிநாட்டு உணவு வகைகளை ருசித்துக் கொண்டு இருக்கும் போது விவசாய போராட்ட ஒருங்கிணைப் பாளர்கள் ரொட்டியுடன் பருப்புக் கூட்டும் வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்த சட்டினியும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.

பல கட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்து முடிந்த பிறகு ஊடகத் தினரிடம் பேசிய மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறும் போது "முந்தைய மன்மோகன் சிங் ஆட்சியை விட மோடி ஆட்சியில் மிகவும் சிறந்த வகையில் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை அதிகம் கொடுக்கப்பட்டது. இதனால் விவ சாயிகள் அடைந்த நன்மைகள் ஏராளம் என்று  தெரிவித்தார்.

ஆனால் அது முற்றிலும் உண்மைக்கு மாறானது என்பதை மன்மோகன் சிங் மற்றும் மோடி ஆட்சியின் போதிய குறைந்த பட்ச ஆதார விலை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இது தொடர்பாக புள்ளிவிவரங்களைத் திரட்டி ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.

 அதில் நெ,ல் கோதுமை, பருப்பு வகைகள், துவரம் பருப்பு, சோளம் மற்றும் மசூர் பருப்பு போன்றவைக்கு மன்மோகன்சிங் மற்றும் மோடி ஆட்சியில் தரப்பட்ட ஆதார விலை விவரம் தெளிவாக உள்ளது.

மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் அதிகரிக்கப் பட்டது

 நெல் 126 சதவீதம், கோதுமை 87 சதவீதம், பருப்பு வகைகள் 115 சதவீதம், துவரம் பருப்பு 205 சதவீதம், சோளம் 143 சதவீதம் மசூர் பருப்பு 90 சதவீதம் ஆக 2006 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரை உயர்த்தப் பட்டது.

 ஆனால் மோடியின் 6 ஆண்டு கால ஆட்சியில்...?

 நெல் 43 சதவீதம் கோதுமை 41 சதவீதம், பருப்பு வகைகள் 65 சதவீதம், துவரம் பருப்பு 40 சதவீதம், சோளம் 41 சதவீதம், மசூர் பருப்பு 73 சதவீதம் மட்டுமே உயர்த்தப் பட்டது.  அதாவது மன்மோகன் சிங் அரசு கொடுத்த குறைந்த பட்ச ஆதாரவிலையில் மோடி அரசு பாதியைக் கூட கொடுக்கவில்லை.  புள்ளி விவரங்கள் இப்படி இருக்க விவசாயத்துறை அமைச்சர் பொய் சொல்லி விவசாயிகளை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கிறார்

No comments:

Post a Comment