மூன்று தேர்தல்கள் உணர்த்தும் முக்கியச் செய்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 8, 2020

மூன்று தேர்தல்கள் உணர்த்தும் முக்கியச் செய்தி

மகாராட்டிராவில் சட்ட மேலவையில் ஆறு இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக ஒரு இடம் மட்டுமே வென்றுள்ளது. கடந்த 58 ஆண்டு களாக கைப்பற்றி இருந்த நாக்பூர் சட்ட மேலவை இடத்தை இம்முறை காங்கிரஸ் கட்சியிடம் பறி கொடுத்துள்ளது. இந்த தொகுதியில் இருந்து மத்திய அமைச்சராக இருக்கும் நிதின் கட்கரி ஒரு முறை மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இங்கு தோல்வியைத் தழுவிய பாஜக வேட்பாளர் தற்போது நாக்பூர் நகர மேயராக பதவி வகிக்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையிடம் நாக்பூர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளும் சிவசேனா கூட்டணியான மகா விகாஷ் அகாடி நான்கு இடங் களில் வென்றுள்ளது.

அய்தராபாத் மாநகராட்சி தேர்தலில், ஆளும் கட்சியான டி.ஆர்.எஸ். கட்சி 55 இடங்களை வென் றுள்ளது. பாஜக 48 இடங்களையும், அசாதுதீன் ஒவைசியின் எம்.அய்.எம். கட்சி 44 இடங்களையும் காங்கிரஸ் 2 இடங்களையும் வென்றுள்ளன.

தேர்தலுக்குப் பிறகு வந்துள்ள பத்திரிக்கைச் செய்திகளில், அய்தராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜகவின் வெற்றியை பற்றி ஆகா ஓகோ என புகழ்ந்து தள்ளி யுள்ளன.

ஒரு மாநகராட்சி தேர்தலுக்கு மத்தியில் ஆளும் கட்சியான பாஜக தனது அத்தனை அஸ்திரங் களையும் பயன்படுத்தியது. பிரதமர் வேறு ஒரு நிகழ்ச்சி என்ற போர்வையில் அய்தராபாத் வருகிறார். உள்துறை அமைச்சர்ரோட் ஷோஎன்று அமர்க் களப்படுத்துகிறார். அய்தராபாத்தை பாஜகவின் மேயர் தான் அலங்கரிக்கப் போவதாக சவால் விடுத் தார். மத்திய அமைச்சர்கள் ஸ்மிரிதி இரானி, கிரண் ரெட்டி பிரச்சாரம் செய்தனர். இது போதாதென்று, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தன் பங்குக்கு அய்தராபாத் நகரின் பெயரை மாற்றுவேன் என்கிறார். வாக்கு எண்ணப்பட்டவுடன், முதலில் பாஜக முன்னிலை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இத்தனையையும் கடந்து, டி.ஆர்.எஸ். கட்சி தேர்தலில் 55 இடங்களை வென்றதே சாதனை தான். பாஜகவின் மேயர் கனவை சிதைத்ததும் பெரும் வெற்றியே.

ஆனால், ஊடகங்களின் கண்ணுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன? இதில் பாதி செய்தி கூட மகாராட் டிராவில் பாஜக அடைந்த தோல்வி பற்றி எந்த செய்தியும் வெளிவராமல் பார்த்துக் கொண்டன.

இது மட்டுமல்ல, தற்போது உத்தரப் பிரதேசத்தில் 11 சட்ட மேலவை இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 4, சமாஜ்வாடி கட்சி 3, சுயேச்சைகள் 2 என்று வெற்றி பெற்றுள்ளனர். மேலும் இரண்டு இடங்களில் வாக்கு எண்ணிக்கை இன்னமும் வெளியிடப்படவில்லை. குறிப்பாக பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் நடைபெற்ற இரண்டு மேலவை இடங்களையும் சமாஜ்வாடிக் கட்சி கைப் பற்றியுள்ளது பாஜகவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த தேர்தல்களில் ஒரு முக்கியமான செய்தி நமக்கு உள்ளது. இந்த மூன்று தேர்தல்களுமே, வாக் குச் சீட்டு முறையில் தான் நடந்துள்ளது. எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரம் (EVM) பயன்படுத்தப்படவில்லை என்பதை இனி தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உள்ள கட்சிகள் கவனிக்கத் தவறக்கூடாது.

எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரம் (EVM) மூலமாக மோசடிகள் நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு அண்மையில் பீகார் தேர்தலுக்குப் பிறகு ஆர்.ஜே.டி. கட்சியால் கூறப்படுகிறது.

எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரம் (EVM) மோசடி கள் நடைபெறுவதாக தொடர்ந்த வழக்கில் இயந்திரத் துடன், "VVPATஎனப்படும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனையை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதனை அனைத்து தொகுதிகளிலும் பயன்படுத்தி முழு மையாக எண்ணுவது கிடையாது.

"VVPAT இணைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் வாக்குப்பதிவு முறை துல்லியமாக செயல்பட உதவுகிறது. வாக்குப்பதிவில் வெளிப்படைத்தன்மை மற்றும் வாக்காளர்களின் நம்பிக்கையை பெற VVPAT இயந்திரங்கள்  வாக்குப்பதிவு இயந்திரங் களுடன் இணைக்கப்பட வேண்டும்." என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

ஆகவே, வர இருக்கின்ற தேர்தல்களில், "VVPATமுழுமையாக எண்ணப்பட வேண்டும் அல்லது பழைய முறையில் வாக்குச் சீட்டு பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு செய்தால், நிறைய பணியாளர் கள் தேவைப்படுவர். எண்ணிக்கையை முடிப்பதற்கு நாள்கள் ஆகும் என்கிற தேர்தல் ஆணையத்தின் கருத்து ஏற்புடையதல்ல.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் வாக்குச் சீட்டுதான் பயன்படுத்தப்படுகிறது. இம்முறை அமெ ரிக்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை அய்ந்தாறு நாட் கள் ஆகியது. அதனால் என்ன? அய்ந்து ஆண்டுகள் ஆட்சி மாற்றம் குறித்து காத்திருக்கும் மக்கள் ஒரு வாரம் காத்திருந்தால் தான் என்ன? குடி முழுகியாப் போய்விடும்?

சில மாநிலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாள் களில் தேர்தல் நடைபெறுகிறது. சென்ற நாடாளு மன்றத் தேர்தல் அய்ந்து கட்டமாக நடைபெற்றது. முதல் கட்டத் தேர்தலில் வாக்களித்தவர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக முடிவுக்காக காத்திருக்கவில் லையா? ஜனநாயகத்தில் வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியம். அதற்கு ஒன்று பழைய வாக்குச் சீட்டு முறை அல்லது "VVPATமுழுமையாக அனைத்து தொகுதிகளிலும் எண்ணப்பட வேண்டும்.

தற்போது மூன்று மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல்கள் இதனை உறுதி செய்கின்றன. ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என அக்கறை கொண்ட கட்சிகள் இது குறித்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

-குடந்தை கருணா

No comments:

Post a Comment