ஆனால், அவாள் ஆத்தில்?
கேள்வி: ஓர் ஆண் அரசியல்வாதிக்கும், ஒரு பெண் அரசியல்வாதிக்கும் என்ன வித்தியாசம்?
பதில்: பெண் அரசியல்வாதி, ‘வாங்கடா பார்க்கலாம்' என்று பேசலாம்.
ஆண் அரசியல்வாதி ‘வாங்கடி பார்க்கலாம்' என்று பேச முடியாது.
- ‘துக்ளக்', 16.12.2020, பக்கம் 30.
ஆனால், பெற்ற தாயையும், பெற்ற மகளையும் மட்டும் ‘வாடி, போடி' என்று அவாள் ஆத்தில் பேசலாம்.
(பெண்கள் என்றாலே ‘துக்ளக்' குருமூர்த்தி கும்பலுக்கு அப்படியொரு குரூரம் - ஒவ்வாமை நோய்! ஆனால், மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி இதில் ‘விதிவிலக்கு!')
என்ன கொடுமை?
மனைவிக்கு போன் கால் வந்து யாருடன் எத்தனை மணிநேரம் அரட்டை அடித்தாலும் கணவன்மார்கள் யாரும் யார் என்னவெனக் கேட்பதில்லை.
கணவனுக்குப் போன் கால் வந்து 60 செகண்ட் பேசினால், அடுக்களையில் அப்படியே பாத்திரத்தைப் போட்டுவிட்டு ஓடிவந்து யார், என்ன எனக் கேட்பது ஏன்?
என்ன கொடுமை சார் இது?
- ‘குமுதம்', 16.12.2020
இதில் கூறப்பட்டுள்ளது - ஒட்டுமொத்த பெண்களே அப்படித்தான் என்பதுபோல காட்டப்படுவது சரியா?
பெண் நீண்ட நேரம் போன்கால் பேசினால் கணவன்மார்கள் கேட்கவே மாட்டார்களா?
ஆணோ, பெண்ணோ நீண்ட நேரம் போனில் பேசினாலும் சரி, மற்ற வகையில் பேசினாலும் சரி, அது பிரச்சினையாக்கப்படுவது பொதுவான நிலைப்பாடே!
இந்த நிலையில், பெண்களைக் குற்றவாளியாக்குவது ஒருவகை வக்கிரப் புத்தியே!
ஆண்கள் வேலைக்குப் போய்விட்டு எத்தனை மணிக்கு வீடு திரும்பினாலும் யாரும் கேட்பதில்லையே! பெண் அலுவலக வேலை நிமித்தம் கொஞ்சம் தாமதித்து வந்தால், எத்தனை எத்தனை நேரடி கேள்விகள் - குறுக்குக் கேள்விகள்.
கணவன் மட்டுமல்ல, வீட்டில் இருக்கும் குஞ்சுகள், கூளான்கள் கூட கேட்பதில்லையா? இதைப்பற்றி எல்லாம் எழுதமாட்டார்களா?
புத்தி குறைந்தவர்களுக்கு...
கேள்வி: இறைவழிபாடு, சிலை வழிபாடு - முக்கிய வேறுபாடு என்ன?
பதில்: ஆன்மிகத்தில் முதிர்ந்தவர்களுக்கு உருவமில்லாத இறைவழிபாடு. என் போன்ற ஆன்மிக சாதாரணங்களுக்கு சிலை வழிபாடு.
- ‘துக்ளக்', 25.11.2020
பாரதத்தில் ஒரு பகுதி என்று கூறப்படும் ‘உத்தர கீதை' எனும் வேதாந்த நூல் இவ்வாறு கூறுகிறது.
துவிஜதர்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) அதாவது இரு பிறப்பாளர்களுக்குத் தெய்வம் அக்னியில்; முனிவர்களுக்குத் தெய்வம் இருதயத்தில்; புத்தி குறைந்தவர்களுக்குத் தெய்வம் சிலையில்.
இதில் ‘துக்ளக்' குருமூர்த்தி கடைசி வகையைச் சேர்ந்தவர் என்பது அவரது பதிலில் இருந்தே தெரிகிறது.
No comments:
Post a Comment