மராட்டிய அரசு உத்தரவு
மும்பை, டிச.4 இந்தியாவில் தமிழ்நாடு, பீகார், மராட்டியம் போன்ற மாநிலங்கள் சமூகநீதிக்கான எடுத்துக்காட்டாக திகழ்கின்றன அதில், மராட்டிய மாநிலத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. மகாத்மா ஜோதிராவ் புலே, சாகு மகராஜ், அண்ணல் அம்பேத்கர் என மாபெரும் சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனையாளர்களை வழங்கிய பெருமை மராட்டிய மண்ணிற்கு உண்டு. அந்த மண்ணில் தற்போது முற்போக்கான ஒரு முடிவை மராட்டியத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி அரசு எடுத்துள்ளது
மராட்டிய மாநிலம் முழுமையும் பிராமன்வாடா (பார்ப்பனர்கள் குடியிருக்கும் பகுதி), கோலிவாடா (மீனவர் குடியிருப்பு) சர்ம்மாவாடா (தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருப்பு) மங் வாடா (சூத்திரர் குடியிருப்பு) தோர் பஸ்தி (பழங்குடியினர், நாடோடிகள் குடியிருப்பு), மல்லி கல்லி (குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே வசிக்கும் தெரு) போன்றவை ஒழிக்கப்படும் என்றும்; அவற்றுக்கு மாற்றாக சமதா நகர் (ஒற்றுமைநகர்), பீம் நகர், ஜோதி நகர், சாகு நகர், கிராந்தி நகர்(புரட்சி நகர்) என்ற புதுமைப் பெயர்கள் சூட்டப்படும் என்றும் குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே வசிக்கும்பகுதிகளில் அனைத்து ஜாதியினரும் வசிக்கும் நிலையை உருவாக்க முயற்சிகள் எடுக்கப் படும் எனவும் மராட்டிய அரசு அறிவித்துள்ளது. அம்பேத்கர் அவர்கள் பெயரில் வழங்கப்படும் விருதும், அம்பேத்கர் சமஜ் பூசண் விருது என வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் 1929-ஆம் ஆண்டு செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டில் தங்களின் பெயருக்குப் பின்னால் உள்ள ஜாதிப்பெயர்களை நீக்க முடிவெடுத்து அதை தீர்மானமாக நிறைவேற்றினார். அன்றிலிருந்து இன்றுவரை தமிழகத்தில், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட யாரும் ஜாதிப் பெயர்களைக் வைத்துக்கொள்வதில்லை.
தாங்கள் படித்துப் பெற்ற பட்டங்களையே தாங்கி நின்று, சமூகநீதியின் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதுபோலவே, தெருக்களில் உள்ள ஜாதிப் பெயர்களும் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் நீக்கப்பட்டுவிட்டது. ஜாதி ஏற்றத்தாழ்வின்றி அனைத்து மக்களும் சேர்ந்து இணக்கமாக வசிக்கக்கூடிய கனவுத் திட்டமான தந்தை பெரியார் பெயரிலான ‘சமத்துவபுரம்’, தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் தமிழகம் முழுவதும் உருவாக்கப்பட்டு, இந்தியாவுக்கே வழிகாட்டும் மனிதநேயத்தின் மகத்தான மய்யங்களாயின.
பல நூறு ஆண்டுகளாகப் பரவிப் புரையோடிப் போயிருக்கும் ஜாதிப் பாகுபாடுகளை - அதன் விளைவாக நேர்ந்த கொடுமைகளை - வன்மத்தை அகற்றிட, தொடர்ச்சியான செயல் பாடுகள் தேவை. அனைத்து மாநி லங்களிலும் அவை பரவலாக முன் னெடுக்கப்பட வேண்டும். அந்த வகையில், மராட்டிய மாநிலத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு இதனைமேற்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment