புரட்சிக் கவிஞரின் பொருந்திய கணிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 5, 2020

புரட்சிக் கவிஞரின் பொருந்திய கணிப்பு


பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந. இராமநாதன்


ஆசிரியர் வீரமணியவர்கள் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்துக்கொண்டே இயக்கப் பணிகளிலும் பங்குகொண்டு வந்தார். முடிவாகப் பல் கலைக் கழகப் படிப்பைப் பலரில் கடுமையான போட்டிகட்கிடையே. பொருளியல் துறை பி.ஏ., ஆனர்சில் தங்க மெடல் பெறும் அளவிற்கு உயர்ந்து வெற்றி பெற்று, பின் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டத் துறைப் படிப்பையும் முடித்து, சிறிது காலம் கடலூரில் வழக்கறிஞராகத் தொழில் புரிந்து கொண்டி ருந்தார். தந்தை பெரியாரால் சென்னைக்கு அழைக்கப்பட்டு, தந்தை பெரியாரின் விருப் பப்படி 'விடுதலை' ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.


16.3.1978இல் அன்னை மணியம்மையார் இறந்தபிறகு அன்னை மணியம்மையார் முன்னரே எழுதிவைத்த விருப்பாவணப்படி நமது மதிப்புமிக்க பொதுச் செயலாளர் 16.3.1978இல் கழகப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக் கொண்டார்.


'வந்ததும் புதுசு - உழுததும் தரிசு' என்பது தமிழ்நாட்டு உழவு பற்றிய பழமொழியாகும். இதனைப் போன்று நமது மதிப்புமிக்க பொதுச் செயலாளர் பொறுப்பேற்றுக்கொண்டபோது திராவிடர் கழகத்தின் நிலைமை இருந்தது. கழகம் இருந்த நிலையை எண்ணும் எந்த மனிதரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மத்திய அரசின் வருமான வரித்துறை என்ற அமைப்பில் அடைந்து கிடக்கின்ற ஆரியப் பார்ப்பன வல்லாண்மைக் கூட்டமாகிய பெரிய முதலையின் பிளந்த வாய்க்குள், இந்த நாட்டுக் கோடானு கோடி மக்களாகவுள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப் பட்ட மக்கள் எல்லோருடைய வாழ்வையும் உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுக்காகத் தந்தை பெரியாரால் நிறுவி உருவாக்கப்பட்ட அறக்கட்டளை முழுவதுமாக விழுங்கப்பட்டு வால் மட்டும் வெளியே தெரியும்படியாக ஆட்டிக் கொண்டிருந்தது என்பதுபோன்ற ஒரு நிலைமையில் கழகம் இருந்தது என்று கூறலாம். இவ்வளவு பெரிய கேட்டிற்குக் கழகத்தைக் கொண்டு போய் நிறுத்தியவர்கள் யார்? அவர்களெல்லாம் தந்தை பெரியா ருடன் நெடுங்காலமாக இருந்து கொண்டு அவருடைய நம்பிக்கைக்கு முழுமையாக உரியவர்கள் இவர்கள்தாம் என்று உலகவரால் நம்பப்பட்டவர்கள். உடன் பிறந்தே கொல்லும் வியாதியைப் போல மிகப் பெரிய கீழறுப்பு வேலையைச் செய்து முடித்து விட்டார்கள்.


மேலும், இவர்கள் தந்தை பெரியாருடனும் அவர்கண்ட கழக அமைப்புகளுடனும் நெடுங்காலமாக ஒன்றியிருந்து தந்தை பெரியாருக்கு, அவர் கண்ட கழகத்துக்கு முற்றவும் முழுவதுமாக நம்பிக்கைக்கு உரிய வர்கள் என்று உலகவரால் நம்பப்பட்ட வர்களே இந்த நாச வேலையை நல்ல வண்ணம் செய்து முடித்து விட்டார்கள். இவர்கள் செய்த நாசவேலை எவ்வளவு கடுமையானது என்பதை இன்னொரு சான்று கூறி விளக்குகின்றேன்.


பொதுச் செயலாளர் பொறுப் பேற்றுக் கொண்டபோது பெரியாரின் கழகத்திற்குள், அமைப்பிற்குள் நெடுங்காலம் இருந்தவர் களுள்ளே சிலர் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வாதாடினார்கள். அவர் களுடைய வாதாடலின் கருத்து எப்படி யிருந்தது? தந்தை பெரியாரின் அறக்கட்டளை முழுவதையும் அரசே எடுத்துக் கொள் ளட்டும். எடுத்துக் கொண்ட பிறகு அதனை நடத்தும் பொறுப்பை எங்களிடம் கொடுங்கள் என்றுதான் வாதாடினார்கள். வரி விதிப்பி னின்றும் கழகத்தை மீட்கமுடியாது என்று இவர்களே முடிவு கட்டிக் கொண்டு பொறுப்பை மட்டும் தங்களிடம் கொடுக்க வாதாடினார்கள். இதிலிருந்தே வரி விதிப்பின் கடுமையை நீங்கள் புரிந்து கொள்ளலாம். உண்மை இப்படியிருக்கின்றது. இதுதான் பொதுச் செயலாளர் கழகத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டபோது உள்ள நிலைமையாகும். ஒரு பெரியவர் அறிக்கை விடுகின்றார். அவர் ஓர் அமைப் பின் தலைவர். அவர் ஒரு பெரிய வரலாற்றுச் சிறப்புக்குரிய மக்கள் கூட்டத்துக்கு வழி காட்டி. இப்படி உள்ளவர் மற்றவர்மீது குறை சொல்லும் போது அல்லது குற்றம் சொல்லும் போது உண்மைகளைத் தெரிந்து கொண்டு சொல்ல வேண்டும் என்கின்ற நடுவுநிலை உணர்வு கொஞ்சமும் இல்லாமல் பெரியார் அளவுக்கு மேலே சொத்தைச் சேர்த்து வைத்து விட்டுப் போய்விட்டார் என்று பேசு கின்றார். இப்படியே பலரும் எண்ணிக்கொண் டும் பேசிக்கொண்டும் இருக்கின்றார்கள். நிற்க.


நமது மதிப்புமிக்க பொதுச்செயலாளர் வருமான வரி விதிப்பினின்றும் மீட்க பல வழி களில் சிந்தித்துச் செயல்பட்டார். அவற்றுள் மிக இன்றியமையாத வழியாக அமைந்தது இதுவாகும். தந்தை பெரியாருடன் நெருக் கமாக இருந்தவர் ஆதலின் அவரின் இயல்புகளை நன்கு புரிந்து வைத்திருந்தார். தந்தை பெரியார் எதற்குப் பணம் கொடுத் தாலும் செக் மூலமாகவே பெருந்தொகை களைக் கொடுப்பார். அப்போது செக்கின் அடிக்கட்டையில் விவரத்தை எழுதிவைத்து விட்டுக் கொடுப்பார் என்பதைப் பொதுச் செயலாளர் நன்கறிந்திருந்தார். அதனால் செக்குப் புத்தகத்தின் அடிக்கட்டைகளைத் தேடி எடுத்தார். அப்படிக் குறித்து வைக்கப் பட்டவைகளைக் கொண்டு தனக்காகவோ தன்னைச் சேர்ந்தவருக்கோ அல்லாமல் பொதுக் காரியங்களுக்காகப் பெருந் தொகைகளைக் கொடுத்த விவரங்களைக் காட்டி வெல்லமுடியும் என்பதைக் கண்டு இதற்குத் துணையாக இத்துறையில் வல்ல வரான நீதியரசர் அய்யா வேணுகோபால் அவர்களையும், தகுந்த வழக்கறிஞர் ஒருவ ரையும் துணையாகக் கொண்டு வாதாடி வென்றது மட்டுமன்று. அன்னையார் கட்டிய வரி விதிப்புத் தொகையையும் மீட்டுக் கொடுக்கும்படி வெற்றி பெற்றார்.


பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு முதற்சாதனையாக இதனை நிறைவேற்றிக் காட்டினார். தொடர்ந்து அவர் நிகழ்த்தி முடித்த சாதனைகள் பலவாகும். மண்டல் அறிக்கை தோன்றிய காலம் தொட்டு அது நடைமுறைக்கு வருங்காலம் வரையிலும் வந்த பிறகும் அதனைப் பற்றிய சாதனைகளை அனைந்திய அளவில் நிகழ்த்தி முடித்தவர் நம் பொதுச் செயலாளரேயாகும். !


தந்தை பெரியார், தாம் பொது வாழ்வில் இறங்கிய தொடக்க முதலாகத் தாம் கொண்ட முதல் கருத்து அல்லது முதல் முடிவு என்ன என்பதை பின்வரும் கருத்துப்பட எழுதி யுள்ளார்.


ஆளுபவன் எவனாக இருந்தாலும் அது பற்றி நான் கவலைப்படவில்லை . ஆளுப வனுக்குக் கீழே உள்ள ஆட்சி அதிகாரங்கள் எல்லாம் ஆரியப் பார்ப்பனர்கள் கையி லிருந்து தமிழர்கள் கைக்கு மாற வேண்டுமென்பதையே என்னுடைய பொது வாழ்வின் அ,ஆவன்னாவாகக் கொண்டேன்" என்று எழுதியுள்ளார். அந்தத் தொண்டைத் தான் நமது பொதுச் செயலாளர் மெய் வருத்தம் பாராது, பசி நோக்காது, கண்துஞ்சாது, மற்றவர் தமக்குச் செய்யும் தீமைகளுக்கு எதிராகத் தாம் மற்றவருக்குத் தீமை செய்ய எண்ணாது, இதனைச் செய்வதற்கு இது உரியகாலம்; இது உரிய காலமில்லை என்ற ஆய்வை மேற்கொள்ளாது, மற்றவர் தம்மை அவமதிக்கின்ற அவமதிப்புகளைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் தந்தை பெரியார் வழியில் தாம் மேற்கொண்ட கருமமே கண்ணாக இருந்து முடித்துக் காட்டும் பெருமகனாக உயர்ந்து கொண்டே போகின்றார்.


ஒன்பதாயிரம் வரம்பாணையை ஒழித்தது. ஒதுக்கீடு 69ஆக உயர்தற்கு துணை நின்றது. இந்த 69 விழுக்காட்டு உயர்வும் கூடாது அது அயம்பதைத் தாண்டக்கூடாது என்ற உச்சநீதி மன்ற முறையற்ற ஆணைக்கு எதிராகத் தமிழ் மாநிலச் சட்ட மன்றத்தில் அரசியல் சட்டம் 31(c) பிரிவின்படிப் புதிய சட்டம் ஒன்றை உருவாக்கி ஒருமித்த கருத்தோடு நிறைவேறச் செய்தது. பின்னர் அது முழுமை பெறக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது; இப்படி நிறைவேற்றச் செய்த சட்டத்தின்மீது மீண்டும் வழக்கு மன்றத்திற்குச் செல்ல முடியாதபடி அரசியல் சட்ட 9ஆம் அட்டவணையில் ஒதுக்கீட்டுச் சட்டத்தைச் சேர்த்து நிறைவேறும் படி செய்தது ஆகிய எல்லாச் சாதனைகளையும் நமது பொதுச் செயலாளர் நிகழ்த்தியுள்ளார் என்பதை என்னுள்ளம் எண்ணும்போது இதன் சுமையைத் தாங்கமுடியாமல் தடுமாறுகின்றது.


இவ்வளவையும் பொதுச் செயலாளர் நிகழ்த்தப் போகின்றார் என்பது 1958 இல் யாருக்கும் தெரியாது. எதுவும் தெரியாத நிலையில் எல்லாம் நிகழ்த்தப் போகின்றார் பொதுச் செயலாளர் என்ற உண்மைகளை உள்ளடக்கமாகக் கொண்ட திருமண வாழ்த்தைப் புரட்சிக் கவிஞர் பாடியுள்ளார். தந்தை பெரியாரின் தலைசிறந்த தொண் டர்களாக மக்களுக்கெல்லாம் அறிமுகமான எவரையும் புரட்சிக்கவிஞர் பாடவில்லை. புரட்சிக்கவிஞர் பாடிய பாட்டு! 1958 டிசம்பர் திங்கள் ஏழாம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில், திருச்சி தந்தை பெரியார் மாளிகையில் நமது பொதுச் செயலாளரின் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தில் புதுவையிலிருந்து வந்து கலந்து கொண்ட புரட்சிக்கவிஞர் பராதிதாசனார் மாளிகையில் உள்ளவரிடம் எழுதுதாளை வாங்கி அங்கேயே எழுதிப் படித்துக் கொடுத்த பாட லாகும். முன்னரே எண்ணித் திட்டமிட்டுப் பாடியதில்லை. இயற்கையில் மழை பொழிவது போலப் பொழிந்து உதவிய பாடல். சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகமென நாம் எண்ணுகின்றபோது இன்னும் சிலரை இக்கோணத்தில் புரட்சிக் கவிஞர் பாடியிருக்கலாம். ஆனால் பாராட்ட வில்லை. இயக்கத்தோடு இயக்கத் தலைவ ராகிய தந்தை பெரியாரோடு எந்தத் தொண் டரையும் சார்த்திப் பாடாத புரட்சிக் கவிஞர் நமது பொதுச் செயலாளரை இயக்கத் தொண்டர் என்கிற முறையில் இயக்கத்தோடு இயக்கத்தைக் கண்ட தந்தை பெரியாரோடு சார்த்திப் பாடியுள்ளார். அந்தப் பாடல்களின் கருத்தாழத்தையும் மற்ற சிறப்புகளையும் இப்போது விளக்குதற்கு இடமில்லை.   இப் போது நீங்கள் புரட்சிக் கவிஞர் பாடியுள்ள பாடலை மட்டும் உங்கள் அறிவிற்கும் அனுபவத்துக்கும் ஒத்த வகையில் எண்ணிப் பாருங்கள். இப்பாடல் 7.12.1958 இல் திரு. கி. வீரமணியவர்கட்கும், மோகனா அவர்கட் கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம் நிகழ்ந்த போது பாடியது.


இளமை வளமையை விரும்பும் என்பர்.


இளமை எளிமையை விரும்பிய புதுமையை


வீரமணியிடம் நேரில் கண்டுளேன்.


 பாடிக்கை வீசிப் பலருடன் உலவி


வேடிக்கை பேசும் வாடிக்கை தன்னை


இவன்பாற் காண்கிலேன் அன்றும் இன்றும்


உற்ற நோய் நோன்றல் ஊர் நலம் ஓம்பல்


 நற்றவம் என்பர் தொண்டென நவில்வர்


 தொண்டு மனப்பான்மை அந்தத் தூயனைக்


கொண்டது குழந்தைப் பருவத்திலேயே


 தமிழன் அடிமை தவிர்ந்து குன்றென


 நிமிர்தல் வேண்டும் என்றே நிகழ்த்தும்


பெரியார் ஆணை ஒன்றே பெரிதெனக்


கருதிய கருத்து வீரமணியை


வீண் செயல் எதிலும் வீழ்த்தவில்லை....


பெருங்கூட்டத்துப் பெரியரும் சிறியரும்


விரும்பப் பேசும் ஆற்றல் மிக்கோன்


கல்வியும் செல்வமும் கனக்க உடைய


அரங்கம்மை சிதம்பரனார் அளித்த


தோகை மயில் நிகர் மோகனா இந்நாள்


 பெற்ற பேறு யாவரே பெறுவார்?


தமிழர் தமக்கும் தமிழ் மொழிக்கும்


உழைப்பதே உயர்ந்த செல்வமாய்க் கொண்ட


 மாண்பார் வீரமணியும் அம்மணியும்


ஒருமன மானதை உறுதி செய்யுமித்


திருமண நன்னாள் தென்னாட்டுத் திருநாள்


வாழ்க! வீர மணியோடு மோகனா


இன்னுடல் இருவர்க்கும் இரும்பின் குண்டென


 எய்தும் இன்பம் கரும்பின் சாறென மற்றவும்


பெற்றுப் பல்லாண்டு வாழ்க!


ஒரு கருத்தை மட்டும் இங்கு விளக்குகின்றேன்.


 கற்றோர் வியக்கக் கலையெலாம் நிறைந்த


தோகை மயில்நிகர் மோகனா இந்நாள்


பெற்ற பேறு யாவரே பெறுவார்?


என்று பாடியுள்ளார். மோகனா அவர்கள் வீரமணியைப் பெற்றதை பெரும் பேறாகப் பாடிய கவிஞர், வீரமணியவர்கள் மோகனாவைப் பெற்றதைப் பெரும் பேறாகப் பாடவில்லை .


பொதுவாகப் பெண்ணை ஆண் மகன் பெற்றதைப் பேறாகச் சொல்லுவார்கள். பெண் ஆண் மகனைப் பெற்றதாகச் சொல் லும் மரபு இல்லை. நம் கொள்கைகளுக்கு ஏற்ப இருவரும் பேறு பெற்றதாகக் கூறுவது நம்முடைய கொள்கையாகலாம் - நாம் ஆணையும் பெண்ணையும் சமன்மை உடையவர்கள் என்று எண்ணும் கொள்கை உடையவர்கள். அந்த வகையில் கவிஞர் பாடவில்லை . இப்படிப் பாடி இங்கும் பொதுச் செயலாளர் வீரமணியை உயர்த்தி இருப் பதைப் பாருங்கள். இவைகளையெல்லாம் எண்ணி எண்ணி அவர் பாடினார் என்று கூற முடியாது. இயல்பாகப் பாடும்போது இக் கருத்து வந்து அமைந்து விடுகின்றது. பல வகையிலும் பொதுச் செயலாளரை உயர்த் திப் பாட வேண்டுமென்ற அடிப்படையான எண்ணம் இங்கு தலையெடுத்து நிற்கின்றது என்பதுதான் கருத்து.


- தந்தை பெரியார் பிறந்த நாள் (விடுதலை) மலர், 1994


No comments:

Post a Comment