கலப்பட சாமியார்கள் - எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 7, 2020

கலப்பட சாமியார்கள் - எச்சரிக்கை!

“சாமியார் ராம்தேவின் பதாஞ்சலி தயாரிப்பு தேன் உட்பட பல பெரும் நிறுவனங்கள் கலப்படமான தேனை விற்பனை செய்கின்றன” என்று ஜெர்மனி யைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று உண்மையை வெளிக் கொண்டு வந்துள்ளது.


இந்தியர்களின் அன்றாட வாழ்விலும், சித்த மருத்து வத்திலும் பயன்படும்  சுத்தமான, கலப்படமில்லாத தேன் குறித்து, “சென்டர் ஃபார் சயின்ஸ்” என்ற சுற்றுச்சூழல் அமைப்பு விசாரணை நடத்தி ஆய்வக சோதனைக்கு அனுப்பியது.  ஜெர்மன் ஆய்வக சோதனைகளில் இந்தியாவில் உள்ள  பிரபல நிறுவனங்களின் 13 தேன் மாதிரிகள் எடுக்கப்பட்டன.  அதில் ஒரேஒரு நிறுவனம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது. இது தவிர்த்த அனைத்து நிறுவனத் தேன் தயாரிப்புகளும் கலப்படமானவை என்று அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.


 இதில் அன்றாடம் விளம்பரத்தில் முதலிடம் பிடிக்கும் சாமியார் ராம்தேவின் பதாஞ்சலி நிறுவனம் மற்றும் இதர பிரபல நிறுவனங்கள் தயாரித்த தேனும் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. சம்பந்தப்பட்ட 13 முக்கிய நிறுவனங்கள் அனைத்துமே அயல்நாடுகளுக்குத் தேனை ஏற்றுமதி செய்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.


13 தேன் தயாரிப்பு நிறுவனங்களில் 10 நிறுவனங் களின் மாதிரிகள் தூய்மை சோதனையில்  தோல்வி யுற்றதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மய்யம் (சிஎஸ்இ) கூறியுள்ளது,


தேன் வியாபாரத்தில் உள்ள இந்திய நிறுவனங்கள் தேனுடன் கலப்படம் செய்வதற்காக சீனாவிலிருந்து செயற்கை சர்க்கரைபாகுகளை  இறக்குமதி செய்கின் றன என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இதுகுறித்து கூறிய  சிஎஸ்இயின் உணவு பாதுகாப்பு மற்றும் நச்சு ஆய்வுக் குழுவின் திட்ட இயக்குநர் அமித் குரானா, “இந்தியாவில் கலப்படம் செய்யப்பட்ட வர்த்தகம் எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என் பதை இது காட்டுகிறது, இது எங்களுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆனால், இந்த நிறுவனங்கள்  இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்ட சோதனைகளில் எளிதில் தேர்ச்சி பெற்று விடுகின்றன.


பெரும்பாலான நிறுவனங்கள் அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் இனிப்புச் சுவைகொண்ட சிரப்பு களையும், வேதிப்பொருள் இனிப்பு ஊக்கிகளையும் பயன்படுத்துகின்றன. இது சாதாரண சோதனைகளில் தெரியாது, ஆனால் தற்போதுள்ள அரசு சோதனைக் கூடங்கள் ஆரம்பக் கட்ட சோதனைகளை மட்டுமே செய்து தூய தேன் என்று சான்றிதழ் வழங்கி விடுகின்றன. சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இனிப்பு சிரப்புகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றைக் கண்டு பிடித்தனர். விசாரணையில் அந்த நிறுவனத் தின்  வாடிக்கையாளர்களாக பிரபல தேன் நிறுவனங் கள் உள்ளன என்பது தெரியவந்தது, இதனை அடுத்து தேன் மாதிரிகளை சோதனை செய்ய முடிவு செய்யப் பட்டது. உள்ளூர் அரசு ஆய்வகங்களில் விதிமுறைகள் மற்றும் சோதனை முறைகள் மேலோட்டமானவையாக இருப்பதால் போலி தன்மைகள் அவ்வளவாக வெளியே தெரிவதில்லை” என்று கூறியுள்ளார்.


தேன் கலப்படம் என்பது இந்தியா போன்ற நாடுகளின் பிரச்சினையாகும், தேன் கலப்படத்தை தடுக்க உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் புதிய விதி களை கொண்டுவர தேனீ வளர்ப்பவர்கள் 2017 ஆம் ஆண்டும், அதன் பிறகு மீண்டும் 2019ஆம் ஆண் டிலும் முறையிட்டனர். அதற்கு இதுவரை மத்திய அரசு பதில் அளிக்கவில்லை.


பெரு நிறுவனங்களின் கலப்படத்தேன் விற்பனை தேனீ வளர்ப்பவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து வருகிறது. அதே நேரத்தில் நம்பிக்கையோடு பயன்படுத்தும் மக்களின் உடல் ஆரோக்கியமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.


ராம்தேவ் போன்ற சாமியார்களுக்கு எல்லா வகை களிலும் மத்திய ஆட்சி அனுசரணையாக இருக்கிறது என்ற நிலையில் சட்டவிரோத வேலைகளை துணிந்து செய்து வருகின்றனர் என்பதுதான் உண்மை!


நடப்பது கார்ப்பரேட் - சாமியார்கள் ஆட்சிதானே!


No comments:

Post a Comment