திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் ஆசிரியர் - அண்ணன் கி.வீரமணி நூறாண்டு வாழ்க! : வைகோ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 2, 2020

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் ஆசிரியர் - அண்ணன் கி.வீரமணி நூறாண்டு வாழ்க! : வைகோ


தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்த நாளுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் வாழ்த்துச் செய்தி வருமாறு:


பத்து வயது சிறுவனாக மேடை ஏறி பெரியார் கொள்கைகளை முழக்கமிட்டவர்; திராவிடர் கழகத்தின் திருஞானசம்பந்தன் என அறிஞர் அண்ணா அவர்களால் புகழாரம் சூட்டப்பட்டவர்; திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவர் எனும் தகுதியுடன் பெரியாரியலை உலகம் முழுவதிலும் கொண்டு சேர்ப்பவர் எனும் பெருமைக் குரிய மானமிகு ஆசிரியர் அண்ணன் கி.வீரமணி அவர்கள் 88ஆம் வயதில் அடி எடுத்து வைக்கிறார் எனும் செய்தி தேனினும் இனிமையாய் நம்மை தித்திக்கச் செய்கிறது!


"இளமை வளமையை விரும்பும் என்பர்


இளமை எளிமையை விரும்பிய புதுமையை


வீரமணியிடம் நேரில் கண்டுள்ளேன்!


பாடிக் கைவீசிப் பலருடன் உலவி


வேடிக்கை வேண்டும் வாடிக்கைதனை


அவன்பாற் காண்கிலேன் அன்றும் இன்றும்"


என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் அவர்கள்


62 ஆண்டுகளுக்கு முன்பு பெருமையுடன் பாடினாரே அந்தப் பண்புநலன் அண்ணன் கி.வீரமணி அவர்களிடம் பன்மடங்கு பல்கிப் பெருகி இருப்பதைக் கண்டு நாடே வியந்து பாராட்டுகிறது!


"மனைவி, குழந்தை குட்டி இல்லாத வாலிபப் பருவத்தில் பொதுத்தொண்டு, உற்சாகம் பலருக்கு ஏற்படுவது இயற்கை. ஆனால் மனைவி, குழந்தை, குடும்பப் பொறுப்பு நல்ல எதிர்காலம் , தொழில் ஆதரவு இவை உள்ள நல்ல நிலையிலும், நாளைக்கும் அவர் (வீரமணி) ஒப்புக் கொள்வதானால் (எம்.ஏ., பி.எல்., என்பதனாலும், பரீட்சையில் உயர்ந்த மார்க் வாங்கி இருக்கும் தகுதியாலும் ) மாதம் 1க்கு ரூ 250-க்கு குறையாத சம்பளமுள்ள அரசாங்க அல்லது ஆசிரியர் பதவி அவருக்கு காத்திருந்து ஆசைகாட்டிக் கொண்டிருக்கும் போதும், அவைகளைப் பற்றிய கவலை இல்லாமல் முழு நேரப் பொதுத்தொண்டில் இறங்குவதென்றால், இது இயற்கையில் எப்படிப்பட்ட மனிதரிடமும் எளிதில் எதிர்பார்க்க முடியாத விசயமாகும்” என்று 1962 ஆம் ஆண்டிலேயே அய்யா பெரியாரின் பாராட்டையும், நம்பிக்கையும் பெற்றவர் ஆசிரியர் வீரமணி!


"அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்துவிட்டேன்” என்று 1964 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் அவர்கள் அறிவித்தாரே, அந்த விடுதலை ஏடு அண்ணன் கி. வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில், நாள்தோறும் பெரியார் கொள்கைகளை உலக முழுவதிலும் பரப்புவதில் இமாலயச் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறது. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளை அமைப்புகள் ஆகியவை வளர்ச்சியும், வலுவும் பெற்று உலகு தழுவிய அளவில் பணிசிறக்கவும் திராவிடர் கழக திருப்பணிகள் திக்கெட்டும் தீவிரமாய் தொடர்வதற்கும் அண்ணன் கி. வீரமணி அவர்களின் அயராது அரும் பணியும் ஓயாத உழைப்பும் தான் காரணம் என்பதை உலகு அறியும்!


நாள்தோறும் 'விடுதலை' முழக்கம் கேட்கிறது; மாதமிருமுறை 'உண்மை' உலா வருகிறது; திங்கள் தோறும் நம் குழந்தைகளிடம் பெரியார் பிஞ்சு' உறவாடு கிறது; ஆங்கில மொழியில் மாதந்தோறும் அய்யாவின் தத்துவங்களை 'The Modern Rationalist' பரப்பிக் கொண்டு இருக்கிறது. பெரியார் தொலைக்காட்சி - வலை தளம் - இணையவழிப் பிரச்சாரம் இடைவிடாமல் தொடர்கிறது என்றால் இத்தகைய இயக்கங்களின் அச்சாணியும் - இயக்கும் சக்தியும் ஆசிரியர் அண்ணன் கி. வீரமணி அவர்கள் தானே!


இந்தப் பணிகளோடு, மதவாத சக்திகளை முறியடிக் கவும், மதச்சார்பற்ற, மத நல்லிணக்கச் சக்திகளை அணிதிரட்டவும் முனைந்து செயல்பட்டு, நம் அனை வருக்கும் நல் வழிகாட்டக் கூடிய கலங்கரை விளக்கமாக அண்ணன் கி. வீரமணி அவர்கள் செயல்பட்டு வருவது நமக்குக் கிடைத்த நல்வாய்ப்பு! திராவிட இயக்கத்திற்கும் தமிழகத்திற்கும் கிடைத்திட்ட அருட்கொடை!!


இத்தகைய பண்பாட்டுப் பெட்டகமாய் நமக்குக் கிடைத்திட்ட மானமிகு அண்ணன் கி. வீரமணி அவர்கள் நூறாண்டு கண்டு - ஆயிரம் பிறை கண்டு செந்தமிழ் போல் சீரிளமைத் திறனுடன் வாழ்வாங்கு வாழ்க என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்தி மகிழ்கிறேன்!


No comments:

Post a Comment