நீங்கள் வைத்த நம்பிக்கைக்கேற்ப உழைத்துக்கொண்டே இருப்பேன் மரணம் ஒன்றுதான் என் பணியைத் தடுத்து நிறுத்த முடியும்!
காணொலியில் தமிழர் தலைவரின் உருக்கம் கலந்த எழுச்சியுரை
சென்னை, டிச.3 நீங்கள் எந்த நம்பிக்கையின் அடிப்படை யில் என்னை உற்சாகப்படுத்துகிறீர்களோ, அந்த நம்பிக் கைப்படி நான் மேலும் உழைப்பேன். இந்தப் பணியை யாரும் தடுக்க முடியாது - மரணம் ஒன்றைத் தவிர என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உருக்கம் கலந்த உணர்ச்சி உரை ஆற்றினார்.
சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நேற்று (2.12.2020) மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற ‘‘திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 88 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - நூல் வெளியீட்டு விழா - ‘விடுதலை' சந்தாக்கள் வழங்கும் விழா''வில் காணொலிமூலம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கழகத் தோழர்களிடையே சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
முடக்கப்பட்ட காலமாக இருந்தாலும், அடக்கப்பட்ட காலமாக இருக்கக் கூடாது
மிகுந்த உணர்ச்சிப்பூர்வமான வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு புது அர்ப்பணிப்பை கடமையென கருதக் கூடிய அருமையான ஒரு வாய்ப்பை இன்றைக்குத் தந்து, கரோனா காலமாக இருந்தாலும், தொற்று நோய் காரணமாக முடக்கப்பட்ட காலமாக இருந்தாலும், அடக்கப் பட்ட காலமாக இருக்கக் கூடாது என்பதை நினை வூட்டுகின்ற வகையிலே, நம்முடைய இயக்க செயல் வீரர்கள், பொறுப்பாளர்கள், அருமையாகப் பாடுபட்டு, தங்களுடைய கடும் உழைப்பினாலே, நம்முடைய பொதுச்செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், கழகத் தோழர்கள், தமிழ் அன்பர்கள், பகுத்தறிவாளர்கள் ஆகிய அத்துணை பேரும் இந்த சிறப்பான நிகழ்ச்சியில், 2128 'விடுதலை' சந்தாக்களை அளித்த நிகழ்ச்சி என்பது இருக்கிறதே, அதுவும் இந்தக் கரோனா காலத்திலும்கூட 'விடுதலை' நாளிதழை நிறுத்தாமல், அதனை அச்சடிக்க முடியாத சூழ்நிலையில்கூட, இணைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எல்லோருக்கும் பிடிஎஃப் வடிவில் விடுதலை நாளிதழை அனுப்பிய அந்தக் காலகட்டத்தைத் தாண்டி, இன்றைக்கு விடுதலை நாளிதழை அச்சடிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தூக்கிப் பிடிக்கவேண்டும் - ஏனென் றால், இன்றைய சூழ்நிலையில், அறிவாயுதம் மிகவும் முக்கியம். களத்திலே தந்தை பெரியார் தந்த புரட்சிப் படைக்கலன்மூலம்தான் இதனை செய்ய முடியும் என்ற அந்த நிலையை உருவாக்கக் கூடிய விழாவாக இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்.
பிறந்த நாள் செய்தியாக....
என்னுடைய பிறந்த நாள் செய்தியாக ஒரு அறிக்கையை நான் ஏற்கெனவே நேற்று வெளியிட்டு இருக்கிறேன். அதில் ஒரே ஒரு செய்தி, ஒன் பாயிண்ட் புரோகிராம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு, இன்றைக்குத் தேவை என்ன என்பதை எடுத்துச் சொல்லக்கூடிய வகையில் சொல்லியிருக்கிறேன்.
இப்படிப்பட்ட ஒரு அற்புதமான நிகழ்ச்சிக்கு என்னை ஊக்கப்படுத்துவதற்காக இங்கே வந்து சிறப்பான வகையில், கருத்துகளை எடுத்து வைத்துவிட்டு, அவசரமாக சென்றி ருக்கக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அன்பிற்குரிய தோழர் முத்தரசன் அவர்களே, திராவிட தமிழர் இயக்கப் பேரவையின் பொதுச்செய லாளர் அன்பிற்குரிய சகோதரர் பேராசிரியர் சுப.வீரபாண் டியன் அவர்களே, இந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்பான வகையில் கருத்துரையாற்றிய பேராசிரியர் டாக்டர் நாகநாதன் அவர்களே,
விழாவிற்குத் தலைமையேற்று, இந்த விழாவினை திட்டமிட்டு செயல்படுத்திக் கொண்டிருக்கின்ற கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, வரவேற்புரையாற்றிய கழகப் பொருளாளர் மதிப்பிற்குரிய குமரேசன் அவர்களே, இணைப்புரை வழங்கியும், இந்தக் கரோனா காலத்தில், ஜூம் என்று சொல்லக்கூடிய இணைய துறையைப் பயன்படுத்தி, அதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்கின்ற சலிப் பில்லா உழைப்பாளியான அருமைத் தோழர் பெரியார் பிரின்சு என்னாரெசு அவர்களே,
மாநிலம் முழுவதும், வெளிநாட்டிலிருந்தும் இந்த உரையை கேட்டுக் கொண்டிருக்கின்ற பெரியார் பன்னாட்ட மைப்பைச் சார்ந்த தோழர்களே, பகுத்தறிவாளர்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிக நேரம் பேசவேண்டிய அவசியமும் இல்லை; தேவையும் இல்லை. அந்த அளவிற்கு என்னுடைய உள்ளத்தில் மகிழ்ச்சியை நிரப்பி இருக்கிறீர்கள்.
ஆரியத் தொற்று நோய்க்கு ஒரே ஒரு மாமருந்து, பெரியார் - திராவிடம்
இந்த நேரத்திலே ஒன்று, புயல் தாக்குமோ என்றெல் லாம் கருதிக் கொண்டிருக்கின்ற நேரத்தில்கூட, அதைவிட ஆபத்தான ஒன்று இருக்கும்பொழுது, புயலைப் பொருட் படுத்தவேண்டியதில்லை. அதுதான் ஆரியம் என்று சொல்லக்கூடிய தொற்று. அது வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், அதற்கு மிக முக்கியமான தடுப்பூசியைப் போட்டாகவேண்டும். அதற்கு ஒரே ஒரு மாமருந்து, பெரியார் - திராவிடம் என்பதுதான்.
எனவேதான், திராவிடம் நமது பிறப்புரிமை
திராவிடம் என்பது வெல்லும்
திராவிடம் என்பது சமத்துவம்
திராவிடம் என்பது நமது அடையாளம்
அழிக்கப்படக் கூடாத, அழிக்கப்பட முடியாத அடையாளம் திராவிடம்.
ஆரியம் என்பது பேதம்
திராவிடம் என்பது ஒற்றுமை என்ற அளவிலே செய்யவேண்டும்.
தலைதாழ்ந்த நன்றியை பணிவன்போடு
தெரிவித்துக் கொள்கிறேன்!
இதைத்தான் எடுத்துச் சொல்லக்கூடிய நிலையில், தமிழ்நாடு முழுவதும், தேனீக்களைப் போல சுற்றிச் சுழன்று, 2128-த்திற்கும் மேற்பட்ட விடுதலை சந்தாக்களை, சில மாதங்களுக்குள்ளாக, அதுவும் குறுகிய காலத்தில் இவ்வளவு அற்புதமாக அந்தப் பணியை செய்து, இன்னும் ஓய்ந்துவிடாமல், தொடர்ந்து அதனை செய்து கொண்டிருக்கக்கூடிய அருமைத் தோழர்களே, உங் களுக்குத் தலைதாழ்ந்த நன்றியை பணிவன்போடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் எந்த நம்பிக்கையை வைத்துக்கொண்டு என்னை ஊக்கப்படுத்துகின்றீர்களோ, அதன்படியே நான் மேலும் மேலும் உழைப்பேன்; மரணம் ஒன்றுதான் என்னைத் தடுக்கும் என்ற உறுதியை முதற்கண் உங்களுக்கும், அகிலத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான், இதில் உற்சாகத்தைப் பெறுகிறேன்
ஊக்கத்தைப் பெறுகிறேன்
உறுதியைப் பெருக்கிக் கொள்கிறேன்.
லட்சியப் பயணத்தில் கொஞ்சம்கூட தடுமாற்றம் இருக்கக் கூடாது; இடமாற்றம் எப்பொழுதும் ஏற்பட்ட தில்லை; தடுமாற்றம் என்றைக்கும் வருவதே கிடையாது.
மடை மாற்றமும் இருக்காது - தடுமாற்றமும் இருக்காது
காரணம், நான் அமர்ந்திருப்பது, ஏற்கெனவே நான் அறிக்கையில் சொல்லியதைப்போல, தந்தை பெரியாரின் தோள்மீது, உங்கள் கரங்களைப் பற்றிக் கொண்டிருக்கின்ற பொழுது, எனக்கு ஏன் தடுமாற்றம் ஏற்படப் போகிறது?
எனவேதான், மடை மாற்றமும் இருக்காது - தடு மாற்றமும் இருக்காது.
அந்த அளவில், மிகச் சிறப்பான வகையில் என்னுடைய பயணங்கள் அமைந்திருப்பதற்கு, தோழர்கள், கழகக் குடும்பத்தினர், கொள்கைக் குடும்பத்தினர்கள் இதற்கு மிக முக்கியமானவர்கள். அவர்களுக்கு நன்றி செலுத்துகின்ற வாய்ப்பாகத்தான் இந்த நேரத்தை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அருமைச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்கள், பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி, தி.மு.க. இளை ஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் எல்லோரும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துப் பாராட்டி, ஊக்கப்படுத்தினார்கள். எல்லோருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீண்டும் இந்த இனம் ஒரு சோதனைக்கு ஆளாகி யிருக்கிறது; வேதனைக்கு நாளும் ஆளாகிக் கொண்டிருக் கிறது. இதனை நாம் எப்படி எதிர்கொள்வது என்பதுதான் மிகவும் முக்கியம்.
அன்பு நண்பர்களே, இங்கே நம்முடைய கவிஞர் அவர்கள் சொல்லியதைப் போல, சிந்திக்க சில கேள்விகள் என்ற தலைப்பில் சிறு வெளியீட்டை நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம். தமிழின மக்களே, சிந்திப்பதற்கு சில நொடி களை எங்களுக்குத் தாருங்கள் என்று பணிகளை நாளை முதல் தொடங்கவேண்டும். ஒவ்வொரு மாவட்டத் தோழர்களுக்கும் அந்த வெளியீடுகளை அனுப்பியிருக்கிறோம். எப்படி நீங்கள் சந்தாக்களை வசூலிக்க திட்டமிட்டு உழைத்தீர்களோ, அதைவிட மிக முக்கியமான பணியாக இதனை நீங்கள் கருதி செய்யவேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில், நீங்கள் என்னை சங்கிலி போட்டு கட்டியதைப்போல, இந்த நிகழ்ச்சிக்குக்கூட நீங்கள் நேரில் வரக்கூடாது; காணொலிமூலமாக உரையாற்றுங்கள் என்று சொன்னீர்கள். இந்த நிகழ்ச்சியை தொடக்கம் முதலே பார்த்து வருகிறேன். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்தது.
தோழர்களின் அன்புக் கட்டளையை மீற முடியாது
நீங்கள் எனக்குக் கட்டுப்பாடு விதிக்காமல் இருந்திருந் தால், முதலில் உண்டியலைக் குலுக்கி, எல்லா ஊர்களிலும் திண்ணைப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைக்கின்ற பணியை செய்திருப்பேன். ஆனால், உங்கள் கட்டளையை மீற விரும்பவில்லை. ''நீங்கள் இன்னும் சிறிது காலத்திற்கு வெளியே வரவேண்டாம், வயதின் காரணமாக; என்னதான் மனதிலே உங்களுக்கு உற்சாகமாக இருந்தாலும், சுற்றுச் சூழல் அப்படியில்லை; ஆகவேதான், நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்'' என்று தோழர்கள், நண்பர்கள் சொல்லியதன் காரணமாக, நான் எதை மீறி னாலும், தோழர்களின் அன்புக் கட்டளையை மீற முடியாது.
திராவிடர் கழக வெளியீட்டை ஒவ்வொரு ஊரிலும் பரப்பவேண்டும்
ஆகையால்தான், தோழர்கள் அந்தப் பணியை செய்ய வேண்டும். மிக அற்புதமாக தயாரிக்கப்பட்டு இருக்கின்ற அந்த சிறு வெளியீட்டை, மகளிரணி தோழர்கள், இளை ஞரணி தோழர்கள், மாணவரணி தோழர்கள், தொழிலாளரணி தோழர்கள் என்று ஒவ்வொருவரும் இந்தப் பணியை நாளை முதல் தொடங்கிவிடவேண்டும்.
''குடிசெய்வார்க்கில்லை பருவம்'' என்று சொல்வ தைப்போல, தென் மாவட்டங்களில் புயல், மழை என்று சொன்னாலும், நாம் அதற்காக ஓய்ந்து இருக்கவேண் டியதில்லை. அந்தப் பணியை நீங்கள் பகுதி பகுதியாக பிரிந்து, அய்ந்து பேர் அல்லது 10 பேர் ஒரு குழுவாகச் சேர்ந்து ஒவ்வொரு ஊரிலும் செய்யவேண்டும். பணிக்குச் செல்வதற்கு முன்போ, பணிக்குச் சென்றுவிட்டு வந்தோ அந்தப் பணியை ஒவ்வொரு பகுதியிலும் செய்யவேண்டும். திட்டமிட்டு செயல்படவேண்டும் - கையில் உண்டியலோடு செல்லவேண்டும். வெட்கப்படுவதற்கோ, கூச்சப்படுவதற்கோ இதில் இடமே கிடையாது.
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.
எனவேதான், நாம் பிச்சை எடுக்கவில்லை; சமுதாயத் தினுடைய உரிமைக்காக- மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் பாடுபடுகிறோம்.
மயக்க பிஸ்கெட்டுக்களை பயணம் செய்கின்றவர்களிடம் கொடுத்து, பயணிகளின் உடைமைகளைப் பறித்துக் கொண்டு போகின்ற கொள்ளையர்களைப் போல, நம்முடைய வாக்குரிமையைப் பறிப்பதற்காக அந்தக் கூட்டம் வந்து கொண்டிருக்கின்றது. அவர்கள் சொல்வதில் சரக்கில்லை; எந்தவிதமான் நியாயமுமில்லை என்பதைத் தெளிவாக அந்த சிறு வெளியீட்டில் தெரிவித்திருக்கின்றோம். அந்த வெளியீட்டை நீங்கள் பரப்பவேண்டிய கடமை மிகவும் அவசியமானதாகும்.
திருந்து அல்லது திருத்து
தந்தை பெரியாருடைய நினைவு நாள், இதே மாதம் 24 ஆம் தேதி. அந்த நாளுக்குள், நாம் பெரிய எண்ணிக்கை அளவில் அந்த சிறு வெளியீடுகளை கொண்டு போய் சேர்த்திருக்கவேண்டும். இத்தனை ஆயிரம் பேரை நாம் சந்தித்திருக்கிறோம்; இவ்வளவு வீடுகளுக்கு நாம் போய், இந்த வெளியீடுகளைப் பரப் பியிருக்கிறோம் என்று ஒவ்வொரு தோழரும் சொல்ல வேண்டும்.
அந்த வெளியீட்டைப் பரப்புகின்ற பணியில், ஒரே அணிதான் செல்லவேண்டும் என்கிற அவசியமில்லை. உதாரணத்திற்குச் சொல்கிறேன், நானும், கவிஞரும், குமரசேன், அருள்மொழி, பிரின்சு ஆகிய அய்ந்து பேர் ஒரு நாளைக்குச் செல்கிறோம் என்று சொன்னால், எங்களில் ஒருவரான அருள்மொழிக்கு வேலை இருக் கிறது என்றால், இன்பக்கனி வந்து சேர்ந்து அந்தப் பணியை செய்யலாம்.
அதுபோன்று தோழர்கள் திட்டமிட்டு அந்தப் பணியை மேற்கொள்ளவேண்டும். இந்தப் பணியை நீங்கள் முழுமுதற் பணியாக செய்யவேண்டும். நாம் இதற்கு முன் தெருமுனைப் பிரச்சாரத்தை செய்திருக் கிறோம். ஆனால், இப்பொழுது செய்யப் போவது, இயக்கத்தினுடைய வரலாற்றிலேயே முக்கியமான ஒன்று. எதிரிகளை அவர்களுடைய முறையிலேயே நாம் சந்திப்போம். ஆனால், விவாதங்கள் செய்யவேண்டிய நேரத்தில், சிலர் எதிர்கேள்வி கேட்டால்கூட, நம்முடைய தோழர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும், அவமா னப்படுத்தப்பட்டால்கூட பொறுமையை இழக்கக் கூடாது என்பதுதான் மிகவும் முக்கியம். ஏனென்றால், நாம் கருத்தை கருத்தாலே சந்திக்கக் கூடியவர்கள். வன்முறைக்கு வழிவகுக்கின்றவர்கள் அல்ல.
சுயமரியாதை இயக்கத்தினுடைய ஆரம்பப் பால பாடம் ஒரே வரிதான்.
திருந்து அல்லது திருத்து!
ஒன்று நீங்கள் திருந்தவேண்டும்; அல்லது அது தவறானால், எங்களைத் திருத்தட்டும்.
இந்த வெளியீட்டுக்கு அவர்கள் பதில் சொல்லட்டுமே - அப்போது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு தானே ஏற்பட்டுவிடுமே.
நம்முடைய பாதிப் பணி - அந்தத் தேர்தல் பணி - அரசியல் ரீதியாக அரசியல் கட்சிகள் செல்வது என்பது அவர்களுடைய முறை. ஆனால், அதற்கு முன்பாக, ''சேப்பர்ஸ் அன்ட் மைனர்ஸ்'' என்று சொல்லக்கூடிய தூசிப் படை போன்று, நாம் சுகாதாரப் பணியாளர்கள். நல்வாழ்வை உருவாக்குவதற்காக இருக்கின்ற துறை நல்வாழ்வுத் துறை. சுகாதாரத் துறை என்பது வேறு; நல்வாழ்வுத் துறை என்பது வேறு.
நாம் துப்புரவுத் தொழிலாளர்கள் போன்றவர்கள். குப்பை, கூளங்கள் மக்களின் மனதில் சேர்ந்து விடக் கூடாது என்பதற்காக, இந்த வெளியீட்டுப் பிரச்சாரத்தை எல்லா ஊர்களிலும் தொடங்கவேண்டும். நண்பர்களே, சென்னையில் தொடங்குகின்ற அதே நேரத்தில், கன்னியாகுமரி, திருத் தணியிலும் தொடங்கவேண்டும். காரைக்குடியிலும் தொடங்க வேண்டும்; இராமநாதபுரத்திலும் தொடங்கவேண்டும்; சிவ கங்கையிலும் தொடங்கவேண்டும்.
எல்லா இடங்களிலும் தொடங்கவேண்டும் நம்முடைய தோழர்கள். இதற்கு ஒரு பெரிய கூட்டம் தேவையில்லை. அமைதியாக இந்தப் பணியை செய்யவேண்டும்; முழக் கங்கள் எழுப்பவேண்டிய அவசியமில்லை.
பெரியார் திட்டம் - பெரியார் தந்த புத்திதான்!
தோழர்கள் மக்களை சந்தித்து, ''வணக்கம், உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி! இதனைப் படியுங்கள்'' என்று சொல்லி, இந்த வெளியீட்டை கொடுத்துவிட்டு, உண்டியலை நீட்டுங் கள்; அவர்கள் காசு போடாவிட்டாலும் பரவாயில்லை. நாம் ஒரு தெளிவான திட்டத்தோடு, மக்களுடைய ஆதரவைத் திரட்டுவதற்கு பெரியார் திட்டம் - பெரியார் தந்த புத்திதான் இந்த செயல். ஆகவே, அந்தத் திட்டத்தைத் திட்டமிட்டு செய்யுங்கள்; அந்த வெளியீடு எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு இருக்கிறது.
அந்த வெளியீடு மேலும் மேலும் உங்களுக்குத் தேவைப்படும்; பல லட்சக்கணக்கான மக்களைச் சந்தித்து, ஒரு வீட்டுக்கு ஒரு வெளியீடு என்ற அளவிற்குப் பரப்ப வேண்டும். கடைவீதிகளில்கூட அந்தப் பிரச்சாரத்தை - வெளியீட்டை நீங்கள் பரப்பலாம். இந்த வெளியீடுகளை தாய்மார்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கவேண்டும்; மகளிரணியினர் இந்த மிக முக்கியமான பொறுப்பினை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
நீங்கள் சந்தாக்களைச் சேர்க்கக் கூடிய பணி என்பது இருக்கிறதே, அது ஒரு தொடர் பணி. அதற்காக உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரெஞ்சு அறிஞர் பெலாஜியல்
நண்பர்களே, சுருக்கமாக உங்களுக்குச் சொல்கிறேன்.
கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெலாஜியல் என்ற ஒரு பிரெஞ்சு அறிஞர் ஒன்றைச் சொன்னார். அண்மையில் படித்ததை உங்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன்.
மரணங்கள் இப்பொழுது சாதாரணம்; கரோனா தொற்று மரணங்கள்; இதயம் நின்று விடுகிறது, மாரடைப்பு மரணங்கள்; விபத்து மரணங்கள்; தற்கொலைகளின்மூலமாக ஏற்படுகின்ற மரணங்கள்; படுகொலையின் மூலமாக ஏற்படு கின்ற மரணங்கள் என்று மரணங்களில் பல வகை உண்டு.
என்னடா, பிறந்த நாளில், மரணத்தைப்பற்றி பேசுகிறாரே என்று நீங்கள் எல்லாம் நினைக்கலாம்; அதுதான் பகுத்தறிவு, அதுதான் துணிச்சல்.
ஆகவே, மரணங்கள் பலவகை உண்டு. நாம் மரணத் திற்குப் பின்பு மறுவாழ்வு உண்டு என்று கருதாதவர்கள்.
வாழ்க்கையில் துன்பப்பட்டவர்களுக்கு, புது வாழ்வு ஏற்படுத்தலாமே தவிர, இறப்பிற்குப் பின்பு மறுவாழ்வு இல்லை என்று நினைக்கக் கூடியவர்கள்.
மதம், விஞ்ஞானத்தின்முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது; தங்களைத் திருத்திக் கொண்டது
கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெலாஜியல் சொல்கிறார், ''நம்பிக்கை இழப்பை விட, மிகப்பெரிய மரணம் வாழ்க்கையில் வேறு எதுவும் இல்லை.''
நமக்கு அத்தகைய மரணமே வராது - பகுத்தறிவு வாதிகளுக்கு. காரணம், நாம் ஒருபோதும் நம்பிக்கை இழந்தவர்கள் அல்ல. நாம் வெற்றி பெற்றே தீருவோம் - திராவிடம் வெல்லும். விஞ்ஞானம் தோற்காது - விஞ்ஞானம் வெற்றி பெற்றே தீரும். வேண்டுமானால், ஒரு காலத்தில் விஞ்ஞானம் மிரட்டப்பட்டு இருக்கலாம்; மதம், விஞ்ஞானத்தை சிறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் - இது பழைய வரலாறு.
ஆனால், அதற்கு அடுத்த காலகட்டம் எப்படி வருகிறது - நம் கண் முன்னாலேயே பார்த்தோம்.
எந்த மதம் விஞ்ஞானத்தை சிறைப்படுத்தியதோ, அதே மதம், விஞ்ஞானத்தின்முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது தங்களைத் திருத்திக் கொண்டது என்று சொல்லும்பொழுது, நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும் நண்பர்களே!
என்றைக்கும் உங்களோடு நான் இணைவதற்குத்
தயாராக இருக்கிறேன்
எனவேதான் நண்பர்களே, கழகத் தோழர்களே, செயல் வீரரகள் நாம் - பாசறையில் இருந்து நாம் கிளம்புகிறோம், இந்தப் பணியைத் தொடங்குவதற்காக- உங்களை நான் இங்கிருந்து அனுப்புகிறேன் - படைத் தலைவர் என்ற முறையிலோ, படைத்தளபதி என்ற முறையிலோ அல்ல - என்றைக்கும் உங்களோடு நான் இணைவதற்குத் தயாராக இருக்கிறேன்.
என்றைக்கு நீங்கள் கதவுகளைத் திறக்கிறீர்களோ - நான் கதவுகளைத் தட்டிக் கொண்டேதான் இருக்கிறேன்; ஆனால், கதவுகள் திறக்கப்படவில்லை. 'தட்டுங்கள் திறக்கப் படும்' என்று சொன்னார்கள் - நான் தட்டிக் கொண்டே இருக்கிறேன் - அது என்றைக்குத் திறக்கப்பட்டாலும், நானும் உங்களோடு உண்டியல் எடுத்து வருவேன்; நானும் திண்ணைப் பிரச்சாரத்திற்கு வருவேன். ஆயிரக்கணக் கானோர் மத்தியில்தான் பேசவேண்டும் என்ற அவசிய மில்லை. ஒவ்வொருவரிடமும் பேசவேண்டும்; ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் பேசவேண்டும். அதுதான் திராவிடர் கழகத்தினுடைய அற்புதமான நிலையாகும்.
''மயக்க பிஸ்கெட்டுகள் ஓர் எச்சரிக்கை!''
''மயக்க பிஸ்கெட்டுகள் ஓர் எச்சரிக்கை!'' என்ற சொல்லை தமிழ்நாடு முழுவதும் இரண்டு நாள்களுக்குள் பாப்புலர் ஆக்கிவிடவேண்டும், டிரண்ட் என்று சொல்கின்ற அளவிற்கு.
தேசியம் காக்க, தமிழினம் காக்க புறப்படுவோரே, பதில் கூறுங்கள்!
'மயக்க பிஸ்கெட்டுகள் ஓர் எச்சரிக்கை'' என்ற தலைப்பில் நாம் வெளியீட்டு இருக்கின்ற சிறு வெளியீட்டைப் படிக் கட்டும் - அதற்குப் பதில் சொல்லட்டும்.
அவர்கள் போன்று, தெய்வீக தமிழ் சங்கம் என்று வேறொரு புனை பெயரில் வெளியிட்டு இருக்கிறார்கள்; அதுபோன்று நாம் செய்யமாட்டோம்; திராவிடர் கழக வெளியீடு என்று அச்சடித்து வெளியிட்டு இருக்கிறோம்.
சிந்திக்க சில நொடிகளை ஒதுக்கி, தோழர்களே இதனைப் படித்து சிந்திப்பீர்! சிறந்த முடிவெடுப்பீர்! - திராவிடர் கழகம் என்று தெளிவாக அச்சடித்து வெளியிட்டு இருக்கிறோம்.
நாம் எப்போதும் முகமூடி அணியாதவர்கள்; முகக்கவசம் வேண்டுமானால், அறிவியல் ரீதியாக நாம் அணிவோமே தவிர, முகமூடி நமக்கு என்றைக்கும் தேவை கிடையாது.
எந்த நிறம் நம்மீது விழுந்தாலும், இந்தக் கருப்புதான் அவர்கள்மீது சாயமாக ஏறுமே தவிர, வேறொரு சாயம் இந்தக் கருப்பின்மீது படியாது என்பதை மிகத் தெளிவாக நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
எனவே, நண்பர்களே! எப்படி சந்தாப் பணியை தேனீக் களைப் போல நீங்கள் செய்தீர்களோ - அதேபோல, இந்த வெளியீட்டைப் பரப்புகின்ற பணியையும் செய்யவேண்டும்.
பகுத்தறிவாளர்கள், அன்பர்கள், நமது ஆதரவாளர்கள், தாய்மார்கள், மாணவர்கள் எல்லோரும் இந்தப் பணியை செய்யவேண்டும்.
இந்த வெளியீடு, எல்லோருடைய கைகளிலும் இருக் கின்ற அளவிற்கு, அந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்யவேண்டும். அதனைப் பார்த்து எதிரிகள் கதிகலங்க வேண்டும்.
இது அறிவாயுதம் - இந்த ஆயுதம் வன்முறை ஆயுதங் களிடம் தோற்காது. எனவேதான், அந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்யவேண்டும்.
நம்பிக்கை இழப்பு என்ற மரணம்
நமக்கு ஒருபோதும் இருக்காது
அதேபோல, நம்பிக்கை இழப்பு என்ற மரணம் நமக்கு ஒருபோதும் இருக்காது. நம்பிக்கையோடு நாம் வெற்றி பெறுவோம். அந்த திராவிடம் வெல்லும் - இதுதான் மிக முக்கியம்.
அந்தத் திராவிடம் வெல்லும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு சிறப்பான வகையில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு, 2128 சந்தாக்களைக் கொடுத்திருக்கிறீர்கள் என்று சொல்லும்பொழுது, மிகவும் மகிழ்ச்சியடைக் கூடிய நிலையில்,
நிறைவாக இரண்டொரு கருத்துகளை மட்டும் சொல்லி என்னுரையை முடிக்கவிருக்கின்றேன் நண்பர்களே!
அடுத்தபடியாக நாம் தெளிவாக செய்யவேண்டிய பணி என்னவென்றால்,
நம்முடைய இயக்கத் தோழர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன், நம்முடைய இயக்கத்திற்கு ஒரு தனித் தலைமை - ஒப்பற்ற தலைமை என்று சொல்கின்ற நேரத்தில், ஒப்பற்ற தலைமை - ஒப்பற்றத் தோழர்கள், தொண்டர்கள்.
ஒப்பற்ற தொண்டர்களுடைய தன்மை, தலைமையினு டைய தன்மைகளில் தனித்தன்மை என்ன தெரியுமா நண்பர்களே,
தந்தை பெரியார் அவர்கள் எடுத்த எந்த முடிவிற்கும் அவர்கள் வருந்தியதே கிடையாது
இதுவரையில், மற்ற அமைப்புகள் எல்லாம் எடுத்த முடிவுகளை, நிலைகளை மாற்றிக் கொண்டிருக்கின்றன. ஆனால், தந்தை பெரியார் அவர்கள் எடுத்த எந்த முடிவிற்கும் அவர்கள் வருந்தியதே கிடையாது; மாற்றியதே கிடையாது. வாழ்க்கையில் நாம் இதனைப் பின்பற்றப்ப வேண்டியது மிக முக்கியமானதாகும்.
முடிவெடுக்கக் கூடிய உரிமை எல்லோருக்கும் உண்டு. ஆனால், எடுத்த முடிவிற்காக எந்த காலகட்டத்திலும் வருந்தக் கூடியவர்களாக இருக்கக்கூடாது. இதுதான் ஒருவரு டைய வாழ்க்கையில் வெற்றிகரமானதாக அமையும்.
அந்த வகையில், திராவிடர் கழகம் எடுக்கின்ற எந்த முடிவிலும் பின்வாங்கியதே இல்லை. முடிவு எடுக்கின்ற பொழுது அப்பொழுது கசப்பாக இருக்கும்; எதிர்ப்பு இருக்கும்; கொச்சைப்படுத்துவார்கள்; கேவலப்படுத்துவார்கள்; எதிர்ப் பார்கள். ஆனால், அந்த முடிவிலே உறுதியாக இருப்போம்.
அய்யாவினுடய திருமணம் அதற்கு ஒரு உதாரணம்; ஜெயலலிதா ஆட்சியை நாம் ஆதரித்தது அதற்கு ஒரு உதாரணம். இப்படி எத்தனையோ உதாரணங்களை சொல்ல வேண்டும். அம்மாவினுடைய காலத்தில் நடந்த பல்வேறு செய்திகள் உதாரணம்.
எனவேதான், முடிவு எடுத்த பிறகு, அந்த முடிவிற்காக ஒருபோதும் நாம் வருந்தியதே கிடையாது.
இங்கே மட்டும் அந்த சிறு வெளியீடு இலவசமாக உங்களுக்கு வழங்கப்படுகிறது. இலவசம் என்றால், அதனை அலட்சியமாக நீங்கள் நினைக்கக் கூடாது. உண்டியலை தயார் செய்யவில்லை. உண்டியல் இல்லாவிட்டாலும், துண்டு ஏந்தியாவது அந்தப் பணியைச் செய்தாகவேண்டும். மக்களுடைய ஆதரவு நமக்கு இருக்கிறது என்பதற்காக ஒரு அடையாளம்தான் அது. ஆகவே, அந்தப் பணியைச் சிறப்பாக செய்யுங்கள்.
10 முதல் 15 சதவிகித வாக்காளர்கள்
அதற்கடுத்தபடியாக நண்பர்களே, நம்முடைய நம்பகத்தன்மை என்பது இருக்கிறதே, அது என்றைக்கும் நிலைநாட்டப்பட வேண்டும்.
மக்கள் மத்தியில், நம்முடைய நம்பகத்தன்மை தனித்த தன்மையாக இருக்கின்ற காரணத்தினால்தான், நாம் யாரை ஆதரிக்கின்றோமோ, அவர்களைப் பார்த்து, நம்முடைய கருத்துகளைக் கேட்டு முடிவு செய்யக் கூடியவர்கள் - 10 முதல் 15 சதவிகித வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
அந்த 10 முதல் 15 சதவிகித வாக்காளர்கள் என்பவர்கள், முடிவு செய்யக்கூடிய முடிவாளர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். ஆகவேதான், நம்முடைய எதிரிகள் ஆத்திரப் படுகிறார்கள்.
நாம் யாரையும் அடிமைப்படுத்தமாட்டோம்; யாருக்கும் அடிமையாக இருக்கமாட்டோம்
வாழ்க்கையில் நீங்கள் அத்தனைப் பேரும் கருணை உள்ளத்தோடு நடந்துகொள்ளவேண்டும்; நம்முடைய இயக்கம் மனிதநேய இயக்கமாகும். நாம் யாரையும் அடிமைப்படுத்தமாட்டோம்; யாருக்கும் அடிமையாக இருக்கமாட்டோம்.
எது மனிதநேயம்?
பெரியாருடைய கொள்கை, சுயமரியாதை இயக்கம் வளர்ந்ததற்கு என்ன அடிப்படை?
மனிதநேயம் என்பதற்கு என்ன அடிப்படை என்று சொன்னால், நம் வாழ்வு வேறு - பிறர் வாழ்வு வேறு என்று பிரிக்காத ஒன்று இருக்கிறதே, அதுதான் மனிதநேயம்.
மனிதநேயத்திற்கு விளக்கம் சொல்லவேண்டுமானால், நம் வாழ்வு வேறு - பிறர் வாழ்வு வேறு என்று கருதாமல், அனைவருக்கும் அனைத்தும் - அவருக்கு வந்த துன்பம், நமக்கு வந்த துன்பம் என்று கருதவேண்டும்.
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை
என்று சிந்தித்ததினால்தான், பெரியார் நமக்குக் கிடைத்தார். சுயமரியாதை இயக்கம் தன்னுடைய பணிகளைச் செய்தது. திராவிட இயக்கம் இன்றைக்குத் தன்னுடைய கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கின்றது.
ஆகவே நண்பர்களே! அந்தப் பணியை சிறப்பாக செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டு,
கடந்த வாரம் ஏற்பட்ட 'நிவர்' புயலால், வடக்கு மாவட்டங் களில் பல இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்பொழுது வரக்கூடிய 'நிரெவி' புயல் தென்மாவட் டங்களைப் பாதிக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அதனால், இழப்புகள் ஏற்பட்டு இருக்கிறது. உயிர்ச்சேதம் குறைவாக இருந்தாலும், பயிர்ச்சேதங்கள், பொருட்சேதங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு என் னென்ன வகையில் உதவ முடியுமோ, ஆறுதல் கூற முடியுமோ அதனை நம்முடைய இயக்கத் தோழர்கள் செய்யவேண்டும். சுற்றுச்சூழலை எல்லா இடங்களிலும் பாது காக்கவேண்டும். புயலால் ஏராளமான மரங்கள் அடியோடு வீழ்ந்திருக்கின்றன. ஆகவே, ஆங்காங்கு மரம் நடு விழா போன்று - சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் போல, அதையும் அறிவுபூர்வமாக செய்யக்கூடிய பணியை மிகச் சிறப்பாக நம்முடைய இளைஞரணி தோழர்களும், மற்றவர்களும் கடமையாகக் கொள்ளவேண்டும்.
சிறப்பான வகையில், இந்த விழாவினை சிறப்பாக நடத்தியதற்காக நன்றி! தலைவர்களுக்கு நன்றி! என்னைப் பாராட்டியவர்களுக்கு நன்றி!
இந்த விழாவில் உரையாற்றும்படி நீங்கள் அழைத்த பொழுது, நான் கலந்துகொண்டது எதற்காக?
நிரூபிக்கக் கூடியது என்னுடைய கடமை -
நம்பவேண்டியது உங்களுடைய உரிமை
வீட்டின் அலமாரியில் புத்தகங்களை அடுக்கி வைத்தி ருப்போம். அப்படி அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் அந்தப் புத்தகங்களை அடிக்கடி வெளியில் எடுத்து, செல்லரித்துவிட்டதா? அல்லது நன்றாக இருக்கிறதா? என்று அந்தப் புத்தகத்தை எடுத்து விரித்து, படித்து திருப்புவதைப்போல - அது ஏற்கெனவே படித்த புத்தகமாக இருந்தாலும் - அதுபோலத்தான் என்னை நீங்கள் - நான் ஒரு திறந்த புத்தகமாக இருந்தாலும், இன்றைக்குப் பிறந்த நாள் விழா என்ற பெயரால், அந்தப் புத்தகத்தைத் திறந்துப் பார்த்திருக்கிறீர்கள்; செல்லரித்து இருக்கிறதா? இனிமேல் பயன்படுக்கக் கூடியதா? என்பதைப் பார்த்திருக்கிறீர்கள். பயன்படக் கூடியதுதான் என்று நிரூபிக்கக் கூடியது என்னு டைய கடமை - நம்பவேண்டியது உங்களுடைய உரிமை.
அந்தப் பயணம் தொடரும் -
அந்தப் பயணம் நிற்காது-
மரணம் ஒன்றைத் தவிர -
வேறு எதுவும் என்னைத் தடுக்காது -
அடக்குமுறைகளோ -
அல்லது வேறு சூழ்நிலைகளோ -
அல்லது நோய்களோ மற்றவைகளோ தடுக்காது
ஆரியம் வீழ்த்தப்படவேண்டும் -
திராவிடம் வெல்லவேண்டும்!
திராவிடம் என்பது சமத்துவம்
திராவிடம் என்பது பிறப்புரிமை
திராவிடம் என்பது 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சொல்வது
திராவிடம் என்பது பெண்ணடிமை ஒழிப்பது
திராவிடம் என்பது மனிதநேயம்
திராவிடம் என்பது அனைவருக்கும் அனைத்தும் என்பது!
ஒன்றைச் சொல்லி என்னுரையை முடிக்கின்றேன்.
நீங்கள் கிழித்ததையெல்லாம்
நாங்கள் தைத்துக் கொண்டிருக்கிறோம்!
திராவிட இயக்கங்கள் என்ன செய்து கிழித்துவிட்டது என்று சொல்லுகிறார்கள் என்று நண்பர்கள் இங்கே உரையாற்றும்பொழுது சொன்னார்கள்,
அவர்களுக்கு ஒரே ஒரு பதிலை சொல்லுங்கள், எல்லோரிடத்திலும்! ''நாங்கள் கிழிக்கவில்லை, ஆம் உண்மைதான். நாங்கள் என்ன செய்து கிழித்துவிட்டோம் என்று கேட்கிறீர்கள்; நாங்கள் கிழிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், நீங்கள் கிழித்ததையெல்லாம், ஜாதிகளையெல்லாம் மனதளவில் பிரித்து கிழித்துக் கொண்டிருக்கின்றீர்களே, அந்த மக்களையெல்லாம் ஒன்றாக்கித் தைத்துக் கொண்டிருக்கின்றோம்.
எனவே, நாங்கள் தைப்பவர்களே தவிர, கிழிப்பவர் கள் அல்ல. ஆகவேதான், தைக்கின்ற பணி மிக முக்கியமானது. எனவேதான், உங்கள் உள்ளத்திலே தைக்கும் வண்ணம் எங்கள் கருத்துகளை நாங்கள் பதிய வைப்போம்'' என்று சொல்லுங்கள்!
பெரியார் இணைக்கின்றார் - திராவிடம் இணைக்கும் - திராவிடம் வெல்லும்!
நாம் மக்களைப் பிரிப்பவர்கள் அல்ல -
மதங்கள் பிரிக்கின்றன -
கடவுள்கள் பிரிக்கின்றன -
கட்சிகள் பிரிக்கின்றன -
நாடுகள் பிரிக்கின்றன -
மொழிகள் பிரிக்கின்றன -
பெரியார் இணைக்கின்றார் -
திராவிடம் இணைக்கும் -
திராவிடம் வெல்லும் -
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment