பிற இதழிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 5, 2020

பிற இதழிலிருந்து...

சமூக நீதிக்குத் துரோகம் இழைப்பதே பா.ஜ.க. அரசின் ஒரே நீதி, நியதி என்பதை நித்தமும் அவர்கள் நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம், பட்டியலின மாணவர்களுக்குச் செய்துள்ள துரோகம்!


'எக்னாமிக் டைம்ஸ்' நாளிதழ் சில நாட்களுக்கு முன்னால் இது தொடர்பாக விரிவான செய்தியை வெளியிட்டு இருந்தது. “11 மற்றும் 12ஆம் வகுப்புகளை நிறைவு செய்வதற்காகப் பட்டியலின மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்த உதவித் தொகையை இந்தியா முழுவதும் 14 மாநிலங்களைச் சேர்ந்த 60 லட்சம் மாணவர்கள் பெற்று வந்தார்கள். இது தொடர்பாக மத்திய அமைச்சரவை பரிசீலனை செய்தது. நிதிப் பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி அதனை நிறுத்திவிட முடிவு செய்துள்ளார்கள். இந்தத் தொகையை 2017ஆம் ஆண்டு முதல் படிப்படியாக குறைத் துக் கொண்டே வந்து இப்போது முழுமையாக நிறுத்திவிட்டார்கள்” என்று சொல்லி இருக்கிறது 'எக்னாமிக் டைம்ஸ்'. இதைவிட பட்டியலின மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கும் காரியம் இருக்க முடியாது!


சமூக நீதியின் மீது நடத்தப்பட்ட மாபெரும் தாக்குதல் இது. காலம் காலமாக உரிமையும், வாய்ப்பும் மறுக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசுதான் கை கொடுத்து கை தூக்கி விட வேண்டும். ஆனால் நீட்டிய கையை தட்டி விடுகிறது பா.ஜ.க. அரசு. அதுதான் இதன் மூலம் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது!


60 லட்சம் மாணவர்களின் கல்விக் கண்ணை பறிக்கிறார்கள் என்றால் அதற்கு உண்மையான காரணம், நிதி இல்லாமை அல்ல. நீதி இல்லாமைதான் உண்மையான காரணம். மனதில் முழுக்க அநீதி நிரம்பி வழிவதால், நிதியைக் காரணமாகக் காட்டி அநீதி இழைக்கிறார்கள்.


இந்த நாட்டில் ரூ.3000 கோடிக்கு படேலுக்கு சிலை வைக்கப்படு கிறது. பல்லாயிரம் கோடிக்கு புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப் போகிறார்கள். அதற்காக நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். பல்லாயிரம் கோடிக்கு தனி விமானம் வாங்குகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய பல்லாயிரம் கோடி கடனை ரத்து செய்கிறார்கள். பல்லாயிரம் கோடிக்கு அரசாங்க விளம்பரங்கள் கொடுக்கிறார்கள். ஆனால் பட்டியலின மாணவர்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் கொடுக்க நிதி இல்லை என்கிறார்கள். இதனை நம்ப முடியுமா? நம்புவது மாதிரியா இருக்கிறது இது?


இந்த அரசு யாருக்காக இருக்கிறது? மக்களுக்காகத் தானே? மக்களுக் காக இல்லாமல் எதற்காக இந்த அரசு இருக்க வேண்டும்?


சமூக நீதி என்பது தனிப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் கொள்கை அல்ல. அது இந்திய அரசியலமைப்புச் சட்டம் அங்கீ கரித்த சட்ட ரீதியான சமூக உரிமை. அந்த உரிமையைச் சிதைப்ப தற்கு மத்திய பா.ஜ.க. அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? பெரும் பான்மை பெற்றுவிட்ட காரணத்துக்காக எதையும் மாற்றும் உரிமை ஆட்சியாளர்களுக்கு வந்துவிடுமா? அல்லது தரப்பட்டுவிடுகிறதா?


இரண்டு ஆண்டு காலமாகப் பேசிப் பேசி உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்டது எதற்காக ? சமூக நீதிக்காக ! யாரால்? தந்தை பெரியாரால், பேரறிஞர் அண்ணாவால்! தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தால்! திராவிட இயக்கத்தால்!


அதேபோல், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மண்டல் ஆணையம் வழங்கிய உரிமையை கொடுக்க வைத்தது யார்? முதல்வர் கலைஞர் கொடுத்த அழுத்தத்தால்! திராவிடர் கழகம் நடத்திய போராட்டங் களால்! இத்தகைய சமூகநீதி வரலாற்றைத் தீர்மானிக்கும் களமாக தமிழகம் இருந்துள்ளது. திராவிட இயக்கம் இருந்துள்ளது.


இந்த நாட்டில் 97 சதவிகித மக்களான பட்டியலின, பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக நித்தமும் போராடும் சூழல்தான் இன்னமும் இருக்கிறது. இதற்கான அரசியல் முயற்சிகளை எடுக்கும்போது, மத்திய அரசை இந்த மதவாத சக்திகள் மிரட்டுவதும் தொடர்ந்து வருகிறது. மண்டல் ஆணையப் பரிந்துரைகளை அமல்படுத்த வி.பி.சிங் முயற்சித்த போது அவரது ஆட்சியைக் கவிழ்த்தது பா.ஜ.க. அத்தகைய பா.ஜ.க. தான் இன்று ஆட்சிக்கு வந்ததும் சமூக நீதியைக் குழி தோண்டி புதைக்கிறது.


பாபா சாகிப் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது அறிவித்தவர் வி.பி.சிங். அவரது படம் நாடாளுமன்றத்தில் இடம் பெறச் செய்தவர். மண்டல் குழு பரிந்துரையை நிறைவேற்றியதால் தனது ஆட்சி கவிழும் என்ற நிலையிலும் உறுதியாய் இருந்தவர். “ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த முறையை எதிர்த்துப் போராடி வருகி றோம் என்பது எமக்குத் தெரியும். அவ்வாறு செய்யும் வேளையில், நாங்கள் சிக்கலுக்கும், சிரமத்திற்கும் ஆளாவோம் என்பதிலும் சந்தேகமில்லை; ஆனால் ஆட்சியில் இருந்தாலும், இல்லையென் றாலும் அதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என சங்க நாதம் செய்தவர். இந்திய அரசியலை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான களமாக மாற்றியவர். ஆனால் இன்றைய பிரதமர் சமூக நீதியை பலியிட்டு வருகிறார்.


சமூக ரீதியாக ஏதாவது சலுகை கேட்டால் திறமை போய்விடும், தகுதி போய்விடும் என்று கூச்சல் போட்டவர்கள், உயர் ஜாதியினரில் பின் தங்கிய ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு வழங்க முயற்சித்த போது எந்த யோசனையும் இல்லாமல் ஏற்றுக் கொண்டதையும் நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.


மருத்துவத்துறையில் அகில இந்திய தொகுப்பில் பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு கொடுக்கவேண்டிய 11,000இடங்களை கடந்த 10 ஆண்டு களுக்கு மேலாக கொடுக்காமல் ஏமாற்றியிருக் கிறது பா.ஜ.க. அரசு. இதுதான் இவர்களது சமூக நீதி!


இப்படி ஒவ்வொன்றுக்காகவும் தனித்தனியாக போராடுவதை விட முழுமையான சமூக நீதிக் களம் உருவாக்கப்பட வேண்டும்!


- நன்றி: 'முரசொலி' தலையங்கம்,


4.12.2020


No comments:

Post a Comment