ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் - பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் எழுச்சியுரை
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.
மத்திய அரசின் பொதிகைத் தொலைக்காட்சியில் நாள்தோறும் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்புவது என்பது கண்டிக்கத்தக்கது.
மக்கள் தொகையில் 00.1 சதவிகிதம் மக்கள் கூடப் பேசாத செத்துச் சுண்ணாம்பாகிப் போன சமஸ்கிருதத்தைத் திணிப்பது ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டமாகும்.
ஆர்.எஸ்.எஸ். குருநாதரான கோல்வால்கர், ஆர்.எஸ்.எஸின் வேதநூல் என்று கருதப்படுகிற ‘பஞ்ச் ஆஃப் தாட்ஸ்' (தமிழில் ‘ஞானகங்கை') எனும் நூலில் இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு சமஸ்கிருதமே என்று கூறியுள்ளார்.
இப்பொழுது மத்தியில் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காரணத்தால், ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை செயல்படுத்துகிறார்கள்.
130 கோடி மக்களின் வரிப் பணத்தை செத்த மொழிக்கு உயிரூட்ட செலவழிப்பது சரியானதுதானா?
புதிய தேசிய கல்வி என்ற பெயரில் ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்பு ஒரு பக்கத்தில் நடந்துகொண்டுள்ளது.
இந்தியா முழுவதும் 20-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களில் சமஸ்கிருத் துறை உருவாக்கப்பட்டு, 643 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், செம்மொழி தமிழ்மொழியின் மத்திய அரசு நிறுவனம் வெறுத்து ஒதுக்கப்படுகிறது. ஒரு பல்கலைக் கழகத்தின் ஒரு துறையாக சேர்க்கப்பட்டு, அதன் முக்கியத்துவம், தனித்தன்மை ஒழிக்கப்படுகிறது.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பது ஆர்.எஸ்.எஸின் கொள்கை, கோட்பாடு. இதன்மூலம் இந்தி யாவை ஹிந்து நாடாக ஆக்கும் கொள்கை ஆர்.எஸ்.எஸின் கொள்கையாகும்.
இது பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்பாகும் - அவர்கள் உருவாக்க விரும்பும் ஹிந்து ராஜ்ஜியத்தின் முன்னோட்ட மாகும்.
தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் இதனை ஒருக்காலும் அனுமதிக்காது. கடந்த காலத்திலும் ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்பு முறியடிக்கப்பட்டுள்ளது. இப்பொழுதும் முறியடிப் போம்!
சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பை உடனடியாக மத்திய அரசு நிறுத்தவேண்டும் என்று உரையாற்றினார்.
கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்
அரசு பணத்தில் செத்த மொழியாகிய சமஸ்கிருதத்தை அரசு தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்புவது கண்டிக்கத்தக்கது - உடனடியாக அதனை மத்திய அரசு கைவிடவேண்டும். 24 ஆயிரம் பேருக்குமேல் பேசப்படாத ஒரு மொழியை, பெரும்பாலான மக்கள்மீது திணிக்கலாமா?
இந்த 24 ஆயிரம் பேர் என்பதுகூட பஜனைகளில்தான் பயன்படுத்தப்படுகிறது, புழக்கத்தில் கிடையாது. தங்கள் வீடுகளில் பேசுவது கிடையாது - வெறும் பஜனை மொழியைத் திணிப்பது வேடிக்கையானது.
அதேநேரத்தில், செம்மொழி தமிழுக்குரிய இடமும், நிதியும் ஒதுக்கப்படாமல், ஒன்றுமே இல்லாத ஒன்றாக முடக்கப்படுவதை தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது - திராவிடர் கழகம் அனுமதிக்காது!
இது ஒரு தொடக்கம்தான், மத்திய அரசு சமஸ்கிருத ஒளிபரப்பை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றார்.
No comments:
Post a Comment