இஸ்லாமியர்கள் அல்லாத இளம் பெண்களை இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யும் நோக்கோடு,சிலர் போலியாக காதல் செய்து திருமணம் செய்துகொள்வதாக குற்றஞ்சாட்டப்படும் செயலே ‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரில் இந்தியாவில் சிலரால் பரப்பப்படுகின்றது.
‘லவ் ஜிஹாத்’ - இப்படி ஒரு பெயரை பொதுவில் கொண்டுவந்ததே சாமியார் ஆதித்யநாத்தான். 2013ஆம் ஆண்டு முசாபர் நகர் கலவரம் மற்றும் அதற்கு முன்பு கோரக்பூர் வன்முறை இரண்டிலுமே யோகி ஆதித்யநாத் இந்த வார்த்தையை பயன்படுத்தினார், இவருக்கு முன்பாகவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 2007-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் லவ்ஜிகாத் சதி என்ற பெயரில் சில இஸ்லாமிய இளைஞர்களை அடித்துத் துன்புறுத்தினர்.
சாமியார் யோகி ஆதித்யநாத்தின் யுவா வாகினி என்ற அமைப்பு உத்தரப்பிரதேச மாநிலத்தில், இந்து மதப் பெண்கள் இஸ்லாமியர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று 2013-ஆம் ஆண்டில் எச்சரிக்கை செய்தது.
2014-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு லவ்ஜிகாத் என்ற சொல் பிரபலமானது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்துப் பெண்களை திருமணம் செய்துகொள்வதாக இஸ்லாமிய இளைஞர்கள் குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் கேரளாவில் 89 திருமணங்கள் விசாரணையில் உள்ளன. 11 வழக்குகளைத்தவிர மற்றவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால் அந்த 11 வழக்குகளை 2015-ஆம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது தேசியப் புலனாய்வு முகமை. `லவ் ஜிஹாத்’ குறித்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட இந்த 11 வழக்குகளின் விசாரணை, உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றம் வரை சென்று `ஹாதியா’ என்ற பெண்ணால் வென்றெடுக்கப்பட்ட பிரபல வழக்கை அடிப்படையாகக் கொண்டு விசாரிக்கப்பட்டன.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த அகிலா அசோகன் என்ற 24 வயதான மருத்துவ மாணவி, 2016 ஜனவரியில் தனது வீட்டை விட்டு வெளியேறினார். `தெர்பியதுல் இஸ்லாம் சபா’ என்ற இஸ்லாமியப் பாடசாலையில் சேர்ந்து இஸ்லாம் குறித்தான ஒரு பாடத்தைப் பயின்று வந்தார். மேலும், இஸ்லாமியப் படிப்பகம் மற்றும் அமைப்பு ஒன்றில் தஞ்சமடைந்தார். இஸ்லாமிய அமைப்பான பி.எஃப்.அய்-யின் மகளிரணி தேசியச் செயலாளரான ஏ.எஸ்.சைனபா வீட்டில் தங்கினார். இந்தக் காலகட்டத்தில்தான் அகிலா தனது பெயரை `ஹாதியா’ என்று மாற்றிக்கொண்டார். இந்நிலையில் தன்னுடைய மகளைக் காணவில்லை என்று அசோகன் கேரள உயர்நீதிமன்றத்தில் `ஹேபியஸ் கார்பஸ்’ வழக்கொன்று தொடுத்திருந்தார். குறிப்பிட்ட இஸ்லாமிய அமைப்புதான் தன் மகள் அகிலாவைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய வைத்து `ஹாதியா’வாக மாற்றியதாகக் குற்றஞ் சாட்டப்பட்டது. விசாரணையில் ஹாதியா தனது விருப்பத்தின் பேரிலேயே சைனபாவுடன் இருக்கிறார் என்று தெரியவந்ததால் அசோகன் கொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
பின்னர், ஆகஸ்ட் 2016ஆம் ஆண்டு, தன் மகளை இஸ்லாமியர் ஒருவருக்குக் கட்டிவைத்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க உள்ளார்கள் என்று குற்றம் சாட்டி, தனது இரண்டாவது மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் ஹாதியாவின் தந்தை அசோகன்; இதனடிப்படையில் ஹாதியா இந்தியாவைவிட்டு வெளியேறாமல் இருப்பதைக் கண்காணிக்க காவல்துறைக்கு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது உயர்நீதிமன்றம். மேலும், அவரை கொச்சியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்குமாறும் உத்தரவிட்டது. அடுத்த செப்டம்பர் மாதமே சைனபாவுடன் தங்க ஹாதியாவுக்கு அனுமதியளித்தது நீதிமன்றம். டிசம்பர் 19, 2016 அன்று ஹாதியா, ஷஃபின் ஜஹான் என்பவரை இஸ்லாமிய முறையில் திருமணம் செய்துகொண்டார். இந்த ஷஃபின் ஜஹான் என்பவர் பி.எஃப்.அய்.யின் அரசியல் பிரிவான எஸ்.டி.பி.அய் கட்சியைச் சேர்ந்தவர். அவர் மீது ஏற்கெனவே 4 குற்றவியல் வழக்கு இருந்தது. இதனையடுத்து அசோகன் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், கடந்த ஆண்டு மே 2017 அன்று ஹாதியா - ஷஃபின் திருமணத்தை ரத்து செய்து, வைக்கம் பகுதியில் இருக்கும் பெற்றோரோடு ஹாதியாவை அனுப்பிவைத்தது கேரள உயர்நீதிமன்றம்.
ஹாதியாவுக்குக் காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஹாதியாவின் தந்தை அசோகனோ, வீட்டை விட்டு வெளியே அனுப்பவோ பிறரைச் சந்திக்கவோ ஹாதியாவை அனுமதிக்கவில்லை. கிட்டத்தட்ட வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது போல ஹாதியாவை முடக்கி வைத்திருந்தனர். இதனிடையில் அசோகனின் தூண்டுதலின்பேரில் யோகா மய்யம் ஒன்று ஹாதியாவைக் கூட்டிச்சென்று மீண்டும் இந்துவாக மாற்ற முயன்றது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஷஃபின் ஜஹான். பின்னர் மார்ச் - 08,2018 அன்று “ஹாதியாவின் திருமணம் செல்லும். 24 வயதான பெண் ஒருவர் தனது விருப்பத்திற்கேற்ப யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம். விரும்பிய மதத்தைப் பின்பற்றிக் கொள்ளலாம்‘ என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், பெயர் வெளியிட விரும்பாத தேசியப் புலனாய்வு முகமையின் மூத்த அதிகாரி ஒருவர், ``விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 11 மதக்கலப்பு வழக்குகளில் கட்டாயப்படுத்தி அவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர் என்பதற்கான குற்றம் சாட்டும் ஆதாரங்கள் எதுவும் இல்லை. சட்டப்படி ஆண் பெண் யார் வேண்டுமானாலும் எந்த மதத்தையும் பின்பற்றலாம்.” எனக் கூறியிருந்தார்.
இதுவரை இவர்கள் தொடர்ந்த லவ் ஜிகாத் தொடர்பான வழக்குகள் அனைத்துமே போலியானவை என்று தீர்ப்புகள் வந்த நிலையில், உத்தரப் பிரதேச அரசு சட்டத்தை இயற்றி இஸ்லாமியர்கள் இந்துக்களை திருமணம் செய்யக்கூடாது என்று மறைமுகமாக மிரட்டி வருகிறது. இதே போல் ஜாதி மாறித் திருமணம் செய்வதை நாடகக் காதல் என்று கூறிவருகின்றனர்.
உத்தரப் பிரதேச பிஜேபி அரசு சட்டவிரோத மதமாற்ற தடுப்பு அவசரச் சட்டம், 2020 என்கிற சட்டத்துக்கு, சனிக்கிழமை உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அனுமதி அளித்துள்ளனர். (21.11.2020)
இந்த அவரசச் சட்டத்தின் மூலம், கட்டாயப்படுத்தியோ, “நேர்மையற்ற” முறையிலோ, மத மாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுமாம். இதில் திருமணத்தின் பெயரால் மதமாற்றம் செய்வதும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அவசரச் சட்டத்தின்படி, திருமணத்துக்காக மட்டுமே பெண்கள் மதம் மாறினால் அது செல்லாதாம். திருமணத்துக்குப் பிறகு மத மாற்றம் செய்து கொள்ள விரும்புபவர்கள், மாவட்ட நீதிமன்றத்தில் அதற்காக விண்ணப்பிக்க வேண்டுமாம்.
இதே சட்டம் மத்தியப் பிரதேசத்திலும் கொண்டுவர முதல்வர் சிவராஜ் சவுகான் முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதமாறுதல் என்பது தனி மனிதனின் உரிமை - திருமணமும் அத்தகையதே. மத மறுப்புத் திருமணங்களைத் தடுக்கும் மதவாதம் இதற்குள் குடி கொண்டுள்ளது. சிறுபான்மைச் சமூகத்தின்மீது பிஜேபிக்கு - சங் பரிவார்களுக்கு! இருக்கும் வெறுப்பு, ஆத்திரத்தின் வெளிப்பாடே இந்தத் தடை சட்டம்.
சட்டத்திற்கு முன்பும் சமுதாயத்துக்கு முன்பும் இது நிற்காது!
No comments:
Post a Comment