இந்தியாவில் தமிழ்நாடு, மராட்டியம் போன்ற மாநிலங்கள் சமூகநீதிக்கான எடுத்துக்காட்டாக திகழ்கின்றன அதில், மராட்டிய மாநிலத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. மகாத்மா ஜோதிராவ் புலே, சாகு மகராஜ், அண்ணல் அம்பேத்கர் என மாபெரும் சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனையாளர்களை வழங்கிய பெருமை மராட்டிய மண்ணிற்கு உண்டு. அந்த மண்ணில் தற்போது முற்போக்கான ஒரு முடிவை மராட்டியத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலை மையிலான சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி அரசு எடுத்துள்ளது.
மராட்டிய மாநிலம் முழுமையும் பிராமன்வாடா (பார்ப்பனர்கள் குடியிருக்கும் பகுதி), கோலிவாடா (மீனவர் குடியிருப்பு) சர்ம்மாவாடா (தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருப்பு) மங் வாடா (சூத்திரர் குடியிருப்பு) தோர் பஸ்தி (பழங்குடியினர், நாடோடிகள் குடியிருப்பு), மல்லி கல்லி (குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே வசிக்கும் தெரு) போன்றவை ஒழிக் கப்படும் என்றும்; அவற்றுக்கு மாற்றாக சமதா நகர் (ஒற்றுமைநகர்), பீம் நகர், ஜோதி நகர், சாகு நகர், கிராந்தி நகர்(புரட்சி நகர்) என்ற புதுமைப் பெயர்கள் சூட்டப்படும் என்றும் குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே வசிக்கும்பகுதிகளில் அனைத்து ஜாதியினரும் வசிக்கும் நிலையை உருவாக்க முயற்சிகள் எடுக்கப் படும் எனவும் மராட்டிய அரசு அறிவித்துள்ளது. அம்பேத்கர் அவர்கள் பெயரில் வழங்கப் படும் விருதும், அம்பேத்கர் சமஜ் பூசண் விருது என வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது உண்மையிலே வரவேற்கப்பட வேண்டிய முற்போக்குச் சிந்தனையின் செயல்பாடாகும். தமிழ்நாட்டைப் பொருத்தவரை பெயர்களுக்குப் பின்னால் ஜாதிவால் தூக்கி எறியப்பட்டுள்ளது. ஜாதிப் பட்டத்தைப் போடுவதை வெட்கப்படத்தக்கது என்கிற நிலை சிந்தனை ரீதியாகவே உருவாக்கப்பட்டு விட்டது.
1929ஆம் ஆண்டு செங்கற்பட்டு நகரில் நடைபெற்ற திராவிடர் கழக முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டிலேயே ஒரு முக்கிய தீர்மானம் நி¬வேற்றப்பட்டது. பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போடக் கூடாது என்பதுதான் அத்தீர்மானம்.
அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அந்தத் தருணத்திலேயே சுயமரியாதை இயக்கத் தலைவர் ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் நாடார் என்பதில் நாடார் பட்டத்தையும், சிவகங்கை வழக்குரைஞர் இராமச்சந்திர சேர்வை என்பதில் சேர்வை எனும் ஜாதி வாலையும், விருதுநகர் வி.வி. ராமசாமி நாடார், என்பதில் நாடார் என்கிற ஜாதி அடையாளத்தையும் நீக்கி விட்டதாக அம்மாநாட்டு மேடையிலேயே அறிவித்தனர்.
1927ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் தன் பெயரில் ஒட்டிக் கொண்டிருந்த நாயக்கர் பட்டத்தைத் தூக்கி எறிந்தார்.
90 ஆண்டுகளுக்கு முன் இப்படியொரு முடிவும் செயல்பாடும் பெரும் புரட்சி என்பதில் அய்யமில்லை. இன்னும்கூட வட மாநிலங் களில் (ஏன் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கூட) ஜாதிப் பட்டத்திலிருந்து வெளிவர முடியாத இறுக்கம்தான்.
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராகவிருந்தபோது தெருப் பெயர்களில் இடம் பெற்ற ஜாதிப் பெயர்களை நீக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
ஜாதி ஒழிப்புத் திசையில் எத்தனை எத்தனையோ முயற்சிகள், செயல்பாடுகள் தந்தை பெரியார் கருத்தும், சுயமரியாதை இயக்கமும், திராவிட இயக்கமும் வேரூன்றி தமிழ் மண்ணில் முக்கால் நூற்றாண் டுக்கு முன்பே மேற்கொள்ளப்பட்டதன் விளைவை இன்றுநாம் பார்க்கிறோம்.
முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டதும், ஜாதி ஒழிப்பைக் கருப் பொருளாகக் கொண்டதுதான்.
தந்தை பெரியார் அறிவித்து கலைஞர் அவர்கள் நிறைவேற்றிய அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டமும், பல கட்டங்களைத் தாண்டி இன்று செயற்பாட்டுக்கு வந்திருப்பது - ஜாதி ஒழிப்புத் திசையில் ஒளிரும் வரலாற்று வைரக்கல் வெட்டாகும்.
இப்பொழுது மகாராட்டிர மாநிலத்தில் காங்கிரஸ், சிவசேனா கட்சி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஜாதி ஒழிப்பு முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கதே.
மகாராட்டிரம் என்று சொல்லுகிறபோது - சமூக சீர்திருத்தச் சிந்தனையாளர்கள் தோன்றி மறுமலர்ச்சிப் பயிர் வளர்க்கப்பட்ட மாநிலமாகும்.
மகாத்மா ஜோதிராவ் புலே, சாகு மகராஜ், அண்ணல் அம்பேத்கர் போன்றவர்கள் சமூக சீர்திருத்த உணர்வைப் பிரச்சாரம் செய்த மாநிலமாகும்.
அந்த அடிப்படையில் சமூக சீர்திருத்தம் தொடர்பான செயற் பாட்டுக்கு அங்கே வரவேற்பு கிடைத்திருப்பது பொருத்தமானதும் - சரியானதும் ஆகும்.
நியாயமாக சுதந்திர நாடு என்று சொல்லப்படும் ஒரு நாட்டில் ஜாதி என்ற ஒரு சிறு அடையாளம் கூட இல்லாமல் ஆக்கப்பட வேண்டாமா? சுதந்திர நாடு - ஜனநாயக நாடு என்பதற்கு அதுதான் நாணயமான அடையாளமாக இருக்க முடியும்.
அதனால்தான் தந்தை பெரியார் ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பகுதியைக் கொளுத்தும் போராட்டத்தை நடத்திக் காட்டினார் (26.11.1957).
தந்தை பெரியார் எழுப்பிய ஒரு கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.
"சுதந்திர நாட்டில் பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி இருக்கலாமா? அப்படி இருக்கும் நாடு சுதந்திர நாடா? நரக நாடா?" (விடுதலை 15.8.1957). என்ற கேள்வியை இன்றைக்கு 63 ஆண்டு களுக்கு முன் கேட்டாரே இதற்கு நேர்மையான பதில் எங்கே - எங்கே?
இதில் வெட்கக்கேடு என்னவென்றால் மத்தியில் இருக்கக் கூடிய பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி - இந்த நாட்டில் இந்து ராஷ்ட்ரா, ராமராஜ்ஜியம் உருவாக்குவோம் என்பதாகும். இதன் பொருள் வர்ணாசிரமத்தை, ஜாதியைச் கட்டிக் காப்பாற்றுவோம் என்பதுதானே!
எனவே ஜாதியை ஒழிக்க வேண்டுமானால், அதைப் பாதுகாக்கும் கடவுள், மதம், வேதங்கள், இதிகாசங்கள், புராணஙகள் இவற்றைக் கட்டிக் காக்கும் அரசுகளையும் ஒழிக்க வேண்டாமா?
தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று சட்டதிருத்தம் செய்யப்பட வேண்டாமா? தந்தை பெரியார் இறுதியாக நடத்திய (1973 டிசம்பர் 8,9) தமிழ் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் அதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இந்தப் பிரச்சினையை முக்கிய மாக முன்னெடுப்பார்களாக!
No comments:
Post a Comment