ஊர்நலம் ஓம்பும் ஊருணி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 1, 2020

ஊர்நலம் ஓம்பும் ஊருணி!


சீர்த்தி மக்கள் யாவரும் பெற்றிட


செல்வராய் முகிழ்த்தும் தன்னை வருத்திய


சீராளர் பெரியாரின் தேடலில் சிக்கிய


சிப்பிக்குள் முத்து நம் தலைவர் ஈகமணி!


 


தன்மான நாற்றங்காலில் தழைத்த நற்பயிரை


தனக்குப் பின்னாலும் உலகோர்க்கு உழைக்க


சுட்டி விட்டு நன்னிலத்தில் நட்டுச்சென்ற


சுயமரியாதைச் சூரியனின் நிழலான நிறைமதி!


 


பொழுதுபோக்கே கண்ணுறா பிள்ளைப் பருவத்தில்


"பெரியாரே தலைவர்" என்ற பக்குவமோ பதினாறில்,


இயக்கமும் இயக்கம் சார்ந்த இடமுமே


இனமானர் இவருடன் இயைந்த உயிர்வளி!


 


ஆசிரியர் வாய்மொழியில் அய்யாவைச் செவியேற்றல்


அறுசுவை விருந்தாக்கிய வாழ்வியல் நன்னெறி,


அடுக்குகளாய் குடிபுகுந்த உடல் நோய்கள்


படுத்தியும் பதுங்கிடா ஒதுங்கிடா கரும்புலி!


 


உற்று உற்று நாற்புறமும் கண்டும் கற்றும் வந்த


உண்மைகளை ஊட்டி  வளர்க்கும் தாய்மடி,


உருப்போட்டு பெரியாரைக் கற்க பின் நிற்க


உகந்தவராய் உலவும் உயர்வகைக் கணிப்பொறி!


 


மனுவாம் கீதையாம் மலை போலும் கதையாம்


மறுவற மறுபக்கம் பெயர்த்த அறவாழி,


புகழில் தலைசாயும் மாற்றாய் எதிர்ப்பில்


புயலின் சீற்றம் மேலெழும்பும் தீப்பொறி!


 


அறுபத்து ஒன்பதின் நலன் காப்பு தடுப்பூசி (31சி)


ஆய்ந்தறிந்த சமூக அறிவியல் சட்ட விஞ்ஞானி,


அறிக்கையாய் உரைவீச்சாய் நொடி நொடியும்


அடாது பொழியும் அறிவின் அடர் மழைத்துளி!


 


உரிமைகள் பறிப்பை ஏய்ப்பை உய்த்துணர்ந்து


ஊருக்குள் உரக்கப் பேசும் சங்கொலி,


ஊர் ஊராய்ப் பயணங்கள் பேரிடரில் ஒடுங்காமல்


உருமாறி  பரப்புரையை மீட்டெடுத்த காணொலி!


 


அடியெடுத்து வைக்கிறார் எண்பத்து எட்டில்


அடிச்சுவட்டில் அசைகிறார் அய்யாவின் வடிவில்


உண்ண உறங்க நேரமுண்டோ என்றறியாது


ஊருலகு நலமே உயிராய் ஓம்பும் ஊருணி!


 


பாரெங்கும் பெரியாரின் சீர் சேர்க்கும் காக்கும்


பண்பு கூட்டிய பல்துறைப் பகுத்தறிவுத் திறனாளி,


பாங்காய் நமக்கே நமக்கென்று வாய்த்த


பகட்டறியா தமிழர் தலைவர் ஆசிரியர் வாழி!


- ம. கவிதா, 


(திருப்பத்தூர் மாவட்டக் கழக மகளிரணித் தலைவர்)


No comments:

Post a Comment