“அறிவுவழி காணொலியில் தமிழர் தலைவரின் அறிவிப்புகள்” - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 1, 2020

“அறிவுவழி காணொலியில் தமிழர் தலைவரின் அறிவிப்புகள்”

சென்னை அண்ணா நகர் - அரும்பாக்கத்தை மய்யப்படுத்தி “அறிவுவழி காணொலி இயக்கத்தின்” சார்பில் 2020 ஆகஸ்டு 21 முதல் நாள்தோறும் காணொலி கருத்தரங்கம் சிறப்பாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன் 101ஆம் நிகழ்ச்சி நேற்று மாலை 6.30 மணிக்கு நடந்தது.


இதன் முக்கியத்துவம் என்பது - கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பங்கேற்றுச் சிறப்புரை - வாழ்த்துரை வழங்கியதுதான்.


இந்த அமைப்பின் இயக்குநர் தோழர் பழனியப்பன் - சேரலாதன் அவர்களையும், இணை இயக்குநர் அரும்பாக்கம் தோழர் சா.தாமோதரன் அவர்களையும் மனந்திறந்து பாராட்டினார் தமிழர் தலைவர். அரும்பாக்கம் வழி காட்டுவதாகவும் குறிப்பிட்டார். ஒரு நிகழ்ச்சியைத் தொடங்குவது எளிது; அதே நேரத்தில் அதனை தொடர்ந்து நடத்துவது என்பது எளிதல்ல. அந்த வகையில், நெருக்கடியான 'கரோனா' பாதிப்புக் காலக் கட்டத்தில், தந்தை பெரியாரின் கருத்து பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தியதை அனைவரும் பாராட்டத்தானே வேண்டும்.


இந்த அமைப்பு இயங்குவதற்கு உறுதுணையாக இருந்தவர்களும் பாராட்டுக்கு உரியவர்களே!


101ஆம் நிகழ்ச்சியில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டது - இந்த நிகழ்ச்சிக்குக் கூடுதல் முக்கியத்துவத்தை அளித்து விட்டது. கரோனா காலத்தில் எதிர்த்தரப்பினரை முடக்கி விட்டு, மத்தியில் உள்ள பா.ஜ.க. என்னும் ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் ஆட்சி நாளும் செய்து வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டினார்.


மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்தான் 97 விழுக்காடு ஆகும்.


எனவே இந்தப் பெரும்பான்மையினர் கையில் அதிகாரம் இருப்பதும், பெரும்பான்மையினரான இந்த வாய்பபு மறுக்கப்பட்ட வர்களின் உரிமைகளுக்கு, நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படுவதுமே உண்மையான ஜனநாயகமாகும்.


ஆனால் இந்தியாவில் தலைகீழாக இருக்கிறது. பெரும் பான்மையான மக்கள் சிறுபான்மையினரின் ஆதிக்க நுகத்தடியின் கீழ் அழுந்திடக் கிடக்கின்றனர்.


பெரும்பான்மையினர் போராடிப் போராடி பெற்ற சமூகநீதிக்கான உரிமைகள், ஆட்சி மற்றும் நீதிமன்றம் என்ற இருமுனை தாக்குதல் களால் நசுக்கப்பட்டு வருகிறது.


முற்றிலும் சட்ட விரோதமாக - ஏற்கெனவே உச்சநீதிமன்றம் வரை தள்ளுபடி செய்யப்பட்ட பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு எனும் அளவுகோலை உயர் ஜாதியினருக்காக அவசர அவசரமாக சட்டம் கொண்டு வந்து அவசர அவசரமாகச் செயல்படுத்தியும் விட்டனர்.


தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இருந்து வந்த சமூக நீதிக்கான வாய்ப்புகளை வேரறுத்து வரு கின்றனர்.


60 லட்சம் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த உதவித் தொகையை அறவே நிறுத்தி விட்டனர். அதே நேரத்தில் கங்கையைச் சுத்திகரிக்க 20 ஆயிரம் கோடி ரூபாய், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் பயன்படுத்த கோடிக்கணக்கான ரூபாயில் வெளிநாட்டு விமானங்கள் வாங்குகின்றனர் என்றால் இது யாருக்கான அரசு?


முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் அரிய முயற்சியினால் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் அங்கீகரிக்கப்பட்டது தமிழுக்குச் செம்மொழி தகுதி! அந்த செம்மொழி நிறுவனத்தை சீரழித்துவிட்டு, இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு வேலையில் கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கி விட்டனர்.


மக்கள் தொகையில் 0.01 விழுக்காடு பேசும் - செத்து சுண்ணாம்பாகி விட்ட சமஸ்கிருத மொழியில் நாள்தோறும் அரசு தொலைக் காட்சியான பொதிகையில் செய்தி வாசிப்பாம்.


இது திட்டமிட்ட பார்ப்பனப் பண்பாட்டுப் படை எடுப்பாகும். இதனை முறியடித்தாக வேண்டும்.


‘தெய்வீக தமிழக சங்கம்‘ எனும் பெயரில் பொய்யும், புனை சுருட்டும், அவதூறும் பரப்பும் துண்டு வெளியீடு ஒன்றை அச்சிட்டு சங்பரிவார்கள் வீட்டுக்கு வீடு வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.


அதற்குப் பதில் அளிக்கும் வகையிலும், உண்மையை வெளிச் சத்திற்குக் கொண்டு வரும் தன்மையிலும் திராவிடர் கழகம் ஒரு வெளியீட்டைக் கொண்டு வந்துள்ளது. நாளை மறுநாள் கிடைக்கும். அய்ந்து பேர் கொண்ட குழுவாக கழகத்தோழர்கள் வீடு வீடாகச் சென்று இந்த வெளியீடுகளைப் பரப்ப வேண்டும். கோபமே படாமல் பக்குவமாக எடுத்துக் கூற வேண்டும். எதையும் இனாமாகக் கொடுத்தால் அதற்கு மதிப்பு கிடையாது. உண்டியலையும் கையோடு எடுத்துச் சென்று எந்தத் தொகை கொடுத்தாலும் பெற்றுக் கொள்ளலாம்.


திண்ணைப் பிரச்சாரம், தெரு முனைப் பிரச்சாரம், அரங்கப் பிரச்சாரம், காணொலிப் பிரச்சாரம் என்று அடைமழை போல எங்கெங்கும் நடந்து சென்று பிரச்சாரங்கள் நடத்திட வேண்டும். இது காலத்தின் கட்டாயமாகும்.


பெரியார் கொள்கை உலகம் முழுவதும் பரவும் வகை செய்வோம் - அதன் மூலம் பெரியார் உலகமயமாக்கப்படும்.


வருவாய்க்காகப் பணிக்குச் செல்லும் காலம் - கொள்கைப் பணிக்குச் செல்லும் நேரம் என்று காலத்தைச் சரியான முறையில் பங்கிட்டு பெரியார் பணி முடிக்க மேலும் ஆயத்தமாவோம்.


அடுத்த ஆறு மாதங்களுக்கு ஒரு முக்கிய பணி இருக்கிறது. உண்மையான திராவிட இயக்க ஆட்சி தமிழ்நாட்டில் மலர வேண்டும். மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு அடிமை முறிச்சாசனம் எழுதிக் கொடுத்துவிட்ட ஆட்சியை அகற்ற வேண்டியது மிக மிக முக்கியமாகும். அதையும் கவனத்தில் வைப்போம்.


வாழ்க பெரியார், வளர்க பகுத்தறிவு. விரிந்து செயல்படுக அறிவு வழி காணொலி இயக்கம்!


கழகத் தலைவரின் இந்தக் காணொலி உரையைக் கட்டளையாகக் கருதி செயல்படுவோமாக!


No comments:

Post a Comment