மு.வீரபாண்டியன்
மாநில துணைச் செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
திராவிடர் கழகத்தின் தலைவர், பெருந்தகையாளர் தமிழ்மக்களின் தலைவர் கி.வீரமணி அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு, விடுதலை இதழ், சிறப்பிதழாக வெளி வருவது கண்டு மிகுந்த மகிழ்ச்சி, நல்வாழ்த்துகள்.
‘விடுதலை' இதழ் வெறுமனே செய்திகள் சுமந்த காகிதம் அல்ல சுயமரியாதை, சமூகநீதி, பகுத்தறிவு, உழைப்போர் உரிமை, ஜாதி, மத மறுப்பு, பிராமணிய கருத்து நிலை எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, தமிழ்மொழி பாதுகாப்பு, பெண் விடுதலை, மாநில உரிமை என தமிழ் மண்ணில் களமாடிய இதழ், எப்போதுமே நீதியின் பக்கமும், அறிவின் பக்கமும், அறிவியலின் பக்கமும் நின்று போரிடும் இதழ், இதன் செம்மார்ந்த புகழ் யாவும் புரட்சியாளர் பெரியாரைசாரும். நிகழ்காலத்தில் அது தலைவர் கி.வீரமணியைச் சாரும் பல் ஆயிரக்கணக்கான கருஞ்சட்டை தோழர்களைச்சாரும்.
ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஓய்வற்ற பணிகள் அபாரமானது, அவரது உரையாடல், அவரது எழுத்துக்கள் வாழ்வியல் சிந்தனைகள்... மாற்று கருத்து கொண் டோரை யும் மதிக்கும் பாங்கு என யாவுமே, சுயமரியாதை எனும் ஜனநாயகம் சார்ந்தது. சமூகநீதிக்கு ஒரு சிறு பாதிப்பு, என்றாலும் முதல் துடிப்பு பெரியார் திடலிலிருந்துதான் எழுகிறது.
சுயமரியாதை என்பது வெறும் சொல்ல அல்ல, சுயமரியாதையில் சமத்துவம் நோக்கிய பாதை இருக்கிறது அதில் சமூகநீதி குடி கொண்டிருக்கிறது, பகுத்தறிவும் விடுதலை வேட்கையும் குடி கொண்டுள்ளது. சுயமரியாதை பெண் விடுதலை மட்டுமல்ல பெண்ணின் ஆளுமையை கோருவது, சுயமரியாதை மனிதன், சக மனிதனை எதன் பொருட்டும் இழிவுபடுத்துவதை அடிமைப்படுத்துவதை எதிர்க்கிறது. மறுபுறம் மனிதன் தான் அடிமையாய் இருப் பதை உணராமல் இருப்பதையும் எதிர்க்கிறது.
மனிதன் சகமனிதனை பார்த்து கூறுவது, குறுகுவது குனிவது, குழைவது சுயமரியாதைக்கு எதிரானதுதான் பிறப்பினால் மனிதர் யாவும் சமம் என்பது மட்டுமல்ல பிறப்பின் பொருட்டு உயர்வு தாழ்வு கூடாது என்பதும் சுயமரியாதைத்தான். சுயமரியாதை என்பது கடவுள் மறுப்பு, மதமறுப்பு என்பது மட்டுமல்ல. அறிவால் உணர் வது, அறிவு கொண்டு உரையாடல் செய்வது, இதன்படி சுரண்டலும், பலர் வாட சிலர் குவித்து கொள்ளும் சொத்து ரிமையும் கூட சுயமரியாதைக்கு எதிரானதுதான். எனவே தமிழகத்தை பொருத்தவரை, அரசியல், சமூகம் பண்பாடு என எத்தகைய தளம் என்றாலும்
பெரியாரின் கருத்தியல் தாக்கம் இல்லாமல், எளிதில் கடந்து செல்ல முடியாது.
இன்று தமிழகத்தில் மனுநூல் குறித்த விவாதம் எழுந்து உள்ளது நூலில் அறிவிக்குபுறம்மான - மானுட நியதிக்கு புறம்பான கருத்துகள் நிரம்பி உள்ளது அதனை எடுத்துச் சொன்னால் இந்து மதத்தை பின்பற்றும் மக்களுக்கு எதி ரானவர்களாக சித்தரிக்கப்படுகிறது. டாக்டர் அம்பேத்கர் வாழ்ந்த காலத்திலும் இப்படித்தான். அன்று ஒற்றை மனித ராய் பெரியார் வாதிட்ட போது இந்து மத மகா பண்டிதர்கள் எல்லாம் வாயடைத்து நின்றர். மத அடிப்படை வாதிகளை உரையாடலுக்கு அழைத்தார் பெரியார்; இந்த பல்கலைக் கழகத்தின் முன் நிற்க எவருக்கும் துணிச்சல் இல்லை.
மார்க்ஸ் வாழ்ந்த காலத்திலும் இப்படித்தான். வானியில் குறித்த கோப்பர் நிக்கஸ் ஆய்வுகள் வெளிவந்த போது, வானியலை கடவுள் - மற்றும் மதத்தின் பிடியிலிருந்து கோபர்நிக்கஸ் விடுவித்தார் என்றார் அன்று இதே எதிர்ப்புதான்.
தந்தை பெரியாரும் அடிக்கடி டார்வினை மேற்கோள் காட்டுவது உண்டு. டார்வின் கருத்துகளும், ஆய்வுகளும் கடவுள், மதம், இவற்றின் மீதான நம்பிக்கைகளை தகர்ந்தது என்றார். இன்றுள்ள இந்திய அரசியல் சூழலில், எதிர் கருத்துகளை தேசவிரோத கருத்துகளாக ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். வாழ்வே முரண்களை கொண்டது. மனிதன் தன் கருத்துக்கு தானே முரண்டுபடுவதும், மாறுபடுவதும் உண்டு, பல கோடி மக்கள் நிரம்பிய நாட்டில் ஒரே வித கருத்துகள் சாத்தியமல்ல.
கருத்து முரண்களும், மாறுபாடுகளம் இயக்கவியல் இதனை அடக்க நினைப்பதும் ஒடுக்க நினைப்பதும் சிந்தனை சுதந்திரத்தை தடைசெய்து விடும். சிந்தனை சுதந்திரம் தடைபட்டால் ஜனநாயகத்தின் கதவுகள் அடைப்படும் புதிய கருத்துகள் பிறக்காது. மாறாக மண்டியிடுவதும், மன்றாடுவதும் இயல்பாகிவிடும், இதனைதான் இன்றைய ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். எனவேதான் இவை களை கி.வீரமணி போன்ற பகுத்தறிவு பண்பாளர்கள் எதிர்க்கிறார்கள்.
சமத்துவம்தான் பெரியாரின் நிறைவான கனவு... சமத்துவமற்ற ஜனநாயகம் தன் பொருள் இழந்துவிடும் என்றார் இந்த மேதை. இந்த மகத்தான வழியில்தான் தமிழர் தலைவர் ஆசிரியர் பயணிக்கின்றார். திராவிடர் கழகத்தை வெறுமனே கடவுள் எதிர்ப்பு இந்துமத எதிர்ப்பு என மட்டும் கருதிவிடக்கூடாது. மாநிலங்களின் உரிமையா, மத்திய அரசின் ஜனநாயக மீறலா, இந்தி திணிப்பா, சமூகநீதிக்கு இடையூறா, நீட் திணிப்பா, கவர்னர் அத்துமீறலா, பல் கலைக்கழக முறைகேடா?
அனைத்திற்கும் உரிய குரலாக தி.க.வின் குரல் கோபத்தோடு வெளிப்படுகிறது. ஆசிரியர் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் பிடித்தது புத்தகங்களை தான் படிப்பது மட்டுமல்ல, பிறருக்கு அதனை பரிந்துரைப்பது, சிறந்த கருத்துகள் என்றால் மனம் திறந்து பாராட்டுவது. ஜனசக்தி சிறிது காலம் நின்றபோது எப்படியாவது தொடர வேண்டும் என அவர் கூறிய போது, அவரது தோழமை வெளிப்பட்டது. அவர் இன்னும் ஆண்டுகள் பல உடல் நலத்தோடு வாழ வேண்டும். அவரது கனவுகளும், லட்சியங்களும் பெரியார் பொருள் கொண்டது.அதற்கு அழிவும் இல்லை, தோல்வியும் இல்லை ஏன் எனில் இப்பொழுது முன் எப்போதுமில்லாத வகையில் இளைய அறிவு சமூகம் சூல் கொள்கிறது - அது முற்றி முதிரும் பெரியாரின் கனவுகள் மெய்ப்படும், பெரியாரின் கனவுகள் சமூக அறிவியல் அல்லவா!?
No comments:
Post a Comment