ஒரு தத்துவ ஞானி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 1, 2020

ஒரு தத்துவ ஞானி


பத்மசிறீ டாக்டர்


மோகன் காமேஸ்வரன்


1982ஆம் ஆண்டில் லண்டனின் புகழ்பெற்ற ராயல் தேசிய தொண்டை, மூக்கு, காது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை புதிய மருத்துவராக எனது தொழி லைத் தொடங்கினேன். அந்த மருத்துவ மனையின் தலைவர் சர். ராபர்ட் ப்ரேசி என்ற, சர்வதேச அளவில் மிகுந்த புகழும் மரியாதையும் பெற்றிருந்த அறுவை சிகிச்சை மருத்துவர் ஆவார். பதவி - தகுதி யிலும், ஊதியத்திலும் இந்த மருத்துவ மனையின் தலைவர் பதவி - இங்கிலாந்து பிரதமர் திருமதி தாட்சரின் நிலைக்கும் மேலானதாக வைக்கப்பட்டிருந்ததால், மருத்துவமனைத் தலைவர் பதவி மிக உயர்ந்த ஒன்றாகக் கருதப்பட்டதாகும். இந்த நேரத்தில்தான் ஒரு சில விழாக்களில் கலந்துகொள்ள டாக்டர் வீரமணி அவர்கள் லண்டனுக்கு வருகை தந்தார். மருத்துவக் கல்வி பற்றி சில தகவல்களை அறிந்து கொள்ள இந்த மருத்துவமனையின் தலை வரைச் சந்திக்க வேண்டும் என்கிற தனது விருப்பத்தை அவர் தெரிவித்தார். மிகுந்த முயற்சியின் பேரில், அவர்கள் இருவரும் சந்திக்க நான் ஏற்பாடு செய்தேன். அன்று மருத்துவமனைத் தலைவருக்கு பல நிகழ்ச்சிகள் இருந்ததால், இந்தச் சந்திப்பு சரியாக 10 நிமிடங்கள் மட்டுமே நடக்கும் என்றும், அதற்கு மேல் ஒரு நிமிடம்கூட அனுமதிக்க முடியாது என்றும் மருத்துவ மனைத் தலைவரின் செயலாளர் தெளிவாக என்னை எச்சரித்திருந்தார். குறித்த நேரத் துக்கு டாக்டர் வீரமணி வந்துவிட்டார்; மருத்துவமனையின் தலைவரைச் சந்திக்க நான் அவரை அழைத்துச் சென்றேன். தலைவரின் அறையில் அவர்கள் இருவர் மட்டும் பேசத் தொடங்கினார்கள். நான் சந்திப்பு முடிவதற்காக அறைக்கு வெளியே காத்திருந்தேன். பத்து நிமிடங்கள் கழிந்தன; 20 நிமிடங்கள்  கழிந்தன;  30  நிமிடங்களுக் குப்பின் மருத்துவமனையின் தலைவர் வெளியே வருவதைக் கண்டு நான் வியப் படைந்தேன். ஆனால், டாக்டர் வீரமணி அந்த அறையினுள்ளேயே இருந்தார். நான் உட்கார்ந்திருந்த இடத்திற்கு நேரடியாக வந்த தலைவர் புன்னகையுடன், திரு.வீரமணி இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக என்னுடன் இங்கு இருப்பார் என்று கூறிவிட்டு, ஒரு மணி நேரம் கழித்து வரும்படி என்னைக் கேட்டுக்கொண்டார். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு அவர் ஒப்புக் கொண்டிருந்த நிகழ்ச்சிகளை எல்லாம் ரத்து செய்யும்படி, வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த தன் செயலாளரிடம் அவர் கூறினார்.



ஒரு மணி நேரம் கழித்து நான் வந்த போதும் அவர்கள் இருவரும் ஆழ்ந்த உரையாடலில் இருந்தனர். மேலும் 15 நிமிடங்கள் நான் காத்திருந்தேன். கடைசி யாக டாக்டர் வீரமணி வெளியே வந்தார். மருத்துவமனையின் தலைவருடனான சந்திப்பு எவ்வாறு இருந்தது என்று நான் கேட்டேன். வழக்கம்போல மிகச் சுருக்க மாகவும், குறிப்பாகவும், "இது ஒரு நல்ல சந்திப்பு. மருத்துவமனையின் தலைவரு டன் பேசிக் கொண்டிருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது" என்று பதிலளித்தார்.


மறுநாள் மருத்துவமனையின் தலைவர் சர். ப்ரேசி தன்னை வந்து சந்திக்கும்படி எனக்கு செய்தி அனுப்பியிருந்தார். அவரது அலுவலகத்திற்கு நான் சென்றபோது, சிரித்த முகத்துடன் அவர் எனக்காகக் கத வருகே நின்று கொண்டிருந்தார். அறைக் குள் என்னை அழைத்துச் சென்ற அவர், "மோகன், திரு.வீரமணியைச் சந்தித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. அவருடன் சிறிது நேரத்தைச் செலவிட எனக்கு ஒரு வாய்ப்பினை நீ அளித்ததைக் குறித்தும் மகிழ்கிறேன். அறிவாலும் மனத்தாலும் பல அரிய பண்புகளை, சிறப்புகளைக் கொண்ட மாபெரும் மனிதர் அவர் என்பதை நான் கண்டேன்" என்று என்னிடம் கூறினார்.


அதைக் கேட்ட நான் வியப்படைந்து நின்றேன். மருத்துவமனையின் தலைவர் சாதாரணமாக எவருடனும் அதிகம் நெருங்கிப் பழகாத எச்சரிக்கை உணர்வு கொண்டவர் என்று அனைவராலும் எண்ணப்பட்டவர்; அவர் மற்றவர்களைப் புகழ்ந்து பேசுவது என்பது மிகவும் அரிதான செயல். பின்னர் அவர், திரு.வீரமணி என்ன தொழில் செய்கிறார்? என்று என்னைக் கேட்டார். ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, அய்யா, அவர் ஒரு சமூக சீர்திருத்தக்காரர்; கல்வியாளர்; பகுத்தறிவாளர் என்று கூறினேன். அதற்கு அவர் என்னிடம், "அப்பட்டியலில் அவரை ஒரு தத்துவ ஞானி என்றும் நீங்கள்  சேர்த்துக் கொள்ள வேண்டும்; இங்கிலாந்தில் அவரைப் போன்று பலர் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்" என்று கூறினார். ஓர் இந்தியனாக இருந்தமைக்காக நான் பெருமைப்பட்ட நாள்களில் அந்த நாளும் ஒன்று.


No comments:

Post a Comment