கேள்வி: ஜாதி, மத சார்பற்ற ஆன்மிக அரசியலை முன்னிலைப்படுத்தி அரசியல் கட்சியை ஜனவரியில் தொடங்கப்போவதாக நடிகர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் அறிவிப்பு செய்துள்ளாரே?
- மன்னை சித்து , மன்னார்குடி - 1.
பதில்: ‘ஆன்மிக அரசியல்’ என்பதே - மாற்று அல்ல - ஏமாற்று வார்த்தை - ஏமாற்று வித்தையும்கூட.
மதமும், அரசியலும் பிரிந்தே இருக்கவேண்டும். மதமில்லா ஆன்மிகம் உண்டா?
ஆத்மா என்பதன் தமிழ் சொல்லாக்கப்பட்ட தோற்றம் ‘ஆன்மா’ - அதிலிருந்து ஆன்மிகம்!
‘ஆத்மா’ இல்லாத ஒன்று - இல்லாததை இருப்பதாக சித்தரித்துப் பிரச்சாரம் செய்யப்பட்ட ஒன்று.
அதுபோலத்தான் இது!
பற்றற்ற துறவிகளைக்கூட ‘பிச்சை’ எடுக்க வைத்தது எது? எந்த அடிப்படையில்?
பிறகு எப்படி ஆன்மிகம் அரசியலாகும்?
ஆன்மிகம் - (இல்லாத) பிற உலக ஆராய்ச்சி;
அரசியல் - இவ்வுலக, அனற்£ட வாழ்வுக்கு!
இரண்டும் பொருந்துமா? நகைமுரண், கற்பனை.
(பித்தலாட்டம் என்ற கடுமையான சொல்லைப் பயன்படுத்த விரும்பவில்லை).
கேள்வி 2. குடியிருப்புக் காலனிகளில் ஜாதிப் பெயரை நீக்குவதற்கு மகாராட்டிர அரசு முடிவு செய்துள்ளது பெரியார் கொள்கைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது அல்லவா?
- மல்லிகா, மாங்காடு.
பதில்: ஆம்! பாராட்டத்தக்கப் பணி!
ஜாதியற்ற சமூகத்தை நோக்கிய நல்ல முற்போக்கான பாராட்டத்தக்க நடவடிக்கை. பாராட்டி மகாராட்டிர முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.
கேள்வி: தங்களின் 88 ஆம் ஆண்டு அகவை நாளில், இந்தச் சமுதாயத்திற்குக் கூறும் செய்தி என்ன அய்யா?
- வெங்கட.இராசா, ம.பொடையூர்.
பதில்: அறிவித்துள்ளேனே! வருகிற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் உண்மையான திராவிடர் ஆட்சியை, அருமைத் தளபதி மு.க.ஸ்டாலின் தலை மையில் அமைப்பதற்காக கடுமையாக ஒவ்வொரு திராவிடரும் உழைக்க விடுக்கும் வேண்டுகோள் - கழகம் அந்தப் பணியை ‘மானம் பாராது முந்துறும் பணியாக’ (யாருடைய அழைப்பும் நமக்கும் தேவையில்லாது உழைப்பது) செய்யத் தவறாது!.
கேள்வி: மத்திய பிஜேபி அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி புது டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் நாட்டின் பிற பகுதிகளில் உரிய கவனம் பெற்றுள்ளதா?
- எஸ். பத்ரா, வந்தவாசி.
பதில்: நிச்சயமாக! வங்காளத்தில் மம்தா, நாடு தழுவிய அளவில் இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்களை அறிவித்துள்ளார்.
கேள்வி: மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு தரலாம் என்று ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் அவர்கள் பரிந்துரைத்த நிலையில், தமிழக அரசு அதனை 7.5 சதவீதமாகக் குறைத்தது ஏன்?
- சீதாலட்சுமி, திண்டிவனம்.
பதில்: தவறான (பயங்காளித்தனம்) ஆலோசனை கூறப்பட்டிருக்கலாம்! அதைத் திருத்தி 10 சதவிகிதமாக்க வேண்டும் - அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் விரிவாக்கவேண்டும்.
அரசு ப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் ஒரே பாடத் திட்டம்; ஒரே தேர்வு; இது சமூகநீதிக்கான ஏற்பாடு - இதில் இந்தப் பிரிவு பேதம் அர்த்தமற்றது; நியாயமற்றது.
கேள்வி: ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டுக்கு விரோதமாக செயல்பட்டாலும், தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டுக்காக உருவான கட்சிகள் சில, பிஜேபியை ஆதரிக்கின்றனவே?
- அ.சி.கிருபாகரராஜ், பெருங்களத்தூர்
பதில்: பசி வந்திடில் பத்தும் பறந்து போகும். பதவிப் பசி வந்திடில் அனைத்தும் பறந்து போகும். தன்னை விற்றுக் கொள்வதில் வெட்கமே ஏற்படாது!
கேள்வி: உயர்கல்வியில் இடஒதுக்கீடு, தகுதியானவர்களுக்கு வாய்ப்பை மறுக்கிறது என்று நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் தெரிவித்துள்ளாரே - அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கு எதிராக நீதிபதிகள் இப்படி பேசலாமா?
- அய்ன்ஸ்டீன் விஜய், சோழங்குறிச்சி
பதில்: ஜஸ்டீஸ் அவர்களுக்கு அரசமைப்புச் சட்டத் தின் கர்த்தாக்கள் எப்படி அதனை உருவாக்கினார்கள் என்ற வரலாற்றை நினைவுபடுத்தவேண்டும். பல உயர்நீதிமன்ற, உச்சநீதி மன்றத் தீர்ப்புகளை அனுப்பி வைக்கவேண்டும். தவறைத் திருத்திக் கொள்வார்!
கேள்வி: இஸ்லாமிய தலைவரான ஓவைசி தமிழ்நாட்டில் தனி அணி அமைத்துப் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளாரே- இதனால் தி.மு.க. கூட்டணிக்குப் பாதிப்பு ஏற்படுமா?
- ஆ.சே.அந்தோணிராஜ்,
செங்கோட்டை (தென்காசி)
பதில்: இஸ்லாமிய சிறுபான்மையரின் நலத்திற்கும், ஜனநாயகத்தைக் காப்பதற்கும் அத்தகைய முயற்சிகள் கேடாகவே முடியும். பா.ஜ.க. அணி வெற்றிக்கு மறைமுகமாக அது உதவியே செய்யும்! எனவே, தவிர்க்கப்படுவதே விவேகம்.
கேள்வி: மாநில நிர்வாகத்திற்கு முட்டுக்கட்டை யாகவும், முதல்வர்களுக்கு இடையூறாகவும் இருக்கிற ‘ஆளுநர்’ என்ற ஒரு பதவி தேவையா?
- நெய்வேலி க.தியாகராசன்,
கொரநாட்டுக் கருப்பூர்.
பதில்: "ஆட்டுக்குத் தாடி, நாட்டுக்குக் கவர்னர் தேவையற்றது" என்ற அறிஞர் அண்ணாவின் வாசகம்தான் பதில்! டில்லிக்கு ஏஜெண்டுகள் தேவையல்லவா? அரசியல் ரீதியான ஏற்பாடு இது!
கேள்வி: அனைத்து உயர் அதிகார அமைப்புகளும், ஆள்வோரின் கைகளுக்குள் இருக்கும்போது ‘நேர்மையில்லாத’ எதிரியை - வரும் பொதுத் தேர்தலில் வீழ்த்த வேண்டுமென்றால், மிகவும் ‘விழிப்பாய்’ இருக்க வேண்டியது அவசியமல்லவா?
- சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை
பதில்: மிகமிகக் (எத்தனை ‘மிக’ வேண்டுமானா லும்) கவனம்! கவனமாக முற்போக்கு அணியினர் செயல்படவேண்டும் - அடிமுதல் நுனிவரை.
No comments:
Post a Comment