கலைஞர் தொலைக்காட்சியின் படப்பிடிப்பு
(கலைஞர் செய்திகள் தொலைக் காட்சியில் 2.12.2020 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி "திராவிடப் போராளி" என்ற தலைப்பில் ஒளிபரப் பட்டது).
தமிழர்களின் அதிகாரத் தலைமைச் செயலகம் - சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை.
தமிழர்களின் அரசியல் தலைமைச் செயலகம் - அண்ணா அறிவாலயம்
தமிழர்களின் சமுதாயத் தலைமைச் செயலகம் - பெரியார் திடல்.
திடல், இது மற்றுமொரு இயக்கத்தின் கூடுதளம் அல்ல. திடல், பெரியார் திடல், தமிழினத்தின் கோட்பாட்டுக் கோட்டை!
திராவிட இனத்தின் தன்மான பீடம்.
மானுடத்துக்கு பூஜை செய்யும் தத் துவக் கோவில். ஆரிய நோயைக் குணப் படுத்தும் வைத்தியசாலை. இந்தியாவில் நடக்கும் அரசியலை இரண்டே பாணி யில் பிரித்துவிடலாம். பெரியார் திடல் ஏற்றுக்கொள்ளும் அரசியல் - பெரியார் திடல் ஏற்றுக்கொள்ளாத அரசியல்!
பெரியார் திடல் ஓர் அரசியலை ஏற்றுக்கொள்கிறது என்றால், சமூகநீதி ஏற்றம்கொள்கிறது என அர்த்தம்! பெரி யார் திடல், ஒரு அரசியலை அரவணைக் கிறது என்றால், சமத்துவம் அங்கே விதைக்கப்படுகிறது என அர்த்தம்! பெரியார் திடல் ஒரு அரசியலை ஆதரிக்கிறது என்றால், தன் மான அரசியல் தழைக்கப்போகிறது என்று அர்த்தம். பெரியார் திடல், கட்சி களை மாறி ஆதரித்திருக்கிறது. கொள் கைகள் மாறி ஒருநாளும் ஆதரித்த தில்லை.
பெரியார் திடல், காட்சிகளில் வந்து செல்லும் கரைவேட்டிகள் மாறியிருக்கின் றன. ஆனால், அதன் மாட்சி என்றும், மானுடத்தை மீறி ஒரு அங்குலம் கூட நகர்ந்ததில்லை.
'எரிமழை, சுடுதழல், இயற்கைக் கூத்து, எதிரிகளை நடுங்கவைக்கும் இடியொலி, இழிவுகளை ஒழித்துக் கட்டும் கொடு வாள்'
தந்தை பெரியார் மறைந்தபிறகு கரைந்துபோய்விடும் என நப்பாசையுடன் பார்க்கப்பட்ட திராவிடர்களின் தத்துவத் தலைமைச் செயலகம், 4 தசாப்தங்களாக தத்துவ வேர்களால் தழைத்தோங்கி வளர்ந்துள்ளது.
புதுடில்லியின் ஜசோலாவிலும், பாம்நோலியிலும் பெரியார் மய்யம்.
சென்னை மாநகரத்தில், பெரியார் பகுத்தறிவு ஆய்வகம், பெரியார் கணினி ஆய்வுக் கல்வியகம், பெரியார் அய்.ஏ. எஸ், அய்.பி.எஸ் பயிற்சி மய்யம், பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம், பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டு அமைப்பு, பெரியார் சுயமரி யாதை நிலையம், பெரியார் இலவச சட்ட உதவி மய்யம் என ஆய்வகம் முதல் - சட்ட உதவி மய்யம் வரை தலைமை பீடக் கட்டமைப்பு.
திருச்சியில், நாகம்மையார் குழந் தைகள் இல்லம், கைவல்யம் முதியோர் இல்லம், பெரியார் தொடக்கப்பள்ளி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல் நிலைப்பள்ளி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பெரியார் மருந்தியல் கல்லூரி, பெரியார் கணினி மய்யம் குழந்தைகள் இல்லம் முதல், மருந்தியல் கல்லூரி வரையிலான தனித்துவமிக்க கல்வி வளாகம்.
தஞ்சையில், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், நூற்றாண்டு பாலி டெக்னிக், சமூக தொடர் கல்விக் கல்லூரி, உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம், புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம், மெட்ரிகு லேசன் மேல்நிலைப்பள்ளி சில்லத்தூர் மற்றும் வெட்டிக்காடு, மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி ஜெயங்கொண்டம் - பாலிடெக்னிக் முதல் பல்கலைக்கழகம் வரை கல்விக் கட்டமைப்புகளால், சாமானியத் தமிழர்களின் கனவுகளை நிஜமாக்கிக் கொண்டிருக்கிறது - ஏழை வீட்டுக் குழந்தைகளின் கல்வி வாழ்வை கரையேற்றிக் கொண்டிருக்கிறது.
ஆசிரியர் பயிற்சி மய்யம் என்ற ஒற்றை நிறுவனமாக பெரியாரால் தொடங் கப்பட்ட கல்வி மய்யம், இன்றைக்கு பல்கலைக்கழகமும், உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கூடம் வரை அடங்கியப் பிரம்மாண்ட கட்டமைப்பாக மாறியிருக் கிறது என்றால், அந்த மாற்றங்களின் பின்னால் ஒரு மாபெரும் கனவிருக்கிறது. கனவுகளை நிறைவேற்றும் மதிநுட்பம் மிக்க திட்டமிருக்கிறது.
நூற்றாண்டு இயக்கத்தின் கனவுக ளுக்கு கட்டமைப்பு வடிவம் கொடுக்கும் உழைப்பு இருக்கிறது.
அந்த உழைப்பின் உருவம், அந்த மதிநுட்பத்தின் மானுட வடிவம், அந்த மாபெரும் கனவை எழுதித் தேர்ந்த எளிய சித்திரம் ஆசிரியர் வீரமணி.
ஆசிரியரின் இந்த பயணத்தில், பூக்கள் தூவி வரவேற்கும் பூஞ்சோலைத் தென்றல்கள் அவரை மகிழ்விக்கவில்லை.
இடம் தெரியாத இடங்களெங்கும் வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகள் அவரை வீழ்த்துவதற்காக தவமிருந்தி ருக்கின்றன.
தன்னை வீழ்த்த நினைத்த வெடி குண்டுகளுக்கும் சேர்த்தே ஜனநாயகம் பேசிய விவேகத்தின் வரலாறு தான்... ஆசிரியர் வீரமணியின் வரலாறு!
வீரமணி, உரிமைப் போர்க்களத்தின் உடைக்கமுடியாத அறிவாயுதம்.
வீரமணி, வகுப்புரிமை வரலாற்றின் தத்துவக் கேடயம்.
வீரமணி, சமூகநீதி சரித்திரத்தின் ஆய்வுக் கையேடு.
வீரமணி, ஈராயிரமாண்டு யுத்தத்தின் நூறாண்டு சாட்சி.
வீரமணி, தமிழ்வாழ்வின் சரித்தி ரத்தில் பெரியார் எழுதிய தலையங்கம்!
வீரமணி, தத்துவ வாழ்வின் போராட் டத்தில் அண்ணா உரையாடிய தலைச் சிப்பாய்!
வீரமணி, தனி வாழ்வின் போராட்டத் தில் கலைஞர் ஏற்றுக் கொண்ட தத்துவ இளவல்.
திராவிட இயக்கத்தின் வரலாற்றில் லட்சியங்களுக்காக போற்றப்பட்டவர் கள், கோட்பாடுகளுக்காக புகழப்பட்ட வர்கள், கொள்கைகளால் நிலைத்து நின்றவர்கள் ஏராளம்.
ஆனால், கோட்பாடுகளோடும், தத் துவங்களோடும் சேர்ந்து ஒரு தனிமனி தராகவும், தனிப்பெரும் சாதனையாளராக உயர்ந்ததில் தலைவர் கலைஞரே தனிப் பெரும் சாதனையாளர்!
14 வயதில் களப்போராளியாக களத் துக்கு வந்த கலைஞர், 94 வயதிலும் சமூக நீதி போராளியாக தனக்கான இடத்தை தானே உறுதிசெய்துகொண்டவர்.
திராவிட இயக்கத்தின் வரலாற்றின் கலைஞருக்கு நிகரான ஒரு தனிப்பெரும் சாதனையாளர், ஒரே தனிப்பெரும் சாதனையாளர் ஆசிரியர் வீரமணி!
10 வயதில் மேடைப்பிரச்சாரகர்!
11 வயதிலே அய்யாவையும், அண்ணா வையும் அசத்தியவர்!
12 வயதிலேயே மேடைத் தலைமை!
13 வயதில் மாநாட்டுக் கொடியேற்றம்!
14 வயதில் பெரியாரின் படத்தை திறந்துவைத்தவர்!
பதின் வயது காலத்தில் ஆசிரியர் களுக்கே பாடம் எடுத்த ஆச்சர்யம் அவர் - 14 வயதிலேயே அய்யாவுக்கும், அண்ணாவுக்கும் இடையில் தூது சென்ற அரசியல் கலாச்சாரத்தின் தத்துவ அதிச யம் அவர்!
27 வயதில் கழகத்தின் பொதுச்செய லாளர் ஆனார்!
29 வயதில் விடுதலையின் ஆசிரியர்!
ஆசிரியர் செய்தவற்றையெல்லாம், இளஞ்சூரியனின் அதிகாலை அதிசயம் என்று எளிமையாக வரையறுக்க முடி யாது!
ஆசிரியர் அடைந்த உயரங்கள் அதி சயங்கள் அல்ல - அயராத உழைப்பிற்கான அறுவடைகள்!
தளராத பிடிப்புக்கான தத்துவ பரிசுகள்!
குலைக்க முடியாத கொள்கை உறு திக்கான காலம் சூட்டிய கற்பக மாலை!
10 வயதில் மேடைப்பிரச்சாரகராக பயணத்தைத் தொடங்கிய பச்சிளம் சிறுவன், 88 வயதிலும் எதிரிகளைக் குலைநடுங்கச் செய்கிறார் என்ற நிஜத்தை நினைக்கும்போது, கலைஞரின் வரிகள் மட்டும் தான் நினைவுக்கு வருகின்றன.
‘பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை அவர் பாதையில்: படமெடுக்கும் பாம்பு கள் நெளிந்திருக்கின்றன’. ‘தென்றலைத் தீண்டியதில்லை அவர்; தீயைத் தாண்டியிருக்கிறார்’.
அவர் முன்னின்ற பகை, நேற்றோ, முன் தினமோ தோன்றியப் பகை அல்ல; ஆயிரம் ஆண்டு பகை... ஈராயிரம் ஆண்டு பகை... மூளையைச் சலவை செய்து மனித இயக்கத்தை முடக்கும் பகை... முடைநாற்ற கவுச்சியைக்கூட வாசனை என நம்ப வைக்கும் பூச்சும், பேச்சும் கொண்ட பகை... முட்டாள்களை உருவாக்குவதிலும், மூடத்தனத்தை அறிவாக்குவதிலும் முனைவர் பட்டம் வாங்கத்தக்க பகை.
அததனை பகையையும் அறிவால் மட்டுமே எதிர்கொண்டிருக்கிறார் ஆசிரி யர்.
ஆசிரியர் என்றால் மாசுக்களை களைபவர் என அர்த்தம்! எங்கள் ஆசிரியர் அசுத்த மாசுக்களை மட்டும் களைபவர் அல்ல, ஆரிய மாசுக்களை களைபவர்!
அய்யா மறைந்தபோதே அழித்து விடலாம் என்று நினைத்தவர்கள் எண் ணத்தில் மண் விழுக, அம்மாவுக்கு உறுதுணையாக இயக்கத்தைக் காத்து நின்று அந்த கரம், அய்யாவாகவும், அம்மாவாகவும், அண்ணாவாகவும், கலைஞராகவும் இருந்து இன்று பணி செய்து கொண்டிருக்கிறது.
ஆசிரியருக்கு மூப்பு என்பது, அன்றாட நிலாச்சோறுகளில் ஆயிரம் பிறை கண்டவர் என்று பெருமித மூப்பு அல்ல; அனுதின போர்க்களங்களில் பல்லாயிரம் களம் கண்டவரின் மூப்பு!
ஆசிரியரின் இளமை என்பது, சதையும் ரத்தமும் சூடாகி அடங்கும் சரீர இளமை அல்ல; உரிமையும், போராட்ட முமாக களத்தில் நிற்கும் அடங்காத நெருப்பின் இளமை!
இட ஒதுக்கீடு காக்க போராட்டம்!
இந்தித் திணிப்பை எதிர்த்து போராட் டம்!
ஈழத்தமிழர் நலனுக்காக போராட்டம்!
என்று போராட்டக்களத்தின் தேதி களை சேமித்தாலே, ஆசிரியரின் அரைப் பங்கு வாழ்நாளை அதில் கணக்கிட்டுக் கொள்ளலாம்!
மண்டல் குழு பரிந்துரைகளை நிறை வேற்றுவதற்காக மட்டும் 42 மாநாடுகள், 16 பெரும் போராட்டங்கள் என ஆசிரியர் நடத்திக்காட்டிய போராட்டங்கள் தான், வகுப்புவாத பூதங்களிடமிருந்து வகுப் புரிமை அரசியலை காப்பாற்றிக் கொடுத் தது.
ஆட்சி நிர்வாக அரசாணைகள் முதல், அரசியல்சட்ட திருத்தம் வரை அவர் கொடுத்த ஆலோசனைகள் தான், நூல் நெளியும் சூதாட்டங்களில் ஜோக்கர் களின் ராஜ்ஜியங்களை மீறி சுயமரியாதை அரசியலை சுடர் விடச் செய்தது!
அவரின் ஒரு அறிக்கை... ஆயிரம் ஆண்டு பகையின் அரசியலை அரைப் பக்கத்தில் வடித்துக் கொடுக்கும்!
அவரின் ஒரு மேடை நூறாண்டு எதிர்காலத்துக்கு திட்டங்கள் வகுக்கும்!
ஆயிரம் ஆண்டு செய்தித்தாள்களை முழுமையாக படித்ததிற்கு நிகரானது அவர் ஞானம்... நூறாண்டு களத்தில் முழுமையாக நின்றவருக்கு நிகரானது அவர் வீரம்!
முதல் அரசியல் சட்டத்திருத்தத்தை வலியுறுத்தி களத்தில் நின்றவர், இன்று 104 அரசியல் சட்டத் திருத்தங்கள் செய்யப் பட்டுவிட்ட காலத்திலும், ஆசிரியர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டுத் தான் அரசியல் நடத்துகின்றனர். அது தான், அவரின் வெற்றி!
உலகிலேயே மிக அதிக நேரம் மேடையில் பேசியவர் என்று அவரை புகழலாம்!
உலகிலேயே அதிக பிரச்சாரப் பய ணம் செய்தவர் என அவரை வர்ணிக் கலாம்!
உலகின் அதிக சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்தவர் என அவரை ஆராதிக்கலாம்!
ஆனால், இதில் எந்தப் பெருமிதமும் அவர் செவிகளை எட்டுமே தவிர... அவர் மூளையைச் சீண்டி அவருக்குள் பதிந்து போகாது!
தேவையில்லாத புகழ், தேவைப்படாத விளம்பரம் எதையும் தன்னுள் சேர்த்துக் கொள்ளாதவர் ஆசிரியர்!
அதனால்தான், 20 வயதில் என்ன எடையில் இருந்தாரோ அதே எடையில் இன்றும் இருக்கிறார்!
10 வயதில் என்ன உடையில் இருந்தோரோ, அதே நிறத்தில் இன்றும் ஜொலிக்கிறார்!
அய்யாவின் வாரிசு, அண்ணாவின் தோழன், கலைஞரின் இளவல் என காலங்களைக் கடந்து இன்று தளபதியின் தோளுக்கு துணையாக நிற்கிறார் - தமிழர்களுக்கு வாளுக்கு கணையாக நிற்கிறார்!
உலகம் முழுவதும் அதிகாரத் தொடர் புகள், இந்தியா முழுவதும் அரசியல் செல்வாக்கு, தமிழ்நாடு முழுவதும் கொள்கைக் கூட்டம்.
ஆயிரக்கணக்கான IAS, IPSகள் அவரை வணங்குகிறார்கள்... நூற்றுக் கணக்கான தலைவர்களை அவர் உரு வாக்கியிருக்கிறார். அவர் கைப்பிடித்து நடக்க இங்கு பட்டாளமே உண்டு... அவர் கையெழுத்தால் நடக்க சமூக அரசாங் கமே உண்டு.
கழக நிர்வாகத்தையே ஒரு சமூக அரசாங்கமாக நிறுவிக்காட்டியிருக்கிறது அவர் தொண்டு.
ஒரு சமூக அரசாங்கத்தை நிர்வகிக்கும் தலைவர் என்ற அதிகார தோரணை ஏதும் அவர் தோற்றத்திலும் தெரியாது - அவர் மனவோட்டத்திலும் தெரியாது!
அலைந்து அலைந்து சூரிய பழுப் பேறிய சட்டை, ஓடி ஓடி உழைத்துக் கலைந்த வேட்டி, ஆசு இரியும் புன் முறுவல், மாசு இல்லாத ஒளிக்கண்கள், எளிமையை மட்டுமே உணர்த்தும் கட் டுச்சித்து என இப்படித்தான் வாழ்கிறார் ஆசிரியர்!
10 லட்சம் ரூபாய்க்கு கோட்டு சூட் போடும் பிரதமரின் பிராதான எதிரியாக இருக்கும் இயக்கத்தின் தலைவர், வெறும் 10க்கு 4 அகலம் கொண்ட அறையில் அமர்ந்துகொண்டுதான் தன் அரசியலை நடத்துகிறார் என்பது அவரது எதிரி களுக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
ஆசிரியர் அமர்ந்திருக்கும் இருக்கை செல்வாக்கை காட்டும் இருக்கை அல்ல - செருக்கை உடைக்கும் இருக்கை.
ஆடம்பரத்தைக் காட்டும் இருக்கை அல்ல; ஆணவங்களை ஒடுக்கும் இருக்கை.
பெருமித மிடுக்கு கொண்ட இருக்கை அல்ல; பேரிடர்களை ஒழிக்கும் இருக்கை.
அந்த இருக்கையில் ஆசிரியர் மட்டுமே அமர்ந்திருக்கவில்லை. கலை ஞர் அமர்ந்திருக்கிறார், அண்ணா அமர்ந் திருக்கிறார், அய்யா அமர்ந்திருக்கிறார்!
அது இடைவெளியே விடாமல் பணிசெய்யும் இருக்கை!
அடுத்தடுத்த தலைமுறைக்கான பணிகளுக்கு ஆட்காட்டும் இருக்கை!
வெற்றிடமே காணாத வெற்றி இருக்கை! புரட்டுக்களை ஒழிக்கும், அறிவு இருக்கை!
இருட்டுக்களை விரட்டும், கறுப்பு இருக்கை!
- விவேக் கணநாதன்,
முதன்மைத் தயாரிப்பாளர்,
கலைஞர் செய்திகள்
No comments:
Post a Comment