பெரியார் பார்வையில் வீரமணி
திரு. கி. வீரமணி வெறும் ஆள் அல்ல. நம் தலைவர்போல, குருசாமி யைப் போல அவர் பேசவில்லை . சற்றுத் துணிவாய்ப் பேசிவிட்டார். திரு. வீரமணி நம்மைப் போன்றவர் அல்ல
- அவர் ஒரு வக்கீல். எவ்வளவோ நல்ல வாய்ப்பு அவரை அணுகக் காத்திருக்கிறது. அவற்றுக்குத் தடை ஏற்படலாம். என்னைப் பொறுத்தவரை அவருக்கு அப்படி ஏற்பட்டால் நமக்கு நல்லதாகிவிட்டது என்றுதான் கருதுவேன். ஏன்? நம் இயக்கத்திற்கு ஒரு முழுநேரத் தொண்டன் நமக்குக் கிடைத்தாலும் கிடைக்க லாம் என்கிற ஆசை. இப்போது அவர் தொண்டு அரை நேரம்; இனி அது முழுநேரமாகி விடலாம்.
- 30.10.1960-இல் சென்னை - திருவல்லிக்கேணி கடற்கரை சொற்பொழிவில் தந்தை பெரியார்.
ஒப்படைத்துவிட்டேன்
வீரமணி அவர்கள் எம்.ஏ, பி.எல். பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும், புத்திக் கூர்மையும் உள்ளவர். அவர் எம்.ஏ, பி.எல்., பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன் மாதம் ரூ. 300, ரூ. 400 வரும்படி வரத்தக்க அளவுக்குத் தொழில் வளர்ந்ததோடு கொஞ்ச காலத்திலேயே மாதம் ரூ. 500, ரூ. 1000 என்பதான வரும்படி வரும் நிலையில் தொழில் வளம் பெற்று வரும் நிலையைக் கண்டவர். இந்த நிலையில் அவர் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவராகவும் இருந்து வந்தவர். இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்விதப் பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார், வருகிறார், வரக்கூடும் என்பது உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும்.
அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் அது நம் முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் விடுதலை ஆசிரியராகவும் பயன்படுத்திக் கொள்ள முன்வந்து அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்து விட்டேன். விடுதலை பத்திரிகையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம்.
இனி விடுதலைக்கு உண்மையான பிரசுர கர்த்தாவாகவும், ஆசிரியராகவும் வீரமணி அவர்கள்தான் இருந்து வருவார்.
எந்த நிலையில் வீரமணி அவர்கள் இந்தப் பொறுப்பை ஏற்கிறார் என்றால் விடுதலையை நான் நிறுத்திவிடப் போவதை அறிந்த சிலர் விடுதலை பத்திரிகைக் காரியாலயத்தையும், அச்சு இயந்திரங்களையும் மாதம் 1-க்கு 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை வாடகைக்குக் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், அதை வாடகைக்குக் கொடுப்பதைவிட நிறுத்திவிடுவதே மேல் என்று நம்முடைய நண்பர்கள் எல்லோரும் நமக்கு வேண்டுகோளும், அறிவுரையும் விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இயக்க நலத்தையே குறியாகக் கொண்டு பொறுப்பேற்க முன்வந்தார். ஆகவே விடுதலை-யின் 25ஆவது ஆண்டுத் துவக் கத்தில் லட்ச ரூபாய்களை விடுதலை நடப்புக்காகச் செலவிட்டு நஷ்டமடைந்த நிலையில் ஏற்க முன்வந்த வீரமணி அவர்களது துணிவையும், தியாகத்தையும், சுயநலமற்ற தன்மையையும், கருதி விடுதலை வீரமணி அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
- தந்தை பெரியார் விடுதலையில் எழுதிய
தலையங்கப் பகுதியிலிருந்து (6.6.1964)
No comments:
Post a Comment