பி.பி.சி. தமிழுக்கு மாலன் கட்டுரையும் - மறுப்புகளும் “அதிமுக அன்று அசுத்தம் இன்று பரிசுத்தமா” - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 5, 2020

பி.பி.சி. தமிழுக்கு மாலன் கட்டுரையும் - மறுப்புகளும் “அதிமுக அன்று அசுத்தம் இன்று பரிசுத்தமா”

பி.பி.சி. தமிழுக்கு மாலன் கட்டுரையும் - மறுப்புகளும் “அதிமுக அன்று அசுத்தம் இன்று பரிசுத்தமா?”


- கவிஞர் கலி.பூங்குன்றன்


பி.பி.சி. தமிழுக்கு - மாலன் என்னும் நாராயணன் என்பவர் ஒரு கட்டுரை (23.11.2020) எழுதியுள்ளார்.


“அமித்ஷா தமிழக வருகை: அரசியலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?” எனும் தலைப்பிலான கட்டுரை அது.


பா.ஜ.க. என்ன செய்தாலும் அதனை ஆதரித்து எழுதுவது என்பதைத் திட்டமாகக் கொண்டவர்களுள் இவர் முக்கியமான வர். அந்த வகையில் இவர் விழுந்து விழுந்து முட்டுக் கொடுத்து எழுதுவதில் ஆச்சரியம் ஏதும் இல்லைதான்  - பூணூல் பாசமாயிற்றே!


மாலன் (1) : பல மாநிலங்களில் ஏற்கெனவே இருந்த ஆட்சி யில் இருந்த கட்சிகளைத் தோற்கடித்து பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்திருக்கிறது.


நமது பதில்: கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மத்திய பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் பா.ஜ.க. ஆட்சிதான் இருந் தது. அந்த இரு மாநிலங்களிலும் பா.ஜ.க. தோற்று காங்கிரஸ் வெற்றி பெறவில்லையா?


காங்கிரஸ் வெற்றி பெற்ற மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர்களை பா.ஜ.க. பக்கம் இழுத்து, அங்கு பா.ஜ.க. ஆட்சியை நிறுவியது எப்படி? ஒவ்வொரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருக்கும் பத்து கோடிரூபாய் வழங்கப்பட்டது என்பதை அந்தத் தொகையைப் பெற்றுக் கொண்டவரே  கூறவில்லையா?


கருநாடக மாநிலத்திலும் மாற்றுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க.வுக்குக் கொண்டு வந்து எடியூரப்பா தலைமையில் ஆட்சியை ஏற்படுத்தியது எப்படி?


இதுதான் பா.ஜ.க. போற்றும் ஜனநாயக நெறி முறையா? தார்மீகப் பண்புகள் - ஹிந்துத்துவாவின் சீலங்கள் பற்றி எல்லாம் வாய் கிழிய படபடவென்று பலப்பட பேசும் பா.ஜ.க. வின் அழுகிய ஆபாசப் புத்தியை இது காட்டவில்லையா?


இதுபோல காரியங்களைச் செய்வதால் அமித்ஷாவுக்கு ‘சாணக்கியர்’ என்று பெயர் என்றால், இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?


சாணக்கியன் என்றாலே சூழ்ச்சி, நயவஞ்சகம் என்று ஆகி விட்ட பிறகு அவர் பெயரை இந்தியாவின் உள்துறை அமைச்சருக்குச் சூட்டுவது - அவரைப் பெருமைப்படுத்துவதா - சிறுமைப்படுத்துவதா?


மாலன் 2: குடும்ப ஆட்சி, ஊழல், ஜாதிய அரசியல் இம்மூன்றையும் மோடி அரசு உறுதியாக எதிர்த்து வருகிறது. இந்த அடிப்படையில் பா.ஜ.க. வெற்றி பெற்று வருகிறது. அது தமிழ்நாட்டிலும் நடக்கும் என்கிறார் அமித்ஷா.


நமது பதில்: குடும்ப ஆட்சி என்பது அடுத்த குற்றச்சாட்டிலும் இடம் பெற்றிருப்பதால், அப்போது பதில் இறுக்கப்படும். இப்பொழுது ஊழலைப்பற்றி சொல்கிறார்.


ஊழல் என்பது வெறும் பணம் கை மாறல் மட்டும் தானா? அதிகார துஷ்பிரயோகம் இதில் அடங்காதா? என்ற கேள்விகளும் அடங்குகின்றன.


சரி, பொருளாதார ஊழலையே முதலில் எடுத்துக் கொள்வோம். பா.ஜ.க. ஊழலுக்கு அப்பாற்பட்டதா?


அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைப் பணம் கொடுத்து வாங்கி ஆட்சியை அமைப்பது ஊழலா - உத்தமமா?  அந்தப் பணம் எங்கிருந்து வந்தது?


பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற ‘வியாபம்‘ ஊழல் சாதாரணமானதா? ஆளுநர் மகன்கூட தற் கொலை செய்து கொள்ளவில்லையா? மர்மமான முறையில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 47 பேர். இவை எல்லாம் ஊழலுக்குச் சம்பந்தமேயில்லாத வடிகட்டிய தூய்மை ஆட்சியின் சொக்கத் தங்கமா?


கருநாடக மாநில அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் சுரங்கப் புகழ் ஊழல் கொஞ்சமா நஞ்சமா?


பணமதிப்பிழப்புக் கால கட்டத்தில் வெறும் 2000 ரூபாய்க்காக தங்களின் பிழைப்பை விட்டு, ஒரு நாள் முழுவதும் சாதாரண மக்கள் கால் கடுகடுக்க கடுக்கக் காத்துக் கொண்டு இருந்த நிலையில், இந்தப் பா.ஜ.க.வைச் சேர்ந்த இந்த ஜனார்த்தன் ரெட்டிகாரு மத்தியஅரசின் கட்டுப்பாடுகளைக் கால் தூசியாகக் கருதி தனது அருமை மகள் திருமணத்துக்கு ரூ.500 கோடியைத் தண்ணீராக செலவிட்டது. எப்படி? இவர்தானே 1999இல் சோனியா காந்தியை எதிர்த்து சுஷ்மா சுவராஜ் போட்டியிட்ட தொகுதியில், சுஷ்மாவுக்காக கோடிக் கணக்கில் ரூபாய் நோட்டுகளை தண்ணீராக ஓட விட்டவர்!


கருநாடக முதல் அமைச்சராகவிருந்த எடியூரப்பா சிறைக்குப் போனாரே எதற்காக? ஊழலுக்காகவா உத்தமமான போராட்டத்தில் ஈடுபட்டதற்காகவா?


அய்.பி.எல் சூதாட்டம் புகழ் லலித் மோடியின் பிரச்சினை என்ன? ரூ.2000. கோடிக்கு மேல் ஊழல் செய்த அந்த ஆசாமி இந்தியாவிலிருந்து தப்பி ஓடி இங்கிலாந்தில் சொகுசு வாழ்க்கையில் சொக்கிக் கிடக்கிறாரே! - இதற்கெல்லாம் துறை புரிந்தவர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் அல்லவா? சுஷ்மா சுவராஜ் குடும்பத்துக்கும் தமக்கும் உள்ள தொடர்பை லலித் மோடி விரிவாக ‘இண்டியா டுடேக்கு’ பேட்டியளிக்கவில்லையா?


பா.ஜ..க. ஊழல் புராணம் ஒருபுறம் இருக்கட்டும். ஊழலை ஒழிப்பதற்காகக் களம் இறங்கும் பா.ஜ.க. தமிழ்நாட்டில் யாருடன் கூட்டு?


2016 சட்டப் பேரவைத் தேர்தலில் திருச்சி பொதுக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த ஆட்சி ஜெயலலிதா ஆட்சி என்று சொன்னது என்னாயிற்று? மக்கள் மறதி மன்னர்கள் என்ற நினைப்பா? பா.ஜ.க. கைபட்டதும் கறை எல்லாம் கரைந்து போச்சா?


2016இல் அதிமுக ஆட்சி ஊழல் நிறைந்தது. 2019இல் அந்த ஊழல் மிக்க அதிமுகவுடன் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி - இதுதான் ஊழலை ஒழிக்கும் ஒண்ணாம் நம்பர் உன்னத செயல்பாடா?


உ.பி. மாநில முதல் அமைச்சர் ஆன நிலையில் தன்மீது இருந்த நூற்றுக்கணக்கான வழக்குகளை (கொலைக் குற்றம் உட்பட) தனக்குத்தானே ரத்து செய்து கொண்டாரே ஆதித்யநாத் இது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா? நிதி ஊழலைவிட அதிகாரத்தைப் பயன்படுத்தும் அதி பயங்கர ஊழல் இல்லையா? இவர்மீது இருந்த குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு என்ன பரிகாரம்?


இதில் ஒரு வேடிக்கையான “பக்கா நழுவல்” கவனிக்கத் தக்கது. மற்ற குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் தாமே சொல்லுவது போல எழுதும் திருவாளர் மாலன் இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி எழுதும் போது மட்டும், என்கிறார் அமித்ஷா என்று நழுவுவது ஏன்? அப்படியென்றால் அவருக்கே அமித்ஷாமீது நெருடல் இருக்கிறது என்றுதானே அர்த்தம்?


மாலன் 3: குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் என்பது வேறு, குடும்ப அரசியல் என்பது வேறு, இரண்டும் ஒன்றல்ல.


நமது பதில்: தி.மு.க. வோடு பா.ஜ.க. கூட்டணி வைத்திருந்தால் இதைப்பற்றி எல்லாம் பேசுவார்களா? தி.மு.க. என்பது ஒரு ஜனநாயகக் கட்சி; அதில் யாரையும் யாரும் திணிக்க முடியாது. கட்சியில் யார் பொறுப்புக்கு வருவது என்பதை அக்கட்சியே தீர்மானிக்கும், தூக்கி விடுகிற பூனை எலி பிடிக்காது என்பது ஒரு பழமொழி.


தகுதி உள்ளது தான் நிலைக்கும்! (Survival of the Fittest)


இடஒதுக்கீட்டில் பார்ப்பனர்கள் தகுதி - திறமை பேசுவது போன்றது தான் இது - இடஒதுக்கீட்டால் இடம் பெறுவோர் எந்த மாணவரும் தேர்வில் வெற்றி பெறாமல் பட்டம் பெற முடியாது. அது போன்றது தான் இது.


குடும்பம் - வாரிசு இரண்டுக்கும் வேறுபாடு உண்டு என்கிறார் மாலன். பா.ஜ.க.வில் அமைச்சர்களுடைய மகன்கள் எல்லாம் எம்.பி.க்களாக இல்லையா? என்று கேட்டு அதற்கான பட்டியலையும் ஆதாரப் பூர்வமாக வெளியிட்டால், அதற்கு இவர்கள் பதில் என்ன தெரியுமா? அது வாரிசு அரசியல் என்கிறார். வாரிசு அரசியல் எப்படி நியாயம் என்று விளக்கம் அளிக்கவில்லை.


ஒருக்கால் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் அடுத்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருந்தால் இவர்கள் பேனாவை எப்படி ஓட்டுவார்கள் தெரியுமா?


குடும்ப அரசியலை ஏற்றுக் கொள்ளலாம் - வாரிசு அரசியலை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று புரட்டிப் போடுவார்கள்.


அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் சூரப்பாவின் மகள் அண்ணா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக நேரடியாக நியமிக்கப்பட்டது எப்படியென்றால், அதற்கு வக்காலத்து வாங்கி எழுதுகிறது ‘துக்ளக்‘.


ஆர்.எஸ்.எசுக்கு தலைவராக வாழையடி வாழையாக சித்பவன் பார்ப்பனர்கள் மட்டுமே தலைவராக வருவது எப்படி? (ஒரே ஒரு ராஜேந்திர சிங் மட்டுமே விதி விலக்கு) என்பதற்கு இதுவரை விளக்கம் சொன்னதுண்டா?


நேருவின் குடும்ப அரசியல்பற்றி ‘சிலாகிக்கும்‘ இவர்கள் அதே நேரு குடும்பத்தைச் சேர்ந்த மேனகா காந்திக் கும்,அவரது மகனுக்கும் பதவிகள் அளித்தது எப்படி?


குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் சம் பந்தப்பட்ட கட்சியின் கொள்கையில் உறுதியாக இருக்கிறார் களா என்று பார்க்கப்பட வேண்டும் - கட்சிக்காக உழைக் கிறார்களா, நாட்டுக்காகப் பாடுபடுகிறார்களா? என்று பார்க் கப்பட வேண்டும்.


அத்தகையவர்கள் சார்ந்திருக்கும் திமுகவின் கொள்கை களும் சித்தாந்தங்களும், திட்டங்களும் தங்கள் இனத்துக்கு எதிராக இருந்தால் பார்ப்பனர்கள் என்ன செய்வார்கள்? அந்தக் கட்சியின் கொள்கைகள், சித்தாந்தங்களை நேருக்கு நேர் விமர்சிக்க முடியாத நிலையில் (விமர்சிக்க ஆரம்பித்தால் ஆரியத்தின் அண்ட சராசரங்களும் அம்பலத்துக்கு வந்து விடுமே!) என்ன செய்வார்கள்?


குறுக்கு வெட்டாக, அவர் யார் தெரியுமா? கருணாநிதியின் மகன். இவர் யார் தெரியுமா ஸ்டாலின் மகன்;  ஏன் கட்சியில் வேறு யாரும் இல்லையா? என்று திசை திருப்பும் திரிநூல் வேலையில் பூணூலை முறுக்கிக் கொண்டு எழுவார்கள்.


கட்சிக்கு யார் எந்தப் பொறுப்பில் வருவது என்பதை சம்பந்தப்பட்ட கட்சிக்காரர்கள் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. இதில் மூன்றாவது கட்சிக்காரரான பா.ஜ.க.வின் மூக்கு நுழைவுக்கு இடமில்லை.


அரசியலில் கருணாநிதியோடு பார்ப்பன எதிர்ப்பு - மதவாத எதிர்ப்பு - பகுத்தறிவு சமூகநீதிக் குரல் போய் 'தொலையும்' என்று பார்த்தால் உதயநிதி வரை தொடர்கிறதே - இந்த இளைஞர் பெரியார் கொள்கையில் உறுதியாக தெளிவாக தீவிரமாக  இருப்பார் போல தோன்றுகிறதே - இது குடும்பப்  பாரம்பரியம் போலும் என்ற நினைப்பில், நிலையில் இவர்கள் திகில்  அடைகிறார்கள். தீயில்  குதித்ததுபோல துடியாய்த் துடிக்கிறார்கள். குடும்ப அரசியல் என்ற அவர்களின் குற்றச்சாட்டை இந்தப் பின்னணியில் தான் பார்க்க வேண்டும்; பார்ப்பனர்கள் ‘தொலைநோக்கோடு பார்க்கக் கூடிய ‘விவரமானவர்கள்’ என்பது நினைவில் இருக்கட்டும்! இதே உதயநிதி கையில் கயிறு, நெற்றியில் நீறு உடையவராக இருந்திருந்தால் இவர்கள் பார்வையே வேறுவிதமாக இருந்திருக்கும் என்பதை மனதில் வையுங்கள்.


மாலன் 4: மதச் சார்பற்ற வாக்குகள் (அப்படி ஒன்று இருந்தால்) அதிமுகவிற்குக் கிடைக்காமல் போகலாம். சிறுபான்மையினர் வாக்குகள் எப்போதுமே பா.ஜ.க.விற்குக் கிடைக்க வாய்ப்பில்லை. பா.ஜ.க.வின் வியூகங்கள் சிறுபான் மையினர் வாக்குகள் திமுகவிற்கு மொத்தமாக கிடைத்து விடாமல் பார்த்துக் கொள்வதாக இருக்கும்.


நமது பதில்: சிறுபான்மையினர் வாக்குகள் பா.ஜ.க.வுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை அறிவு நாணயமாக ஒப்புக் கொண்டதற்காகப் பாராட்டக் கூடச் செய்யலாம்.


ஏன் கிடைக்க வாய்ப்பு இல்லை? சிறுபான்மையினர் பா.ஜ.க.வை வெறுப்பது ஏன்? சிறுபான்மையினர் இந்நாட்டு மக்கள் இல்லையா? ஆட்சியில் இருக்கக் கூடியவர்களுக்கு அனைவரையும் சமமாகப் பார்க்கக் கூடிய மனநிலை கிடையாது. என்றால்  அத்தகையவர்கள் ஆட்சியில் இருக்க லாயக்கானவர்கள் தானா?


முஸ்லிம்கள் மீதான வெறுப்பு என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்.  வழியில் அதனைக் கட்டாயமாக ஏற்பது பா.ஜ.க.வின் நிலைப்பாடு.


ஆர்.எஸ்.எஸின் கோட்பாட்டுக்குக் குரு என்று மதிக்கப் படும் குருஜி எம்.எஸ்.கோல்வால்கர் தனது “We or our Nation Hood Defined” எனும் நூலில் என்ன கூறுகிறார்? இந்நூல் ஹிந்துஸ்தான் பதிப்பகத்தின் சார்பில் (சேலம்) ‘தமிழிலும் வெளிவந்துள்ளது.


“நாம் அல்லது நம் சமுதாயத் தன்மையின் விளக்கம்“ எனும் தலைப்பில் வெளிவந்துள்ளது.


இந்நூலின் 65ஆம் பக்கம் என்றுகூறுகிறது?


“ஹிந்து ஸ்தானத்தில் வாழும் ஹிந்துக்களல்லாதார் ஹிந்துப் பண்பாடு, மொழி ஆகியவற்றை மேற்கொண்டு, ஹிந்து சமுதாயத்தை உயர்ந்த மதிப்பில் வைத்துப் போற்றி ஹிந்து இனம், அதனுடைய பண்பாடு ஆகிய இரண்டின் புகழைத் தவிர வேறு எதையும் அவர்கள் வரவேற்கக் கூடாது. அதாவது அவர்கள் இந்நாடு அதனுடைய பழமையான பாரம்பரியம் ஆகியவற்றைக் காண சகியாத தன்மை யினையும், நன்றி கெட்ட தன்மையினையும் முற்றிலும் நீக்கி விட்டு, உறுதியான எண்ணத்துடன் அன்பையும், பக்தியையும் அவைகளுக்குப் பதிலாகக் கொள்ளுதல் வேண்டும். ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால் அவர்கள் அந்நியராக இருப்பதை விட்டொழிக்க வேண்டும். அவ்வாறு இருக்க அவர்கள் விரும்பவில்லை என்றால், அவர்கள் ஹிந்து சமுதாயத்திற்கு முற்றிலும் கீழ்ப்பட்ட மக்களாக, சலுகைகள் எதுவும் பெறத் தகுதியற்ற மக்களாக, கண்ணியமாக நடத்தப்படுவதனையோ அல்லது பிரஜா உரிமையினையோ கூட அடைய அருகதையற்றவர்களாக, சுருங்கக் கூறுமிடத்து எதனையும் கோர முடியாத மக்களாக வாழ்தல் வேண்டும். இவ்வழியினைத் தவிர, அவர்கள் பின்பற்றுவதற்கு வேறு வழியே கிடையாது”


இதைவிட பாசிச, நாஜிச சக மனிதர்களை வேரறுக்கக் கூடிய வெறுக்கக் கூடிய சிந்தனைப் போக்கைக் கொண்ட ஒருவரை - ஒரு சட்டத்தை - ஓர் அமைப்பை கற்பனையில்கூட எண்ணிப் பார்க்க முடியுமா? என்று நினைத்துப் பாருங்கள்.


இத்தகைய மனித வெறுப்புக் கோட்பாட்டைக் கொண்ட ஓர் அமைப்பான பா.ஜ.க. சிறுபான்மையினரை சிறுமையாக எண்ணுவதும், இதனை விடச் சிறுமைப்படுத்தப்பட முடியாது என்ற எல்லைக்குத் தள்ளப்பட்ட சிறுபான்மை மக்கள் என்று கருதப்படுபவர்கள் பா.ஜ.க. எனும் பாசிச குரூர அமைப்புக்கு எதிர்நிலை எடுப்பதும் இயற்கைதானே!


இந்த அடிப்படையில்தான் திருவாளர் மாலன் சிறுபான்மையினர் வாக்குகள் எப்போதுமே பா.ஜ.க.விற்குக் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார் என்றே எடுத்துக் கொள்வோம்.


1939ஆம் ஆண்டில்தான் கோல்வால்கர் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். பெரிய மனிதர் என்று மேலோட்டமாகக் கூறப்படும் அடல் பிஹாரி வாஜ்பேயி என்ன சொல்லுகிறார்?


ஆர்.எஸ்.எஸ். வார ஏடான ஆர்கனைசரில் (1995 மே 7) ‘Sang My Soul’ எனும் தலைப்பில் (ஆர்.எஸ்.எஸ். என் ஆன்மா) எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டு இருப்பது என்ன?


முஸ்லிம்களை வழிக்குக் கொண்டு வர என்ன செய்ய வேண்டும்?


1) இந்துக்களை அணி திரட்ட வேண்டும். (Organising)


2) முஸ்லிம்களை உட்கொள்ளுவது (Assimilation) இதன் பொருள்  முஸ்லிம்களுக்கென்று உள்ள அடையாளங்களை அழித்து அவர்களை இந்துமயமாக்குவது


அப்படி முஸ்லிம்களை உட்கொள்ளுவதற்கு வழிகள் மூன்று.


1) முஸ்லிம்கள் நம் வழிக்கு வராவிட்டால், இந்நாட்டுக் குடி மக்கள் என்ற நிலையிலிருந்து ஒதுக்கி விட வேண்டும்; விரட்டி விட வேண்டும்.


2) முஸ்லிம்களை நம் வழியில் கொண்டு வர சலுகைகள், இலஞ்சங்கள் தருதல் - இவை காங்கிரசின் அணுகுமுறை.


3) முஸ்லிம்களை நமக்கு ஏற்றவாறு மாற்றி நம்முன் உட்கொள்ளுதல் இம்மூன்று வழிகளில் முதல் மற்றும் மூன்றாம் வழிகள்தான். நம் வழி.


இவைதான் நல்லவரான வாஜ்பேயின் இழிதகைக் கோட்பாடும் அணுகுமுறையும்.


“ஸ்ரீராமபிரான், ஸ்ரீகிருஷ்ண பகவான் ஆகியோருடைய ரத்தம்தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக் கிறது என்பதை முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்“ என்று கூறியவர் ஆர்.எஸ்.எஸ். தலைவரக இருந்த கே.எஸ். சுதர்சன் (‘தினமணி’ 16.10.2000).


இப்படியொரு மதம், இப்படியொரு கட்சி, இந்தக் கட்சி இந்தியாவின் ஆட்சிப் பீடத்திலாம்! - ஒவ்வொரு மனிதனும் வெட்கித் தலைகுனிய வேண்டாமா!


இந்தக் கொள்கை கோட்பாடுடைய கட்சியை தேர்தல் ஆணையம் எப்படி பதிவு செய்து கொள்கிறது என்பது கூட அறிவுப் பூர்வமான கேள்வியாகும்.


சிறுபான்மை மக்கள் மான உணர்வுடனும், மனித உரிமையுடனும் சிந்தித்தால் ஒரே ஒரு வாக்குகூட, தப்பித் தவறிக்கூட பா.ஜ.க.வுக்கோ அதன் கூட்டணிக் கட்சிக்கோ போகலாமா? அண்டை வீட்டுக்காரர்களாகவும் சகோதரர் களாகவும் அன்னியோன்மாக தலைமுறை தலைமுறையாகப் பழகிவரும் மக்களை வெறுக்க கூறும் கட்சிகளை சிறுபான்மையல்லாத மக்களும்தான் எப்படி ஏற்க முடியும்?


மாலன் 5: பா.ஜ.க.வைத் தமிழர்களுக்கு எதிரான கட்சியாக திமுக இந்தத் தேர்தலில் முன்னிறுத்தும் என்பதைப் பா.ஜ.க. உணர்ந்து இருக்கிறது. அதை மனதிற் கொண்டே பத்தாண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக தமிழகத்திற்குச் செய்தது என்ன? நாங்கள் என்ன செய்தோம் என்று என்னால் பட்டியலிட முடியும் என்று அமித்ஷா சவால் விடுகிறார்.


நமது பதில்: பா.ஜ.க.வைத் தமிழர்களுக்கு எதிரான கட்சியாக திமுக இந்தத் தேர்தலில் முன்னிறுத்துமாம்.


ஆக அவர்களுக்கே தெரிகிறது. தமிழர்களுக்கு எதிராகவே தான் பா.ஜ.க. ஆட்சியின் செயல்பாடு இருக்கிறது என்ற குற்ற உணர்வின் வெளிப்பாடுதானே இது! எங்களப்பன் குதிருக்குள் இல்லை என்பது இதுது£ன்.


இதற்கு மாற்றாக அவர்கள் வைக்கக் கூடியதையும் குறிப்பிட்டுள்ளார் திரு.மாலன்.


மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக தமிழகத்திற்குச்  செய்தது என்ன? என்ற கேள்விகள் தான் அதற்கு மாற்றாம்.


மத்திய அரசு துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியிலும் இடஒதுக்கீடு. தமிழுக்குச் செம்மொழி. பெண் களுக்குச் சொத்துரிமை. நீட் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டாலும் ஒரு கட்டத்தில் அது தடுத்து நிறுத்தப்படக் காரணமாக திமுக இருந்திருக்கிறது - டி.ஆர்.பாலு அவர்கள் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சராகவிருந்தபோது  தமிழ்நாட்டு சாலைகளும், பாலங்களும் பிரமிக்கத்தக்க சாதனைகள் அல்லவா?


பா.ஜ.க. என்ன செய்கிறது என்ற பட்டியல் இருக்கிறதாம். இந்தி சமஸ்கிருத திணிப்பு, காங்கிரஸ் ஆட்சியில் முடிந்து போன ‘நீட்’டுக்கு உயிர் கொடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதியை சவக் குழிக்கு அனுப்பியது, தேசிய கல்வி என்னும் பேரால் குலக்கல்வி திட்டத்தைத் திணிப்பது, தமிழ் செம்மொழி, நிறுவனத்தை செயலிழக்கச் செய்தது, ஜி.எஸ்.டி. வரியில் அளிக்க வேண்டிய சட்ட ரீதியான நிதியைக் கூடத் தர மறுப்பது, 2015ஆம் ஆண்டு சென்னை வெள்ளப் பாதிப்பின் போது 2500 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு கேட்க, மத்திய பா.ஜ.க. அரசு அளித்தது 1365 கோடி மட்டுமே. 2017 ஒக்கிப் புயலின் போது 250க்கு மேற்பட்ட  தமிழக மீனவர்களின் உயிரைக் கடல் பலி கொண்ட நிலையிலும், மக்கள் மிகப் பெரும் துன்பத்திற்கு ஆளான சூழலில், தமிழ்நாடு அரசு கோரிய தொகை ரூ.10 ஆயிரம் கோடி என்றால் மத்திய அரசு தூக்கிப் போட்ட பிச்சைக் காசோ ரூ.133 கோடி மட்டுமே. 2018 கஜா புயலில் மட்டும் என்ன வாழுது? கேட்டது ரூ.15 ஆயிரம் கோடி கிடைத்ததோ ரூ.1146 கோடி துயரப்பட்ட காலத்திலும் தமிழ்நாடு அரசுக்கு மத்திய பா.ஜ.க. அரசு காட்டிய பாராமுகம் இதுதான். பாதிக்கப்பட்ட  மக்களுக்குப் பிரதமரிடமிருந்து ஓர் ஆறுதல் வார்த்தைக் கூடக் கிடையாது இவற்றை எல்லாம் தமிழர்கள் மறந்து விடுவார்கள் என்று கனவு காண வேண்டாம்.


தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் மேகதாது அணை கட்டும் கருநாடக அரசுக்குப் பச்சைக் கொடி காட்டி வருவது யார்?


வகைவகையாக தொகை தொகையாக எதிர்ப்புப் பட்டியலில் இருக்கிறது - பொதி சுமக்கத் தயாராக இருக்கச் சொல்லுங்க.


மாலன்  6: 7.5 சதவீத இடஒதுக்கீடு, 11 மருத் துவக் கல்லூரிகள் போன்றவற்றை அதிமுக முன் வைக்கும். அத்துடன் அமித்ஷா எழுப்பிய கேள்வியும் எதிரொலிக்குமானால் தி.மு.க.வின் பரப்புரை Pro Active ஆக இருப்பதற்குப் பதில் Re Active ஆக மாறக் கூடும். அதாவது எதிராளியைத் தாக்குவ தற்குப் பதிலாக தன்னைத் தற்காத்துக் கொள் ளும் நிலைக்குத் தள்ளப்படும்.


பதில்: 7.5 சதவீதம் அரசு பள்ளி மாண வர்களுக்கு கிடைத்திருப்பதில் எதிர்க்கட்சி களின் பங்களிப்பை அலட்சியப்படுத்த முடி யுமா? எவ்வளவு அழுத்தங்கள் - நீதிமன்ற வழக்குகள் - இவைகளுக்குப் பிறகு தானே இது கிடைத்திருக்கிறது. நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு 10 விழுக்காடுக்குப் பரிந்துரை செய்ய தமிழ்நாடு அரசு 7.5. விழுக்காடாகக் குறைத்தது ஏன் என்ற எதிர்க் கட்சியின் கேள்விக்கு அதிமுக அரசு திணறித் தான் தீர வேண்டும்.


மத்தியில் உள்ள பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சமூக நீதிக்கு எதிரான அரசு என்ற உண்மையைத் தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலே ஆழமாக ஊன்றி வைத்தாகி விட்டது.


பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27  விழுக்காடு இடஒதுக்கீட்டை - அளித்ததால் சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் இந்த பா.ஜ.க. அதற்கு நாடாளுமன்றத்தில் துணை போனது அதிமுக என்ற சீற்றத்தின் சூடு தமிழ்நாட்டில் தணிந்து போய் விடவில்லை. மறந்தும் போய்விடவில்லை.


நீட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டப் பேர வையில் எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப் போடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட் டத்திற்கு ஒப்புதல் அளிக்காத மத்திய பிஜேபி அரசு பற்றியும், கூட்டணியில் இருந்தும் உரிமையோடு போராடி ஒப்புதல் பெற முடியாத  தமிழ்நாடு அதிமுக அரசின் செய லின்மையையும் சமூக நீதிக்குப் பெயர் போன தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக் கவே மாட்டார்கள்.


மக்கள் செல்வாக்குமிகுந்திருந்த எம். ஜி.ஆர். அவர்களே பிற்படுத்தப்பட்டோருக்கு வருமான வரம்பு ஆணையைக் கொண்டு வந்த காரணத்தாலே அவரை மன்னிக்காமல், அடுத்து வந்த மக்களவைத் தேர்தலின் மொத்தம் 39 இடங்களில் 37 இடங்களில் அதிமுக தோற்டிக்கப்பட்டதை நினைவூட்டு கிறோம். அந்த  பொருளாதார அடிப்படை சட்டப்படி செல்லாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தீர்ப்பளித்தும், அதை மதிக்காது - உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு ஒதுக்கீடு அளித்த உயர் ஜாதி பார்ப்பனருக்கு வசதி செய்து கொடுத்த வகையில், பா.ஜ.க. என்பது பார்ப்பன ஜனதாவே என்று தமிழ்நாட்டில் செய்யப்பட்ட பிரச்சாரம் உண்மையே என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. பார்ப்பன ஆதிக்க  எதிர்ப்புணர்வு மிகுந்த தமிழ்நாடு இதனை நிச்சயமாகக் கவனத்தில் கொள்ளும்.


2019 மக்களவைத் தேர்தலிலும் இந்த வகையில் தமிழ்நாடு மக்கள் பிஜேபிக்கும் அதிமுகவுக்கும் சரியான பாடத்தைக் கற்பித்ததை மறந்திட வேண்டாம். 


Pro Active, RE Active  என்ற வார்த்தை ஜாலங்கள் எல்லாம் தமிழ் மண்ணில் எடு படாது - எடுபடவே படாது இதுதான் பெரியார் பிறந்த தமிழ் மண்ணின் தனிக்குணம் (Soil Psychology)


மாலன் 7: அதிமுகவையும் பா.ஜ.க.வின் அடிமை ஆட்சி என தி.மு.க. சொல்லி வருகிறது ஆனாலும் ‘நீட்’ புதிய கல்விக் கொள்கை போன்றவற்றை அதிமுக எதிர்த்து வருகிறது என்றாலும் பா.ஜ.க. தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.


நமது பதில்: மாலன் இந்தப் பதிவு மூலம் பா.ஜ.க.வையும், அதிமுகவையும் சங்கடப் படுத்தியிருக்கிறாரே தவிர அவர்களுக்குச் சாதகமானது அல்லவே!


ஜெயலலிதா இருந்தபோது அவரால் எதிர்க்கப்பட்ட உதய்மின் திட்டம் ஜி.எஸ்.டி. இவற்றை எல்லாம் அதிமுக அரசு அட்டி யின்றி ஏற்றுக் கொள்ளவில்லையா? ஜெயல லிதா இருந்தவரை ‘நீட்’ இல்லை. இப்பொழுது ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதே!


தமிழ்நாட்டின் துணை முதல் அமைச்சர் டில்லி சென்று மத்திய நிதி அமைச்சரைச் சந்திக்கக் காத்திருந்தும் சந்திக்க மறுத்தது எதைக் காட்டுகிறது? அந்த அளவுக்கு அதிமுக அரசு மத்திய பிஜேபி அரசால் உதாசீனப்படுத்தப்படுகிறது என்பதைத் தானே!


மாலன் 8: ஒன்று நிச்சயம் வரவிருக்கும் தேர்தல் பலவான்களின் மோதல். கருத்துக் களின் மோதல். அதற்கான ஆரம்பப் புள்ளியை அமித்ஷா வைத்திருக்கிறார்.


நமது பதில்: பா.ஜ.க.வை எதிர் பக்கம் நிறுத்தி தமிழ்நாட்டை எதிர்பக்கம் நிறுத் தினால் - கருத்து மோதல் என்று சொன்னால் எந்தத் தட்டு கனக்கும்.


பா.ஜ.க. என்றால் சமூகநீதிக்கு எதிரி - மதச்சார்பின்மைக்கு எதிரி, இந்து ராஜ்ஜியம், ராமராஜ்ஜியம்தான் அவர்களுக்கானது.சிறுபான்மை மக்களுக்கு எதிரி, இந்தி சமஸ்கிருத திணிப்பு, புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வித் திட்டம், மாநில உரிமைப் பறிப்பு,  ஒரே நாடு ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், இது பிஜேபிக்கானது. தமிழ்நாடு என்றால் திராவிடத் தத்துவம் பெரியார் மண், நாடாளுமன்றத்திலேயே பெரியார் வாழ்க! வெல்க திராவிடம் ஒலி முழக்கம் கேட்க வில்லையா?


சமூகநீதி மதச் சார்பின்மை, சிறுபான்மை மக்களோடு சகோதரத்துவம், இந்தி சமஸ்கிருதம் எதிர்ப்பு, குலக்கல்வி எதிர்ப்பு மாநில உரிமைகளுக்குப் போர்க்கொடி, இனவுணர்வு, மொழி உணர்வு, இந்தியா என்பது பல இனங்கள், பல மொழிகள்,பல பண்பாடுகள் கொண்ட ஒரு துணைக் கண்டம் என்பதில் தெளிவு!


கருத்துப் போரும் சிந்தாந்த போரும் தவிர்க்கப்பட முடியாதவை. இந்தக் கருத்துப் போரில் யார் பக்கம் வெற்றிக் கொடி என்பது பால் மணம் மாறாத பாலகர்களுக்குக் கூடத் தெரியும்.


பரிதாபம் மாலன்களுக்குத் தெரிய வில்லையா? ஏன் மறைக்க வேண்டும். பார்ப்பனப் பாசம் கண்களை மறைக்கிறதா?


2019 தேர்தலுக்குப் பின் இடையில் என்ன நடந்துவிட்டது மாற்றம் காண்பதற்கு?


No comments:

Post a Comment