"தமிழர் தலைவர் வழிகாட்டட்டும் - அவர் வழி பயணத்தைத் தொடருவோம்!"
தோழர்கள் முத்தரசன், சுப.வீ., முனைவர் மு. நாகநாதன், வழக்குரைஞர் அருள்மொழி பங்கேற்று கருத்துரை
நமது சிறப்புச் செய்தியாளர்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பல்வேறு சிறப்புகளுடன் நடைபெற்றது. நூல்கள் வெளியீடு, விடுதலை சந்தாக்கள் அளிப்பு, பெரு மக்கள் கருத்துரை - கழகத் தலைவரின் காணொலி மூலம் ஏற்புரை போன்ற சிறப்பு அம்சங்கள் விழாவில் இடம் பெற்றன.
கரோனா காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய அனைத்து முறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டன. மேடையில் இருந்தவர்களும், பார்வையாளர்களும் முகக்கவசம் அணிந்திருந்தனர். மன்றத்தில் நுழையும் வாயிலில் கிருமி நாசினி அளிக்கப்பட்டது. உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டது. மன்றத்தில் நாற்காலிகள் இடைவெளியோடு போடப்பட்டு இருந்தன.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொள்கைப் பரப்பு விழாவாக நடைபெற்றது. அந்த வகையில் மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன.
இந்திய கம்யூனிஸ்ட்டுக் (மார்க்சிஸ்ட்) கட்சியின் பேரா சிரியர் அருணன் அவர்கள் 'காலந்தோறும் பிராமணியம்' என்ற தலைப்பில் வரலாற்றுத் தரவுகளுடன் வெகு சிறப்பாக எட்டு நூல்களை எழுதியுள்ளார்.
திராவிடர் கழகம் பற்றி அவர்கள் எழுதியுள்ள சில பகுதிகளைத் தொகுத்து "மார்க்சிஸ்டு பார்வையில் திராவிடர் கழகம்" எனும் தலைப்பில் திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன் அந்த நூலை வெளியிட்டார்.
கரோனா கால கட்டத்தில் பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் திறந்த வெளியில் நடத்த முடியாத சூழலில் காணொலி மூலம் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் பெரும்பாலும் உரையாற்றி கொண்டு வருகின்றார்.
வெளி மாநிலத் தோழர்களும், வெளிநாட்டுத் தோழர் களும்கூட இந்தக் காணொலியில் தங்களை இணைத்துக் கொண்டு கருத்துகளைக் கேட்டு வருகின்றனர்.
"ஒப்பற்ற தலைமை"எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் இந்தத் தலைப்பின் கீழ் அய்ந்து சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அவை தொகுக்கப்பட்டு "ஒப்பற்ற தலைமை" எனும் தலைப்பில் திராவிடர் கழக வெளியீடாக வெளிவந்துள்ள நூலை - திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் வெளியிட்டார்.
"விடுதலை"யில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் 'வாழ்வியல் சிந்தனை' எனும் தலைப்பில் எழுதி வரும் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 15ஆம் தொகுதியாக - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பாக வெளிவந்துள்ளது. இந்நூலினை திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி வெளியிட்டார்.
1971ஆம் ஆண்டு ஆசிரியர் கி. வீரமணி அவர்களை ஆசிரியராகக் கொண்டு தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட 'தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' என்ற இதழ் - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 80ஆம் ஆண்டு முதல், ஆண்டு மலராக வெளி வந்து கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் ஆசிரியர் அவர்களின் 88ஆம் ஆண்டை ஒட்டி 2020ஆம் ஆண்டு மலராக (தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள்) பல்துறைகளைச் சார்ந்த 47 பெரு மக்களின் கட்டுரைகள் அணி வகுக்கும் சிறந்த மலராக வெளி வந்தது.
அதனை தமிழ்நாடு அரசு மேனாள் திட்டக் குழுத் தலை வரும், சென்னைப் பல்கலைக் கழக மேனாள் பொருளாதாரத் துறைப் பேராசிரியருமாகிய முனைவர் மு. நாகநாதன் வெளி யிட்டார்.
மாநில கழகப் பொறுப்பாளர்களும், மண்டல மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்கள், செயலாளர்கள், பொறுப்பாளர்கள், இயக்கத்திற்கு அப்பாற்பட்ட பெரு மக்கள் வரிசையாக மேடைக்கு வந்து சிறப்புத் தள்ளுபடி போக ரூ.400 கொடுத்துப் பெற்றுக் கொண்டனர்.
'தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' ஆண்டு மலரை ரூபாய் 300 அளித்துப் பெற்றுக் கொண்டனர்.
'விடுதலை' 'உண்மை' 'தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' 'பெரியார் பிஞ்சு'களுக்கான சந்தாக்களை, திராவிடர் கழகத் துணைத் தலைவர் - விடுதலைப் பொறுப்பாசிரியர் கலி. பூங்குன்றனிடம் வரிசையாக வந்து வழங்கினார்கள்.
திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் வரவேற் புரையாற்றிட, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் விழாவுக்குத் தலைமை வகித்தார். திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.
தோழர் முத்தரசன் உரை
'மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்' எனும் தலைப்பில் பேராசிரியர் அருணன் எழுதிய நூலை வெளியிட்ட இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டதாவது:
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகளை தொலைப்பேசி மூலம் அவர்களுடன் தொடர்பு கொண்டு தெரிவித்துக் கொண்டேன்.
கையில் குச்சி வைத்து நடக்கும் நிலை தமக்கு இல்லை என்று கூறி 88ஆம் ஆண்டிலிலும் 28 வயது இளைஞராக பணியாற்றுகிறார் என்றால் இந்த ஊக்கத்திற்குக் காரணம் என்ன? கொள்கையும், இலட்சியமும் உள்ளவர்களிடத்தில் தான் இத்தகைய மனவலிமையைக் காண முடியும்.
அந்தத் தலைவர் மேலும் மேலும் நீண்ட காலம் வாழ்ந்து நம்மை எல்லாம் வழி நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம்.
பேராசிரியர் அருணன் எழுதிய இந்த நூல் பற்றி ஒரு சிறு விளக்கக் குறிப்பினை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் எழுதியுள்ளார்.
தந்தை பெரியார் பற்றியும், திராவிடர் கழகம் பற்றியும், விடுதலை ஏட்டைப் பற்றியும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த பழம் பெரும் தலைவர் எஸ்.ஏ. டாங்கே கூறிய கருத்துக்களை எடுத்துக் கூறியுள்ளார். பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி போன்றவர்கள் தந்தை பெரியார் பால் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உடையவர்கள். தந்தை பெரியார் ஆற்றிய தொண்டு, அவர்களின் கொள்கைகளில் உடன்பாடு கொண்டு கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
இந்திய சதந்திரத்திற்குப் பிறகு 1952இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் சென்னை மாநிலத்தில் கம்யூனிஸ்டுக் கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பிடித்தது. அய்க்கிய முன்னணி உருவாக்கப்பட்டு, காங்கிரசுக்கு எதிராக அணித் திரட்டப்பட்டது.
தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்து பெரும் பிரச்சாரத்தைச் செய்தார்கள். கம்யூனிஸ்டுகளின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம் தந்தை பெரியார் அவர்களே.
கம்யூனிஸ்டுகள் ஆட்சி அமைக்கும் வாய்ப்பிருந்தும், அந்தக் கூட்டணியிலிருந்த சிலரைப் பிரித்த சூழ்ச்சி அந்தக் கால கட்டத்திலேயே ஆரம்பமாகிவிட்டது.
'துக்ளக்' இதழில் அதன் ஆசிரியராக இருக்கக் கூடிய குருமூர்த்தி ஒரு உண்மையை ஒப்புக் கொண்டு 'துக்ளக்கில்' எழுதியுள்ளார். கோயங்காவும், 'தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமனும் ஆச்சாரியார் (ராஜாஜி)யின் காலில் விழுந்து இந்த இக்கட்டான தருணத்தில் ஆட்சிக்குத் தலைமையேற்று நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து. ஜனநாயகத்துக்கு விரோதமாக ஆட்சி அமைக்கப்பட்டது. அவர் தலைமை நீடிக்கவில்லை என்பது வேறு விஷயம்.
இப்பொழுது நம் நாட்டின் நிலை என்ன? மத்தியிலே ஜாதி - மதத்தை கையில் எடுத்துக் கொண்டு மக்களைத் திசை திருப்பிக் கொண்டு இருக்கிறது.
இப்பொழுது மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் குறியெல்லாம் தமிழ்நாடுதான். பிஜேபியின் தேசிய தலைவராக இருக்கக் கூடிய நட்டா காணொலி மூலம் தமிழ் மாநில பிஜேபி தலைவர்களுடன் பேசியிருக்கிறார். கூட்டணி ஏதும் இல்லாமலேயே 60 இடங்களில் பிஜேபி வெற்றி பெறுமெனக் கூறியுள்ளார். ஆசைப்படுவது அவர்கள் உரிமை. அதனை நாம் தடுக்கப் போவதில்லை.
அதே நேரத்தில் திமுகவை ஆட்சியில் அமர விட மாட்டோம் - விடக் கூடாது என்று பேசியிருக்கிறார்.
அவர்கள் எதையும் செய்வார்கள். பீகாரில் தேர்தல் எப்படி நடந்தது என்பதை நாம் பார்க்கவில்லையா?
இந்த நிலையில்தான் நமது திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட்டுள்ள பிறந்த நாள் அறிக்கையில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும், நமது ஒற்றை இலக்கு அதுதான் என்று குறிப்பிட்டுள்ளார். அதனை நாம் கவனத்தில் கொள்வோம் - செயல்படுவோம் என்றார் தோழர் இரா. முத்தரசன்.
வழக்குரைஞர் அருள்மொழி
திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரை ஞர் அருள்மொழி தமிழர்தலைவர் ஆசிரியர் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் 15ஆம் தொகுதியினை வெளியிட்டு ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது:
வாழ்வியல் சிந்தனைகள் என்பது முக்கியமானது. சிந்தித்து வாழ்வியலை நடத்துகிறோமா என்பதும் முக்கியம்.
வாழ்வியலை மற்றவர்களுக்குச் சொல்ல எல் லோருக்கும் தகுதி வந்து விடுவது கிடையாது.
சொல்லியபடி வாழ்ந்துகாட்டுகிறவர்கள்தான் மற்றவர்களுக்கு வாழ்வியலைப் பற்றிப் பேச முடியும். அந்த வகையில் தனி வாழ்விலும், பொது வாழ்விலும் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டும் தலைவர் - தனது நெடிய பொதுவாழ்வில் பெற்ற அனுபவங்களையும், ஓயாது படிக்கும் பழக்கத்தால் பெறப்பட்ட தத்துவங்க ளையும், வாழ்வியல் முறைகளையும் நமக்கெல்லாம் எடுத்துக் கூறிக் கொண்டிருக்கிறார்.
நூறு ஆண்டுகளுக்கான திட்டங்களை வகுக்கி றோம் என்றால் நாளையே மரணம் நிகழும் என்ற நினைப்பில் நாம் வகுக்கும் திட்டங்களை திட்டமிட்ட முறையில் காலத்தை வரையறுத்து செய்திட வேண்டும் என்பது நமது ஆசிரியர் அவர்களின் வற்புறுத்தலாக இருக்கிறது.
ஈரோட்டிலே ஒரு மூதாட்டி தனக்கு சொந்தமான பசு மாட்டை விற்று ரூ.24,000யைத் வைத்திருந்தார். ஆனால் அந்தப் பணமோ ரூபாய் மதிப்பு இழப்பு காலத்திற்கு முந்தியது. இப்பொழுது செல்லாத பண மாகிவிட்டது. மூதாட்டிக்கு அதிர்ச்சி - வேதனை.
தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் அந்தத் தொகைக்கான காசோலையை (செக்) அளித்தார்.
அந்த மாவட்ட ஆட்சியர் பெயர் கதிரவன் என்பதுதான் கவனிக்கத்தக்கது. இதைப்பற்றியெல்லாம் இந்நூலில் தருகிறார் ஆசிரியர்.
வைக்கம் போராட்டம்பற்றி பழ. அதியமான் எழு திய ஆதாரங்களின் தொகுப்பான நூலைப் பற்றியும் பல கட்டுரைகளாக நமது ஆசிரியர் இந்நூலில் தந்துள்ளார்.
'ரீடர்ஸ் டைஜஸ்ட்' என்பது அந்தக் காலத்தில் பிரபலமானது. அதைக் கையில் வைத்திருந்தாலே பெருமிதம் என்று கருதப்பட்டுள்ளது.
அதே போல ஆசிரியர் அவர்களின் இந்த வாழ்வியல் சிந்தனைகள் நூலினை மற்றவர்களுக்குப் படிக்கக் கொடுக்கலாம்.
திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அன்பளிப் பாகக் கொடுக்கலாம் என்று கூறினார் திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி.
பேராசிரியர் முனைவர் மு. நாகநாதன்
தமிழ்நாடு அரசு திட்டக் குழுவின் மேனாள் துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் மு. நாகநாதன் அவர்கள் 'தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' ஆண்டு மலரை வெளியிட்டு ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் விழாவில் பங்கு கொள்வதில் பெருமிதமும் பூரிப்பும், நெகிழ்ச்சியும் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.
'தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' ஆண்டு விழா மலர் 40க்கும் மேற்பட்ட அறிஞர் பெருமக்களின் படைப்பு கள் அடங்கிய ஆண்டு மலராக ஒளி விடுகிறது (உரை பின்னர் வெளிவரும்).
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் கழகத் தலைவரின் "ஒப்பற்ற தலைமை" எனும் நூலை வெளியிட்டுக் கருத்துரையாற்றினார்.
கரோனாவை மறந்து பல மாதங்களுக்குப் பிறகு பெரியார் திடலில் இந்த மேடையில் - இந்த அரங்கில் நாம் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி.
ஆசிரியர் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறுவது நமக்கு நாமே வாழ்த்துக் கூறுவது போன்ற தாகும்.
குச்சி ஊன்றி நடக்கும் நிலை இல்லை என்று ஆசிரியர் கூறுகிறார். உண்மை என்னவென்றால் அவர் அறையைவிட்டு 'இந்த மேடைக்கு வர அவர் நடந்து செல்கிறார் என்றால் நான் ஒடிச் செல்ல வேண்டிய நிலைதான்.
நீதிக்கட்சியில் பல தலைவர்கள் இருந்தாலும் பனகல் அரசர் மறைவின்போது தந்தை பெரியார் 7 பக்கங்கள் கொண்ட இரங்கல் அறிக்கையை எழுதினார். நான் அறிந்த வரையில் இதுதான் மிக நீண்ட இரங்கல் இலக்கியமாகும்.
பனகல் அரசர் கட்சித் தலைவராகவும், ஆட்சித் தலைவராகவும் இருந்தார். ஒருமுறை தந்தை பெரியாரி டம் பனகல் அரசர் கேட்டுக் கொள்கிறார்.
"கட்சி தலைவர் என்கிற முறையில் நான் உங் களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். எங்களுக்கு வழிகாட்டக்கூடிய அனுபவம் பெற்றவர்கள் நீங்கள் ஆகவே எங்கள் இயக்கத்திற்கு நீங்கள் காப்பாளராக இருக்க வேண்டும் என்று எங்கள் கட்சி செயற்குழுவில் முடிவு செய்திருக்கிறார்கள். நீங்கள் அவசியம் அந்தப் பொறுப்பை ஏற்று எங்களை வழி நடத்த வேண்டும் என்று சொல்லுகிறார்.
தந்தை பெரியார் அவர்கள் இருக்கட்டும், பார்க் கலாம் என்று சொல்கிறார்.
பிறகு 1938இல் தந்தை பெரியார் சிறையில் இருந்தபோது - நீதிக்கட்சியினுடைய தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவர் ஆகிறார் தந்தை பெரியார்.
அப்பொழுது பெரியார் எழுதினார்.
என்னை நீங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் உங்களுடைய ஓர் உண்மையான தொண்டனை இழந்தீர்கள். நான் பிறவித் தொண்டன். தலைவர் பதவி, தலைமைப் பதவியை நான் நன்கு அறிந்தவன். என்னை சர்க்கார் சிறைபடுத்தியதற்குப் பதிலாக, நீங்கள் என்னை சிறைப் பிடித்து விட்டீர்கள். இந்த யோசனை சரியானதல்ல என்பது எனது அபிப்ராயம்" என்று எழுதினார் தந்தை பெரியார்.
இதைப் பற்றி எல்லாம் இந்த நூலில் காண முடிகிறது.
'ஒப்பற்ற தலைமை' என்ற நூலின் தலைப்பைப் பார்த்தபோது தந்தை பெரியாரைத்தான் அவ்வாறு குறிப்பிட்டதாக நான் நினைத்துக் கொண்டேன். நூலைப் படித்தபோது தான் தந்தை பெரியார் ஒப்பற்ற தலைமை என்று பனகல் அரசரைக் குறிப்பிடுவதை அறிய முடிந்தது.
நான் முன்னமேயே குறிப்பிட்டதுபோல பனகல் அரசர் மறைவுக்காக 7 பக்க இரங்கல் அறிக்கை விடுத்துள்ள தந்தை பெரியார் அதில் முக்கியமாக அய்யா குறிப்பிடுவது அதில் முக்கியமாக பகுதி....
"இந்தியாவில் ஆதிக்கமும், செல்வாக்கும் பெற்ற அரசியல் இயக்கத்திற்கும் விரோதி, ஆதிக்கமும், செல்வாக்கும் பெற்ற சமுகத்திற்கும் விரோதி, ஆதிக் கமும், செல்வாக்கும் பெற்ற பத்திரிகைகளுக்கும் விரோதி, ஆதிக்கமும், செல்வாக்கும் பெற்ற பிரச்சாரக் கூலிகளுக்கும் விரோதி, இவ்வளவுமல்லாமல் மதிக்கத்தக்க பிரதிநிதித்துவம் என்று சொல்லும் படியான பாமர மக்களுக்கும் விரோதி என்று சொல்லும்படியான நிலையில், நெருப்பின் மேல் நின்று கொண்டு வேலை செய்வது போல் வெகு கஷ்டமான துறையில் வேலை செய்தவர். இந்த வேலையில் ஈடுபடுபவர்களுக்கு என்ன குணங்கள் வேண்டும் என்பதற்கு ஓர் இலக்கணமாகவும், இலக் கியமாகவும் விளங்கினார் நமது தலைவர் பானகல் அரசர் என்று சொல்லுவது ஒரு சிறிதும் மிகையாகாது என்றே எண்ணுகின்றோம்."
"இவருக்கு முன்னைய தலைவர்களான டாக்டர். நாயர், சர்.தியாகராயர் ஆகியவர்களுக்கு நமது ராஜா போன்ற உள்ளன்போடு மனப்பூர்வமாய் பின்பற்று கின்றவர்கள் அநேகர்கள் இருந்தார்கள். ஆனால், நமது ராஜாவுக்கு யார் இருந்தார்கள்? ஒருவரும் இல்லையே என்று சொல்லுவதுடன் மாத்திரம் நில்லாமல், உள்ளுக்குள்ளாகவே எதிரிகள் சதா குற்றம் சொல்லிக் கொண்டும், பழி சுமத்திக் கொண்டும், அவரது தலைமையைக் கவிழ்க்கச் சூழ்ச்சி செய்து கொண்டும், அவரைச் சுற்றிலும், அவரது சொக்காய்ப் பையிலும் இருந்தார்கள். பின் எப்படி ராஜாவுக்குக் கட்சியும், ஆள்பலமும் இருந்தது என்று யாராவது கேட்பீர்களானால், அதற்குப் பதில், அவருடைய தனி சாமர்த்தியத்தால், புத்திசாலித் தனத்தால், இராஜதந் திரத்தால் சிலரை, தான் சொல்லுகின்றபடி கேட்டுத் தீரவேண்டிய நிலையில், வைத்துக் கொண்டிருந்தார் என்றுதான் கொள்ள வேண்டும். அன்றியும் பார்ப்பன ரல்லாத படித்தவர்கள் என்னும், கூட்டத்தாரில் பானகல் அரசரால் அதிருப்தி அடையாதவர்களோ, ஏமாற்றமடையாதவர்களோ, அவர் மீது வெறுப்புக் கொள்ளாதவர்களோ ஒருவர் இருவராவது உண்டு என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது! இராஜதந்திரம் என்பதை ஒப்புக்கொண்டவர் அல்ல. இது ஒன்றுதான் மாறுபட்ட விஷயம்."
தந்தை பெரியார் சுட்டிக்காட்டிய அந்த நான்கு விரோதிகள் பனகல் அரசரோடு முடிந்ததா? தந்தை பெரியாரோடு முடிந்ததா? இப்பொழுதும் தொடரத் தானே செய்கிறது.
திருவள்ளுவரை தங்களுக்கானவர் என்று வரித்துக் கொள்ளும் சங்பரிவாரத்தினர் வள்ளுவருக் குக் காவி சாயம் பூசுகின்றனர். பட்டை போடுகின்றனர். உத்திராட்சம் அணிவிக்கிறார்கள். ஆனால் ஏன் பூணூலை போடத் தயங்குகிறார்கள்.
பூணூல் என்றால் தமிழ்நாடு மக்கள் மத்தியில் அப்படியொரு எதிர்ப்புணர்வு -வெறுப்புணர்வு இருக்கிறது என்று தானே பொருள்.
பனகல் அரசரின் ஒப்பற்ற தலைமைபற்றி தந்தை பெரியார் வியக்கிறார். தந்தை பெரியாரின் ஒப்பற்ற தலைமையைக் கண்டு நாம் வியக்கிறோம் நாடே வியக்கிறது.
பொதுக் கூட்டங்களில் பேசும்போது - ஏற்படும் வயிற்று வலியால் 'அம்மா' அம்மா என்று வலியை அழுத்திக் கொண்டே பேசியவர் பெரியார். ஒப்பற்ற தலைவர். அவர் வழி வந்த ஆசிரியர் நமக்கு ஒப்பற்ற தலைவர். அவர் வழி காட்டட்டும் அவ்வாறு பயணிப் போம் என்றார் சுப.வீரபாண்டியன்.
இரா. வில்வநாதன்
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா. வில்வநாதன் நன்றி கூறினார்.
கலைஞர் தொலைக்காட்சி வீடியோ!
விழாவின் தொடக்கத்தில் கலைஞர் தொலைக் காட்சியில் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு "திராவிடப் போராளி" எனும் தலைப்பில் ஒளிபரப்பப்பட்ட காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கழகத் தலைவர் காணொலி உரை
இறுதியாக ஏற்புரையாக காணொலி மூலம் கழகத் தலைவர் கருத்துரை வழங்கினார்.
No comments:
Post a Comment