88 ஆம்  ஆண்டைத்  தொடும் - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 2, 2020

88 ஆம்  ஆண்டைத்  தொடும் - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி

வாழ்வும் நலமும் வளர வாழ்த்துவோம்!



உலகின் ஒரே நாத்திக நாளேடு என்னும்  பெரு மையைத் தமிழுக்கு வழங்கியுள்ள   'விடுதலை' நாளிதழ் 86 ஆம் ஆண்டில்  இப்போது நடை போடுகிறது.


‘விடுதலை' நாளேட்டின் ஆசிரியராக 58 ஆண்டு களாகப் பணியாற்றிவருபவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  அவர்கள்! ‘விடுதலை' இதழுக்கு ஆசிரியர் ஆனவர், அனைவருக்கும் ஆசிரியர்  ஆகிவிட்டார்! அவர் 88 ஆம் வயதை இன்று (2.12.2020) தொடுகிறார்!


அவரை 56 ஆண்டுகளுக்கு முன் 1964இல் முதன்முறையாகப் பார்த்த நினைவு இன்றும் பசுமை மாறாத நினைவு.


திருவையாற்றில் இப்போது பேருந்து நிலையமாக மாறிவிட்ட இடத்தில், திராவிடர் கழக இருநாள் மாநாடு 1964ஆம் ஆண்டு நடந்தது. அரசியல் சட்ட எரிப்புப் போரில் பங்கேற்று உயிர் துறந்த திருவையாறு மசீத்து பெயரில் மாநாட்டு அரங்கம்  அமைந்திருந்தது.


முதல் நாள்(13.6.1964) சமதரும மாநாடு. 


மறுநாள்(14.6.1964) ஜாதிஒழிப்பு மாநாடு.


திராவிடர் கழக மாநாடுகள் முன்பு  அப்படி நடப்பதுதான் வழக்கம்.


  சமதரும (கம்யூனிச)மும், ஜாதி ஒழிப்பும், பெரியார் இயக்கத்தின் இருகண்கள். செந்தலை திராவிடர் கழகத் தலைவரான என் தந்தையார் ச.நடராசன், பள்ளி  மாணவனான  என்னை அழைத்துச் சென்ற தோடு, ஆசிரியர் வீரமணியிடமும் அறிமுகப்படுத்தி வைத்தார்.


இருநாள் பெரியார் உரையும் நடிகவேள் எம்.ஆர்.இராதா நாடகமும், ஈ.வெ.கிசம்பத் ஆகிய பெருமக்கள் பேச்சும்- இன்றும்  மாறாத மனத்திரை ஓவியங்கள்.


வெறுந்தரையிலேதான் எல்லோரும் உட்கார்ந்தாக வேண்டும். மேடையிலும் நாற்காலி கிடையாது. துணிவிரிப்பில் பெரியாரும், பிறரும் அமர்ந்திருந்தனர்.


‘இருபதாண்டுகளாகப் பேசி வருபவர்' என, 1964இலேயே ஆசிரியர் கி.வீரமணி அவர்களை வியந்து பேசுவார்கள்.


பெரியார் நடத்திய பயிற்சி வகுப்புகளில் பத்துவயதிலேயே பங்கேற்கத் தொடங்கிய அவர் - 1944, 1945 இரண்டாண்டுகளும் ஈரோடு வந்து பெரியார் நடத்திய பயிற்சி வகுப்புகளில் பங்கேற் றுள்ளார். பெரியாரிடம் அவரை அறிமுகப்படுத்தி வைத்தவர் டார்ப்பிடோ ஏ.பி.சனார்த்தனம் அவர்கள்!


  தமது பொதுவாழ்விற்கு அடித்தளம் அமைத்தவை ஈரோட்டுப் பயிற்சி வகுப்புகளே என்பது இந்தக் கடலூர் மைந்தரின் பெருமிதம்!


பயிற்சி வகுப்பு நடக்கும் போதே, பெரியார் தம்மோடு அழைத்துச்சென்று  ‘பத்து வயதுச்சிறுவன்' என்ற அறிமுகத்தோடு வீரமணி அவர்களை முதன் முதல் மேடையேற்றியது பொட்டிரெட்டிப்பட்டியில்!


பயிற்சி வகுப்பிற்கு வந்தோரைச் சொற்பொழி வாற்றச் சுற்றுப்பயணம் அனுப்புவது பெரியார் வழக்கம். தஞ்சை மாவட்டப் பயணத்திற்குப் பொறுப் பேற்று அழைத்துச் சென்றவர்  புலவர் ஆறுமுகனார். ( மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி அவர்களின் தாத்தா).


கோவைக்கும், சூலூருக்கும் அதே குழு வந்த போது உடன் வந்தவர் ஈரோடு கவிஞர் பாலகுரு. (பழையகோட்டை அருச்சுனன் அவர்களின் உதவியாளர்).


இயக்க  வரலாற்றோடு இணைந்த வரலாறு ஆசிரியர் அவர்களுடையது.


  பகுத்தறிவும், இனவுணர்வும் பரவ, ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பல்லாண்டு வாழ நல்வாழ்த்து கூறுவோம்!


- செந்தலை கவுதமன்


No comments:

Post a Comment