தமிழர் தலைவர் ஆசிரியர் 88ஆம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக 2128 விடுதலை சந்தாக்கள், தொண்டாற்றிய தோழர்களுக்கு நன்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 3, 2020

தமிழர் தலைவர் ஆசிரியர் 88ஆம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக 2128 விடுதலை சந்தாக்கள், தொண்டாற்றிய தோழர்களுக்கு நன்றி!

விடுதலை சந்தா திரட்டும் பணியை தொடர்வோம் டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாளில் இரண்டாம் கட்ட சந்தாக்களை வழங்குவோம்


பேரன்புமிக்க கழக பொறுப்பாளர்களே, தோழர்களே, முக்கால் நூற்றாண்டு காலமாய் பகுத்தறிவு, இனவுரிமை, சமூகநீதி, பாலியல் நீதி தளங்களில் தளர்வில்லாமல் களமாடி ஓய்வில்லாமல் தானும் உழைத்து நம்மையும் இயங்கச் செய்து இந்தியாவின் ஈடில்லா மூத்த தலைவர் நமது குடும்பத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக - அவர் பெரிதும் விரும்பும் இனவுரிமை மீட்பு ஏடான விடுதலை சந்தா திரட்டும் பணியில் தலைமைக்கழக பொறுப்பாளர்கள் மாவட்ட வாரியாக ஒன்றியம், கிராமங்கள் வரை மேற்கொண்ட சுற்றுப்பயணத்திற்கு கழக மாநில மாவட்ட, மண்டல ஒன்றிய, கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் கரோனா பெருந்தொற்று காலத்திலும் உற்சாக பெருவெள்ளம் பாய்ந்ததுபோல் அவரவர் வாய்ப்புக்கேற்ப உழைப்பைத் தந்து 1 மாத காலத்தில் பெரும் எண்ணிக்கையில் விடுதலை சந்தா திரட்டுவதற்கு ஒத்துழைப்பை நல்கிய அனைத்து கழகத் தோழர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தமிழர் தலைவர் ஆசிரியரின் பணித் தோழர்களாக சந்தா திரட்டும் பணியில் ஈடுபட்ட பொழுது நமது கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் தொழில் மற்ற பணிகளுக்கிடையில் தங்களது நேரத்தையும் உழைப்பையும் தந்து நகரங்கள் முதல் கிராமங்கள் வரை வணிகர்கள் விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள், கழக ஆதரவாளர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


கடந்த 8 மாத காலமாக கரோனா பெருந்தொற்று காரணமாக ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத நிலையில் கழகத் தோழர்கள், பெரியார் பெருந்தொண்டர்கள், பொதுமக்கள் ஆதரவாளர்கள் அனைவரையும் சந்திப்பதற்கான வாய்ப்பு விடுதலை சந்தா சேர்ப்பு பயணத்தால் ஏற்பட்டது.


நமது ஒப்பற்ற தலைமை தந்தை பெரியார் அவர்களின் தத்துவ வாரிசு தற்போதைய ஒப்பற்ற தலைமை ஆசிரியர் அய்யா அவர்களின் பிறந்த நாளில் விடுதலை சந்தா வழங்குவது என்றவுடன் அனைத்து தரப்பு மக்களும் இன்முகத்துடன் எங்களை வரவேற்று ஆசிரியர் அவர்களின் நலம் விசாரித்து கேட்டவுடன் விடுதலை சந்தாக்களை வழங்கி மகிழ்ந்தனர்.


சந்தா திரட்டும் பணி மட்டுமல்லாமல் மக்கள் இயக்கமான திராவிடர் கழகத்தின் பொறுப்பாளர்கள் தோழர்கள் சந்திப்பு என்று உற்சாக பெரு வெள்ளத்தில் காலை முதல் இரவு வரை இடைவிடாது பயணித்தாலும் சோர்வோ, களைப்போ ஏற்படவில்லை.


மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள்


இதே முறையில் கழக மண்டல, மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் தங்கள் பகுதியில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை சுற்றுப்பயணத்தை அமைத்துக்கொண்டு செயல்பாட்டை அமைத்திட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். தந்தை பெரியார் மண்ணை காவி மயமாக்க துடிக்கும்  ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கும்பலின் எண்ணங்களை தவிடுபொடியாக்கும் நமது தலைவரின் எண்ணமும் செயலும் நாளும் மக்களை சந்திப்பதுதானே. எனவே விடுதலை சந்தா சேர்ப்பு பணியை தொடர் பணியாக செய்திடுவோம். அதன் வாய்ப்பாக மக்களோடு தொடர்பு சங்கிலியை பெருக்கிடுவோம்.


தொடர்ந்து விடுதலை சந்தா சேர்ப்பு பணியில் சோர்வில்லாமல் ஈடுபட்டு அறிவுலக ஆசான் தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24ஆம்தேதி வரை இரண்டாவது கட்ட விடுதலை சந்தாக்களை வழங்கிடுவோம்.


தோழர்களின் கூட்டு முயற்சியே அனைத்து செயல்பாடுகளின் வெற்றிக்கு சாத்தியம்.


நமது தலைவரின் மகிழ்ச்சியே நமது மகிழ்ச்சி. தொடர்ந்து தொய்வின்றி செயல்படுவோம்.


நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது. வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்.


என்றும் தலைவர் அறிவுறுத்தும் களப்பணியில்


இரா.ஜெயக்குமார்


பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்


No comments:

Post a Comment