76ஆவது சட்டத் திருத்த நாயகர் வாழியவே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 2, 2020

76ஆவது சட்டத் திருத்த நாயகர் வாழியவே!

நமது தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இன்று 88ஆம் அகவையில் தடம் பதிக்கிறார்.


இந்த 88இல் இவர்தம் பொது வாழ்க்கையின் வயது 78. இந்த விகிதாசாரம் எந்தத் தலைவருக்கும் அமையவில்லை - இந்த வகையிலும் தமிழ்நாட்டின் மூத்த தலைவர் இவரே!


'விடுதலை' - வயது 86. இந்த 86 வயது விடுதலைக்கு 58 ஆண்டு கால ஆசிரியர்.


இந்த விகிதாசாரமும் அசாதாரணமானதுவே! திராவிடர் கழகத்திலிருந்து  திமுக பிரிந்தது 1949; அப்பொழுது மாணவர் வீரமணியின் வயது 16 தான்.


தனக்கு எல்லா வகையிலும் ஊக்கமும், ஆக்கமும் கொடுத்த மூத்த அண்ணன் கி. கோவிந்தராசன் அவர்கள் திமுகவுக்கு சென்று விடுகிறார். சொந்த வீடு மட்டுமல்ல; சுற்றுச் சார்பில் இருந்தோரெல்லாம் திராவிடர் கழகத்தைவிட்டு திமுகவுக்குச் சென்றனர்.


16 வயதுள்ள ஒருவர் சுற்றுச்சூழலின் அடிமையாகி அந்த வழியே செல்லுவதுதான் சாதாரணமாக நடக்கக் கூடியதும், நடைமுறையும் - யதார்த்தமும் ஆகும்.


ஆனால் அந்த 16 வயது மாணவர் தனித் தன்மையாக சிந்தித்தார். பெரியார் வழிதான் சிறந்த வழி - அவர்தாம் வழிகாட்டும் தத்துவ தலைவர்! அவர் தலைமை தாங்கி நடத்தும் திராவிடர் கழகம்தான் மிகச் சரியான தமது இயக்கம் என்று முடிவு எடுத்து ஆடாமல், அசையாமல், அரவணைப்புக்கும், ஆசை வார்த்தைகளுக்கும், பற்றுதலுக்கும், ஏன் அதட்டலுக்கும்கூட அடிபணியாமல் "தந்தை பெரியாரே எம் தலைவர்! திராவிடர் கழகமே தனக்கானது!" என்று உறுதிபட  16 வயதிலேயே சிந்தித்தார், செயல்பட்டார் ஒருவர் என்பது எளிதில் எங்கும் காணப்படவே முடியாத உலக அதிசயமே.


கடலூரில்  1946இல் உருவான இளம் திராவிடர் கழகத்தின் தலைவராக (1946) 13 ஆம் வயதிலேயே உருவானவர் ("குடிஅரசு" 1.6.1946). இன்று தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோர் மறைவிற்குப் பிறகு திராவிடர் கழகத்தின் தலைவராகவும், தமிழர் தலைவராகவும், உலகத் தமிழர்களால் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்படும் தலைவராக பவனி வருகிறார்.


தந்தை பெரியார் காலத்தில் நமது இட ஒதுக்கீடு 49 விழுக்காடு என்றால், அய்யாவின் கொள்கை உறுதி என்னும் திராணியோடு, ஊட்டத்தோடு அது 69 விழுக்காடாக விரிவடைந்திருக்கிறது.


மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு இருந்த நிலையில், மண்டல் குழு பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்காக 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் இந்திய அளவில் நடத்தி தமிழ்நாடு மாநிலத்திற்கு மட்டுமல்ல. இந்தியத் துணைக் கண்டம் அனைத்திலும் வாழும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு என்னும் வான் மழை பொழிவதற்கு முக்கிய கருவாகவும், உருவாகவும் இருந்தவர்! 'நண்பர் வீரமணியைப் பார்க்கும் பொழுதெல்லாம் நான் சமூகநீதி உணர்ச்சி பெறுகிறேன்' என்று, மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திக் காட்டிய - அரசியலில் அப்பழுக்கற்ற சமூக நீதிக்காவலர் பிரதமர் வி.பி. சிங் அவர்கள் உதிர்த்த அந்தச் சொல் முத்துகளே அதற்கு ஆதாரமாகும்.


மம்சாபுரத்தில் தலைவர் ஆசிரியரின் உயிருக்குக் குறி வைத்துத் தாக்கப்பட்ட போது 'வீரமணி ஜிந்தாபாத்' என்று நாடாளுமன்றத்தில் முழக்கம் கேட்டது என்றால் இந்தியத் துணைக் கண்டத்துக்கே கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்ததற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் அவர் என்ற அருமையைக் கருதியே அந்த நன்றியுணர்ச்சியின் பிளீறல்!


இந்திரா சஹானி வழக்கில் இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் போகக் கூடாது என்று உச்சநீதிமன்ற அமர்வு சொன்ன நேரத்தில், அரும்பாடுபட்டு, போராடிப் போராடி தமிழ்நாட்டில் நாம் பெற்றெடுத்த 69 விழுக்காடு இடஒதுக்கீட்டின் தலையில் விழுந்த இடியாகக் கருதி,  அதைக் காப்பாற்ற தமிழர் தலைவர் எடுத்த முயற்சியும், வெற்றியும் சமூகநீதி வரலாற்றின் ஒவ்வொரு பக்கமும் பேசும். முதல் அமைச்சர், பிரதமர், குடியரசுத் தலைவர் மூவரும் பார்ப்பனர் என்ற நிலையிலும் அதில் வெற்றி பெற முடிகிறது அவரால் என்பது சாதாரணமானதல்ல.


அவருடைய சட்ட அறிவு 69 விழுக்காடு இடத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரு சட்ட வரைவை அரசுக்குத் தயாரித்துக் கொடுத்தது.


இந்திய அரசின் முதல் சட்ட திருத்தம் என்றால் தந்தை பெரியார் பெயர் நினைவிற்கு வரும். 76ஆவது சட்டத் திருத்தம் என்றால், அவரின் நம்பிக்கை மிகுந்த சீடர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் பெயர் நினைவிற்கு வரும்.


இப்பொழுது நிலை என்ன? மத்தியில் உள்ள பார்ப்பன பா.ஜ.க. ஆட்சி ஒவ்வொரு நாளும் கண் விழிக்கும் போது எல்லாம் கோடாரியைத் தூக்கிக் கொண்டு, சமூகநீதியின் வேரை வெட்ட புறப்பட்ட வண்ணம் இருக்கிறது தனது கூட்டாளியாக நீதிமன்றத்தையும் சேர்த்துக் கொண்டு; இந்த ஆபத்து இப்பொழுது வரப் போகிறது என்று 5 ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்கோடு கூறினார் தலைவர் ஆசிரியர்.


ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பாகவத் ஆர்.எஸ்.எஸ். ஏடான பஞ்சான்யாவுக்கு (20.9.2015) அளித்த பேட்டியில் 'இப்பொழுதுள்ள இடஒதுக்கீட்டை மாற்றியமைக்க வேண்டும், இதற்காக ஒரு குழுவை அமைக்க வேண்டும்" என்று கூறியபோது -


"இது வருகின்ற ஆபத்துக்கு முன்னோட்டமாகும்.  பின்னாளில் அவர்கள் சிந்திப்பது என்னவென்றால், இப்பொழுது இருக்கின்ற அளவுகோலை அகற்றிவிட்டு, மாறாக பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் இவர்களுக்குக் கிடைக்கின்ற இடஒதுக்கீட்டைப் பொருளாதார அடிப்படை என்கிற முறையில் இடஒதுக்கீட்டை மாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அந்தக் கமிட்டி அமைக்கப்படக் கூடிய நிலையில் இருக்கிறது.


இந்தத் துறையில் மட்டுமல்ல. கல்வித்துறையிலும்கூட தனியாக ஒரு வாரியம் அமைத்து, கல்வித் திட்டத்தையே மாற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கருத்துகளைச் சொல்லிக் கொண்டு ஆழம் பார்க்கிறார்கள்" என்று இன்றைக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே ('விடுதலை' 22.9.2015) தொலைநோக்கோடு எச்சரித்தவர் தமிழர் தலைவர்.


இன்று நடப்பது என்ன? பொருளாதாரத்தில் நலிந்த உயர் ஜாதியினருக்கு இடஒதுக்கீடு, தேசியக் கல்வித் திட்டம் என்பதெல்லாம் அய்ந்து ஆண்டுகளுக்குமுன் தலைவர் ஆசிரியர் எச்சரித்ததுதானே.


இன்னும் எத்தனையோ கூறலாம். கழக அமைப்பு முறைகளில் மாற்றம், திட்டங்கள், ஏடுகள், வெளியீடுகளைக் காலத்துக்கேற்ப மாற்றிய பொலிவுகள் (நேற்று 'திராவிட நாற்று' மின் இதழ் தொடக்கம் வரை) என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.


"வாழ்நாள் சாதனையாளர்" விருதினை அமெரிக்காவில் பெற்ற கழகத் தலைவர் பெரியாரை உலக மயமாக்கும் திசையிலும் வெற்றிக் கொடி நாட்டுவார் என்பதில் அய்யமில்லை.


அவர் ஆயுள் நீளட்டும்! நீளட்டும்! அதன் வழி பெரியார் கொள்கைகள் மேலும் மேலும் பரவட்டும்!  நாடு நலமும் வளமும் செழிக்கட்டும் - செழிக்கட்டும்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!


No comments:

Post a Comment