பெரியாரை 5 நிமிடம் அப்படியே கண்ணீர் மல்க  கட்டித் தழுவிய கலைவாணர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 1, 2020

பெரியாரை 5 நிமிடம் அப்படியே கண்ணீர் மல்க  கட்டித் தழுவிய கலைவாணர்


இலட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எம்.கே.தியாகராஜ பாகவ தர், பட்சி ராஜா பிலிம்ஸ் சிறீராமுலு ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, கலைவாணருக்கும். பாகவதருக்கும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப் பட்டது. அந்த - நேரத்தில் தந்தை பெரியார் குடி அரசு' (3.11.1945) இதழில் எழுதிய தலையங்கம் இன்று பார்த்தாலும் இரத்தக் கண்ணீரைத்தான் வரவழைக்கும். 


"அய்யோ! கிருஷ்ணா உனக்கா இந்த கதி உனக்கா தீவாந் தர சிட்சை! உண்மையிலா, உனக்கு! நீ 14 வருட காலம் சிறை யில் கடின காவல் தண்டனை அனுபவிக்க வேண்டுமென்று தீர்ப்புக் கூறி உன் வாழ்வு முடிக்கப்பட்டுவிட்டதா? 'அசல் தீர்ப்பு கொடுமை கொடுமை' என்றால் 'அப்பீல் தீர்ப்பு அதனி னும் கடுமை கடுமை' என்று சொல்லத்தக்கதாக அல்லவா ஆகிவிட்டது. இந்தச் சேதியை கேட்கவே காதில் எரிசூலம் பாய்வது போல் இருக்கிறதே. நினைக்கவே நெஞ்சம் வெடித்து விடும் போல் இருக்கிறதே. இப்படி ஓர் உலகம், இப்படி ஒரு நடவடிக்கை. இப்படி ஒரு நீதி என்றால் உலகத்திற்கு மனிதர்கள் வேண்டுமா? என்று தோன்றுகிறதே! நிஜமாகவா நீ குற்றவாளி? இது என்ன தண்டனை? எதற்காக இந்தத் தண்டனை அடைந் தாய்? நீதிக்கு ஆகவா? சட்டத்திற்கு ஆகவா? நிஜமான நடத் தைக்கு ஆகவா? அல்லது நம் எதிரிகளின் ஆசைக்காகவா? எதற்காக இந்தத் தண்டனை? ஒன்றும் புரியமாட்டேன் என்கிறதே, உண்மையாக நீ குற்றவாளியா? உன் விஷயத்திலா சாட்சியும், சட்டமும், நீதியும், நீதிபதிகள் இஷ்டமும் இப்படிப் பயன்பட வேண்டும்?


அட்டா, அளவுக்கு மீறிய பரிதாப சம்பவமே! இதை எப்படிப் பொறுப்பது? தமிழ் மணியே! தமிழர் மூடநம்பிக்கை வாழ்வைத் திருத்த முயன்ற தவமணியே! நீ சிறையில், 14 வருஷம் சிறையில் - கடின காவல் தண்டனையாய்ச் சிறையில் - வதிவதை, வாடுவதை உண்மைத் தமிழ் மக்கள் எப்படிப் பொறுத்திருப்பார்கள்? என்பது விளங்கவில்லையே! ஏன் அதுவரை பொறுத்திருக்க வேண்டும்? என்பதும் புரியவில் லையே என்பதாக இன்று தமிழ்நாடு எங்கும் கிருஷ்ணனைப் பற்றியும், பாகவதரைப் பற்றியும் கூறிய வண்ணம் கூச்சலும், கொதிப்புமாக மக்கள் காணப்படுவதுடன் பார்க்கின்ற முகமெல்லாம் பதறிப் பதறிப் பரிதவிக்கின்ற முகங்களாகவே காட்சியளிக்கின்றன " என்று குமுறுகிறார் தந்தை பெரியார்.


சிக்கனக்காரரான தந்தை பெரியார் சிறைச் சாலைக்கு சென்ற கலைவாணரிடம் ரூ.10 ஆயிரம் அளித்து வழக்கை நடத்தப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். அய்யாவின் அந்த அளப்பரிய அன்பைக் கண்டு கலைவாணர் கண்ணீர் விட்டார். (“உலகத் தலைவர் பெரியார் - பாகம் 2, பக்கம் 188 - கி.வீரமணி)


என்.எஸ். கிருஷ்ணன், பாகவதர் விடுதலைக்கு ஒவ்வொரு வரும் ஒரு ரூபாய் வீதம் 50 ஆயிரம் ரூபாய் திரட்ட வேண்டும் என்று துணைத் தலையங்கம் ஒன்றையும் தந்தை பெரியார் தீட்டினார். (குடிஅரசு' 10.11.1945)


பெரியார் - கிருஷ்ணன் சந்திப்பு கண் கலங்கிய உருக்கமான காட்சி


கலைவாணர் விடுதலையாகி வெளியில் வந்துவிட்டார் என்ற தகவலைக் கேள்விப்பட்டதும் தந்தை பெரியார் அவரை நேரில் சென்று சந்திக்க வேண்டும் என்று துடித்தது குறித்து 'விடுதலை' (28.4.1947) இவ்வாறு எழுதியது.


பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் மற்ற தோழர்களுடன் காயல்பட்டிணத்திலிருந்து 26ஆம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை வந்து உடனே சைதாப்பேட்டை திருமணத்திற்குச் சென்று பகல் 3 மணிக்கு மவுண்ட் ரோட்டிலுள்ள தமது இல்லத் திற்கு வந்து சேர்ந்தார்.


அன்றிரவே பெரியார் கோயில்பட்டி செல்ல வேண்டியிருந் ததால் இடையில் நகைச்சுவை அரசு என்.எஸ். கிருஷ்ணன் அவர்களைச் சந்திக்க வேண்டி பெரியார் ஆவல் கொண்டிருந் ததற்கேற்ப தோழர் என்.வி.நடராசன், என்.எஸ்.கே. அவர்களது இல்லம் சென்றதும் மற்றத் தோழர்களுடன் பேசிக் கொண்டி ருந்த நகைச்சுவை அரசு, 'அய்யா வந்து விட்டாரா? எங்கே இருக்கிறார்? வாருங்கள்' என்று துள்ளி எழுந்து தோழியர் மதுரம் அம்மையாரும் என்.வி.நடராசனுடன் புறப்பட்டுப் பெரியார் இல்லத்திற்கு காரில் வந்து சேர்ந்தார்.


என்.எஸ்.கே. தனது இல்லத்திற்கே வந்து விட்டார் என்ற செய்தியை மாடியிலிருந்த பெரியார் அறிந்ததும், நான் சென்று பார்க்கலாமென்றால், அவரோ இங்கே வந்துவிட்டார் என்று எதிர்கொண்டழைக்க எழுந்து நிற்பதற்குள் என்.எஸ்.கே. அவர்கள் மாடிக்கு வந்து பெரியார் அவர்களை சுமார் 5 நிமிடங்கள் வரை இறுகக் கட்டித் தழுவிய வண்ணம் இருந்தார்.


பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் கண்களில் நீர்ததும்ப ' என் கண்ணே . ஒன்றும் கவலைப்படாதே உனக்கு ஒரு குறையு மில்லை' என்று தடுமாறிய குரலில் கூறினார்.


என்.எஸ்.கே. அவர்களின் கண்களிலும் நீர் கலங்கிய வண்ணம் இருந்தது. மற்றத் தோழர்களும் அந்த 5 நிமிடங்களில் ஸ்தம்பித்து நின்றுவிட்டனர். பின்னர் சுமார் 20 நிமிடங்கள் வரை பெரியாரும், கிருஷ்ணனும் பேசியிருந்தனர். என்.எஸ்.கே. பெரியாரைக் காண வந்திருக்கிறார் என்ற செய்தி எப்படியோ மவுண்ட் ரோடு வட்டத்தில் பரவிவிட்டது. ஏராள மான மக்கள் அங்கு கூடிவிட்டனர். பெரியாரிடம் விடைபெற் றுக் கொண்டு என்.எஸ்.கே. அவர்கள் மோட்டாரில் புறப்பட வந்தபோது கூடியிருந்த மக்கள் தங்கள் மகிழ்ச்சியைப் பெருத்த ஆரவாரத்தின் மூலம் காட்டி, காரில் ஏறவும் விட மறுத்தனர். எல்லோரும் என்.எஸ்.கே. வணக்கம் கூறி மிகக் கஷ்டப்பட்டு காரில் ஏறிச் சென்றார்.


(விடுதலை 28.4.1947)


No comments:

Post a Comment