புதிய பரமசிவனாரின் அறிவுக்கண் "உணர்வும் உப்பும்!" (3) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 31, 2020

புதிய பரமசிவனாரின் அறிவுக்கண் "உணர்வும் உப்பும்!" (3)

தமிழாய்வு அறிஞரும், பெரியார் சிந்தனைப் பட்டறையின் படைக்கலனுமான பேராசிரியர்

தொ.பரமசிவன் அவர்களது அறிவுச் செல்வம், ஆய்வுகளை அள்ளி அள்ளித் தரும் வற்றாத ஊற்று என்ற செய்தியின் இதோ மற்றும் ஓர் ஒளிமுத்துக் கருத்தோவியம்!

பண்பாட்டு அசைவுகள்' நூலில் "உணர்வும் உப்பும்" என்ற தலைப்பில் உள்ள கட்டுரையில் உப்புப் பற்றிய செய்திகளைப் படிக்கப் படிக்க உப்பு கரிக்கவில்லை. நாவுக்கு ருசியாக இனிக்கவே செய்கிறது!

உண்ணுவதற்கும் எண்ணுவதற்கும் தயார் தானே! இதோ:

"'உப்புப் பெறாத வேலை' என்று ஒன்றுக்கும் பயனற்றதைக் குறிப்பிடுவார்கள் (உணர்ச்சியற்ற வனை உப்புப் போட்டுத் தான் சாப்பிடுகிறாயா என்றும் கேட்பார்கள்). ஆனால் மனிதகுல வரலாற் றில் உப்புக்குத் தனி இடம் உண்டு. மனிதனின் நாகரிக வளர்ச்சியில் நெருப்பை உருவாக்கக் கற்றது போல உப்பினைப் பயன்படுத்தக் கற்றதும் முக்கியத்துவமுடையதுதான். அப்போதுதான் வேதியியல் என்ற விஞ்ஞானம் தொடக்கம் பெறுகிறது.

உப்பு' என்ற தமிழ்ச் சொல்லுக்குச்சுவை' என்பதே முதற்பொருள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என்று சுவைகளெல்லாம் உப்பு என்ற சொல்லை அடியாகக் கொண்டே பிறந்தவை. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் உப்பிற்குவெள்ளுப்பு' என்று பெயர். பழந்தமிழ் நாட்டுப் பொருளாதாரத்திலும், தமிழ்ப் பண்பாட்டிலும் உப்புக்கும் தனி இடம் உண்டு. பழந்தமிழர்களால் சுவையின் சின்னமாக வும், வளத்தின் சின்னமாகவும் உப்பு கருதப்பட்டது. தன் உருவம் தெரியாமல் பிற பொருள்களோடு கலந்து பயன்தருவது 'வெள்ளுப்பு'.

செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பா வும்), உப்பும் (அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால்தான்சம்பளம்என்ற சொல் பிறந்தது என்பர். ஆங்கிலத்திலும்Salaryஎன்ற சொல் ‘salt' என்பதன் அடியாகப் பிறந்தது என் றும் கூறுவர்.

இன்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான சாதியா ரிடத்தில் புது மணமகள் தன் கணவன் வீட்டிற்குள் நுழையும்போது ஒரு சிறு ஓலைக்கூடையில் உப்பை எடுத்துக்கொண்டே நுழைகிறாள். அது போலவே புதுமனை புகுவிழாக்களில் உறவினர் கள் அரிசியினையும், உப்பினையும் அன்பளிப்பா கக் கொண்டு வருவர். மதுரை மாவட்டக் கள்ளர் களில் ஒரு பிரிவினர் திருமணத்தை உறுதி செய் யும்போது மணமகன் வீட்டில் இருந்து அரிசியும், உப்பும் கொண்டு செல்கின்றனர்.

ஒருவர் இறந்த எட்டாவது அல்லது பத்தாவது நாளில் இறந்தார்க்குப் படைக்கும் உணவுகளை உப்பில்லாமல் செய்யும் வழக்கம் இன்னமும் பல சாதியாரிடத்து இருக்கின்றது. உப்பு உறவின் தொடர்ச்சிக்கு உள்ள ஒரு குறியீடு ஆகும். இறந் தாரோடு உள்ள தொடர்பை அறுத்துக்கொள்ளவே இவ்வாறு செய்கிறார்கள். உப்பு நன்றி உணர்ச்சியின் தோற்றுவாய் ஆகவும் கருதப்படுகிறது. ‘தின்ற உப்பிற்குத் துரோகம் செய்வதுஎன்பது நன்றி மறந்ததனைக் காட்டும் வழக்குமொழி.

நன்றி கெட்ட விதுரா - சிறிதும்

                நாணமற்ற விதுரா

தின்ற உப்பினுக்கே - நாசம்

                தேடுகின்ற விதுரா

என்று பாஞ்சாலி சபதத்தில் பாரதி இந்த நம்பிக்கை யைப் பதிவு செய்கிறான்.

பழந்தமிழ்நாட்டின் மிகப் பெரிய சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்பு விளங்கியிருக்கிறது. கடற்கரையில் விளையும் உப்பினை வண்டிகளில் ஏற்றிச் செல்லும்உமணர்என்ற வணிகர்களைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்படு கின்றன. கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த அழகர் மலைத் தமிழ்க் கல்வெட்டு உப்பு வணிகன் ஒருவனையும் குறிக்கிறது. உப்பு விளை யும் களத்திற்குஅளம்என்றும் பெயர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப்பெயர்க ளைச் சூட்டியிருக்கிறார்கள். அவை பேரளம், கோவ ளம் (கோ+அளம்) என்று வழங்கப்பட்டுள்ளன.

- தொடரும்

No comments:

Post a Comment