மதக் கலவரங்களைத் தூண்டுவது சங் பரிவார்களே! ‘‘கிறிஸ்தவர்களோட இணைந்து இருக்கும் இந்துக்களை தாக்கவேண்டும்!''  பஜ்ரங் தள் சுற்றறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 6, 2020

மதக் கலவரங்களைத் தூண்டுவது சங் பரிவார்களே! ‘‘கிறிஸ்தவர்களோட இணைந்து இருக்கும் இந்துக்களை தாக்கவேண்டும்!''  பஜ்ரங் தள் சுற்றறிக்கை


கவுகாத்தி, டிச. 6 பஜ்ரங் தள் அமைப்பின் அசாம் பிரிவு, வரும் கிறிஸ்துமஸ் அன்று கிறிஸ்தவர்களோடு நட்பு  பாராட்டும்  இந்துக்களை அடித்துவிரட்டவேண் டும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


 வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் அதிக அளவு வாழும் மாநிலத்தில் ஒன்று அசாம்.   இங்கு கிறிஸ்துமஸ் நாளன்று இந்து கிறிஸ்தவர்கள் அனைவருமே இணைந்து ஒற்றுமையாகக் கொண்டாடுவார்கள். இனிப்புகளைப் பகிர்ந்து கொள்வார்கள். கிறிஸ்தவ வழிபாட்டு இடங்களுக்கு வெளியே அனைவருமே இணைந்து ஆடிப்பாடி கிறிஸ்துமஸ் இரவைக் கழிப்பார்கள்.


 இந்த நிலையில் பஜ்ரங் தள் அமைப்பின் அசாம் மாநில பிரிவு ஒரு சுற்றறிக்கை விட்டுள்ளது. அதில்,  ‘‘கிறிஸ்துமஸ் நாள் அன்று கிறிஸ்தவர்களோடு கிறிஸ்துமஸ் கொண்டாடும் இந்துக்களை அடிக்கவேண்டும் என்றும், அவர்களோடு இணைந்து வழிபாட்டு இடங்களில் கொண்ட்டாட்டத்தில் ஈடுபடும் இந்துக்களைத் தாக்கவேண்டும் என்றும், இனிப்புகளை பகிர்ந்துகொண்டால் அதை வாங்கும் இந்துக்களை தாக்கவேண்டும்'' என்றும் சுற்றறிக்கையில் கூறியுள்ளது.


 அம்மாநில பஜ்ரங் தள் பிரிவின் செயலாளர் மிதுன் நாத் இதுதொடர்பாக கூறும் போது,


“எங்கள் சுற்றறிக்கையில் என்ன தவறு; இந்துக்களை சிறுமைப்படுத்தவே கிறிஸ்தவர்கள் இது போன்ற செயலைச் செய்கின்றனர். அவர்களோடு இந்துக்கள் இணைந்து கொண்டாடுவது இந்து மதத்திற்கே இழுக்கு ஆகும். இந்து மதத்தில் இருந்து கொண்டே இந்துக்களை இழிவுபடுத்துபவர்களை விட்டு வைப்பதே தவறு ஆகும்.


 சமீபத்தில் மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள விவேகானந்தா கலாச்சார மய்யத்தில் கிறிஸ்தவ பிரச்சார பிரதிகளை வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இதற்கு அங்குள்ள மாணவர் அமைப்பு பின்புலத்தில் உள்ளது. இந்த மாணவர் அமைப்பு தேசவிரோத செயலில் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது. மேலும் மேகாலயாவில் இந்து கலாச்சார  அமைப்புகளை மூடச் சொல்லி மறைமுகமாக கிறிஸ்தவ ஆதரவாளர்கள் வற்புறுத்துகின்றனர்.


 இவர்களுக்கு நாங்கள் பாடம் கற்பிப்போம்.  26 ஆம் தேதி காலை நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் கிறிஸ்தவர்களுக்கு அச்சத்தை ஊட்டக்கூடியதாக இருக்கும். இதற்கு நாங்கள் காரணமாக இருப்போம். இது வெறும் மிரட்டல் என்று நினைக்கவேண்டாம். எங்களை குண்டர்கள் (சமூக விரோதிகள்) என்று அழைக்கின்றனர். ஆம் இந்துக்களுக்கும், இந்துப் பெண்களுக்கும் தீங்கிழைக்கும் அனைவருக்குமே நாங்கள் குண்டர்களாகத்தான் தெரிவோம். ஆகையால் குண்டர்கள் என்று எங்களை அழைப்பதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம். எனவே இந்துக்கள் இந்த செய்தியைப் பார்த்துவிட்டு கிறிஸ்தவர்களோடு கிறிஸ்துமஸ் கொண்டாடவேண்டாம். அப்படிக் கொண்டாடினால் விளைவு மோசமாக இருக்கும்” என்று மிதுன் நாத் கூறினார்


No comments:

Post a Comment