டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 9, 2020

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

 

சென்னை,டிச.9, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கடந்த 8 மாதமாக நிலுவையில் இருந்த தமிழ்வழி மாணவர் களுக்கு டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்ச்சி பெறுபவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று ஒப்புதல் அளித்தார்.

தமிழக அரசில் உள்ள பல்வேறு துறைகளுக்கான பணியிடங்கள் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. தமிழ்வழியில் படித்து உரிய தகுதியுடைய கிராமப்புற மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டும், அவர்களுக்கு அரசுத் தேர்வுகளில்  தமிழ்வழி இட ஒதுக்கீட்டில் திருத்தங்கள் மேற்கொள்ள தேர்வாணையம் முடிவு செய்தது. அதன் படி பள்ளி, கல்லூரி என இரண்டிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட் டுமே 20 சதவீத இட ஒதுக்கீட்டில் இனி வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய் யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி முதல் கல்லூரி கல்வி வரையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் 20 சதவீத இடஒதுக்கீடு வழங் கப்படும் சட்ட மசோதா கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டது. இந்தநிலையில், சட்ட மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 8 மாதம் ஆகியும் ஆளுநர் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வில்லை. பல்வேறு அரசியல் கட்சியினரும் இச்சட்டத்திற்கு ஆளுநர் ஒப் புதல் அளிக்க வேண்டும் என தொடர் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்த நிலையில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப் பட்டது. வழக்கு விசாரனையின் போது, தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டு சலுகையை முறைப்படுத்துவது தொடர்பான சட்டத் திருத்த மசோதா, ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காமல் 8 மாதங்களாக இருப்பில் இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழகத்தில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பார் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. இந்தநிலையில், 8 மாதமாக ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் இருந்த சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று  (8.12.2020) ஒப்புதல் அளித்தார். இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை முழுவதுமாக தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே பயன் அடைய முடியும். உதாரணமாக குரூப் 1 மற்றும் குரூப் 2 பணியிடங்களுக்கு 1ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் பயின்றிருந்தால் மட்டுமே இட ஒதுக்கீடு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment