பேரா.முனைவர் ஜெ.ஹாஜாகனி
பொதுச் செயலாளர், த.மு.மு.க.
எழுச்சி வெளிச்சத்தை எட்டுத்திக்கும் வீசி, இழிவென்னும் இருள்விரட்டும் இனமானக் கதிர வனாம் தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எண்பத்தெட்டாம் அகவையில் அடியெடுத்து வைக்கும் இனிய பொழுதில் அவரை இதயங்கனிந்து வாழ்த்தி மகிழ்கிறோம்.
பிறக்கின்ற நாளில் எல்லாம் பெரும் போரில் நிற்ப வர்க்குப் பிறந்தநாள் என்பதெல்லாம், பிறிதொரு நாள் அவ்வளவே என்றாலும், ஆரிய சூழ்ச்சிகள், திராவிடத்தை அழித்தொழிக்கத் துடிக்கின்ற அபாயமிகு காலத்தில், காவிவெறி கக்குகிற கட்டுவிரியன் பாம்புகளைத்
தன்காலால் நசுக்கிக் கடந்து வந்தவரின் வரலாறு அறிவதும், அவரது அனுபவங்களில்இருந்து அறிவு பெறு வதும் இன்றைய இளைய தலைமுறைக்கு இன்றியமை யாதது ஆகும். எண்பத்தெட்டு வயதைக் தொடுவது என்பது இயற்கையளித்த பெருவாய்ப்பு எனலாம்.
எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பதைவிட எவ் வளவு பயன்மிக்க வாழ்வை வாழ்ந்துள்ளோம் என்கிற வினாவை ஒவ்வொருவரும் உள்ளத்தே எழுப்பி விடை காண விழைய வேண்டும்.
ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் குழந்தைப் பருவம், இளைமைப் பருவம், நடுமைப்பருவம், இப்போதைய பருவம், என பல்வேறு காலக்கட்டங்களைப் பகுத்தாய்ந்து பார்க்கும் போது இளைய தலைமுறை அதிலிருந்து பெற வேண்டிய படிப்பினைகள் ஏராளம் இருப்பதை அறியலாம்.
கடலூரில் பிறந்து, இஸ்லாமியப் பள்ளியொன்றில் ஆரம்பக் கல்வி கற்று கிறிஸ்துவப் பள்ளிக்கு முதல் படிவம் பயில அவர் போகும் போது, விளையப் போகும் வீரிய அறிவுப் பயிரை அதன் ஆரம்ப நாளில் அடையாளம் காண்கிறார். ஆசிரியர் திராவிட மணி. அவர்தான் சாரங்க பாணி என்று இயற்பெயரை வீரமணி என்று மாற்றுகிறார். ஆசிரியர் என்கிற அடைமொழியைத் தனது அடையாள மொழியாகப் பெற்றுவிட்ட தமிழர் தலைவரை ஓர் ஆசிரியர்தான் குழந்தைப் பருவத்திலேயே அடையாளம் கண்டிருக்கிறார்.
இவர் ஆசிரியர் கண்டெடுத்த ஆச்சரியம், ஆசிரியர் என்னும் சொல்லை ஆசு + இரியர் என்று பகுப்பர். குற்றங் களைக் களைபவர்தான் ஆசிரியர் என்று அந்தச் சொல் பொருள் உணர்த்தும்.
இனஇழிவு, சமூகஅநீதி, மூடநம்பிக்கைகள், உள்ளிட்ட சமூகக் குற்றங்களை அகற்றி தமிழ்ச்சமுதாயம் விடுதலை அடையவும், உண்மையை உணரவும் தன்னை தந்தை பெரியாரின் தடத்தில் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட அதிசய ஆளுமை ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் என்றால் மிகையில்லை.
முதன் முதலில் அவர் மேடை ஏறி கருத்துகளை முழங்கிய போது பத்துவயது (27.6.1943)முதன்முதலில் மணவிழாவில் மணமக்களை வாழ்த்திய பேசிய போது பதினோரு வயது (17.6.1946).
பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்ற போது பன்னிரண்டு வயது (14.4.1945) கொடியேற்றி மாநாட்டை துவங்கி வைத்த போது பதிமூன்று வயது (6.2.1946), பெரியார் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய போது பதினான்கு வயது (21.9.1947).
இன்றைய இளைய தலைமுறை எப்படி தமது பொது வாழ்வை எழுச்சிகரமாகவும், திட்டமிட்டும், அர்ப்பணிப் புணர்வோடும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஆசிரியர் அவர்களின் வாழ்விலிருந்து அழகிய படிப் பினைகளை அறிந்து கொள்ளலாம்.
என்மீது பேரன்பைப் பொழிந்த மறைந்த எழுத்தாளர் சோலை அவர்கள் எழுதிய வீரமணி ஒரு விமர்சனம் என்னும் நூலில் அரிய பல செய்திகளை அற்புதமாக எழுதியுள்ளார். தனிப்பட்ட உரையாடலிலும் என்னிடமும் பல செய்தி களைப் பகிர்ந்துள்ளார். செங்கோல்களைத் திருத்துகிற எழுதுகோலைத் தன்னிடம் கொண்டிருந்த சோலை அவர்கள் தமிழர் தலைவரை ஆய்வு செய்து ஒரு பெருநூல் எழுதியுள்ளார் என்பதிலிருந்தே ஆசிரியர் இன்வாழ்வை எந்தளவு பொது நலனுக்குரிய தாக அமைத்துக் கொண்டார் என்பதை அறியலாம்.
ஆதாரங்கள் கொண்ட அறிவார்ந்த உரைத்திறம்
ஒருமுறை த.மு.மு.க மற்றும் ம.ம.க.வின் தலைவரான பேரா. முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களிடம் தமிழர் தலை வர் குறித்த நினைவுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம் அப்போது பேரா.ஜவாஹிருல்லா, "எனது இளமைப் பருவத்தில் தனது பேச்சுப் பாங்கின் மூலம் என்னைப் பெரிதும் கவர்ந்தவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அடுக்கடுக்கான ஆதாரங்களை வைத்துக் கொண்டுதான் பேசுவார். ஆதாரம் இல்லாத செய்தியைப் பேச மாட்டார். நான் அதே வழிமுறையைப் பின்பற்றத் தொடங்கினேன்" என்று மனந்திறந்து கூறினார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடங் கப்பட்ட பிறகு ஏராளமான சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தது. சமூகநீதிக் கோட்பாட்டைக் கொண்ட த.மு.மு.க. நெருக்கடிகளைச் சந்தித்த நேரங்களில் நிழலாகவும், துணையாகவும் நின்றவர் ஆசிரியர் கி.வீரமணி என்பதை நன்றியோடு நினைவு கூர்கிறோம். இந்த நெருக்கம் விளைந்திட பாலமாக இருந்த சகோதரர் ஜெகவீரபாண்டி யன்அவர்களை நினைவு கூர்கிறோம்.
1999 ஜூலை 4 அன்று சென்னை மெரீனா கடற்கரை சீரணி அரங்கில் த.மு.மு.க. நடத்திய வாழ்வுரிமை மாநாட் டில் ஆசிரியர் கி.வீரமணி ஆற்றிய உரை முத்திரை பதித் தது. அம்மாநாட்டில் பேசிய முன்னாள் முதல்வர் ஜெய லலிதா அவர்கள், பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து ஒரு தவற்றைச் செய்துவிட்டேன். அதற்குப் பரிகாரமாக பா.ஜ.க ஆட்சியை நானே கவிழ்த்தேன். இனி எப்போதும் பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று பேசினார். இது கடற்கரைக் காற்றில் கலந்து பேச்சாகி விடாமல் ஒரு வரலாற்று ஆவணமாக இருக்க வேண்டும் என ஆசிரியர் அறிவுரை கூறி அந்த உரை சிறுநூலாக வெளியிடப் பட்டதும் நினைவு கூரத்தக்கது.
தேடலின் திரைக்காட்டி
திராவிடர் கழக மாணவரணிச் செயலா ளர் பிரின்சு என்னாரெசு பெரியார் இயக்கிய திற என்னும் குறும்படம், குஜராத்தில் சங்கி கள் ஆடிய கொலை வெறியாட்டத்தை விளக்கும் ஓர் கலை ஆவணம். இதன் வெளியீட்டு விழாவில் ஆசிரியர் அவர்களோடும், தமிழ கத்தின் முன்னணி ஆளுமைகளோடும் பங்கேற்று உரை யாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அவ்விழாவில் பேசிய ஆசிரியர், மகாராஷ்ட்ரா மாநில முன்னாள் உயரதிகாரியான S.M.முஷ்ரிஃப் எழுதிய "Who killed the Karkare" என்கிற நூலைக் குறிப்பிட்டு, அந்நூலில் தமிழகத்தில் பெரியாரின் பெரும்பணிகளைப் பதிவு செய்திருப்பதைச் சுட்டிக்காட்டிப் பேசினார். அதன் பிறகே அந்நூல் பரவலான கவனத்தைத் தமிழகத்தில் பெற்றது. தமிழகத்திற்கு வெளியிலும் சமூகநீதிக்கு ஆதர வாகவும், எதிராகவும் நிகழ்கின்ற ஒவ்வோரைசைவையும் ஆசிரியர் உன்னிப்பாக கவனித்து, தமிழர்களுக்கு அது குறித்த தரவுகளையும், விவரங்களையும் தந்து வருகிறார். இளைய தலைமுறை தம்மைச் சுற்றி நடப்பவற்றை உற்றுப்பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை இதிலிருந்து உண ரலாம்.
சமூகநீதிக்கு சனாதன சங்பரிவார சக்திகளால் முன் னெப்போதுமில்லாத அளவுக்குப் பேரபாயம் சூழ்ந்துள்ள நிலையில், தந்தை பெரியாரின் தடத்தில் அவரது தளபதியாகப் பயணம் செய்த ஆசிரியரின் வாழ்வியல் அனுபவங்களும் ஆற்றுப்படுத்தலும் நமக்கு அவசியமான அறிவாயுதங்கள் என்றால் மிகையில்லை. அவர் நினைத் திருந்தால் பல்வேறு அதிகாரப் பதவிகளில் அமர்ந்திருக்க முடியும். ஆனால், தந்தை பெரியாரின் எண்ணங்களையும், எழுத்துகளையும், இயக்கத்தையும் மக்களிடம் எடுத்துச் செல்கின்ற பெரும்பணியை தனது முதன்மைப் பணி யாக்கிக் கொண்டார். அவர் பேணுகிற கொள்கைப் பற்றையும் இளைய தலைமுறை அறிவது அவசியம்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அக்னிப் பரீட்சை என்னும் நிகழ்ச்சியில் ஆசிரியரைப் பங்கேற்க அழைத்த போது மறுத்துள்ளார். அக்னிப் பரீட்சை என்பது சீதையின் கற்பை சந்தேகித்து அவருக்கு ராமன் வைத்த பரீட்சை. இந்தப் பிற்போக்குத்தனமான புராணிகத் தலைப்பு அந்நிகழ்ச்சிக்கு இருக்கும் வரை அதில் பங்கேற்க முடியாது என்று கூறியுள்ளார். இந்த ஒரு நிகழ்வு அவரது கொள்கை உறுதியைக் காட்டப் போதுமானது.
"உங்களில் சிறந்தவர், உங்களில் பிறருக்கு அதிகம் பயனளிப்பவரே" என்று நபிகள் நாயகம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.
சனாதனக் கோடரியால் ஜாதிகளாகக் கூறுபோடப்பட்ட ஒரு சமூகத்தில்; இன இழிவு சுமத்தப்பட்டவர்கள் விடுதலை அடைய உண்மை உணர, தொடர்ந்து தொண்டாற்றி வரும் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இளைஞர்கள் மீது மிகுந்த அக்கறையும் அன்பும் கொண்டவர். அந்த அக்கறையிலும், அன்பிலும் நானும் பலமுறை நனைந்தவன். அவர் நீடூழி வாழ்ந்து தமிழ்ச்சமுதாயத்திற்கு மென்மேலும் தொண்டாற் றிட வாழ்த்தி மகிழ்கிறேன்.
No comments:
Post a Comment