செத்த மொழி சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்பா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 30, 2020

செத்த மொழி சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்பா

செத்த மொழி சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்பா?


டிச.5 இல் சென்னை தொலைக்காட்சி நிலையம்முன் திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்!


திராவிடர் கழகத் தலைவர் அறிவிப்பு



பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரத்தில், வளர்ச்சி, வேலை வாய்ப்புத் தருவோம் என்று கூறி, வாக்குகளைப் பெற்று, ஒரு தனிப் பாதை வகுத்து சென்னை தொலைக்காட்சியில் (தூர்தர்ஷன்) செத்த மொழியான சமஸ்கிருதத் திணிப்பாம்!  இதனைக் கண்டித்து டிசம்பர் 5 ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.


அறிக்கை வருமாறு:


அனைத்து மக்களின் வரிப் பணத்தில் நடப்பது தூர்தர்ஷன் என்ற அரசு தொலைக்காட்சி. இதில், கேட்பாரற்ற, கேட்டாலும் புரிவார் இல்லாத, நடைமுறையில் தேவை சிறிதுமற்ற செத்துச் சுண்ணாம்பாகிப் போன சமஸ்கிருதத்தை தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி - திட்டமிட்டே திணிப்பது ஜனநாயகம் ஆகாது; பச்சைப் பாசிச முறையாகும்!


இந்தித் திணிப்பைவிட மிக மோசமான திணிப்பு


22 மொழிகளில் இது வெகுமக்களுக்குச் சம்பந்த மில்லாத ‘‘தேவ பாஷை'' என்ற மகுடம் சூட்டிக் கொண்ட ஒரு மொழி.


இந்தித் திணிப்பைவிட மிக மோசமான திணிப்பு. மற்ற 21 மொழிகளை ஆட்சி மொழியாக்கி அந்தந்த வட்டாரங்கள், மாநிலங்களில் அந்தந்த மொழிகளில் ஆட்சிப் பணியில் - மத்திய அரசு தகவல் பரிமாற்றங்கள் நடைபெறுவதே அனைவருக்கும் மனநிறைவளிக்கும் முறை!


தேவையின்றித் திணிக்கும் சமஸ்கிருத திணிப் பைத் திரும்பப் பெற வேண்டும் - நாட்டின் ஒருமைப்பாட்டை காப்பாற்ற வேண்டிய மத்திய அரசு இதுபோன்ற திணிப்புகளால் அதற்கு வெடி வைத்துத் தகர்த்திடும் முயற்சிக்கு முன்னுரை எழுதுகிறது!


வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் சென்னை தொலைக்காட்சி நிலையத்திற்கு முன்னால் டிசம்பர் 5 ஆம் தேதி (சனிக்கிழமை) திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தும்.


 


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்.


சென்னை


30.11.2020


No comments:

Post a Comment