மறுக்கப்பட்ட வாய்ப்புக் கதவு மீண்டும் திறக்கப்பட அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 30, 2020

மறுக்கப்பட்ட வாய்ப்புக் கதவு மீண்டும் திறக்கப்பட அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்!

சமூகநீதிமீது மீண்டும் மீண்டும் மரணத் தாக்குதல்!


மத்திய அரசின் கல்வி உதவித் தொகை எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்குக் கிடையாதாம்!



மத்திய அரசின் கல்வி உதவித் தொகை எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்குக் கிடையாதாம் - 60 லட்சம் மாணவர்களின் கல்விக் கண்ணைப் பறிக்கும் பா.ஜ.க. அரசின் இந்த முடிவு வன் மையான கண்டனத்திற்குரியது என்றும், மறுக்கப்பட்ட வாய்ப்பு மீண்டும் திறக்கப்பட அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும் என்றும்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


மத்திய அரசின் கல்வி உதவித் தொகை இனி - தாழ்த்தப்பட்ட, பழங்குடி (எஸ்.சி., எஸ்.டி.) மாணவர்களுக்குக் கிடையாதாம்; 60 லட்சம் மாண வர்களின் கல்விக் கண்ணைப் பறிக்கும் உயர்ஜாதி மனப்பான்மை கொண்ட பா.ஜ.க. அரசின் இந்த முடிவு வன்மையான கண்டனத்திற்குரியது.


ஆடம்பரத் திட்டங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய்....


இந்தக் கரோனா கொடுந்தொற்று காலகட்டத்திலும் ஆடம்பரத் திட்டங்களான குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பிரதமருக்கு வெளிநாட்டில் 330 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட தனி பயண விமானங்கள், 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் என்பன போன்றவற்றில் ஈடுபட்டுள்ள அரசால், ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை தருவதற்குப் பணம் தீர்ந்துவிட்டதாம்!


என்னே விசித்திரமான - கொடூரமான அறிவிப்பு!


அடித்தளத்து மக்களான அவர்கள் கல்வி பெறக் கூடாது என்று மதவாத மனப்பான்மை தானே இதற்கு மூலகாரணம். சமூகநீதி என்றாலே ஒவ்வாமைதானா?


நாடு தழுவிய அளவில் எதிர்ப்புகள் - கண்டனங்கள் குவியட்டும்!


இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். நாடு தழுவிய அளவில் எதிர்ப்புகள் - கண்டனங்கள் இதனை எதிர்த்துக் குவியட்டும்! கண்டனங்களும் இணையத்தின்மூலம் வற்புறுத்தல்களுடன் குவியட்டும்! குவியட்டும்!!


நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணும் உரிய முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.


மறுக்கப்பட்ட வாய்ப்புக் கதவு மீண்டும் திறக்கப்பட, தேவைப்படும் முயற்சிகளில் உடனே இறங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.


 


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்.


சென்னை


30.11.2020


No comments:

Post a Comment