'விஜயபாரதம்' பதில் சொல்லுமா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 14, 2020

'விஜயபாரதம்' பதில் சொல்லுமா

'விஜயபாரதம்' பதில் சொல்லுமா?


குஜராத் முதல் அமைச்சர் மோடி நீட்டை எதிர்த்தாரா ஆதரித்தாரா?



‘நீட்’ பற்றி தி.மு.க.வை நோக்கி ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்‘ சில கேள்விகளை எழுப்பியுள்ளது. அதற்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளதுடன் ‘விஜயபாரதத்தை’ நோக்கி நாம் (தி.க.) சில கேள்விகளை ஆதாரத்துடன் முன் வைக்கிறோம் - பதில் கிடைக்குமா? எங்கே பார்ப்போம்!


‘நீட்’ தேர்வால் பலன் பெறுவோர் யார்? பாதிக்கப்படுவோர் யார்? என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.


கடந்த சில ஆண்டுகள் நடைபெற்ற ‘நீட்’டால் பலன் பெற்றவர்கள் யார் யார்? எத்தனைப் பேர்? பாதிக்கப்பட்டவர்கள் யார் யார்? எத்தனை விழுக்காடு என்பதுபற்றி எல்லாம் பல முறை ஆதாரத்தோடு எழுதியிருந்தோம்.


‘நீட்’ ஆதரவாளர்களுக்கும் உண்மை தெரியத்தான் செய்கிறது. ‘நீட்’ ஆதரவாளர்களைச் சேர்ந்த - ஏற்கெனவே கல்வியிலும், சமூ கநிலையிலும்  முன்னேறியோர் திட்டமிட்டே உண்மைக்கு மாறாகப் பேசி வருவது கண்கூடு.


எங்கோ ஒரு கிராமப்புரத்தைச் சேர்ந்தவரும், ரிக்ஷா தொழிலாளி மகனும் நீட்டில் அதிக மதிப்பெண் பெற்றால் ‘பார்த்தீர்களா, பார்த்தீர்களா?’ இவர்கள் எல்லாம் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்கள், ‘நீட்’டினால் பாதிப்பு என்பது ‘பொய்’யென்று பொய்ப் பிரச்சாரம் செய்ய ஆரம்பிக்கிறார்கள் - விலக்குகள் விதியாக முடியாது என்பது பால பாடம். இவர்களால் சுட்டிக்காட்டப்படும் மாணவர்களுக்குக் கூட வேறு வகையான உதவிகளும், ஆதரவும் இருந்தன என்பதையும் மறுக்க முடியாது.


ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்‘ (6.11.2020) சில கேள்விகளை எழுப்புகிறது. தி.மு.க.வுக்கான கேள்விகள் என்று மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. ‘நீட்’டை எதிர்க்கக் கூடியவர்களை நோக்கி எழுப்பப்படும் திசை திருப்பும் கேள்விகள் இவை.


தி.மு.க. மீது ‘விஜயபாரதம்‘ என்ற ஆர்.எஸ்.எஸ். வார இதழ் சில குற்றச்சாட்டுகளை கேள்விகளாக வைத்துள்ளது.


(1) ‘நீட்’டை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்தது. அந்த ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தது. எனவே ‘நீட்’டுக்கு ஆதரவாக தி.மு.க. இருந்தது. நீட்டை எதிர்த்து தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை என்பதுதான் முக்கிய குற்றச்சாட்டுகள்.


‘நீட்’ எந்த ஆண்டு கொண்டு வரப் பட்டது என்பதுகூட ‘விஜயபாரதத்துக்கு’த் தெரியவில்லை. 21.12.2010இல் அப்பொழுது மத்தியில் இருந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்டது.


திமுக என்ன செய்தது? மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முதல் அமைச்சர் கலைஞர் கடிதம் எழுதியதோடு நிற்கவில்லை - சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘நீட்’டுக்கு எதிராக திமுகவால் வழக்குத் தொடுக்கப்பட்டது. நீதிபதி ஜோதிமணி ‘நீட்’டுக்குத் தடையும் விதித்தார்.


‘நீட்’டை எதிர்த்து பல தரப்பினராலும் போடப்பட்ட வழக்கை ஒன்றிணைத்து உச்சநீதிமன்றம் விசாரித்தது.


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையில் நீதிபதிகள் விக்கிரமத் சென், ஏ.ஆர். தவே ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.


இந்திய அரசமைப்புச் சட்டம் 19,25,26,29,30 பிரிவுகளின்படி ‘நீட்’  தேர்வை நடத்தும் உரிமை மருத்துவக் கவுன்சிலுக்குக் கிடையாது என்று தீர்ப்பு வழங்கியது. இதில் நீதிபதி ஏ.ஆர். தவே மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். (18.7.2013).


இதோடு ‘நீட்டுக்கு’ முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.


இந்தத் தீர்ப்பின்மீது மறு சீராய்வு மனுவினை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது யார்? ‘விஜயபாரதம்‘ சொல்லட்டுமே பார்க்கலாம்.


அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசல்ல; தாக்கல் செய்தது யார் என்றால் ‘விஜயபாரதம்‘ இதழை நடத்தும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரின்  அரசியல் வடிவமான பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சிதானே!


இதனை சாமர்த்தியமாக மறைப்பது அசல் பார்ப்பனத்தனம்தானே!


இதில் என்ன வேடிக்கை என்றால் ‘நீட்’ வழக்குத் தீர்ப்பில் மாறுபட்ட தீர்ப்பைப் பதிவு செய்த நீதிபதி ஏ.ஆர்.தவேதான் இந்த அமர்வுக்குத் தலைமை.


இந்த அமர்வு ‘நீட்’ செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது (16.3.2016).


இதில் கடைந்தெடுத்த நகைச்சுவை ஒன்று உண்டு.


2013 மே 5ஆம் அன்று முதல் நீட் தேர்வு நடந்ததாம் - ‘விஜயபாரதம்‘ சொல்லுகிறது. ‘நீட்’ கட்டாயம் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டதே 2016 மார்ச்சில்தான்.


அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ‘நீட்’ தேர்வு நடந்தாலும், அது அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாயப்படுத்தப்படவில்லை. குறிப்பாக, தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் தேர்வு இல்லை. பிறகு அதை வலிந்து எதிர்க்க வேண்டிய அவசியமென்ன தி.மு.க.வுக்கு? ஓர் அடிப்படைத் தகவலைக்கூட சரியாகத் தெரிந்து கொள்ளாமல் எழுதுவது பரிதாபமே.


தி.மு.க.வை நோக்கி எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் நமது தரப்பில் கூறப்பட்டுள்ளது.


விஜயபாரதத்தை நோக்கி நாம் திருப்பிக் கேட்கும் மிக மிக முக்கியமான கேள்வி ஒன்று உண்டு.


‘நீட்’ தேர்வை மத்திய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்த போது - இன்றைய பிரதமரும், அன்றைய குஜராத் மாநில முதலமைச்சருமான நரேந்திர மோடியின் நிலைப்பாடு என்ன?


‘விஜயபாரதத்துக்குத் தெரியாவிட்டால் ‘விடுதலை’ எடுத்துச் சொல்லும். இதோஆதாரங்கள்:


குஜராத் அரசு நீட் தேர்வை ஏற்காது (11.8.2011)


“குஜராத் அரசு இந்திய மருத்துவக் கழகத்திற்கு எழுதிய கடிதத்தில் நாங்கள் ’நீட்’ தேர்வை எதிர்க்கிறோம், எங்கள் மாநிலத்திற்கு நீட் தேவையில்லை என்று கூறியுள்ளது.


இது தொடர்பாகக் குஜராத் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளதாவது,  “எங்கள் மாநிலத்தில் அதிகமான மாணவர்கள் மருத்துவர்களாக வரவேண்டும் என்பது எங்கள் மாநில உரிமை ஆகும். இந்திய மருத்துவக் கழகம் எங்களை நீட்டிற்காக தயாராகும்படி கூறியிருந்தது, ஆனால் எங்களால் ’நீட்’ தேர்வை ஏற்கமுடியாது, எங்கள் மாநிலத்திற்கு என்று சிறந்த கல்வி அமைப்பு உள்ளது. இதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் எங்கள் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.


 நாங்கள் ’நீட்’ பற்றி ஒரு குழு அமைத்து ஆலோசனை செய்தோம். அந்தக் குழு மாநில அரசின் பாடத்திட்டத்தின் படி படிக்கும் மாணவர்களுக்கு ’நீட்’ தேர்வு சுமையை ஏற்படுத்தும் என்று அறிக்கையில் கூறியுள்ளது, ஆகவே நாங்கள் ’நீட்’டை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜெயநாராயணன் வியாஸ் கூறினார்.


Gujarat Govt not to accept NEET for MBBS admission Gandhinagar, 11 August, 2011


Gujarat government on Wednesday declared that the state will not accept the National Eligibility cum Entrance Test (NEET) for admission in MBBS courses.


“We have decided not to accept NEET. We have informed this to the Union government,” Gujarat Health Minister Jaynarayan Vyas said.


NEET is an all India common entrance test for entry to medical colleges of the country proposed to be introduced in the year 2012-13 by the Medical Council of India (MCI).


The MCI had asked for the opinion of different states regarding the NEET.


Gujarat government had formed a three member task force to give suggestions on how NEET will affect students of Gujarat who want to opt for medical education, Vyas said.


“The task force was formed after parents associations protested on the NEET issue,” he said adding, “The task force has given its report and on the basis of that we have decided that Gujarat will not join NEET.”


Gujarat already has a system of centralised admission for MBBS, wherein the result of class XII and GUJCET test are taken into account, Vyas said.


deshgujarat.com/2011/08/11/ gujarat-govt-not-to-accept-neet-for-mbbs-admission/


தி.மு.க.வை நோக்கிய கேள்விகளுக்குப் பதில் கூறிவிட்டோம். மேலே ‘விஜயபாரத்துக்கு தி.க. எழுப்பிய ஆதாரப் பூர்வமான கேள்விகளுக்கும், எடுத்துக்காட்டுகளுக்கும் பதில் உண்டா? எங்கே பார்ப்போம்!


அன்று ‘நீட்’டை எதிர்த்த குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி தானே இப்பொழுது பிரதமர் - ‘நீட்’டை ஏன் நீக்கவில்லை? பதில் தருமா ‘விஜயபாரதம்?’


No comments:

Post a Comment